கோட்டையைப் பிடிப்போமா ?!
தமிழகமே 'கோட்டையைப் பிடிக்கப் போறது யாரு’ன்னுதான் பேசிக்கிட்டு இருக்கு. எல்லாருமே கோட்டைக்குப் போக ஆசைப்படும்போது, நமக்கு மட்டும் ஆசை வரக் கூடாதா? ஜரூராகக் கிளம்பிவிட்டோம் 400 வருட பழமைமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை நோக்கி!
ஊருக்குள் நுழைந்தாலே, ஏதோ வெளிநாட்டுக்குள் நுழைந்த எண்ணம் ஏற்படுகிறது. இன்னமும் டேனிஷ் கட்டுமானங்கள் சிதையாமல் அப்படியே இருப்பது பிரமிப்பு. கோட்டை நுழைவாயில், கவர்னர் மாளிகை, கலெக்டர் பங்களா, தேவாலயங்கள் என்று திரைப்படங்களில் கதாநாயகனும் நாயகியும் ஆடும் வெளிநாட்டு டூயட் லொகேஷனைப் போல இருக்கிறது.

##~## |
டென்மார்க் நாட்டு அரசர் நான்காம் கிறிஸ்டியன் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் மன்னனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தரங்கம்பாடியும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களும் டேனிஷ்காரர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு தங்கி தங்கள் வணிகத்தை மேற்கொள்ள வசதியாகத்தான் இப்போது இருக்கும் இந்த டேனிஷ் கோட்டையைக் கட்டி இருக்கிறார்கள் டென்மார்க் நாட்டினர்!
''இலங்கையில் இருந்து வியாபாரம் செய்து வந்த கம்பெனியார் அங்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் காரைக்காலுக்கு அருகில் உள்ள இந்த தரங்கம்பாடிக்கு வந்து கரையேறினர். கப்பல் வந்து போக வசதியாக இருந்ததால், இங்கே தங்க அனுமதி கேட்டுப் பெற்றனர். பிராண வாயு இந்த இடத்தில் மிகவும் அதிக அளவில் இருந்ததால், பின்னாளில் அவர்கள் இங்கேயே தங்கத் தீர்மானித்தார்கள். அதிக அளவு பிராண வாயு இருப்பதால் உடல் மிகவும் புத்துணர்வு பெறும். அதனால்தான், டேனிஷ்காரர்களுக்குப் பிறகு வந்த ஆங்கிலேயரும்கூட இதை மாவட்டத் தலைநகராக ஆக்கி, இங்கேயே தங்கினார்கள்'' கோட்டையின் ரகசியம் சொல்கிறார் கோட்டைக் காப்பாட்சியரான முத்துச் சாமி.
இதற்கு முன்பு வரை பூம்புகாருக்குப் படையெடுத்தவர்கள் இப்போது அங்கு கூட்டம் அதிகமாகிவிட்டதால், தரங்கம்பாடியில் தஞ்சம் அடைந்துவிட்டார்கள்.

''காலையில் வந்தால் மாலை வரை எந்தத் தொந்தரவும் இல்லை. எவ்வளவு நேரம் இருந்தாலும் களைப்பே ஏற்படாது!'' என்கிறார் காதலிக்கு ஐஸ் வாங்கிக் கொடுத்த ஒரு காதலர். (எப்படி பாஸ் களைப்பு வரும்?)
இவர்களைப்போல கடலோரம் முழுவதும் காதலர்கள். காற்றும் முத்தமும் கலந்து வாங்குகிறார் கள். கோட்டைக்குள் நுழைந்தோம்.

இரண்டு அடுக்கு மாளிகை அது. கீழ்த் தளத்தில் மூன்று பெரிய அறைகள். இங்குதான் கடலில் இருந்து இறக்கும் பொருட்களைச் சேகரித்து வைப்பார்களாம். மேல் தளத்தைத் தாங்கும் தூண்கள் இந்த அறைகளின் உள்ளேதான் இருக்கின்றன. படிகளும் உண்டு. சாய்தளப் பாதையும் இருக்கிறது. மேல்தளத்தில் கடலை நோக்கிய நிலையில் ஐந்து அறைகள் முன்பு இருந்தனவாம். கவர்னர் அறை, பாதிரி யார் அறை, சீயோன் தேவாலயம், படைத் தலைவரின் அறை, உணவு அறை.
இதில் தேவாலயம் இருந்த இடம் இப்போது மியூசியம் ஆக்கப்பட்டு இருக்கிறது. அதில் டேனிஷ்காரர்கள் பயன்படுத்திய பொருட்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்டு எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள், தஞ்சை மற்றும் டென்மார்க் மன்னர்கள் ஆகியோருக்கு இடையே நடந்த கடிதப் போக்குவரத்து குறித்த ஆவணங்கள், பீரங்கிக் குண்டுகள் போன்றவை வைக்கப்பட்டு இருக்கின்றன. கீழே கோட்டை மதிலை ஒட்டி குதிரை லாயங்கள், போர் வீரர்கள் தங்கும் இடங்கள், மது அறை, சிறைச்சாலை ஆகியவை அமைந்து இருக்கின்றன. செந்தமிழ் வளர்த்த சீகன் பால்கு இந்தச் சிறையில்தான் அடைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. கோட்டையின் மேல் நான்கு புறங்களிலும் பீரங்கிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கம்பீரமும் கலைநயமுமாகக் காட்சி அளிக்கிறது.
ஊட்டி, கொடைக்கானல் போய் அவஸ்தைப்பட விரும்பாதவர்கள் கட்டாயமாக இங்கே வரலாம். இதை யும், பூம்புகாரையும், சுற்றிலும் உள்ள திருத்தலங்களையும் பார்ப்பது... மிக நல்ல அனுபவமாக அமையும். 'கோட் டைக்குப் போனேன்!’ என்றும் ஊருக்குள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்!
- கரு.முத்து,
படங்கள்: எம்.ராமசாமி