ஆபரேஷன் எலிவேட்டை
##~## |
ரமேஷ் - முத்துலட்சுமி, வீராச்சாமி - சுதா என இரண்டு தம்பதிகள் நல்லூர் பக்கம் வேட்டைக்குக் கிளம்புகிறார்கள். இவர்கள் இருளர் பழங்குடியினர். ஒரு காலத்தில் காட்டில் வேட்டையாடியவர்கள், புலி வேட்டை எல்லாம் பழங்காலக் கௌரவம். எலி வேட்டைதான் நிகழ்காலப் பிழைப்பு.

கிராமங்களில் பயிர்களை அழிக்கும் எலிகளைக் கிட்டி வைத்துப் பிடிப்பது ஒரு வகை. இப்படி ஆட்களை வைத்து அழிப்பது இன்னொரு வகை.

பஸ் நல்லூரில் நிற்க, இவர்களை அடையாளம் கண்டுகொண்டு விவசாயிகள் சிலர் எலி வேட்டைக்கு அழைக்கிறார்கள். பிடிக்கும் ஒவ்வொரு எலிக்கும்

10 கூலி என முடிவாகிறது. ஆனால், கண் விழிக்காத குட்டிகளுக்குப் பணம் தர முடியாது என்று விவசாயி ஒருவர் சொல்ல, உடன்படிக்கை ரத்தாகிறது. பிடிபடும் குட்டி எலிகளுக்கும் பணம் தருவதாக இன்னொருவர் ஒப்புக்கொள்ள... அந்த வயலை நோக்கி நடைபோடுகின்றனர். வயலை எட்டியதும், ஆளுக்கு ஒரு வரப்பாகப் பிரித்துக்கொண்டு வேலையைத் தொடங்குகிறார்கள்.
மண் கலயத்தில் வைக்கோலைத் திணித்து கொளுத்திப் புகை மூட்டி, அதைச் சரியாக எலிப் பொந்தில் வைக்கின்றனர். பொந்தினுள் செல்லும் புகை, வேறு இடத்தின் வழியாக எங்கேனும் வெளியேறுகிறதா என்று கவனமாக வரப்பில் கண் பதித்துக் காத்திருக்கிறார் சுதா. எங்கும் வரவில்லை. ''புகை வெளியேறும் வழியில்தான் எலி தப்பிச்சு ஓடும். அதைப் பிடிக்கத்தான் தேடுறேன்!'' என்கிறார். கையில் பளபள அரிவாள் வைத்திருக்கிறார். எலி தவிர, பாம்பு போன்ற வேறு உயிரினங்கள் வந்தால்... சமாளிக்கணுமே!
கொஞ்ச நேரத்தில் உள்ளே மயங்கிய நிலையில் அசைகிறது ஓர் எலி. புகை போடப்பட்டதால், எலிகள் பொந்துக்குள் மயங்கிக்கிடக்கின்றன. மதியம் 3 மணி வரை நீள்கிறது தேடல். இடையில் டீ, பஜ்ஜி என சின்னதாகப் பசியாறல். விவசாயிக்குச் சொந்தமான வயல் முழுவதும் சுற்றி வந்து முடித்த பின், பிடித்த எலிகளை மொத்தமாகக் கொட்டி எண்ணுகிறார்கள். இரண்டு தம்பதிகளுமாகச் சேர்த்து 110 எலிகளைப் பிடித்திருந்தனர்.

1,100 வாங்கிக் கொண்டு, திரும்பவும் ஊரை நோக்கிய பஸ் பயணம்.
விவசாயிகளிடம் எலிக் கணக்குக் கொடுத்து பணம் வாங்கும் நேரத்துக்குள் ஒரு சிறுவன் தூண்டில் போட்டு பிடித்துவைத்து இருந்த மீனை

10 கொடுத்து வாங்கி சுத்தம் செய்து, அரிந்துவைத்துவிட்ட முத்துலட்சுமிக்கு மூன்று குழந்தைகளாம். ''சின்னவ மீன் குழம்புன்னா ஆசையாத் திம்பா!'' என்கிறார்.

ஏரியாவில் எலிக் கறிப் பிரியர்களும் இருக்கிறார்கள். இவர்களைத் தேடி வந்து 10, 20 என்று பணம் கொடுத்து எலிக் கறி வாங்கிச் செல்கின்றனர். ''எல்லா நாள்லயும் வேலை கிடைக் காது. வேலை கிடைச்சாலும் எலி கிடைக்காது. இப்படி எப்பவாச்சும் காசு நிறையக் கிடைக்கிறப்போ, அதை மிச்சம் பிடிச்சுதான் கஞ்சி குடிக்கணும்'' என்கிறார்கள் வீராசாமியும் ரமேஷ§ம்.
அரிதாகக் கிடைக்கும் உடும்பு இவர்களுக்கு ஜாக்பாட் வருமானம் கொடுக்குமாம். உடும்புக் கறிக்காக உயிரையே கொடுக்கும் அசைவப் பிரியர்கள் ஊருக்குள் உண்டே!
- கரு.முத்து
படங்கள்: கே.குணசீலன்