சத்து எழுதப் போகும் சுட்டிகளுக்கு 10 கட்டளைகள் !டயட்டீஜியன் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் வீ.சக்தி அருணகிரி
##~## |
பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள். இந்த நேரத்தில், உங்கள் அன்றாட உணவு முறையிலும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். இறுதிக்கட்ட ரிவிஷன், இடைவிடாத படிப்பு, தேர்வு அறைகளாக மாறும் வகுப்பு அறைகள் என இந்த நேரத்தில், உணவு விஷயத்தில் நீங்கள் எளிதாகப் பின்பற்றக்கூடிய 10 கட்டளைகள் இதோ...
1. எந்தக் காரணமாக இருந்தாலும், காலை உணவைத் தவிர்க்காதீர்கள். மூன்று மணி நேரம் தேர்வு அறையில் இருக்கப்போகிறீர்கள். அப்போது, கடைசிக் கேள்விக்கு விடை எழுதும் வரை எனர்ஜி வேண்டும் அல்லவா? காலை உணவை உட்கொண்டால் மட்டுமே தெம்பாக பரீட்சை எழுத முடியும். எனவே, சாப்பிட்டுவிட்டுதான் தேர்வுக் களத்தில் இறங்க வேண்டும்.
2. தேர்வு எழுதிவிட்டு மதியம் வீடு திரும்பியதும் பசி வயிற்றைக் கிள்ளும். அப்போது, எல்லாச் சத்துகளையும் உள்ளடக்கிய மதிய உணவைச் சாப்பிடுங்கள். குறைந்தபட்சம் இரண்டு கப் சாதம் உள்ளே போக வேண்டும். அடுத்த தேர்வுக்குப் படிக்க எனர்ஜி தேவை.
3. தேர்வுக் காலத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சோர்வு அடையாமல் பாடங்களைப் படிப்பதற்கு இவை உறுதுணைபுரியும். குறிப்பாக, தேர்வுக் காலத்தில் புரதச் சத்து அதிகம் தேவை.
4. எக்ஸாம் சீசனில் எண்ணெய்ப் பொருட்களை உணவில் அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைத் தவிர்ப்பதும் நல்லது. அதேபோல், காரம் மிகுந்த பண்டங்களுக்கும் தடை போடுங்கள்.

5. தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு, ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். தேர்வு எழுதும்போது தாகம் எடுத்தால், உடனே தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல், தேர்வுக்காகப் படிக்கும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இப்போது வெயில் அதிகம் என்பதால், உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்வது அவசியம்.
6. எந்த நேரமும் புத்தகமும் கையுமாக இருக்கும்போது, நொறுக்குத் தீனிகளை வாயில் போட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். அப்போது எந்த மாதிரி சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். எந்தக் காரணத்தைக்கொண்டும் ஜங்க் ஃபுட் கூடவே கூடாது. அம்மாவிடம் பழங்களை நறுக்கித் தரச்சொல்லி, அவற்றை ஒவ்வொன்றாக ருசித்துச் சாப்பிடுங்கள்.
7. தேர்வு எழுதும் காலகட்டத்தில், எந்தக் காரணத்தைக்கொண்டும் ஓட்டலிலோ, வெளியிலோ உணவுப் பொருள்களை வாங்கி உட்கொள்ளாதீர்கள். வீட்டில் சமைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பாக்கெட்டில் அடைத்த பண்டங்களைத் தொடவே கூடாது.
8. எந்த நேரமும் படித்துக்கொண்டே இருக்காமல், மாலை வேளையில் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஒதுக்கி, உடற்பயிற்சிகள் செய்யுங்கள். எளிதான பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி போதுமானது. பிறகு, ஒரு டம்ளர் பால் அருந்திவிட்டுப் புத்தகத்தை மீண்டும் கையில் எடுங்கள்.
9. எக்ஸாம் சீசனில் இரவு உணவைக் கவனத்துடன் எடுத்துக்கொள்வது முக்கியம். போதுமான அளவு உணவை உட்கொள்வது நல்லது. அளவுக்கு மீறிச் சாப்பிடுவது சரியல்ல. பூரி போன்றவற்றை தவிர்க்கவும்.
10. நாளை தேர்வு எழுதவேண்டும் எனில், இன்று இரவு முழுவதும் கண்விழித்துப் படிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். இது முற்றிலும் தவறு. எக்ஸாம் சீசனில் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை நன்றாகத் தூங்க வேண்டியது அவசியம். அப்போதுதான், மறுநாள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.
ஆல் தி பெஸ்ட்!