என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

சீர்காழிக்காக வேர்த்த சிக்கல் முருகன்!அறிவொளி

##~##
''நா
கை மாவட்டம் சிக்கலுக்கு அருகில் இருக்கும் பொரவச்சேரிதான், நான் பிறந்து வளர்ந்த ஊர். சிக்கலின் ஒரு பகுதிதான் பொரவச்சேரி. 'தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் 'சிக்கல்’ சண்முகசுந்தரத்தின் முன் இருக்கும் 'சிக்கல்’ எங்க ஊர்தான். அந்தக்காலத் தில் நிறைய நடனக் கலைஞர்கள், நாகஸ்வர வித்வான்கள் எங்க ஊரில் இருந்தாங்க.

சிக்கல் ரொம்பவே பெருமை வாய்ந்த ஊர். புறநானூற்று நச்சினார்க்கினியர் இந்த ஊரைப் பத்தி 'குரும்பள்ளூர் நெடுஞ்சோழ நாடு சிக்கல்’னு பாடியிருக்கார். அதாவது, சின்னச் சின்ன ஊர்கள் உள்ள சோழ நாடு என்று அர்த்தம். அதுபோல, ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இந்த ஊரில் சிங்காரவேலன் என்ற பெயரில் முருகன் வீற்றிருக்கார். ஐப்பசி மாசம் நடக்கும் கந்தசஷ்டி விழா ரொம்ப விசேஷம். சூரபத்மனை வதம் செய்ய தாயாரிடம் இருந்து முருகன் இங்கேதான் வேல் வாங்குவார். வேல் வாங்கும்போது சிங்காரவேலரின் முகம் வேர்க்கும். இடது கன்னத்து வேர்வையைத் துடைச்சுட்டு, வலது கன்னத்தைத் துடைக்கிறதுக் குள், மீண்டும் இடது கன்னம் வேர்த்துடும்.

என் ஊர்!

ஒரு தடவை கந்த சஷ்டி சமயத்தில் சீர்காழி கோவிந்தராஜன் எங்க ஊருக்கு பாட்டுப் பாட வந்திருந்தார். முருகனுக்கு வேர்க்கிறதைப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை. ஆனா, கட்டுக்கடங்காத கூட்டம். உள்ளே போக முடியலை. அடுத்த வருஷமும் அவரே பாட வந்தார். கச்சேரி முடிஞ்ச பிறகு, ராத்திரி 1 மணிக்கு அலங்காரம் எல்லாம் கலைச்ச பிறகு முருகனைத் தரிசிக்க வந்தார். தரிசனம் முடிஞ்சு, மனம் உருக பிள்ளைத் தமிழ் பாட்டு பாடினார். உருக்கமா அவர் பாடி முடிக்கும் போது முருகனின் சிரசில் இருந்து வியர்வைத் துளி உருவாகி, நெத்தி வழியா மூக்குல நின்னு மின்னுச்சாம். மெய் சிலிர்த்துப்போயிட்டார்.

சிக்கலுக்கு வடக்குப் பக்கத்தில் சடச்சிமுத்து காளியம்மன் கோயில் இருக்கு. யாரும் மீன் வாங்கிட்டு கோயில் வாசல் வழியாப் போக மாட்டாங்க. சுத்திதான் போவாங்க. அந்த அளவுக்குச் சக்தி வாய்ந்த தெய்வம்!

என் ஊர்!

சிக்கல், முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கும் ஊர். நெல், பயறு வகைகள் மட்டும்தான் விளையும். டீக் கடை, வெத்தலை பாக்குக் கடைகள்தான் இருக்கும். ரொம்ப சின்ன ஊர். ஆத்திரம் அவசரம்னா, மூணு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நாகப்பட்டினத்துக்குதான் போகணும். சிக்கலில் ஆரம்பப் பள்ளிக்கூடம் மட்டும்தான். அதுக்குப் பிறகு நாகப்பட்டினம்தான் போகணும். நான் நாகப்பட்டினம் நேஷனல் ஸ்கூல்ல படிச்சேன். 'வெள்ளக்காரன் காலத்துலயே நேஷனல்னு ஸ்கூலுக்குப் பேர் வெச்சது பெரிய புரட்சி’ன்னு நேருவே தன் சுயசரிதையில் குறிப்பிட்டு இருக்கார். ஸ்கூலுக்கு டிரெயின்லதான் 30, 40 பேர் குரூப்பாப் போயிட்டு வருவோம். எங்களுக்கு 'டிரெயின் பாய்ஸ்’னு பேர். அந்தப் பேர்ல அசோசியேஷன்கூட வெச்சிருந்தோம். பாட்டும் கேலியுமா ஒரே கும்மாளமா இருக்கும்.

சினிமாவுக்குப் போறதா இருந்தா நாகப்பட்டி னம் போகணும். ஊர்ல இருந்து குரூப்பா சைக்கிள்ல கிளம்பிடுவோம். ஒரு சைக்கிளுக்கு மூணு பேர் குறையாது. மாத்தி மாத்தி ஓட்டிக் கிட்டுப் போவோம். தரை டிக்கெட்டுதான் எப்பவும். அப்பதான் ஒரு படத்தை ரெண்டு மூணு தடவை பார்க்க முடியும்!

நாகப்பட்டினம் புயலுக்கு ரொம்ப ஃபேமஸ். நான் ஸ்கூல் படிக்கும்போது ஒருநாள் புயல்னு சொல்லி லீவு விட்டுட்டாங்க. 'அது என்னடா புடலங்கா புயல்? அதையும் பாத்துடுவோம்’னு பசங்கள்லாம் கிளம்பி கடற்கரைக்குப் போயிட் டோம். அங்கே பார்த்தா, பனை மர உயரத்துக்குக் கிளம்பி வந்த அலைகளைப் பார்த்து மெரண்டு, 'தப்பிச்சோம்... பிழைச்சோம்’னு ஓடி வந்துட்டோம். அடுத்த நாள் பார்த்தா, நாங்க நின்னுட்டு இருந்த இடத்துல மரம் முறிஞ்சு ரோட்ல கிடக்கு. கரையோர வீடுகள் இடிஞ்சு கிடக்கு. ஏதோ திகில் சினிமா பார்க்கிற மாதிரி இருந்தது!

இப்போ வேலை நிமித்தமா பல ஊர்களுக்குச் சுற்ற ஆரம்பிச்ச பிறகு, அப்பப்போ ஊர்ப் பக்கம் போயிட்டு வர்றதோட சரி. இத்தனை வருஷத்தில் மற்ற ஊர்கள்லாம் எவ்வளவோ மாறி இருக்கு. ஆனா, சிக்கல் மட்டும் அதே அமைதியோடு ஏகாந்தமா இருக்கு!''

சந்திப்பு: ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், கே.குணசீலன்