கட்டுரைகள்
Published:Updated:

தாகமா... பசியா..? - சம்மர் குழப்பமும் சரியான உணவுகளும்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ், மாம்பழம், தர்ப்பூசணி, ஐஸ் வாட்டர்... இப்படிக் கோடையை நினைத்தாலே குளிரச் செய்ய எத்தனையோ விஷயங்கள். வெயிலுக்கு இதமாக ஜில்லென சாப்பிட்டால் மட்டும் போதாது. உடல், மன ஆரோக்கியத்தை பாதிக்காத உணவுகளாகவும் இருக்க வேண்டும். கோடைக்கான உணவுகளில் கவனிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும் பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

‘‘கோடையில் சுற்றுச்சூழலின் வெப்பநிலை அதிகரிப்பதால், நம் உடலின் உள் வெப்பநிலையும் அதிகரிக்கும். அதன் விளைவாக உடலில் நீர் வறட்சி, களைப்பு, எரிச்சல், ஒருவித படபடப்பான உணர்வு போன்றவற்றை உணர்வோம். இவை எல்லாமே நம் உடலின் நீர்ச்சத்துத் தேவையை உணர்த்துபவை. கோடைக்காலத்தில் தாக உணர்வு அதிகமிருக்கும். பெரும்பாலும் அதைப் பசி உணர்வாகக் குழப்பிக்கொண்டு, தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவோம்... பிறகு அவதிப்படுவோம். தாகத்துக்கும் பசிக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க ஒரு சிம்பிள் வழி... அந்த உணர்வு ஏற்படும்போது முதலில் தண்ணீர் குடியுங்கள். தாகம்தான் என்றால் அந்த உணர்வு கட்டுப்படும். பசி என்றால் தண்ணீர் குடித்தபிறகும் அதே உணர்வு தொடரும். எனவே கோடைக்காலத்தில் உணவுத்திட்டமிடலை மிகச் சரியாகச் செய்வதன் மூலம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளவும் மனநிலையில் தடுமாற்றங்கள் இன்றிப் பார்த்துக்கொள்ளவும் முடியும்.

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

1. ஃப்ரெஷ் பழங்கள்: பழங்கள் சாப்பிட ஏதுவான காலம் இது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஃப்ரெஷ்ஷான பழங்களை அப்படியே வெட்டிச் சாப்பிடவும். ஜூஸாகக் குடிக்க நினைக்காமல், பழமாகவே சாப்பிடுவதன் மூலம், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கும். பழங்கள் என்றதும் விலை அதிகமான வெளிநாட்டுப் பழங்கள்தான் சிறந்தவை என நினைக்காதீர்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள். அந்த வகையில் இந்தக் கோடைக்கு நுங்கு, மாம்பழம், தர்ப்பூசணி, கிர்ணி போன்றவற்றைச் சாப்பிடுங்கள். பழம்தான்... ஆனாலும் அளவு முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒருவேளை உங்களுக்கு பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையோ, கட்டுக்கடங்காத நீரிழிவோ இருந்தால் பழங்கள் சாப்பிடுவதில் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

2. ஃப்ரெஷ் காய்கறிகள்: பழங்களுக்குச் சொன்ன அதே விதி காய்கறிகளுக்கும் பொருந்தும். இந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளைத் தவறவிடாமல் எடுத்துக்கொள்வது அவசியம். வெள்ளரிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளைப் பூசணி, வாழைத்தண்டு போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், வாழைத்தண்டு போன்ற சில காய்களைப் பொரியலாகவோ, கூட்டாகவோ மட்டுமன்றி, ரைத்தாவாகவும், சாலடாகவும்கூட சாப்பிடலாம்.

3. நீர்ச்சத்து: தாகத்துக்கு பாட்டில் பானங்களையும் செயற்கை ஜூஸ்களையும் குடிப்பதைத் தவிர்த்து, பானகம், நீர்மோர், நுங்கு சர்பத், நன்னாரி சர்பத், இளநீர் போன்றவற்றைக் குடிக்கவும். பாட்டில் பானங்களிலும் செயற்கை ஜூஸ்களிலும் சர்க்கரைச் சத்தையும் கலோரிகளையும் தவிர வேறு ஒன்றுமிருக்காது. அதுவே மேற்குறிப்பிட்டவற்றில் உடலுக்கு ஆற்றலைத் தரும் எலக்ட்ரோலைட், ஊட்டச்சத்துகள் இருக்கும்.

4. மிதமான உணவு: வெயில் நாள்களில் அதிக எண்ணெய், காரம், மசாலா சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவது செரிமானத்தைத் தாமதப்படுத்தும். கூடவே நெஞ்செரிச்சல், வயிற்றுவலி மற்றும் எரிச்சல், அல்சர், மலம் கழிக்கும்போது வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். வயிற்றைப் பதம் பார்க்காத, எளிதில் செரிமானமாகும், மிதமான காரம், மசாலா சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவதுதான் கோடைக்கு ஏற்றது.

- பழகுவோம்