
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
பழைய சோற்றையும் கேப்பக்கூழையும் கம்பங்களியையும் ஸ்டார் ஹோட்டல் மெனுவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, ஆரோக்கிய உணவு என்ற தேடலில் பாதாமையும் பிஸ்தாவையும் கீன்வாவையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். வீட்டு வாசலில் கேட்பாரற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் முருங்கையை முகம்கொடுத்துக்கூடப் பார்க்காமல், நட்சத்திர ஹோட்டலில் சில நூறுகள் கொடுத்து ‘மொரிங்கா சூப்’ குடிக்கிறோம்.
ஆரோக்கிய உணவுகள் என்பவை நம் கைகளுக்கு எட்டும் இடத்திலேயே இருப்பதைப் பலரும் உணர்வதில்லை. தொலைத்த இடத்தில் தேடாமல் வேறு எங்கோ தேடி ஏமாந்துகொண்டிருக்கிறோம்.

சூப்பர் ஃபுட்ஸ் என்ற பெயரில் சமீப காலமாகப் பிரபலமாகி வரும் விலையுயர்ந்த ஆரோக்கிய உணவுகள் குறித்தும், அவை மட்டும்தான் நம் ஆரோக்கியத்தை மீட்க உதவுமா, மாற்று உணவுகளே இல்லையா என்பது குறித்தும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.
‘‘அண்ணாச்சிக் கடைகளில் கிடைக்கக் கூடிய, பர்ஸை பதம் பார்க்காத எளிய உணவுகள் மூலமே ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்ற முடியும், நம் இலக்கை எட்ட முடியும் என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் ‘சூப்பர் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் மருத்துவர்களும், டயட்டீஷியன்களும் பரிந்துரைக்கும் காஸ்ட்லியான உணவுகள் மட்டும்தான் நாம் நினைக்கிற ஆரோக்கியத்தை அள்ளித் தரும் என்ற மாயை பலருக்கும் இருப்பதுதான் பிரச்னையே. இப்படிப்பட்ட காஸ்ட்லி உணவுகள் தினமும் நம் தட்டில் இருந்தாக வேண்டுமா என்றால் அவசியமே இல்லை.
நீங்கள் தேடும் சூப்பர் உணவுகள் உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் காய்கறிச் சந்தையிலுமே எளிதில் கிடைக்கும். அருகிலிருக்கும்போது அருமை தெரியாது என்பது இதற்கும் பொருந்தும். எந்த விளம்பரமும் இன்றி, எளிதாகக் கிடைக்கும் எதையும் நாம் பொருட்படுத்துவதே இல்லை.

உதாரணத்துக்கு தேங்காய். நம் உடலுக்குத் தேங்காய் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் காலங்காலமாகத் தொடர்வதுதான். வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க தேங்காயைப் போன்ற சூப்பர் உணவு வேறு இல்லை என்றே சொல்லலாம். சாம்பார், கூட்டு, பொரியல், மோர்க்குழம்பு, அவியல் என வாய்ப்பிருக்கும் உணவுகளில் எல்லாம் தேங்காயைச் சேருங்கள். முற்பகல் அல்லது மாலை வேளையில் இரண்டு பத்தை தேங்காயை மென்று சாப்பிடுவதுகூட ஓகேதான். ‘என்னது... தினமும் தேங்காய் சேர்க்கிறதா?’ என்ற கேள்வி சிலருக்கு வரலாம். குறிப்பாக நீரிழிவு, இதயநோய், உடல் பருமன் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வரக்கூடும். அளவோடு சாப்பிடும்போது எந்த உணவும் ஆபத்தாவதில்லை, தேங்காயும் அப்படித்தான்.
ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் உணவுகள் காஸ்ட்லியானவையாகத்தான் இருக்கும் என அர்த்தமில்லை. முட்டை, தயிர், கீரை, மாவுச்சத்தில்லாத காய்கறிகள், சீசனில் கிடைக்கும் பழங்கள், நெல்லிக்காய், இஞ்சி, மாப்பிள்ளைச் சம்பா அரிசி, கறுப்புக் கவுனி அரிசி போன்ற எல்லாமே சூப்பர் டூப்பர் உணவுகள்தான்.

அவகாடோ, பெர்ரி வகைப் பழங்கள், பாதாம், பிஸ்தா, ஆலிவ் ஆயில், கீன்வா, வே புரோட்டீன், முசேலி... ஆரோக்கிய உணவுகள் என்ற போர்வையில் பிரபலப்படுத்தப்படும் இந்த உணவுகளுக்கெல்லாம் மாற்று என்ன தெரியுமா? சிறுதானியங்கள், மணத்தக்காளிக் கீரை, இலந்தைப்பழம், நாவல் பழம், நேந்திரம் பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நெல்லிக்காய், பிரண்டை, சிவப்பரிசி அவல் என்றால் நம்ப முடிகிறதா?
ஆரோக்கியம் என்பது ஆடம்பர உணவுகளில் இல்லை. உங்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் எளிமையான உணவுகளில் ஒளிந்திருக்கும் உண்மையான ஆரோக்கியத்தைக் கண்டெடுங்கள். உங்களுடைய அடுத்த வேளை உணவிலிருந்தே மாற்றத்தைத் தொடங்குங்கள். மாற்றத்தின் மகத்துவத்தை உங்கள் உடலே உங்களுக்கு உணர்த்தும்.
- பழகுவோம்