ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காய்கறிகளில் வாழைத்தண்டுக்கு முக்கிய இடமுண்டு. பலவித பிரச்னைகளுக்கு மருந்தாகும் வாழைத்தண்டை வார நாள்களில் சமைத்து உண்பது பலருக்கும் சவாலான விஷயம். பொரியலையும் கூட்டையும் விட்டால் அதில் வேறென்ன செய்வது என்ற கேள்வியும் பலருக்கு இருக்கும். சாலட் முதல் சூப் வரை வாழைத்தண்டில் விருந்தே சமைக்கலாம் தெரியுமா? இந்த வார வீக் எண்டை வாழைத்தண்டு ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்...

வாழைத்தண்டு சாலட்
தேவையானவை:
நறுக்கி அவித்த வாழைத்தண்டு - 50 கிராம்
முளைகட்டி, அவித்த பச்சைப் பயறு - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி, பிறகு தேவையான அளவு உப்பு போட்டு காலை அல்லது மாலை வேளையில் சாப்பிடலாம்.
வாழைத்தண்டு சட்னி
தேவையானவை:
நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 4
பூண்டு - ஒரு பல்
தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கொடுத்துள்ளவற்றில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். உப்பு, காரம் சரிபார்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு:
வாழைத்தண்டை வேகவைக்காமல்தான் சட்னி அரைக்க வேண்டும். என்னதான் நார் உரித்தாலும் அரைக்கும்போது நார் வரத்தான் செய்யும். தாளித்துக் கொட்டுவதால், சாப்பிடும்போது பச்சையாக சாப்பிடுகிற உணர்வு வராது. அந்தளவுக்கு சுவையாக இருக்கும்.
வாழைத்தண்டு சூப்
தேவையானவை:
நறுக்கிய வாழைத்தண்டு - 250 கிராம்
நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:
நறுக்கிய வாழைத்தண்டு, குடமிளகாய், தக்காளியை குக்கரில் சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும் (கலவை நன்றாக மசிந்து இருக்க வேண்டும்). கலவையை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். அதில் வடிகட்டிய சாற்றைச் சேர்த்து உப்பு, மிளகுத்தூள், சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் (சூப் அதிக கெட்டியாக இருந்தால் மட்டும்) சேர்த்துக் கொதிக்கவிடவும். சூப் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.
வாழைத்தண்டு லோலா
தேவையானவை:
நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
தண்ணீர் - ஒன்றேகால் கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஒன்றேகால் கப் தண்ணீருடன், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிப்படாமல் கிளறவும். தீயை மிதமாக்கி அரிசி மாவு வேகும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து மூடி போட்டு வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய வாழைத்தண்டு, பச்சைப் பட்டாணி, உப்பு, தண்ணீர் சேர்த்து, வேகவைத்து இறக்கி ஆறவைக்கவும். ஆறிய கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து வைக்கவும்.
அரிசி மாவை உருண்டையாக உருட்டி, ஓர் உருண்டையை கையில் வைத்துப் பரப்பி, நடுவில் வாழைத்தண்டு - பச்சைப் பட்டாணிக் கலவையை வைத்து, அரைவட்டமாக மடிக்கவும். இதேபோல் எல்லா உருண்டைகளையும் செய்யவும். பின்னர் அவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 - 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து, விரும்பிய சட்னியுடன் பரிமாறவும்.