ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் - 26 - கமகமக்கும் கிராமத்து சமையல்... மணக்காத நகரத்து சமையல்... எங்கே கோளாறு?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

சாஹா

வீட்டிலேயே சிறிய அளவில் கேட்டரிங் பிசினஸ் செய்துகொண்டிருந்தேன். கொரோனா வந்த பிறகு பிசினஸ் சுத்தமாக இல்லை. பிசினஸ் வேண்டாம் என்கிறார்கள் வீட்டில். இதே பிசினஸில் வேறு மாற்றங்கள் செய்யலாமா அல்லது பிசினஸை நிறுத்திவிடலாமா?

- கே.ராஜகுமாரி, சென்னை-19

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவக உரிமையாளர் நளினா கண்ணன்

சமையல்தான் உங்கள் ஆர்வம் என்றால் தைரியமாக இந்த பிசினஸை நீங்கள் தொடரலாம். இன்று நிறைய ஆப்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவர்களுடன் இணைந்து உங்கள் கேட்டரிங் பிசினஸை வளர்க்கலாம். பிசினஸ் ஓரளவு பிக்கப் ஆனதும் வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாவில் தினசரி மெனு அல்லது வாராந்தர மெனு அல்லது அந்த மாதத்துக்கான ஸ்பெஷல் மெனு போன்றவற்றை போஸ்ட் செய்து அட்வான்ஸாகவே ஆர்டர் பிடிக்கலாம். இன்று உணவுத்துறை சார்ந்த பிசினஸில் இறங்க நினைப்போர் `எஃப்எஸ்எஸ்ஏஐ' (Food Safety and Standards

Authority of India) லைசன்ஸ் பெற வேண்டியது மிக முக்கியம்.

கேட்டரிங் பிசினஸில் உங்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை வந்தபிறகு அடுத்த கட்டமாக நீங்கள் ‘கிளவுட் கிச்சன்’ கான்செப்ட் பற்றியும் யோசிக்கலாம். கொரோனா காலத்தில் கிளவுட் கிச்சன் கான்செப்ட் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதலில் மெனுவை செட் செய்யுங்கள். பிறகு, வெப் பேஜ் ஒன்று தொடங்குங்கள். ஸ்விக்கி, டன்ஸோ போன்ற டெலிவரி நிறுவனங்களுடன் சைன்அப் செய்யுங்கள். ஆர்டர்களை நிர்வகிக்கவும், உணவுகளை பேக் செய்யவும் இரண்டு பேரை வேலைக்கு அமர்த்துங்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் விருப்பமில்லை, தயக்கமிருக்கிறது என்றாலும் கவலைப்பட வேண்டாம். ஒன்றிரண்டு நபர்களை வேலைக்கு வைத்து அவர்கள் மூலம் உணவு ஆர்டர்களை நேரில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரச் சொல்லலாம். ஆப் உபயோகித்து அவர்கள் ஆர்டர் கொடுக்கச் சென்று வருவதை மட்டும் கண்காணியுங்கள்.

உங்கள் கேட்டரிங் பிசினஸுக்கு ஈர்ப்பான ஒரு பெயரை யோசியுங்கள். வெரைட்டி காட்டுகிறேன் என்ற பெயரில் ஆடம்பர மெனுவை யோசிக்காமல் உங்களுக்கு பலம் என நினைக்கிற அயிட்டங் களுடன் சிம்பிளான மெனுவை திட்டமிட்டு பிசினஸை தொடங்குங்கள். உணவு பிசினஸ் உங்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தரும்.

அவள் பதில்கள் - 26 - கமகமக்கும் 
கிராமத்து சமையல்... மணக்காத நகரத்து சமையல்... எங்கே கோளாறு?

கிராமத்தில் எங்கள் பாட்டி சமைக்கும்போது சமை யலறையிலிருந்து வரும் வாசம் தெருவெல்லாம் வீசும். இன்று எங்கள் வீட்டில் அம்மா சமைக்கும்போது எந்த வாசமும் வருவதில்லையே... என்ன காரணம்?

-அ.யாழினி பர்வதம், சென்னை-78

பதில் சொல்கிறார் சமையற்கலை நிபுணர் ‘மெனுராணி’ செல்லம்

நீங்கள் கிராமத்துப் பாட்டியின் சமையலுக்கும், நகரத்து அம்மாவின் சமையலுக்குமான வித்தியாசம் பற்றி கேட்டிருக்கிறீர்கள். ஆனால், ஒரே வீட்டில், ஒரே கிச்சனில் இரண்டு நபர்கள் ஒரே சாம்பார்பொடி, ஒரே தனியா பொடி, புளி, உப்பு பயன்படுத்தி, ஒரே முறையில் சமைத்தாலும் இருவரது சமையலுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றனவே!

அந்தக் காலத்தில் சமைப்பதற்கு நேரமும் பொறுமையும் அதிகமிருந்தது. குறைந்த தணலில் வைத்து, பொறுமையாக வதக்கி, அம்மியில் அரைத்து, எவ்வளவு நேரமா னாலும் அலுத்துக்கொள்ளாமல் நின்று நிதா னமாகச் சமைத்தார்கள். உதாரணத்துக்கு அவியல் செய்வதானால்கூட முதலில் கீழே கிழங்கு, அதன் மேல் சற்று அழுத்தமான காய்கறிகள், அதற்கும்மேல் கத்திரிக்காய் போன்ற மென்மையான காய்கறிகள் என லேயர், லேயராக வைத்துப் பொறுமையாக வேகவைத்து எடுத்துச் செய்வார்கள். தவிர, விறகடுப்பில் சமைக்கும்போது அதன் ருசியும் மணமும் நிச்சயம் பிரதிபலிக்கும்.

இந்தத் தலைமுறைக்கு நேரம் இல்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னையே. ஆபீஸ், கல்லூரி, ஷாப்பிங் என்று எல்லாவற்றுக் குமே டைம் என்பது முக்கியமாகி விட்டது. அதற்காகவேதான் ஓட வேண்டியிருக்கிறது. காஸ் அடுப்பில் பெரிய தணலில் அடுப்பை எரியவிட்டு, பிரஷர் குக்கரில் எல்லாவற்றையும் வேகவைத்து விரைவாக வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பலரும். இப்படி பரபரப்பாக சமைக்கும்போது கவனச்சிதறலும் சேர்ந்துகொள்கிறது. ஆக, சமைக்க வேண்டுமே எனச் சமைப்பதற்கும்; ஆசையாகச் சமைப்பதற்கும் நிறைய வித்தி யாசங்கள் உண்டு. சமையல் மணக்கவும் ருசிக்கவும் இதுவும் ஒரு காரணம்.

அவள் பதில்கள் - 26 - கமகமக்கும் 
கிராமத்து சமையல்... மணக்காத நகரத்து சமையல்... எங்கே கோளாறு?

எனக்கு பனை ஓலைகளை அடிப்படையாகக் கொண்ட பிசினஸ் தொடங்க ஆசை. அதற்கான மெட்டீரியல் எங்கே கிடைக்கும், எங்கே பயிற்சி கொடுக்கப்படுகிறது, பிசினஸாக கொண்டுபோக என்னவெல்லாம் முக்கியம் என வழிகாட்ட முடியுமா?

@வித்யா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு அங்கீகாரம் பெற்ற தொழில் பயிற்சியாளர் உமா ராஜ்

பனை ஓலை பொருள்கள் செய்வது குறித்து சென்னை, மாதவரத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான பனை ஓலை சங்கத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கே தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, 45 நாள்கள் பயிற்சி கொடுக்கிறார்கள். பயிற்சி பெறும் பெண்களுக்கு தங்கும் விடுதி வசதி களும் உண்டு. இங்கே பனை ஓலையில் கலைப்பொருள்கள் செய்வது, கலர் செய்வது, விற்பனை வாய்ப்பு என ஏ டு இஸட் விஷயங் கள் கற்றுத்தரப்படும். 45 நாள்கள் இங்கே வந்து தங்கியிருந்து பயிற்சி எடுக்க முடியாதவர்கள், இந்த அமைப்பை அணுகினால் உங்கள் பகுதி யிலேயே குறிப்பிட்ட நபர்கள் பயிற்சியில் சேரத் தயாராக இருக்கும்பட்சத்தில் அவர் களே உங்கள் இடத்துக்கு வந்தும் பயிற்சி அளிக்கிறார்கள். சான்றிதழ் பயிற்சி என்பதால் இதற்கு வங்கியில் கடனும் கிடைக்கும். இவர் களிடமே மூலப்பொருள்களும் கிடைக்கும் என்பதால் பயிற்சி முடித்தவர்கள் இங்கேயே பனங்குருத்து வாங்கி தொழில் தொடங்கலாம்.

மேலும் விவரங்களுக்கு...

Central Palmgur and Palm Products Institute

KVIC,No.36,Arul Nagar,P.O. Madhavaram Milk Colony, Chennai - 600 051 (Tamil Nadu)

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.