என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

பலா சந்தைக்குப் போவோமா?

Jackfruit
News
Jackfruit

பலா சந்தைக்குப் போவோமா?

##~##

''பண்ருட்டி பலாதான் இனிப்புன்னான் வடகாடு எங்கே இருக்குன்னே தெரியாதவன்; அந்தக் கதையால இருக்கு உம் பேச்சு!''            

- இப்படி ஒரு சொலவடையே உண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில். அப்படி ஒரு சுவைக்குச் சொந்தக்கார ஊர் வடகாடு.

பலா சந்தைக்குப் போவோமா?

ஆலங்குடி பக்கத்தில் இருக்கும் இந்தச் சின்ன கிராமத்தில் நடக்கும் பலாச் சந்தைக்கு ஏகக் கிராக்கி. சாலையின் இருமருங்கிலும்  பலாக் காய்கள், பழங்கள் குவிந்துகிடக்கின்றன. 8 மணிக்கெல்லாம் விவசாயிகள் ஒருபுறமும் ஏலம் எடுக்க வந்தவர்கள் மறுபுறமுமாக சாலையை மறித்து கூட்டம் நிற்கிறது. ஒரு பெரிய பலாக் காய் குவியல் முன் நின்ற ஏலதாரர் ராமசேகர், ''எத்தனைக் காய் கிடக்கு?'' எனக் கேட்கிறார். கொண்டுவந்தவர் ''நானூறுண்ணே'' எனச் சொன்னதும், காயைத் தூக்கிப் பார்க்கிறார். ஒரு பலாக் காய்

பலா சந்தைக்குப் போவோமா?

40 என முதல் விலையைக் கூறி ஏலத்தைத் தொடங்குகிறார்கள். ஏலம் எடுக்க வந்த பலரது முகத்தைப் பார்த்தவாறே ஏலம் விட்டுக் கொண்டு இருக்கும் ராமசேகரிடம் ஏலம் எடுக்க வந்தவர்கள் கண்களாலயே ஏலத் தொகையைக் கூட்டுகிறார்கள். கடைசியாக ''அறுவத்தி மூணு ரெங்கசாமி'' எனக் கூறி ஏலத்தை முடிக்கிறார்.  'இப்படித்தான் பலாவை ஏலம் விடுவீர்களா’ என்று ராமசேகரைக் கேட்டோம்.

''அப்பத்துலருந்தே இப்படித்தான். முதல்ல விவசாயிகள் கொண்டுவர்ற பலாக் காய்களைத் தரம் பிரிச்சிருவோம். பெரிசு ஒரு முட்டு, நடுத்தரம் ஒரு முட்டு, பொடிசு ஒரு முட்டுன்னு தரம் பிரிச்சி குமிச்சிருவோம். அப்புறம் காய்க்குத் தகுந்த மாதிரி விலையைச் சொல்லி ஏலம்விடுவோம். பெரிசுன்னா நாற்பது தொடங்கி நானூறு வரைக்கும்;  நடுத்தரக் காய்னா முப்பது தொடங்கி நூத்தம்பது வரைக்கும்; பொடிசுன்னா பத்து இருவதுன்னு. இங்க திருச்சி, சிவகங்கை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, சென்னைனு பல மாவட்டங்கள்ல இருந்தும் வியாபாரிங்க வர்றாங்க. வடகாட்டுல இருந்து மட்டும் இந்த சீஸன்ல ஒரு நாளைக்கு இருவத்தஞ்சாயிரம் காய் வரும். அது மாதிரி இந்த ஏரியா முழுக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் காய் ஏலத்துக்கு வருது. நமக்கு ஒரு ரூபாய்க்கு பத்து காசு கமிஷன். சமயத்துல ஏலம் எடுக்க வர்ற வியாபாரிங்க கையில காசு கொண்டுவர மாட்டாங்க. கடனாதான் குடுக்கணும். அதுவும் நம்ம பொறுப்புலதான் குடுக்கணும். கடன் வாங்கிட்டுப் போன வியாபாரிங்க திரும்ப வர ஒரு வாரம், பத்து நாள்கூட ஆகலாம். காய்க்காரவுகளுக்கு நாம பணத்தைக் குடுத்துரணும். இப்படிச் சில சங்கடம் இருந்தாலும் நமக்குப் பிடிச்ச பொழைப்பு இது!'' என்கிறார் ராமசேகர்.

பலா சந்தைக்குப் போவோமா?

ஏலத்துக்கு பலாக் காய்களைக் கொண்டுவந்திருந்த திருப்பதியிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில தண்ணிக் கஷ்டம் பெரும் கஷ்டம். 1,000 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைச்சு பாசனம் பண்ற விவசாயிகள்கூட உண்டு. இவ்வளவு கஷ்டத்துக்கு இடையில நாங்க விளைவிக்குற பழத்துல இருக்குற ருசி ஆண்டவன் கொடுத்த வரம். வீட்டுக்கு வீடு பலா மரம் வளர்க்குறோம். பலாவை விவசாயமாகவே பண்றோம். முறையா தண்ணி இறைச்சி, மருந்தடிச்சி, பலா மரத்தைப் பராமரிப்போம். மார்கழி மாசம் எல்லா மரமும் பூ விட்ரும். அதுல இருந்து கண்ணும் கருத்துமா மரத்தைப் பார்த்துப்போம். வெளியூர் சந்தைக்குக் கொண்டுபோனா இன்னும் கொஞ்சம் காசு பார்க்கலாம். ஆனா, எங்களுக்கு விருப்பம் இல்லை. பலாவுக்காக எவ்வளவோ தூரத்துல இருந்து நம்ம ஊரைத் தேடி வர்றாங்க. அவங்களை ஏமாத்தலாமா?'' என்கிறார் திருப்பதி!

- வீ. மாணிக்கவாசகம், படங்கள்: பா.காளிமுத்து