என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

திப்பிராஜபுரத்து திண்ணை மனிதர்கள்!

##~##

''நீங்க தி.ஜானகிராமன் நாவல்கள் படிச்சுருக்கீங்களா? 'மோகமுள்’, 'அம்மா வந்தாள்’... அதுல வர்ற தஞ்சாவூர் மாவட்டக் கிராமங்களும் மனிதர்களும் படிக்கிற ஒவ்வொருத்தர் மனசையும் விட்டு அகல மறுப்பாங்க. அந்த வாழ்க்கையை அப்படியே நாமும் சுவீகரிச்சுக்கணும்கிற ஏக்கம் உண்டாகும். நீங்க திப்பிராஜபுரத்துல பிறந்திருந்தா அந்த ஏக்கத்துக்கு வேலையே இல்லை. ஏன்னா தி. ஜானகிராமன் கதைகள்ல வர்ற தஞ்சாவூர் கிராமத்து வாழ்க்கையை இன்னைக்கும் அப்படியே தக்க வெச்சுருக்கிற ஊர் எங்களோடது!''

  திப்பிராஜபுரம் கதை சொல்லத் தொடங்கினார் என்.காமகோடி, சிட்டி யூனியன் வங்கியின் செயல் தலைவர்.

என் ஊர்!

''செட்டிநாட்டுக் கலாசாரம் எப்படி இன்னைக்குப் பாதுகாக்கப்படுதோ, அதே மாதிரி தஞ்சாவூர் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் கிராமங்களில் முக்கியமானது திப்பிராஜபுரம். ஊரை மாலைபோல சூழ்ந்த முடிகொண்டான், திருமலைராஜன் ஆறுகள். சுற்றிப் பச்சைப்பசேல்னு வயல்வெளிகள்னு பசுமையான கிராமம். ரொம்ப சின்ன கிராமம். ஆனா வசதியானது. சொன்னா நீங்க ஆச்சர்யப்படுவீங்க. இன்னைக்கும் எங்க ஊர் குடியிருப்புப் பகுதிகள்ல தார் சாலை அமைக்கக்கூட நாங்க அனுமதிக்கலை. எங்க வீடுகளை வசதிக்கும் காலத்துக்கும் ஏற்ப மாத்திக்கலை. ஆலோடி, திண்ணை, ஒட்டுத் திண்ணை, ரேழி, தாழ்வாரம், முற்றம், கூடம், ஊஞ்சல், பரண், உள்ளு, இரண்டாம் கட்டு, சமையல் கட்டு, மூன்றாம் கட்டு, தொழுவம், கேணி, பூந்தோட்டம்னு அந்தக் காலத்து அமைப்பில் அப்படியே இருக்கும் ஓட்டு வீடுகள் எங்களுடையவை. எங்க வாழ்க்கையும்கூட அப்படித்தான்.

என் ஊர்!

எல்லாத் தொழில்நுட்ப வசதிகளும் எங்க ஊரில் உண்டு. ஆனா, அது எங்க வாழ்க்கை முறையை மாத்த நாங்க அனுமதிச்சதே இல்லை. டி.வி. ஓர் உதாரணம். திப்பிராஜபுரத்துல டி.வி. இல்லாத வீடுகளே கிடையாதுன்னு சொல்லலாம். ஆனா, எங்க ஊர் மக்கள் டி.வி. முன்னாடி கவுந்துக் கிடக்க மாட்டாங்க. அதிகாலையில எழுந்தா காவிரிக்குப் போய் நல்ல குளியல். வர்ற வழியில வேதகோஷத்தைக் கேட்டுக்கிட்டே சிவன் கோயிலிலோ, பெருமாள் கோயிலிலோ ஒரு கும்பிடு.  வேலைக்குக் கிளம்பிட்டா பொழுது சாயறதுக்குள்ள திரும்பவும் வீடு. சாயங்காலம் திண்ணைக் கச்சேரி. ராத்திரி 7 மணிக்கு, சிவன் கோயிலில் பூஜையோட சேர்த்து கிராமத்து ஜமா. வீடு திரும்பி முற்றத்துல நிலாவோட ராத்திரி சாப்பாடுன்னு வெளியாளுங்களை ஏங்க வைக்குற வாழ்க்கை திப்பிராஜபுரம் மக்களோடது. சிவன் கோயிலில் வருடப் பிறப்புக் கொண்டாட்டம், பெருமாள் கோயிலில் ராதா கல்யாணம், மாரியம்மன் கோயில் தீமிதி விழா... இது மூணும் எங்க ஊரோட முக்கியமான கொண்டாட்டங்கள்!

எந்த ஒரு விஷயத்திலும் ஊர் கூடி முடிவெடுக்கிறதும் சேர்ந்து பணியாற்றுவதும் எங்க ஊரோட தனித்துவம். கோடைகாலத்தில் பெண்கள் வடாம் போடுவதை எல்லா ஊர்களிலும் பார்த்து இருப் பீர்கள். எங்கள் கிராமத்திலும் வடாம் போடுவார்கள், எல்லோரும் ஒன்றுகூடி ஒரே இடத்தில் தயார் செய்வார்கள். இதே ஒற்றுமையை கிராமத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும்போதும் பார்க்க முடியும். ஆண்டுதோறும் தமிழ் வருடப் பிறப்பின்போது ஊர் கூடுவோம். ஊர் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை அன்றைக்குதான் எடுப்போம்.

என் ஊர்!

பண்ணையார்கள் நிறைந்த ஊர் திப்பிராஜபுரம். ஆனால், தஞ்சை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் எழும் கூலிப் பிரச்னை திப்பிராஜபுரத்தில் எந்தக் காலத்திலும் எழுந்தது இல்லை. அந்தக் காலம் தொட்டு வியாபாரத்திலும் விவசாயத்திலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாடுறதை ஒரு மரபாகவே திப்பிராஜபுரத்தில் கடைப்பிடிக்கிறோம். எப்படியும் வருஷத்துக்கு பத்துப் பதினைந்து கச்சேரிகள் இருக்கும். இங்கு வந்து போகாத பிரபலங்களே கிடையாதுன்னு சொல்லாம். எனக்குத் தெரிஞ்சே எம்.எஸ். கச்சேரிகள் மூன்று முறை இங்கே நடந்து இருக்கு!

ஊரில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கூடம் உண்டு. ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் இல்லாம யார் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் தொடக்கக் கல்வி எல்லோருக்கும் அங்கேதான். கிராமத்துல உள்ள அரசுப் பள்ளிக்கூடங்கள் மட்டம்கிறது எங்க ஊரைப் பொறுத்த அளவில் பொய். எங்க ஊர்ல மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் தயாராகி இருக்காங்க. எல்லாம் அரசுப் பள்ளிக்கூடத்துல உருவானவங்கதான். வேத பண்டிதர்கள் அப்புடு ச்ரௌதிகள்,  ராமமூர்த்தி தீட்சிதர், சீதாராம கனபாடிகள், ராமச்சந்திர அய்யர், இந்திய சிமென்ட் தொழிற்துறைக்குப் பெரும் பங்களிப்பு தந்த கோபாலசாமி, ஆடிட்டர் மஹாலிங்கம்... இப்படி திப்பிராஜபுரம் தந்த மாணிக்கங்களைச் சொல்லிகிட்டே போகலாம்.

எங்க ஊரோட பெருமைக்கு முக்கியமான காரணம்... நாங்க இந்த ஊர் மேல வெச்சு இருக்குற பிணைப்பு. ஊர்த் திருவிழாக்களை, ஊர்க்காரங்களோட விசேஷங்களை நாங்க விட்டுக்கொடுக்க மாட்டோம். வீட்டு விசேஷங்களை ஊரில் - வீட்டிலேயேதான் நடத்துவோம். தொழில் நிமித்தம் உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் கடைசிக் காலத்துல இங்கே திரும்பிடுவோம். நாங்க எங்கே இருந்தாலும் எங்க மனசு எங்க ஊர் திண்ணைகள்லதான் உறைஞ்சுக்கிடக்கும்!''

- சமஸ்,  படங்கள்: கே.குணசீலன்