
ஜெயசக்தி ஏகாம்பரம்

ராகி புட்டு
தேவை: ராகி மாவு - கால் கிலோ, தேங்காய் - அரை மூடி, நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், தூள் உப்பு - அரை டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தூள் உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கையால் பிடிக்கும் அளவுக்கு நன்கு கலந்துகொள்ளவும். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் இட்லித் தட்டில் ஒரு துணியைப் போட்டு இந்த மாவை அதில் சேர்த்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
மாவு வெந்தவுடன் அதை ஒரு தட்டில் போட்டு அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். தேங்காயைத் துருவி இதனுடன் கலந்துகொள்ளவும்.
ராகி வாழைப்பழ பான் கேக்
தேவை: கேழ்வரகு மாவு - கால் கிலோ, வாழைப்பழம் - 2, பால் - 100 மில்லி, தூள் உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பழங்களைப் பொடியாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் கேழ்வரகு மாவு, தூள் உப்பு, சர்க்கரை, பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடுபடுத்தி அதன் மேல் நெய்யைத் தடவி அளவு கரண்டியால் ஒரே அளவாக ஊற்றவும். இருபுறமும் நன்றாக சிவக்கவிட்டு தட்டில் எடுத்து வைக்கவும். பான் கேக் ரெடி.
பான் கேக்கின் மேல் வாழைப்பழத்தைச் சிறிய ஸ்லைஸ்களாக கட் செய்து வைத்து, வாழைப்பழத்தின் மேல் தேன் ஊற்றிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
ராகி சப்பாத்தி
தேவை: ராகி மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், தண்ணீர் - 2 கப், நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, தூள் உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசையவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியைப் போட்டு சுட்டெடுக்கவும். சப்பாத்தி சூடாக இருக்கும்போது மேலே கால் டீஸ்பூன் நெய் தடவவும்.
ராகி பேரீச்சை மில்க்ஷேக்
தேவை: ராகி மாவு - 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 200 மில்லி, பேரீச்சம்பழம் - 10 (கொட்டை நீக்கவும்), பாதாம்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு அதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். அதை அடுப்பில்வைத்து நன்கு கிளறவும். கொதித்ததும், அடுப்பை சிறிய தீயில் வைத்து ஏழு நிமிடங்கள் வேகவிடவும்.
ராகி மாவு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். பாதாம்பருப்பை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து தோலுரித்துக்கொள்ளவும். பேரீச்சையுடன் 6 பாதாம்பருப்பு, 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை ராகி கஞ்சியில் கலந்துகொள்ளவும். மீதியுள்ள பால், ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து நன்றாக ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் மீதமுள்ள பாதாம்பருப்பை மெல்லியதாக நறுக்கி மேலே தூவிப் பருகவும்.
ராகி முருங்கைக்கீரை அடை
தேவை: ராகி மாவு - ஒரு கப், முருங்கைக்கீரை - 2 கைப்பிடி அளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, தண்ணீர் - அரை கப், எண்ணெய், தூள் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை விதைகள் நீக்கிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும் அடுத்து முருங்கைக்கீரையைப் போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அரை கப் தண்ணீரை ஊற்றி அடுப்பை அணைத்துவிடவும். ராகி மாவு, தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். மாவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். தேவைப்பட்டால் மேலும் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
ராகி மாவைச் சிறு சிறு உருண்டைகளாகச் செய்துகொண்டு எண்ணெய் தடவி அடைகளாகத் தட்டவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் மேலே எண்ணெய் தடவி இந்த அடைகளைப் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றி மூடிவைத்து சிவக்கவிடவும். ஒருபுறம் சிவந்ததும் திருப்பிவிட்டு இரண்டாவது புறமும் சிவக்கவிடவும். இருபுறமும் சிவந்ததும் தட்டில் வைத்து சட்னியுடன் சூடாகச் சாப்பிடவும்.
ராகி உப்புமா
தேவை: ராகி மாவு - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று, முந்திரிப்பருப்பு - 6, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், தூள் உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிவைக்கவும். கேரட்டைத் துருவிக்கொள்ளவும். ராகி மாவுடன் தூள் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கையால் நன்றாகப் பிடிக்கும் அளவுக்குக் கலந்துகொள்ளவும். இட்லிப் பாத்திரத்தில் உள்ள தட்டில் துணி போட்டு, இந்த மாவை அதில் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும். 20 நிமிடங்கள் வெந்த பிறகு அதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவல் இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ராகி மாவைச் சேர்த்து சூடாகும் வரை நன்றாகக் கிளறி இறக்கவும்.
ராகி இட்லி
தேவை: இட்லி அரிசி - ஒரு கப், கேழ்வரகு - ஒரு கப், உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தூள் உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அரிசியையும் கேழ்வரகையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கழுவி, மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை நன்கு கழுவி, வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை வெந்தயத்துடன் சேர்த்து முதலில் மிக்ஸியில் அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அரிசி, கேழ்வரகை இரண்டாவதாக அரைத்துக்கொண்டு அதையும் உளுந்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவும். தூள் உப்பு சேர்த்து கையால் நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.
பிறகு இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் இட்லித் தட்டில் மாவை ஊற்றி, 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சத்தான மென்மையான ராகி இட்லி ரெடி. சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகச் சாப்பிட, சுவையாக இருக்கும்.
ராகி தோசை
தேவை: ராகி மாவு - ஒரு கப், உளுந்து - அரை கப், தூள் உப்பு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். பிறகு உளுந்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். ராகி மாவைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொண்டு அதை உளுந்து மாவுடன் சேர்த்து, தூள் உப்பு போட்டு கையால் நன்றாகக் கலக்கவும்.
ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு இந்த மாவைத் தோசையாக வார்த்து, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சாப்பிட, சுவையாக இருக்கும்.
ராகி கீரை வடை
தேவை: உளுந்து - ஒரு கப், ராகி மாவு - அரை கப், பாலக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), எண்ணெய் - தேவையான அளவு, தூள் உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயத்தையும் கீரையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிடவும். உளுந்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த உளுந்து மாவுடன் ராகி மாவு, வெங்காயம், கீரை, தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி இந்த மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
ராகி பிஸ்கட்
தேவை: ராகி மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், வெண்ணெய் - அரை கப், பொடித்த சர்க்கரை - அரை கப், வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன், பால் - 3 டீஸ்பூன்.

செய்முறை: ராகி மாவை வாணலியில் போட்டு சூடேறும் வரை வறுத்துக்கொள்ளவும். கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பொடித்த சர்க்கரையைச் சலித்து ராகி மாவுடன் கலந்துகொள்ளவும். வெண்ணெயை அதனுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். எசென்ஸ், பால் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவும். இந்த மாவைக் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு அதை உருண்டைகளாகச் செய்து ஒரு முள் கரண்டியால் மேலே அழுத்திவிடவும். ஓடிஜி அவனில் (OTG oven) 180 டிகிரி செல்ஷியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ராகி இனிப்புக் குழிப்பணியாரம்
தேவை: கேழ்வரகு - முக்கால் கப், இட்லி அரிசி - முக்கால் கப், பச்சரிசி - முக்கால் கப், உளுந்து - முக்கால் கப், வெல்லம் - 150 கிராம், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், தூள் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு, பச்சரிசி, இட்லி அரிசி மூன்றையும் ஒன்றாகக் கலந்து இரண்டு முறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவிடவும். உளுந்தை ஒருமுறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை முதலில் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ராகி கலந்த அரிசியை இரண்டாவதாக அரைத்து அந்த மாவையும் உளுந்து மாவுடன் சேர்த்து, தூள் உப்பு போட்டு கையால் நன்றாகக் கலந்துகொள்ளவும். 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
வெல்லத்தைச் சிறிதளவு நீரில் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ளவும். இந்த வெல்லப் பாகையும் தேங்காய்த் துருவலையும் மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எல்லா குழிகளிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு இந்த மாவை குழிகளில் முக்கால் பாகம் நிரப்பவும். இரண்டுபுறமும் பொன்னிறமாகச் சிவக்கவிட்டு எடுக்கவும்.
ராகி கேக்
தேவை: வெண்ணெய் - அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், தயிர் - கால் கப், கேழ்வரகு மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், தூள் உப்பு - கால் டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், பால் - அரை கப். ஐசிங் செய்ய: டார்க் சாக்லேட் - அரை கப், க்ரீம் - கால் கப். அலங்கரிக்க: பொடித்த முந்திரி, செர்ரிப்பழங்கள் - தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு மிக்ஸிங் பவுலில் வெண்ணெய், தூள் வெல்லம், தயிர் மூன்றையும் முதலில் நன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் கேழ்வரகு மாவு கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, தூள் உப்பு ஆகியவற்றைச் சலித்து சேர்க்கவும். வெனிலா எசென்ஸ், பால் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பேக்கிங் செய்யப் போகும் கிண்ணத்தில் வெண்ணெய் தடவி ஒரு பட்டர் பேப்பரை உள்ளே வைத்து அதில் கேக் மிக்ஸை ஊற்றி கிண்ணத்தை கீழே இரண்டு முறை தட்டி பிரீஹீட் செய்த ஓடிஜி அவனில் (OTG oven) 180 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
நன்றாக பேக் செய்யப்பட்ட கேக்கை ஆறவைக்கவும். ஆறியதும் கிண்ணத்தை தலைகீழாகத் திருப்பி ஒரு தட்டில் கேக்கை வைத்து ஐசிங் செய்யவும். ஐசிங் செய்ய சாக்லேட்டையும் க்ரீமையும் ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதை சூடான நீர் உள்ள ஒரு கிண்ணத்தின் உள்ளே வைத்து நன்றாகக் கரையும் வரை கலக்கவும். இதை கேக்கின் மேல் பரப்பி தடவவும். அதன் மேல் தூள் செய்த முந்திரி, செர்ரிப் பழங்கள் வைத்து அலங்கரிக்கவும்.
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம்
தேவை: கேழ்வரகு மாவு - முக்கால் கப், ரவை - அரை கப், தயிர் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தூள் உப்பு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் ரவையையும் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் கேழ்வரகு மாவு, தூள் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு சூடான தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பம் போல ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு மேலே வெங்காயம், கேரட், குடமிளகாய் தூவவும். மூடிவைத்து வேகவிடவும். ஊத்தப்பம் ஒருபுறம் சிவந்ததும் திருப்பிப்போட்டு மற்றொருபுறம் சிவக்கும் வரை வேகவிட்டு எடுக்கவும். சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சூடாகச் சாப்பிடவும்.
ராகி பீட்சா
தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், குடமிளகாய் - பாதியளவு, வெங்காயம் - ஒன்று, பனீர் - 100 கிராம், பீட்சா சாஸ் - 4 டீஸ்பூன், சீஸ் கியூப் - 3, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஒரிகானோ - கால் டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், தூள் உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பனீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, எண்ணெய், தூள் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைக்கவும்.
பிறகு சூடான தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி அதன்மேல் மாவை அடை போல தட்டிக்கொள்ளவும். ஒருபுறம் நன்றாக வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும். பிறகு அதன் மேல் சாஸைத் தடவவும். வெங்காயம், பனீர், குடமிளகாய் தூவவும். சீஸைத் துருவி அதன் மேல் பரவலாகப் போடவும். சீஸ் உருகும் வரை மூடி வைத்து ஏழு நிமிடங்கள் வேகவிடவும். மேலே சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகானோ, மிளகுத்தூள் தூவவும். நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்துவைத்து துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
ராகி ஸ்வீட் கீர்
தேவை: கேழ்வரகு மாவு - 3 டீஸ்பூன், தண்ணீர் - 400 மில்லி, நாட்டுச் சர்க்கரை - 6 டீஸ்பூன், பால் - 400 மில்லி, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவை 50 மில்லி தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். மீதி தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில்வைத்துக் கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்ததும் கேழ்வரகு மாவுக் கரைசலை ஊற்றி கைவிடாமல் ஐந்து நிமிடங்கள் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் பாலை ஊற்றி மேலும் மூன்று நிமிடங்கள் வேகவிடவும். நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பருகலாம்.
ராகி களி
தேவை: கேழ்வரகு மாவு - 200 கிராம், பச்சரிசி - 200 கிராம், தூள் உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து, உப்பு போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு அரிசியை இரண்டு முறை அலசி நீரில் போட்டு வேகவிடவும். அரிசி நன்கு வெந்தவுடன் கேழ்வரகு மாவை நடுவில் கொட்டவும். தண்ணீர் கொதித்து மாவுக்கு மேலே வந்ததும் அடுப்பைச் சிறு தீயில் வைத்து ஒரு வடிதட்டால் மூடவும். பாத்திரத்துக்குள் ஒரு கரண்டியை வைத்து மூடினால் பொங்காமல் இருக்கும். இவ்வாறாக ஒரு பத்து நிமிடங்கள் கேழ்வரகு மாவை வேகவிடவும். பிறகு இதை இறக்கி ஒரு மத்தின் பின்புறத்தால் நன்றாகக் கிளறவும். அது நன்கு ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
கீரைக் குழம்பு அல்லது சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ராகி லட்டு (சிமிலி)
தேவை: கேழ்வரகு மாவு - 150 கிராம், வெல்லம் - 250 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வேர்க்கடலை - 150 கிராம், தூள் உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கிக்கொள்ளவும் வெல்லத்தை லேசாகப் பொடித்து வைக்கவும். கேழ்வரகு மாவுடன் அரை டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து அதை அடையாகத் தட்டி, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். மிக்ஸி ஜாரில் முதலில் கேழ்வரகு அடையைச் சிறிய துண்டுகளாக உடைத்துப்போட்டுப் பொடித்துக்கொள்ளவும். அடுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை அதில் போட்டு பொடித்துக்கொள்ளவும். தூள் செய்த வெல்லத்தை அதன் மேல் போட்டு, திரும்பவும் அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை ஒரு தட்டில் சேர்க்கவும். எள்ளை வறுத்து அதன் மேல் போடவும். எல்லாவற்றையும் கலந்து உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். சத்து மிகுந்த கேழ்வரகு மாவு லட்டு தயார்.
ராகி பூரி
தேவை: ராகி மாவு - ஒரு கப், தண்ணீர் - ஒரு கப், தூள் உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: தண்ணீரை உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, ராகி மாவை அதில் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். நன்கு ஆறிய பிறகு கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை மாவின் மேல் தடவி 15 நிமிடங்கள் மூடிவைக்கவும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டைகளைச் சிறிய பூரிகளாகத் தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இன்ஸ்டன்ட் ராகி கஞ்சி
தேவை: ராகி மாவு - ஒரு கப், தண்ணீர் - 4 கப், தயிர் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தூள் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் ராகி மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து பெரிய தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கிளறி வேகவிடவும். ராகி மாவு வெந்ததும் அடுப்பை அணைத்து மூடி வைத்து 30 நிமிடங்கள் ஆறவிடவும். நன்கு ஆறிய பிறகு தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சி போல் செய்யவும். இந்த உடனடி கஞ்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான பானம் ஆகும்.
ராகி கூழ்
தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி குருணை - ஒரு கப், தயிர் - தேவையான அளவு, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தூள் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கேழ்வரகு மாவைத் தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைத்து ஏழு மணி நேரம் புளிக்கவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து பச்சரிசி குருணையை அதில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும். குருணை நன்றாக வெந்ததும் புளிக்கவைத்த கேழ்வரகு மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கைவிடாமல் கிளறவும். பத்து நிமிடங்கள் சிறிய தீயில்வைத்து கிளறிக்கொண்டே இருந்தால் மாவு நன்கு வந்துவிடும். இந்த மாவை இறக்கி வைத்து மூடி ஆறவிடவும். பிறகு தேவையான அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு தண்ணீர் ஊற்றிக் கரைத்து தயிர், உப்பு, வெங்காயம் சேர்த்துப் பருகவும்.் பருகவும்.
ராகி சூப்
தேவை: கேழ்வரகு மாவு - 3 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட் - 3 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 3 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - ஒன்று, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தூள் உப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். கேரட், பீன்ஸ், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். 400 மில்லி தண்ணீர்விட்டு நன்றாக வேகவிடவும். காய் முக்கால் பாகம் வெந்த பிறகு கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அதில் ஊற்றவும். 5 நிமிடங்கள் கைவிடாமல் சிறிய தீயில் வைத்து கிளறவும். தூள் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். வெதுவெதுப்பான சூட்டில் அருந்தினால் மிகவும் ருசியாக இருக்கும்.
ராகி பக்கோடா
தேவை: வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), கேழ்வரகு மாவு - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், தூள் உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
நறுக்கிய வெங்காயத்தை ஒரு தட்டில் போடவும். உலர்ந்த மாவுகளையும் மசாலா பொடிகளையும் தூள் உப்பையும் நன்றாகக் கலந்து வெங்காயத்தின் மேல் தூவவும். இஞ்சி - பூண்டு விழுது, ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும்.
ராகி உருளைக்கிழங்கு மஞ்சூரியன் கிரேவி
தேவை: கேழ்வரகு மாவு - அரை கப், உருளைக்கிழங்கு - 3, கேரட் - ஒன்று, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, குடமிளகாய் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், தூள் உப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு மாவில் அரை டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும். கேரட்டைத் துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். ஆவியில் வேகவைத்த மாவுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், இஞ்சி - பூண்டு விழுது, அரை டீஸ்பூன் தூள் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை உருண்டைகளாகச் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். தக்காளி சாஸ், சோயா சாஸ், அரை டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். கார்ன் ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பொரித்த உருண்டைகளைச் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவவும். ராகி உருளைக்கிழங்கு மஞ்சூரியன் கிரேவி தயார்.
ராகி காரக் குழிப்பணியாரம்
தேவை: கேழ்வரகு - முக்கால் கப், இட்லி அரிசி - முக்கால் கப், பச்சரிசி - முக்கால் கப், உளுந்து - முக்கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், தூள் உப்பு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு, இட்லி அரிசி, பச்சரிசி மூன்றையும் ஒன்றாகக் கலந்து இரண்டு முறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை ஒருமுறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை நைஸாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ராகி, அரிசியை ஒன்றாகக் கலந்து அரைத்து அந்த மாவையும் உளுந்து மாவுடன் சேர்த்து, தூள் உப்பு போட்டு நன்றாகக் கையால் கலந்துகொள்ளவும். ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், விதை நீக்கி நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். இதை மாவுடன் நன்றாகக் கலந்து கொள்ளவும். நான் - ஸ்டிக் பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எல்லா குழிகளிலும் அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கரண்டியால் மாவைக் குழிகளில் முக்கால் பாகம் நிரப்பி இரண்டுபுறமும் பொன்னிறமாகச் சிவக்க விட்டு எடுக்கவும். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
ராகி இனிப்பு அடை
தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவிக்கொள்ளவும். கால் கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும். வாணலியைச் சூடாக்கி கேழ்வரகு மாவைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். கேழ்வரகு மாவில் வெல்லப் பாகு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து, அடை தட்டும் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். தோசைக்கல்லில் நெய் தடவி, மாவை அடையாகத் தட்டவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வேகவிட்டு எடுக்கவும்.
ராகி இடியாப்பம்
தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், தேங்காய் - அரை மூடி, நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், தூள் உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவி வைக்கவும். வாணலியைச் சூடாக்கி கேழ்வரகு மாவைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். தண்ணீரை உப்பு போட்டுக் கொதிக்கவிடவும். மாவில் வெந்நீரை ஊற்றி கரண்டியால் நன்கு கலக்கவும். ஆறியதும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். பிழியும் பதத்தில் இருக்கும்படி சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லித் தட்டில் துணியை விரித்து அதில் பிழிந்து,
10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். வெந்த இடியாப்பத்தை உதிர்த்து தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.
உதிர்த்த இடியாப்பத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை, கால் டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்து உப்புமா போல செய்து சாப்பிடலாம்.
ராகி கட்லெட்
தேவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ரவை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (விதை நீக்கி நறுக்கவும்), வெங்காயம் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்), சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன், மைதா மாவு - 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரித்து மசிக்கவும்), பிரெட் தூள் - தேவையான அளவு, உப்புத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: தேவையான பொருள்கள் அனைத்தையும் (பிரெட் தூள், மைதா, எண்ணெய் நீங்கலாக) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். மைதா மாவைத் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்த மாவை கட்லெட் போல தட்டி மைதா கரைசலில் முக்கி பிரெட் தூளில் புரட்டவும். தோசைக்கல்லில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். தக்காளி சாஸ் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கான சத்தான ஸ்நாக்ஸ் இது.
ராகி குடமிளகாய் பஜ்ஜி
தேவை: கேழ்வரகு மாவு - அரை கப், குடமிளகாய் - ஒன்று, கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், தூள் உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாயை விதைகளை நீக்கி வட்டமாகவோ அல்லது நீளவாக்கிலோ நறுக்கிக்கொள்ளவும். மாவுகளுடன் தூள் உப்பு, மசாலா தூள்கள் சேர்த்து தண்ணீர்விட்டுக் கலந்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். குடமிளகாயை இந்த மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
ராகி ராஜ்மா ரைஸ்
தேவை: கேழ்வரகு மாவு - அரை கப், ராஜ்மா - 150 கிராம், பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒன்றே முக்கால் டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), பிரியாணி இலை - ஒன்று, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), தூள் உப்பு - தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ராஜ்மாவை இரவு முழுவதும் ஊறவைத்து குக்கரில் 10 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும். பாதி அளவு ராஜ்மாவை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அதனுடன் கேழ்வரகு மாவு, முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, சோம்புத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு தூள் உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாகச் செய்துகொண்டு அவற்றை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் அரிசியைப் போட்டு உதிரியாக வேகவிட்டு தண்ணீரை வடிகட்டிவிடவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 4 டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சூடான தும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு தாளிக்கவும். அடுத்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். மீதமுள்ள ராஜ்மாவைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் தேவை யான தூள் உப்பு சேர்த்துக் கிளறி, ராஜ்மா உருண்டைகளையும் சேர்த்து வதக்கி, பாஸ் மதி அரிசி சாதத்தை சேர்த்துக் கலந்து கொத்த மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
ராகி உருளைக்கிழங்கு போண்டா
தேவை: கேழ்வரகு மாவு - அரை கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கைப்பிடி அளவு, தூள் உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர தேவையான பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த மாவைச் சிறு போண்டாக்களாகச் செய்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
அனைவருக்கும் ஆரோக்கியம்!
உடலுக்கு நன்மை பயக்கும் உன்னதமான தானிய வகைகளில் கேழ்வரகுக்கு சிறப்பிடம் உண்டு. இது ராகி, கேப்பை எனவும் அழைக்கப்படுகிறது. கேழ்வரகு என்றால் கூழ், களி, புட்டு, கஞ்சிதான் நினைவுக்கு வரும். இவற்றுடன் கூடவே சப்பாத்தி, தோசை, கேக், கீர், குழிப்பணியாரம், பீட்சா, கட்லெட் என விதவிதமாகத் தயாரித்து வழங்கி கேழ்வரகை அனைவரும் விரும்பி ருசிக்கும் விதத்தில் அற்புத விருந்து படைக்கிறார் சமையற்கலைஞர் ஜெயசக்தி ஏகாம்பரம்.

``என்னுடைய அம்மா சுவையாக சமைப்பார்கள். சிறிய வயதில் அம்மாவுக்கு சமையலில் உதவியபோதும் அதிகமாக சமைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திருமணம் முடிந்த பின்பே முழுமையாகச் சமைக்க ஆரம்பித்தேன். முகநூலில் சேர்ந்த பிறகே புதுமையான சமையல்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதில் சமையல் போட்டிகள் நடந்தபோது கலந்துகொண்டு பரிசு பெறும் வாய்ப்புகளும் கிடைத்தன. எனக்குத் தெரிந்த ருசியான சமையலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக `ஜெயசக்தி கிச்சன்' என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறேன்.
நீரிழிவாளர்களுக்கும், உணவுக்கட்டுப்பாடு இருப்பவர்களுக்கும், ரத்தசோகை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு மிகவும் நல்லது. அதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் உகந்த உணவாகும்’’ என்று அக்கறையுடன் கூறுகிறார் ஜெயசக்தி.