தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

பச்சைப்பயறு
பிரீமியம் ஸ்டோரி
News
பச்சைப்பயறு

இளவரசி வெற்றிவேந்தன்

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்

தேவை: உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது) பச்சைப்பயறு - அரை கப் வெங்காயம் - 2 கொத்தமல்லித்தழை - சிறிதளவு கேரட் - கால் கப் (துருவியது) பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 4 டீஸ்பூன் சீஸ் - அரை கப் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - தேவையான அளவு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு, பிரெட் தூள் - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: உருளைக்கிழங்கு, பச்சைப்பயற்றை தனித்தனியாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும். பின்னர் அவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், துருவிய கேரட், சீஸ், கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். கார்ன்ஃப்ளாரில் தண்ணீர்விட்டுக் கரைத்து, அதில் உருண்டைகளை முக்கியெடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும். இந்த உருண்டைகளைச் சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து எடுக்கவும். சுவை மிகுந்த பச்சைப்பயறு சீஸ் பால்ஸ் தயார். டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும்.

பச்சைப்பயற்றுப் பாயசம்

தேவை: பச்சைப்பயறு - 200 கிராம் வெல்லம் - 150 - 200 கிராம் தேங்காய்ப்பால் - ஒரு கப் முந்திரி - 8 - 10 உலர்திராட்சை - ஒரு கைப்பிடி அளவு ஏலக்காய் - 4 (பொடிக்கவும்) தேங்காய்த் துருவல் - அரை கப் நெய் - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றைச் சிறிதளவு நெய்யில் வாசனை வரும் வரை வறுத்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து வேகவைத்த பயற்றில் சேர்த்து தேங்காய்ப்பாலையும் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும்.

கடாயில் நெய்யைக் காயவைத்து முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் நெய்யுடன் ஊற்றவும். ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய்த் துருவலை சிறிதளவு நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்துப் பரிமாறவும்.

பச்சைப்பயறு முருங்கையிலை அடை

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் பச்சரிசி – கால் கப் இட்லி அரிசி – கால் கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/8 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 சோம்பு – ஒரு டீஸ்பூன் முருங்கையிலை - அரை கப் உப்பு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: அரிசி மற்றும் பருப்புகளை நன்றாகக் கழுவி அரிசியைத் தனியாகவும், பருப்புகளுடன் வெந்தயம் சேர்த்தும் தனியாகவும் ஊறவைக்கவும். பின்னர் கிரைண்டரில் சேர்த்து பாதி அரைத்த பின் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சுத்தம் செய்த முருங்கையிலையை உப்பு சேர்த்து லேசாக வதக்கி மாவில் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.

பச்சைப்பயறு சுண்டல்

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - கால் கப் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: குக்கரில் சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து பச்சைப்பயற்றைக் குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும். தண்ணீரை வடித்துவிடவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து சிவக்க வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், பச்சைப்பயறு சேர்க்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து இறக்கவும். சுவையும் சத்தும் நிறைந்த பச்சைப்பயறு சுண்டல் தயார்.

பச்சைப்பயறு சூப்

தேவை: பச்சைப்பயறு - அரை கப் சின்ன வெங்காயம் - 4 (தோலுரிக்கவும்) கிராம்பு - 2 பட்டை - சிறு துண்டு வெண்ணெய் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு (விருப்பப்பட்டால்) ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை வேகவைத்து வடித்து ஒரு கப் நீர் எடுத்துக்கொள்ளவும்.பின்னர் வடித்த பச்சைப்பயற்றில் 2 டீஸ்பூன் எடுத்து வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், கிராம்பு, பட்டை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும்.

வெண்ணெயை ஒரு வாணலியில் சேர்த்து அடுப்பில்வைத்து சூடாக்கவும். சின்ன வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும். கொத்தமல்லித்தழை, மீதமுள்ள பச்சைப்பயறு, பயற்றை வேகவைத்த நீர், உப்பு, மிளகுத்தூள், அரைத்த பச்சைப்பயறு விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். சூப் தயார்.

விருப்பம் உள்ளவர்கள் ஃப்ரெஷ் க்ரீம் கலந்து பரிமாறலாம்.

பச்சைப்பயறு தால்

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்து நறுக்கவும்) தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுந்து - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் அல்லது எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர், கால் டீஸ்பூன் உப்பு, வேகவைத்த பச்சைப்பயறு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

சூடான சாதத்தில் பச்சைப்பயறு தால் உடன் நெய் சேர்த்துச் சாப்பிட, மிகவும் பிரமாதமாக இருக்கும்.

பச்சைப்பயற்றுக் குருமா

தேவை: பச்சைப்பயறு - அரை கப் வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) தக்காளி - ஒன்று (நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு - ஒன்று எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் முந்திரி - 4 கசகசா - அரை டீஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கிராம்பு - 2 பட்டை - அரை இன்ச் துண்டு ஏலக்காய் - ஒன்று.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: முதலில் அரைப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். பச்சைப்பயறு, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதில் தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்கவும்.

பின்னர் அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடங்கள் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதித்ததும், வேகவைத்த பச்சைப்பயறு, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து, குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும்போது, அதில் கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி வேகவைத்துக்கொள்ளவும்.

பச்சைப்பயறு கட்லெட்

தேவை: பச்சைப்பயறு - கால் கப் வெங்காயம் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி - அரை அங்குலத் துண்டு (தோல் சீவவும்) உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது) பிரெட் - 2 ஸ்லைஸ் மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசலாத்தூள் - கால் டீஸ்பூன் ரஸ்க் தூள் - அரை கப் மைதா - ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். பிரெட்டைத் தண்ணீரில் நனைத்து, தண்ணீரைப் பிழிந்துவிட்டு மசித்து வைக்கவும். பச்சைப்பயறு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து மிதமாகப் பிசைந்துகொள்ளவும். இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து, தட்டி கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.

மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். கட்லெட்டுகளை மைதா மாவுக் கரைசலில் நன்கு முக்கியெடுத்து, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும். மாலை சிற்றுண்டிக்கு உகந்தது.

முந்திரிக் கொத்து

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் மைதா மாவு - கால் கப் அரிசி மாவு - அரை கப் நெய் - 2 டீஸ்பூன் வெல்லம் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - அரை கப் முந்திரிப்பருப்பு - கால் கப் ஏலக்காய் - 6 சர்க்கரை - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - சிறிதளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: அடிகனமான வாணலியில் பச்சைப்பயறு சேர்த்து அதை நன்கு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். பின்னர் வேறொரு வாணலியை எடுத்து, அதில் நெய்விட்டு சூடாக்கி, முந்திரி, ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அதே வாணலியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து லேசாக வறுக்கவும். ஏலக்காய், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, முந்திரிப்பருப்பு இவை மூன்றையும் மிக்ஸியில் நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.பின்னர் வறுத்து வைத்திருக்கும் பச்சைப்பயற்றைப் பொடித்து நன்றாகச் சலித்துக்கொள்ளவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து, வடிகட்டி, ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும்போதே பச்சைப்பயறு மாவை அதில் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். அதில் முந்திரி - ஏலக்காய் - சர்க்கரைப் பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.

கிளறிவைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக (அரைநெல்லி அளவு) உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். அதன்பின் மைதா மாவையும், அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும். மூன்று உருண்டைகளைச் சேர்த்து முக்கோண வடிவில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளைத் தோய்த்து எடுத்துப் போட்டு பொரித்தெடுக்கவும். அருமையான சுவையுடன் கூடி முந்திரிக்கொத்து தயார்.

பச்சைப்பயற்று உருண்டைக் குழம்பு

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் துவரம்பருப்பு - 4 டீஸ்பூன் பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடுகு - கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் சோம்பு - ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் பட்டை - சிறு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று தக்காளி - ஒன்று மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 50 கிராம் (தோலுரித்து நறுக்கவும்) புளி - அரை நெல்லிக்காய் அளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை மூன்று - நான்கு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சைப்பயறு சேர்த்து சற்றுக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும். தேங்காய்த் துருவல், சீரகம், சோம்பு, புளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பட்டை, கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் தாளிக்கவும். சிறியதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து மூன்று - நான்கு நிமிடங்கள் வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்ததும் வேகவைத்த உருண்டைகளைச் சேர்க்கவும். அடுப்பை சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியும்போது இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: பச்சைப்பயறு உருண்டைகளை வேகவைக்காமல் குழம்பில் போட்டால் கரைந்துவிடும்.

பச்சைப்பயற்றுக் குழம்பு

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 50 கிராம் (தோலுரித்து நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் சின்ன வெங்காயம் - 6-8 சீரகம் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை:பச்சைப்பயற்றை வெறும் வாணலியில் வறுத்து அரை மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும். வேகவைத்த பச்சைப்பயறு, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்ததும், அடுப்பை சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

பச்சைப்பயறு லட்டு

தேவை: பச்சைப்பயறு – 2 கப் சர்க்கரை - 2 கப் நெய் - 200 கிராம் ஏலக்காய் – 6 முந்திரி (உடைத்தது) - 50 கிராம்.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பயற்றை மிக்ஸியில் அரைக்கவும். அதைச் சலித்து எடுத்து, நைஸான மாவை லட்டுக்கு வைத்துக்கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து மாவில் கலக்கவும். ஏலக்காயைச் சிறிதளவு நெய்யில் லேசாக வறுத்து, தோலோடு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். முந்திரிப்பருப்பைச் சிறிதளவு நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பேஸினில் போட்டுக் கலந்துவைக்கவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்றவும். மாவைக் கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் போட்டு ஆறவைத்து, பின்னர் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்பு: நெய் சேர்த்து ஆறும் முன்னர் உருண்டைகளாகப் பிடித்துவிட வேண்டும். ஆறினால் உதிர்ந்துவிடும்.

பச்சைப்பயறு பூரி

தேவை: கோதுமை மாவு - ஒரு கப் பச்சைப்பயறு - கால் கப் (வேகவைத்தது) பச்சை மிளகாய் - ஒன்று சீரகம் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - அரை அங்குலத் துண்டு (தோல் சீவவும்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வேகவைத்த பச்சைப்பயறு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு, சீரகம் சேர்த்துக் கலக்கவும். பின்னர் அரைத்த விழுது, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் மூடிவைக்கவும். பின்னர் மாவைப் பூரிகளாகத் திரட்டிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து பூரிகளைச் சுட்டெடுக்கவும். சத்து நிறைந்த பச்சைப்பயறு பூரி தயார். காலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது.

பச்சைப்பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவை: கோதுமை மாவு - ஒரு கப் பச்சைப்பயறு - கால் கப் (வேகவைத்தது) பச்சை மிளகாய் - ஒன்று மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். வேகவைத்த பச்சைப்பயற்றில் மிளகுத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்துவைக்கவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பின்னர் சப்பாத்திக்குத் தேய்ப்பது போல் தேய்க்கவும். அதன் நடுவில் பெரிய நெல்லிக்காய் அளவு பச்சைப்பயறு கலவையை வைக்கவும். மாவை நான்காக மடிக்கவும். எண்ணெய் தொட்டு மீண்டும் தேய்க்கவும். பின்னர் தவாவில் சேர்த்து எண்ணெய் சேர்த்து இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்

மிளகு, எலுமிச்சை, பச்சை மிளகாய் நறுமணத்துடன் மிக அற்புதமான சப்பாத்தி தயார்.

பச்சைப்பயறு பெசரட் தோசை

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவவும்) பச்சை மிளகாய் - 3 வெங்காயம் - ஒன்று (சிறிய அளவு) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும். காலையில் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தோசைக் கல்லைச் சூடாக்கி ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய்விடவும். மேலே நறுக்கிய வெங்காயம் சிறிதளவு பரவலாகத் தூவிவிடவும். ஒரு பக்கம் வெந்த பின்னர் புரட்டிப்போட்டு, அடுப்பை சிறுதீயில் வைத்து நன்கு வெந்த பின் எடுத்து சூடாகப் பரிமாறவும். ஆந்திரா ஸ்பெஷல் பெசரட் தோசை தயார்.

பச்சைப்பயறு நெய்ப் பொங்கல்

தேவை: பச்சரிசி - ஒரு கப் பச்சைப்பயறு - கால் கப் தண்ணீர் - 3 கப் மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு முந்திரிப்பருப்பு - 6 - 8 நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: முதலில் பச்சைப்பயற்றையும் அரிசியையும் லேசாக வறுத்து எடுத்து வைக்கவும். ஆறியபின் கழுவி வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து அரிசி, பச்சைப்பயறு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். பின்னர் வாணலியில் நெய், எண்ணெய்விட்டு முந்திரிப்பருப்பு, மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும். சூடான பச்சைப்பயறு நெய் பொங்கல் தயார்.

பச்சைப்பயற்றுக் குழிப்பணியாரம்

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் பச்சரிசி - ஒரு கப் உளுந்து - கால் கப் வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன் வெல்லம் - ஒன்றரை கப் தேங்காய்த் துருவல் - கால் கப் நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சரிசியுடன் பச்சைப்பயறு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தைவிட சற்று கெட்டியாகக் கரைத்து வைக்கவும். நான்கு - ஐந்து மணி நேரம் புளிக்கவைக்கவும். பிறகு வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டி மாவில் ஊற்றிக் கலக்கவும். தேங்காய்த் துருவல் சேர்க்கவும். குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில்வைத்து காயவைத்து ஒவ்வொரு குழியிலும் எண்ணெயைவிட்டு சூடாக்கி, அதில் கரைத்துவைத்துள்ள மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு வேகவிடவும். சுற்றிலும் எண்ணெய்விடவும். வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: வெல்லத்தைக் காய்ச்சும்போது சிறிதளவு தண்ணீர்விடவும். பாகு பதம் கவனமாகப் பார்த்து வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

பச்சைப்பயற்று ஊத்தப்பம்

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் பச்சரிசி - ஒரு கப் உளுந்து - அரை கப் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம், பச்சைப்பயற்றை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி சுத்தம் செய்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கிரைண்டரில் சேர்த்து நன்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். மூன்று - நான்கு மணி நேரம் கழித்து தோசைக்கல்லில் மாவைச் சற்று கனமாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய்விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழையை மேலே பரவலாகத் தூவவும். ஒரு மூடியால் மூடி சிறுதீயில் ஒரு நிமிடம் வைத்து பின்னர் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும் அருமையான பச்சைப்பயறு ஊத்தப்பம் தயார். விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

முளைகட்டிய பச்சைப்பயற்று புலாவ்

தேவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயறு - அரை கப் பச்சை மிளகாய் - 3 (கீறவும்) வெங்காயம் - ஒன்று இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா ஒன்று முந்திரி - 5 தண்ணீர் – முக்கால் கப் மாதுளை முத்துகள் - 2 டீஸ்பூன் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை பால் - ஒரு டேபிள்ஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய்விட்டு பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் தாளித்து, ஊறவைத்த அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். குங்குமப்பூவைப் பாலில் கரைத்துக்கொள்ளவும். மீதம் உள்ள நெய்யுடன் எண்ணெய் சேர்த்து இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். பின்னர் முளைகட்டிய பச்சைப்பயறு, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து மெதுவாகக் கிளறவும். குங்குமப்பூக் கரைசலை பரவலாகத் தெளித்துவிடவும். சிறுதீயில் ஒரு நிமிடம் வைத்திருந்து இறக்கவும். மாதுளை முத்துகள், முந்திரிப்பருப்பு கொண்டு அலங்கரித்து, பொரித்த வெங்காயத்தைத் தூவிப் பரிமாறவும்.

பச்சைப்பயற்று சப்ஜி

தேவை: பச்சைப்பயறு - அரை கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - 2 சீரகம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்) இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் கஸூரி மேத்தி - கால் டீஸ்பூன் சர்க்கரை - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும். பச்சைப்பயற்றை வறுத்து, குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும். குக்கரில் கொஞ்சம் எண்ணெய்விட்டு அரை டீஸ்பூன் சீரகம் தாளித்து, அதில் அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து உப்பு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், கஸூரி மேத்தி, சர்க்கரை சேர்த்து சிறிது வதக்கி, பின்னர் பச்சைப்பயற்றைச் சேர்த்து வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர்விட்டு குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். பின்னர் பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

பூரி, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றுக்கு இது அருமையான சைடிஷ்.

மிசல் பாவ்

தேவை: மிசல் மசாலாவுக்கு (கோடா மசாலா): எண்ணெய் - ஒரு டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் நறுக்கிய கொப்பரைத் தேங்காய் - கால் கப் (மிக்ஸியில் பொடிக்கவும்) மல்லி (தனியா) - 2 டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் கிராம்பு - 3 மிளகு - கால் டீஸ்பூன் பட்டை - ஒரு சிறு துண்டு காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 2 பூண்டு - 3 பல்.

மிசலுக்கு: எண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - கால் கப் நறுக்கிய தக்காளி - கால் கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

மிசல் பாவ் உடன் பரிமாற: வேகவைத்து, தோலுரித்து நறுக்கிய உருளைக்கிழங்கு - அரை கப் நறுக்கிய வெங்காயம் - அரை கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் மிக்ஸ்டு ஃபர்சான் (ஸ்நாக்ஸ் வகை) - தேவைக்கேற்ப.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

மிசல் மசாலா செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம் மற்றும் கொப்பரைத் தேங்காய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். மீதமுள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். நன்கு ஆறியபின் பொடித்துக்கொள்ளவும்.

மிசல் செய்முறை: பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி சீரகம் சேர்க்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். தயாரிக்கப்பட்ட மிசல் மசாலாவைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறி வதக்கவும். முளைகட்டிய பச்சைப்பயறு சேர்த்து வதக்கவும். 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து, மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கிய பின் திறந்து அரை கப் தண்ணீர் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து மேலும் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் சிறுதீயில் வைத்து இறக்கவும்.

பரிமாறும் விதம்: ஒரு பரிமாறும் தட்டில் கால் கப் மிசல் ஊற்றி, 2 டீஸ்பூன் நறுக்கிய உருளைக்கிழங்கு, சிறிதளவு மிக்ஸ்டு ஃபர்சான், 2 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவி பாவ் பன் அல்லது பிரெட் உடன் பரிமாறவும்.

பச்சைப்பயறு இட்லி

தேவை: இட்லி அரிசி - ஒரு கப் பச்சைப்பயறு - ஒரு கப் உளுந்து - கால் கப் வெந்தயம் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம், பச்சைப்பயற்றை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி சுத்தம் செய்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கிரைண்டரில் சேர்த்து நன்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். மூன்று - நான்கு மணி நேரம் கழித்து இட்லிகளாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பச்சைப்பயறு ஃப்ளவர்ஸ்

தேவை: பச்சைப்பயறு - கால் கப் பாஸ்மதி அரிசி - ஒரு கப் வெங்காயம் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி - அரை இன்ச் துண்டு (தோல் சீவவும்) உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது) மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு ஃபுட் கலர் - சிறிதளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். பாஸ்மதி அரிசியுடன் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வேகவைத்த பச்சைப்பயறு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து மிதமாக பிசைந்துகொள்ளவும். பின்னர் இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பாஸ்மதி அரிசியை மூன்று பங்குகளாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஒரு பகுதியை அப்படியே வைத்து, மீதம் உள்ள இரண்டு பங்கிலும் விருப்பமான ஃபுட் கலர் கலந்துகொள்ளவும். இப்போது கைகளில் எண்ணெய் தடவிகொண்டு செய்து வைத்த உருண்டைகளை எடுத்து பாஸ்மதி அரிசியில் நன்றாகப் புரட்டி எடுக்கவும். பின்னர் இட்லித் தட்டில் எண்ணெய் தடவி உருண்டைகளை இட்லிப் பாத்திரத்தில் 15 - 20 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

முளைகட்டிய பச்சைப்பயற்று சாம்பார்

தேவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப் நறுக்கிய காய்கறிக் கலவை - 150 கிராம் (கேரட், முருங்கைக்காய், வெள்ளைப்பூசணி, கத்திரிக்காய்) தக்காளி - ஒன்று (நறுக்கவும்) புளி - நெல்லிக்காய் அளவு சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - ஒரு கப் (200 மில்லி). தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சின்ன வெங்காயம் - 3 (தோலுரித்து நறுக்கவும்).

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீரை குக்கரில் சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர், காய்கறி, தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஐந்து - பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின்னர் சாம்பார் பொடியைச் சேர்த்து எட்டு - பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதனுடன் புளித்தண்ணீரைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்போது வேகவைத்த பயறு சேர்த்து கொதிவந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழையைத் தூவவும். ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி தாளிக்கக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, சாம்பாரில் சேர்க்கவும்.

இதை சாதம், தோசை, இட்லி மற்றும் பொங்கலுடன் பரிமாறலாம். வழக்கமாக நாம் செய்யும் பருப்பு சாம்பாரைவிட சற்று வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்.

பச்சைப்பயற்று தக்காளி ரசம்

தேவை: தக்காளி - 3 (சிறியது) பச்சைப்பயறு வேகவைத்த நீர் - 2 கப் மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 5 பல் கடுகு - அரை டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: தக்காளியை வேகவைத்து ஆறியபின் தோல் உரித்து நன்கு அரைத்துக்கொள்ளவும். இதைப் பச்சைப்பயறு வேகவைத்த நீரில் சேர்த்துக்கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் மிளகு கலவையை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்த நீரை ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். ரசம் சூடேறி நன்கு நுரை கூடி வந்த பின்னர் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

முளைகட்டிய பச்சைப்பயறு சாலட்

தேவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப் வெள்ளரி - ஒன்று (சிறியது) கேரட் - ஒன்று தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் இஞ்சித் துருவல் - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் (நறுக்கியது) - ஒரு டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வெள்ளரி, கேரட்டைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய பச்சைப்பயறு, வெள்ளரி, கேரட்டைச் சேர்க்கவும். பின்னர், அதில் தேங்காய்த் துருவல், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்க்கவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து பச்சைப்பயறு கலவையில் சேர்க்கவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மேலே கொத்தமல்லித்தழை சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.

முளைகட்டிய பச்சைப்பயற்றுப் புளிக்குழம்பு

தேவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் (தோலுரித்து நறுக்கவும்) தக்காளி - ஒன்று (நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) கடுகு, உளுந்து, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: குக்கரில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுந்து, வெந்தயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறுதீயில் ஒரு நிமிடம் வதக்கி, முளைகட்டிய பச்சைப்பயறு சேர்க்கவும். புளித்தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும்.

இதை சூடான சாதத்தில் சேர்த்துக் கலந்து, கீரைப் பொரியல், அப்பளம் தொட்டு சாப்பிடலாம்.

பச்சைப்பயறு பால் சூப்

தேவை: நறுக்கிய காய்கறிக் கலவை (கோஸ், கேரட், பீன்ஸ்) - ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயறு - அரை கப் வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) வெண்ணெய் - 3 டீஸ்பூன் பால் - 3 கப் மைதா மாவு - 2 டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: கடாயில் வெண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். காய்கறிகள், முளைகட்டிய பச்சைப்பயறு சேர்த்து மீண்டும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வதக்கவும். ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து காய்கறிகள் மென்மையாகும் வரை வேகவிடவும். மைதா மாவை பாலில் கரைத்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடாக்கவும். பின்னர் காய்கறிக் கலவையில் சேர்க்கவும். உப்பு, மிளகுதூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

பச்சைப்பயறு டோக்ளா

தேவை: பச்சைப்பயறு - ஒரு கப் இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவவும்) பச்சை மிளகாய் - 3 கடுகு - அரை டீஸ்பூன் சர்க்கரை - அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: பச்சைப்பயற்றை இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும். காலையில் இஞ்சி, 2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும் கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பச்சைப்பயறு கலவையை அதில் சேர்க்கவும். அடுப்பில் உள்ள பாத்திரத்தில் சிறிய ஸ்டாண்டு வைத்து கேக் பாத்திரத்தை மூடி உள்ளே வைக்கவும். பிறகு பாத்திரத்தை நன்கு மூடி 20- 25 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். நன்கு ஆறியபின் தட்டில் சேர்த்து வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர்விட்டு சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து, கொதித்த பின் இறக்கி ஆறவைத்து வில்லைகளின் மேல் பரவலாக ஊற்றி வைக்கவும். பின்னர் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் தாளித்து வில்லைகளின் மேல் சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

முளைகட்டிய பச்சைப்பயறு சாண்ட்விச்

தேவை: பிரெட் - 4 ஸ்லைஸ் கேரட் - ஒன்று வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 3 டீஸ்பூன் முளைகட்டிய பச்சைப்பயறு - 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிரீன் சட்னி செய்ய: புதினா - 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று உப்பு - 2 சிட்டிகை எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், துருவிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சட்னியாக அரைக்கவும். இந்த கிரீன் சட்னியை பிரெட் ஸ்லைஸின் மேல் தடவவும். பின்னர் வதக்கிய மசாலாவை மேலே பரப்பவும். இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி டோஸ்டரில் வைத்து இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும். இதேபோல் மீதமுள்ள இரண்டு பிரெட் ஸ்லைஸ்களிலும் செய்துகொள்ளவும்.

பாரம்பர்யம்... பச்சைப்பயறு... பலே சமையல்!

பச்சைப்பயறு நமது பாரம்பர்ய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது. குறைந்த ரத்த அழுத்தத்தைச் சீராக்கவும், எடையைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. சருமத்துக்குப் பொலிவு தரும் ஆற்றல் கொண்டது. இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவாக உள்ளது. புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. இத்தனை அற்புதம் நிறைந்த பச்சைப்பயற்றை குடும்பத்தினருக்குக் கொண்டுசேர்ப்பதே இல்லத்தரசிகளின் விருப்பம்.

30 வகை பச்சைப்பயறு ரெசிப்பி - சத்துகளின் சங்கமம்

இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பச்சைப் பயற்றைக்கொண்டு, இட்லி, சப்பாத்தி, ஊத்தப்பம் குருமா, சூப், சாண்ட்விச், லட்டு என வகை வகையான, ருசிமிக்க ரெசிப்பிகளை வழங்கி அசத்துகிறார் சமையற்கலைஞர் இளவரசி வெற்றிவேந்தன்.

``சிறுவயது முதலே சமையலில் ஆர்வம் அதிகம். அதனால் Star’s Kitchen என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கினேன். இதனால் சமையல் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. பரிசுகள் மட்டுமல்ல... உன்னதமான தோழிகளின் நட்பும் கிடைத்தது'' என்கிற இளவரசிக்கு முகநூல் தோழிகள் ‘Kitchen Queen’, ‘Food Scientist’ ஆகிய பட்டங்களையும் அளித்துள்ளார்கள். பச்சைப்பயற்றில் சில செய்முறைகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி’’ என்று கூறுகிறார் இளவரசி.

படங்கள்: வி.தேவி பூங்குழலி