லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

கேரட் & பீட்ரூட் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

புதுமை & இனிமை

ரெசிப்பிஸ்: சரண்யா மணிவண்ணன்

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

பீட்ரூட் கேரட் சூப்

தேவை: தோல் சீவி நறுக்கிய பீட்ரூட் - ஒன்றரை கப், பூண்டு - 2 பல், இஞ்சி - சிறிய துண்டு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பெரிய கேரட் - ஒன்று, தக்காளி - 2, தண்ணீர் - இரண்டரை கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், புதினா - அலங்கரிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பீட்ரூட், கேரட், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து, இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கி சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்துள்ள கேரட் மற்றும் பீட்ரூட்டைச் சேர்த்து நான்கு விசில் வந்தவுடன் இறக்கவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி பீட்ருட் மற்றும் கேரட்டைத் தனியே எடுத்து அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதையும் வடிகட்டிய தண்ணீரையும் அதில் ஊற்றவும். நன்றாகக் கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் மிளகுத்தூள் போட்டு இறக்கவும். புதினா இலைகள் கொண்டு அலங்கரிக்கவும். சுவையான, சத்தான பீட்ரூட் கேரட் சூப் ரெடி.

பீட்ரூட் கேரட் பக்கோடா

தேவை: பீட்ரூட் - ஒன்று (துருவியது), பெரிய கேரட் - ஒன்று (துருவியது), வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - 2, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2, இஞ்சி, பூண்டு (நறுக்கியது) - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பீட்ரூட், கேரட், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளவும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள பீட்ரூட் கலவையை உதிரி உதிரியாகப் போட்டுப் பொரித்தெடுத்தால், பீட்ரூட் கேரட் பக்கோடா தயார்.

பீட்ரூட் சிப்ஸ்

தேவை: பீட்ரூட் - 2, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பட்டைத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: பீட்ரூட்டை வட்ட வடிவில் சீவிக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 40 - 45 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்து பீட்ரூட்டைக் காயவைக்கவும். பிறகு பட்டைத்தூள் தூவிக் கலந்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் பீட்ரூட் சிப்ஸ் தயார்.

பீட்ரூட் ஃபிங்கர்

தேவை: பீட்ரூட் - 2 (தோல் சீவி விரல் நீளத்தில் நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு, பிரெட் தூள் - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: சோள மாவு, சிறிதளவு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு (தோசை மாவுப் பதத்துக்கு) கரைத்துக்கொள்ளவும். பிரெட் தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து தனியாக எடுத்துவைக்கவும். ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து 30 நிமிடங்கள் மூடி ஊறவைக்கவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, ஊறவைத்துள்ள பீட்ரூட்டை வேகவைக்கவும். பிறகு இறக்கி வைத்து அதன் மேல் சோள மாவு தூவி நன்றாகக் கிளறவும். வேகவைத்துள்ள பீட்ரூட்டை, கரைத்துவைத்துள்ள மாவில் போட்டு, பிறகு பிரெட் தூளில் போட்டு எடுத்துவைக்கவும். அதன் பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பீட்ரூட் ஜாம்

தேவை: பீட்ரூட் - 3 (தோல் சீவி, நறுக்கவும்), சர்க்கரை - தேவையான அளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் (அ) வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: குக்கரில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிவைத்துள்ள பீட்ரூட்டைச் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கவும். வேகவைத்த பீட்ரூட்டை அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு கடாயில் அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயிலுள்ள தண்ணீர் சுண்டியவுடன் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். அதை விடாமல் கிளறிக்கொண்டு இருந்தால் நிறம் மாறும். பிறகு, எலுமிச்சைச்சாறு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும். இறக்கும்போது ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் (அ) வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

பீட்ரூட் கட்லெட்

தேவை: பீட்ரூட் - 2 (துருவவும்), முந்திரி - 5 - 6 (உடைக்கவும்), வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - தேவைக்கேற்ப, வேகவைத்த உருளைக்கிழங்கு - 4 (தோலுரிக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மைதா மாவு - 2 டேபிஸ்பூன், தண்ணீர், பிரெட் தூள் - தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும். துருவிய பீட்ரூட் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேகவிட்டு, பிறகு மசித்து உப்பு, சோம்பு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். பிறகு வட்ட வடிவில் தட்டிக்கொண்டு 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தண்ணீரில் மைதா மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்துகொண்டு வட்ட வடிவில் தட்டிவைத்துள்ள பீட்ரூட்டை போட்டு எடுத்து, பிறகு பிரெட் தூள் மேல் போட்டு எடுத்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பீட்ரூட் கட்லெட் தயார்.

பீட்ரூட் குருமா

தேவை: பீட்ரூட் - 2, உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கசகசா - சிறிதளவு, முந்திரி - 5 - 6, தக்காளி - 3, தேங்காய் - ஒரு மூடி, பட்டை - ஒரு சிறிய துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், சோம்பு, கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: தேங்காய், கொத்தமல்லித்தழை, பட்டை, கசகசா, முந்திரி, சிறிதளவு சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். குக்கரில் தோல் சீவி நறுக்கிய பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்குடன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து வேகவைத்து நான்கு விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பிறகு இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதங்கிய பிறகு ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வேகவிடவும். இதனுடன் வேகவைத்துள்ள பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்துக்கொள்ளவும். பிறகு வேகவைத்துள்ள தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி வைக்கவும், கொதிவந்தவுடன் அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்க்கவும். பிறகு கொதிவந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பீட்ரூட் பாயசம்

தேவை: பீட்ரூட் - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி - 5 - 6, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி நறுக்கி நீர்விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் சர்க்கரையுடன் தேவையான நீர் சேர்த்து பாகு எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வேறு ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு சர்க்கரைப் பாகை அதில் கலந்து 10 - 15 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். நன்றாகக் கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரி தூவி இறக்கினால் பீட்ரூட் பாயசம் தயார்.ய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி நறுக்கி நீர்விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் சர்க்கரையுடன் தேவையான நீர் சேர்த்து பாகு எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வேறு ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு சர்க்கரைப் பாகை அதில் கலந்து 10 - 15 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். நன்றாகக் கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரி தூவி இறக்கினால் பீட்ரூட் பாயசம் தயார்.

பீட்ரூட் பூரி

தேவை: மைதா மாவு - 2 கப், ரவை - ஒரு டீஸ்பூன், பீட்ரூட் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: பீட்ரூட்டைத் துருவி தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு பீட்ரூட் சாற்றை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு மைதா மாவு, ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளும்போது பீட்ரூட் சாற்றை ஊற்றிப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு பூரிகளாகத் திரட்டி எண்ணெயில் சுட்டெடுக்கவும்.

பீட்ரூட் சாலட்

தேவை: பீட்ரூட் - 3, வெங்காயம் - 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆப்பிள் வினிகர் (விரும்பினால்) - ஒரு டீஸ்பூன்.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: பீட்ரூட்டை வேகவைத்து, பிறகு 45 நிமிடங்கள் கழித்து சின்ன சின்னதாய் நறுக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ஆலிவ் ஆயில், மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, ஆப்பிள் வினிகர் சேர்த்துக் கிளறிவைத்தால் பீட்ரூட் சாலட் தயார்.

பீட்ரூட் சாம்பார்

தேவை: பீட்ரூட் - 2, துவரம்பருப்பு - ஒரு கப், தக்காளி - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், இடித்த பூண்டு - 5 அல்லது 6 பல், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, சாம்பார் பொடி - ஒரு டேபிள்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: குக்கரில் தோல் சீவி நறுக்கிய பீட்ரூட், துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பூண்டு, பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சாம்பார் பொடி சேர்த்து, வேகவைத்த பீட்ரூட் கலவை மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து, நன்றாகக் கொதி வரும்வரை மிதமான தீயில் வேகவைக்கவும். அதன் பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, நெய் சேர்த்து இறக்கவும்.

பீட்ரூட் சட்னி

தேவை: பீட்ரூட் - 3 (பெரியது), பச்சை மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், புளி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தோல் சீவி நறுக்கிய பீட்ரூட், பச்சை மிளகாய், சோம்பு, தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான நீர் சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால், சூப்பர் சுவையில் பீட்ரூட் சட்னி தயார்.

பீட்ரூட் மில்க் ஷேக்

தேவை: பால் - ஒரு கப், பீட்ரூட் - 2, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி நறுக்கி, ஒரு குக்கரில் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு, பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு மிக்ஸியில் பால், சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அரைத்த பீட்ரூட்டைப் பாலில் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்தெடுத்தால், பீட்ரூட் மில்க் ஷேக் தயார்.

குறிப்பு: அரைத்துவைத்துள்ள பீட்ரூட்டை ஒரு வாரம் வைத்துக்கூட பயன்படுத்தலாம்.

பீட்ரூட் சாதம்

தேவை: பீட்ரூட் - 2 (துருவவும்), புதினா - 5 - 6 இலை, பிரியாணி இலை - ஒன்று, பட்டை - சிறிய துண்டு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, அரிசி - ஒரு கப், பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய்விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மூன்று நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, புதினா சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறிக்கொண்டு இருக்கவும். பின்னர் துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கி, அரிசி சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து, இரண்டு மூன்று விசில் வந்தவுடன் இறக்கி, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால், சுவையான பீட்ரூட் சாதம் தயார்.

டயட் ஃபுட்

தேவை: பீட்ரூட் - 2 (துருவவும்), பச்சை வேர்க்கடலை - அரை கப், எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: பச்சை வேர்க்கடலையை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். துருவிய பீட்ரூட், ஊறவைத்த வேர்க்கடலை, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்துவைத்தால் டயட் ஃபுட் தயார்.

கேரட் கேக்

தேவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப் (அரைக்கவும்), வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், சன்ஃப்ளவர் ஆயில் - ஒரு கப், பெரிய கேரட் - 3 (பொடியாக நறுக்கவும்), முட்டை - 3 (அல்லது) தயிர் - 3 டேபிள்ஸ்பூன், டூட்டி ஃப்ரூட்டி - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: அரைத்த சர்க்கரை, மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். கேரட், தயிர் (அ) முட்டை, வெனிலா எசென்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு கலந்துவைத்துள்ள மாவுடன் கேரட் கலவை சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். ஒரு குக்கரின் அடியில் ஒரு கப் உப்பு கொட்டி, குக்கரின் உள்ளே ஸ்டீமிங் ட்ரே ரேக் ஸ்டாண்டு (Steaming Tray Rack Stand) வைத்து குக்கரை மூடி 15 நிமிடங்கள் அடுப்பில் விசில் இல்லாமல் குறைந்த தீயில் வைக்கவும். பிறகு திறந்து ஸ்டாண்டின் மேல் கேக் பாத்திரம் வைக்கவும். கேக் பாத்திரத்தில் வெண்ணெய் காகிதம் வைத்து அதற்கு மேல் வெண்ணெய் தடவி, மாவு - கேரட் கலவையை ஊற்றவும். பிறகு விரும்பினால் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக்கொள்ளவும். குக்கரை மூடி, விசில் போடாமல் குறைந்த தீயில் 45 நிமிடங்கள் சமைக்கவும். கேரட் கேக் ரெடி.

கேரட் ஜாமூன்

தேவை: பெரிய கேரட் - 4, சர்க்கரை - ஒரு கப், பிரெட் ஸ்லைஸ் - 3, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: கேரட்டைத் துருவி கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும் (ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்). பிறகு கேரட்டை ஆறவிடவும். பிரெட்டை அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் அரைத்த பிரெட் கலந்து பிசைந்து எடுத்து வட்ட வடிவில் உருட்டி எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு கப் சர்க்கரை, 3 கப் தண்ணீர் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் உருட்டிவைத்துள்ள கேரட்டை அதில் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும். பிறகு சர்க்கரைப் பாகில் கேரட் உருண்டைகளைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.

கேரட் பரோட்டா

தேவை: பெரிய கேரட் - 3 (துருவவும்), வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள், சோம்புத்தூள் - தலா அரை டீஸ்பூன், மைதா மாவு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு கப் வெந்நீருடன் உப்பு, மிளகாய்த்தூள், சோம்புத்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். மைதா மாவு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு கலந்துவைத்துள்ள தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். மாவை 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும். துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பரோட்டா மாவைக் கொண்டு வட்ட வடிவத்தில் திரட்டிக்கொள்ளவும். கலந்த கலவையை உள்ள வைத்து மடித்துக்கொண்டு பிறகு சப்பாத்தி போன்று திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி நெய் தடவி பரோட்டாவை இருபுறமும் சுட்டெடுக்கவும்.

கேரட் பாஸ்தா

தேவை: பாஸ்தா - ஒன்றரை கப், பெரிய கேரட் - 2 (நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று (நறுக்கவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 5 - 6 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய கேரட், தக்காளி, பாதியளவு குடமிளகாய் சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு வேறொரு கடாயில் தண்ணீர் ஊற்றி, கொதிவந்தவுடன் பாஸ்தா, தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். பிறகு வேகவைத்துள்ள கேரட் கலவையை அரைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் வெண்ணெய் போட்டு மீதி குடமிளகாய், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி அரைத்த கலவை சேர்த்துக் கலந்து, பாஸ்தா போட்டு கொதிவரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கொதிவந்தவுடன் கேரட் பாஸ்தா தயார். இதனுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

கேரட் சாதம்

தேவை: கேரட் - ஒரு கப் (துருவியது), சாதம் - 2 கப், வெங்காயம் - 3, முந்திரி - 5 - 6 (உடைக்கவும்), பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, கிராம்பு - ஒன்று, ஏலக்காய் - 2, பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, பிரியாணி மசாலா - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், பிரியாணி மசாலா போட்டு நன்கு வதக்கிக்கொண்ட பிறகு முந்திரி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன் சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

கேரட் சட்னி

தேவை: கேரட் - 3 (பெரியது), வெங்காயம் - 2 (நறுக்கவும்), தக்காளி - 2 (நறுக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 5, சோம்பு - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: கேரட்டை நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 - 15 நிமிடங்கள் நன்றாக (தண்ணீர் தெளித்து) வதக்க வேண்டும். பிறகு ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துச் சேர்த்தால் சுவையான கேரட் சட்னி தயார்.

கேரட் வடை

தேவை: பெரிய கேரட் - 3 (துருவவும்), சின்ன வெங்காயம் - 10, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2, பொட்டுக்கடலை - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: பொட்டுக்கடலையை அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையை நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், நறுக்கிவைத்துள்ள பொருள்கள், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள், அரைத்துவைத்துள்ள பொட்டுக்கடலையை சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளவும். அதற்கு மேல் தண்ணீர் வேண்டுமானால் ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். சரியான வடை வடிவத்தில் வர வேண்டும். இல்லையெனில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுத்துக்கொள்ளவும். மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

கேரட் பிரியாணி

தேவை: பெரிய கேரட் - 2, பிரியாணி அரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 5, தயிர் - 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பிரியாணி மசாலா - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி கரம் மசாலாத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டைச் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தயிர் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். பிறகு அரிசி சேர்த்து ஐந்து நிமிடங்கள் சிறுதீயில் மூடி வைக்கவும். ஒன்று அல்லது இரண்டு விசில் வந்தவுடன் இறக்கினால், சுவையான கேரட் பிரியாணி தயார்.

கேரட் லட்டு

தேவை: நெய் - 4 டேபிஸ்பூன், முந்திரி - 10, கேரட் - 3, கண்டன்ஸ்டு மில்க் (விரும்பினால்) - சிறிதளவு, சர்க்கரை - ஒரு கப், தேங்காய் - (துருவியது) - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், கேசரி பவுடர் (விரும்பினால்) - ஒரு சிட்டிகை.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே பாத்திரத்தில் துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறிகொண்டே இருக்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறி, கண்டன்ஸ்டு மில்க் (விரும்பினால்) சேர்த்துக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். முந்திரி, ஏலக்காய்த்தூள், (விரும்பினால்) கேசரி பவுடர் சேர்த்துக்கொள்ளவும். கைபொறுக்கும் சூட்டில் லட்டு பிடித்துவைக்கவும்.

கேரட் கூட்டு

தேவை: பெரிய கேரட் - 2, துவரம்பருப்பு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தேங்காய்த் துருவல் - அரை கப், பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு - சிறிதளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: குக்கரில் நறுக்கிய கேரட், துவரம்பருப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேவையான நீர் சேர்த்து இரண்டு மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும். பூண்டினைத் தட்டி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், பூண்டு, சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு கேரட் கலவை சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து துருவிய தேங்காய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

கேரட் பர்ஃபி

தேவை: கேரட் - 4 கப் (துருவியது), நெய் - 4 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், பால் பவுடர் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மெலிதாக சீவிய பாதாம் - தேவையான அளவு, வெண்ணெய் - சிறிதளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: கடாயில் நெய் ஊற்றி துருவிய கேரட் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு பால் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். கேரட் மென்மையான பதம் ஆகும் வரை வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்து வேகவிடவும். பின்னர் பால் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டிப் பதம் வந்த உடன் இறக்கி வைக்கவும். ஒரு குழிவான தட்டில் வெண்ணெய் தடவி இறக்கிவைத்துள்ள கலவையை இதில் ஊற்றி, சீவிய பாதாம் சேர்த்து, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு சதுர வடிவில் வெட்டி எடுத்தால், கேரட் பர்ஃபி தயார்.

கேரட் பாதாம் கீர்

தேவை: பெரிய கேரட் - 4 (பொடியாக நறுக்கவும்), பாதாம் - 10 (ஊறவைக்கவும்), பேரீச்சம்பழம் - 5, பால் - ஒரு கப்.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: கேரட், பாதாம், பேரீச்சம்பழத்தை அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது பால் சேர்த்து அரைக்கவும். மென்மையான பதத்துக்கு வரும்வரை அரைக்கவும். மென்மையான பதம் வந்தவுடன் சுவையான கேரட் பாதாம் கீர் தயார். விரும்பினால் குங்குமப்பூ, துருவிய பாதாம் சேர்த்துக்கொள்ளவும்.

கேரட் பஜ்ஜி

தேவை: பெரிய கேரட் - 2, அரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், சோள மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பேக்கிங் சோடா, தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். பிறகு கேரட்டை நீளமாக நறுக்கி, மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு எடுத்தால் கேரட் பஜ்ஜி தயார்.

கேரட் கார்ன் போண்டா

தேவை: பெரிய கேரட் - 2 (துருவவும்), கார்ன் (வேகவைத்தது) - 2, இஞ்சி, பூண்டு (நறுக்கியது) - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, வெங்காயம் - 2 (நறுக்கவும்), அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு, துருவிய கேரட், வேகவைத்த கார்ன் முத்துகள், நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்துகொள்ளவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). பிறகு உருண்டை பிடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வைட்டமின் ஏ, பி, சி ஜூஸ்

தேவை: பீட்ரூட் - ஒன்று (தோல் சீவி நறுக்கவும்), கேரட் - 3, ஆப்பிள் - ஒன்று, தக்காளி - ஒன்று, எலுமிச்சைச்சாறு - சிறிதளவு.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

செய்முறை: நறுக்கிய பீட்ரூட், கேரட், ஆப்பிள், தக்காளி, எலுமிச்சைச் சாறு, தேவையான நீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வடிகட்டி எடுத்தால், வைட்டமின் ஏ, பி, சி ஜூஸ் தயார்.

சத்து - சுவை சங்கமம்!

இல்லத்தரசிகளின் இதயத்தில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது குடும்ப ஆரோக்கியம். ஆரோக்கியம் சீராக அமைய காய்கறிகள், பழங்களைத் தேவையான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என உணவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர். காய்கறிகளைச் சுவையாகச் சமைத்துப் பரிமாறினால் தானே அனைவரும் விருப்பப்பட்டு, அவற்றைச் சாப்பிடுவார்கள்... அந்த வகையில் கேரட், பீட்ரூட்டைக் கொண்டு ருசிகரமான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சரண்யா மணிவண்ணன்.

30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி

அடுக்கிவைத்திருக்கும் அழகிலேயே கண்களைக் கவர்ந்து இழுத்து, உடனே வாங்கத் தூண்டுவது கேரட். கேரட்டில் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் வைட்டமின்களும் தாதுச்சத்துகளும் உள்ளன. அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளையும் கொண்டுள்ளது. பீட்ரூட், கேரட் இரண்டும் உச்சி முதல் பாதம் வரை உடலின் பல்வேறு பாகங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வாரிவழங்குகின்றன.

இந்தக் காய்கறிகளில் கூட்டு, சாம்பார் என்று மட்டுமல்லாமல், கேக், பாதாம் கீர், பர்ஃபி, பாஸ்தா, ஆரோக்கியத்துக்கு அடிகோலும் டயட் ஃபுட், சாலட், வைட்டமின் ஏ, பி, சி ஜூஸ் எனப் புதுமையாக அளித்து நமக்கு நிறைவான ஒரு சுவை அனுபவத்தை இங்கே வழங்கி யிருக்கிறார் சரண்யா.