கட்டுரைகள்
Published:Updated:

எடைக்குறைப்பு சபதத்தில் வெற்றி பெறுவது சாத்தியமா?

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
எடைக்குறைப்பு

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. புத்தாண்டு சபதங்களில் எப்போதும் நம்பர் ஒன்னில் இருப்பது ஃபிட்னெஸ் மற்றும் எடைக்குறைப்பு. வொர்க் அவுட் போன்று உடலை வருத்தாமல் ஈஸியாக எடையைக் குறைப்பது எப்படி என்ற கூகுள் தேடல்களில் ‘இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்’ (Intermittent fasting) என்பது எப்போதும் முன்னால் நிற்கும்.

அதென்ன இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்? இது நிஜமாகவே ஆரோக்கியமான டயட் முறையா? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

‘‘கடந்த சில வருடங்களில் திடீரென பிரபலமான டயட் முறைகளில் ‘இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்’ என்பதும் ஒன்று. எடைக்குறைப்புக்கு உத்தரவாதம் தருவதாக உறுதியளிக்கும் பிரபலங்களின் வார்த்தைகளை நம்பி, எந்தவித முன் தயாரிப்பும், ஆலோசனையும் இன்றி இந்த டயட் முறையைப் பின்பற்றுவோர் ஏராளம். உலகளவில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த டயட் முறை, பெரும்பான்மையானவர்களால் பின்பற்றப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. அதனாலேயே இதைச் சிறந்தது என்று சொல்ல முடியாது.

எடைக்குறைப்பு சபதத்தில் வெற்றி பெறுவது சாத்தியமா?

எடைக்குறைப்பு, சிந்தனைத்திறனில் முன்னேற்றம், ஒட்டுமொத்த உடலமைப்பு மேம்படுதல் என இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் தரும் குறுகிய கால பலன்கள் சில. ஆனால், ஆரோக்கிய வாழ்க்கைமுறையை வாழ்நாள் முழுவதும் தொடர நினைப்போருக்கு இது பொருத்தமானதல்ல. இதுகுறித்த ஆய்வுகள் இன்னும் நிறைய தேவை என்பதால், கண்மூடித்தனமாக இந்த வகை டயட்டைப் பின்பற்றாமலிருப்பதே சரி.

சரி... அதென்ன இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்?

இதை 16/8 முறை என்று சொல்வார்கள். அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 8 மணி நேரத்துக்குள் சாப்பிடுவது, மீதமுள்ள 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது. இந்த டயட் முறை பலருக்கும் பிடித்துப் போக பல காரணங்கள் உள்ளன.

8 மணி நேரத்துக்குள் சாப்பிடலாம், அடுத்த 16 மணி நேரத்துக்குச் சாப்பிடக்கூடாது என்பது மட்டும்தான் இதில் சவால். அதற்காக நீங்கள் உங்களுடைய விருப்ப உணவுகளைத் தியாகம் செய்யத் தேவையில்லை. கலோரிகளைக் கணக்குப் பண்ணிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

நீங்கள் சாப்பிடும் உணவில் புரதம் எவ்வளவு, பெருநுண்ணூட்டச் சத்துகள் எவ்வளவு என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதே நேரம் இந்த இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்கில் நெகட்டிவ் விஷயங்களுக்கும் பஞ்சமில்லை.

குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் மட்டுமே சாப்பிட வேண்டும், மற்ற நேரத்தில் சாப்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதால், உடலில் ஆற்றல் குறையலாம். அதன் தொடர்ச்சியாக பசி உணர்வும் களைப்பும் ஏற்படலாம். சரியான உணவுப்பழக்கம் என்பதே சிறு அளவுகளில், சின்ன இடைவெளிகளில் சாப்பிடுவதுதான். அப்படியிருக்க தொடர்ந்து 16 மணி நேரம் சாப்பிடாமலிருப்பதால், அடுத்த உணவு வேளை வரும்போது உங்களையும் அறியாமல் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிடுவீர்கள். இது தொடரும்பட்சத்தில் எடைக்குறைப்பு முயற்சி தோல்வியடையும், வழக்கத்தைவிட எடை அதிகரிக்கும்.

எடைக்குறைப்பு சபதத்தில் வெற்றி பெறுவது சாத்தியமா?

குறுகிய காலத்துக்கு மட்டுமே பின்பற்றக்கூடிய டயட் முறை இது. லைஃப்ஸ்டைலாக மாற்றிக்கொள்ள முடியாதது என்பதால் ஆரோக்கியப் பிரியர்களுக்கு ஏற்றதல்ல.

எனவே, ஃபிட்னெஸ் விஷயத்தில் இந்த வருடமாவது உங்கள் சபதம் நிறைவேற வேண்டும் என்றால், முதலில் அதற்கான மன உறுதியோடு, சரியான நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்களுடைய வயது, எடை, ஆரோக்கியம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பரிசீலித்து உங்களுக்கான எடைக்குறைப்புத் திட்டத்தை உங்கள் ஊட்டச்சத்து ஆலோசகர் உருவாக்கித் தருவார். அதுமட்டும்தான் இலக்கை நோக்கி உங்களை நகர்த்தும். எடைக்குறைப்பு விஷயத்தில் கண்டதும் கேட்டதும் எப்போதும் பலன் தராது.

- பழகுவோம்