Published:Updated:

சத்து நம் சொத்து !

சம்மர் சமாளிப்புக்கு 10 கட்டளைகள் !டயட்டீஜியன் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்,ந.வசந்தகுமார்

##~##

கோடை விடுமுறைக்கு முன்பே கொளுத்தத் தொடங்கிவிட்டது வெயில். சம்மரைச் சமாளிக்க இப்போதே தயாராக வேண்டும். குறிப்பாக, உணவு விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தால்தான்,  நீண்ட விடுமுறையைக் குதூகலமாகக் கொண்டாட முடியும். கோடை சமாளிப்புக்கு 10 கட்டளைகள் இதோ...

1. கிட்டிப்புள், கோலி, கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி என வெயிலோடு விளையாடுவோர், திரையரங்கம், பூங்கா, கடற்கரை, வயல்வெளிகள் என ஜாலியாக வலம்வருவோர், பாட்டு, நடனம், நடிப்பு, இசை எனச் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் சுட்டிகள், கோடையில் திரவ உணவுகளை மிகுதியாக உட்கொள்ள வேண்டும். பழச்சாறு, மோர், இளநீர் போன்றவற்றுடன் தர்பூசணி போன்ற பழங்களையும் சாப்பிடலாம்.

2. தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு லிட்டர் குடிக்கலாம். ஆனால், எவ்வளவுதான் தாகம் எடுத்தாலும், ஃப்ரிட்ஜில் வைத்த குளிர் தண்ணீரை அருந்தக் கூடாது. முடிந்த வரையில், பானைத் தண்ணீரைப் பருகுங்கள்.

3. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லையேல், உடலில் தேவைக்கு அதிகமான கலோரி சேரும்.

4. மதியம் 12 மணியில் இருந்து 3 மணி வரை வீட்டிலேயே இருப்பது நல்லது. 'இல்லை இல்லை... நான் வெளியே சென்றுதான் ஆகவேண்டும்’ என்பவர்கள், தலையில் தொப்பியை மாட்டிக்கொள்ளத் தவறாதீர்கள்.

சத்து நம் சொத்து !

5. வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கும்போது, வீட்டுக்கு உள்ளேயே விளையாடுங்கள். அப்போதும் தாகம் எடுக்கும். ஏதாவது சாப்பிட வேண்டும்போல் தோன்றும். வெள்ளரி, கேரட், தக்காளி முதலானவற்றை நறுக்கிக்கொடுக்கச் சொல்லி, ஒரு பிடி பிடித்தால் உடலுக்கு இதமாக இருக்கும்.

6. கோடைக்காலத்தில் காலை உணவாக நீர் ஆகாரம் சாப்பிடுவது நல்லது. முந்தைய நாள் இரவில் தண்ணீர் ஊற்றிவைக்கப்பட்ட சாதத்தைக் காலையில் சாப்பிடலாம். கம்பு அல்லது கேழ்வரகுக் கஞ்சியும் குடிக்கலாம்.

சத்து நம் சொத்து !

7. எண்ணெயில் வறுத்த உணவுப் பொருட்களை மிகுதியாக உட்கொள்வது நல்லதல்ல. இந்த சீசனில் வெள்ளரி, தர்பூசணி, கிருணி, லிட்சி, தக்காளி போன்ற வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழங்கள் நிறையக் கிடைக்கும். இவை நம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

8. குளிர்பான பவுடர்களை தண்ணீரில் கலக்கிக் குடிப்பதைத் தவிர்க்கவும். ஒருவேளை தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால், வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு போன்ற பாதிப்புகள் வரலாம். கொதிக்கவைத்து ஆறிய தண்ணீரைப் பயன்படுத்துவதுதான் நல்லது.

9. கோடை விடுமுறையில் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்தானே... நம்  சமையல் அறையிலும் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். லஞ்ச் பேக் செய்யும் முறை, காய்கறிகளை நறுக்குவது, சமையல் அறையைத் தூய்மையாக வைத்துக்கொள்வது, எளிதான உணவு வகைகளைச் சமைப்பது என அம்மாவுக்கு உதவி செய்துகொண்டே கற்றுக்கொள்ளுங்கள்.

10. கோடைக்காலத்தில் தேவையின்றி பல 'தடா’க்கள் விதிக்கப்படலாம். பப்பாளியையும் சப்பாத்தியையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்வது தவறு. ஜலதோஷம் பிடிக்கும் என்பதால் நீர்ச்சத்து மிக்க உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதும் தவறு. இவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லதே. விடுமுறைக் காலம் என்பதால், நொறுக்குத் தீனியே மூன்று வேளை உணவாக மாறிவிடக் கூடாது. வழக்கம்போல்  நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.