கட்டுரைகள்
Published:Updated:

ஆயுளைக் கூட்டுமா ஆவியில் வேகவைத்த உணவுகள்?

இட்லி
பிரீமியம் ஸ்டோரி
News
இட்லி

இந்த உணவுகளில் இருக்கும் நுண்ணூட்டச்சத்துகள், வேகவைத்த பின்னரும் பெரிய மாறுபாடுகள் இன்றி அப்படியே நமக்குக் கிடைக்கின்றன

‘வாழ்க்கையே ஒரு சாண் வயித்துக்கான போராட்டம்தான்!’ எனும் சித்தாந்தம், உணவுக்கும் ஆரோக்கிய வாழ்வுக்குமான பிரிக்க முடியாத பந்தத்தை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அதுபோலவே, தமிழர்களுக்கும் இட்லிக்குமான தொடர்பு, அசைக்க முடியாத உணவுக் கூட்டணி.

இட்லி, கைக்குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எல்லோருக்கும் உகந்த ஊட்டச்சத்து உணவு. தமிழர்களின் உணவில் இட்லிக்கான முக்கியத்துவத்தைப் போலவே, கேரள மக்களின் உணவில் புட்டுக்கு அமோக வரவேற்பு! இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு ஏன் அதிக வரவேற்பு? ஆவியில் வேகவைத்த உணவுகள் வாழ்நாளைக் கூட்டும் என்பது உண்மைதானா? இதுகுறித்து விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான தாரணி கிருஷ்ணன்.

ஆவியில் வேக வைத்த உணவுகள் ஏன் ஆரோக்கியமானவை?

‘‘இந்த உணவுகளில் இருக்கும் நுண்ணூட்டச்சத்துகள், வேகவைத்த பின்னரும் பெரிய மாறுபாடுகள் இன்றி அப்படியே நமக்குக் கிடைக்கின்றன. ஆவியில் வேகவைத்த உணவுகள் விரைவாக செரிமானம் ஆவதால், அடுத்த வேளைக்கான பசியுணர்வு விரைவாகத் தூண்டப்படும். எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புச்சத்துகள் இந்த உணவுகளில் இல்லாதது கூடுதல் சிறப்பு” என்றவர், ஆவியில் வேகவைத்த உணவுகளின் நன்மைகளைப் பட்டியலிட்டார்.

‘‘இட்லி: அரிசி, உளுந்து, வெந்தயம் போன்ற ஆரோக்கியமான உணவுப் பொருள்களைச் சேர்த்து அரைக்கப்படும் மாவானது, நொதித்தல் செயல்முறையில் செறிவூட்டப்படுகிறது. அந்த மாவில் தயாரிக்கப்படும் இட்லிக்கு, சாம்பார், சட்னி அல்லது இவை இரண்டும் சேர்ந்த இணை உணவுகள் பொருத்தமானவை. நம் அன்றாட உணவில் புரதச்சத்து அவசியம் இருக்க வேண்டும். இது சாம்பார் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. மேலும், இட்லி மற்றும் பருப்பு சாம்பார் இரண்டிலும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. சட்னியில் தேங்காய் சேர்க்கப்படுவதால், உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து கிடைக்கிறது. தினமும் காலை உணவாக இட்லியை உட்கொள்வது சிறப்பானது. இதனால், வயிற்றுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாமல், அன்றைய தினத்தின் தொடக்கம் நல்லபடியாக ஆரம்பமாகும்.

‘காலை டிபன் தவிர, இரவிலும் இட்லியை எடுத்துக்கொள்ளலாமா’ என்பது பலரின் சந்தேகம். தாராளமாக உட்கொள்ளலாம். ஆனால், சாம்பார், சட்னியுடன், வேகவைத்த காய்கறிகள் அல்லது பொரியலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், சரிவிகித உணவு நமக்குக் கிடைப்பது உறுதியாகும். ‘இட்லி சிறந்த உணவு என்பதால், மூன்று வேளையும் இதையே சாப்பிடலாமா?’ என்று கேட்பவர்களும் உண்டு.

இட்லி
இட்லி

சரியான எந்த ஒரு விஷயத்தையும் உரிய முறையில் செய்தால் தவறே கிடையாது. ஆனால், கடமைக்கே என்று சரிவிகித ஊட்டச்சத்துகள் கிடைக்காத வகையில், இரண்டு அல்லது மூன்று வேளையும் இட்லியை சாப்பிட்டுவந்தால், உணவின் மீதான ஈர்ப்பு குறையும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்காமல்போகும். எனவே, தினமும் ஒரு வேளைக்கு மேல் இட்லியை உட்கொள்ள விரும்புபவர்கள், இட்லியுடன் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாம்பார் அல்லது குருமாவுடன் காய்கறிகளையும், ஒருவேளைக்கு மட்டும் அரை கப் தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

புட்டு: தமிழகத்தில் புழுங்கல் அரிசியில்தான் பலரும் புட்டு செய்வார்கள். இதில், கார்போஹைட்ரேட் மட்டுமே அதிகம் இருப்பதால், உடலுக்குத் தேவையான பிற சத்துகள் கிடைக்காமல்போகும். கேரள மக்கள் பலரும் சிவப்பரிசியில்தான் புட்டு செய்வார்கள். இந்த அரிசியில், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட பலவிதமான அத்தியாவசிய சத்துகள் இருக்கின்றன. எனவே, சிவப்பரிசிப் புட்டு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அரிசி தவிர, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களில் புட்டு செய்து சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானது. குறைவான எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைக் குருமா, புட்டுக்கு ஏற்ற ஆரோக்கியமான இணை உணவு.

தாரணி கிருஷ்ணன்
தாரணி கிருஷ்ணன்

இனிப்புச்சத்து மற்றும் மாவுச்சத்து அதிகம் நிறைந்த வாழைப்பழம், சர்க்கரை அல்லது சர்க்கரைப்பாகு, பால் உள்ளிட்ட ஏதாவதோர் இணை உணவைச் சேர்த்து எப்போதாவது புட்டு சாப்பிடலாமே தவிர, அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

இடியாப்பம்: இடியாப்பத்துக்கான மாவு தயாரிப்பில் அரிசி தவிர வேறு எந்த இணை ஊட்டச்சத்து உணவுப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை. இதனால், இந்த உணவின் மூலம் குறைந்த அளவிலான ஊட்டச்சத்துகள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன. எனவே, மாதத்தில் சில முறை மட்டும் இந்த உணவை உட்கொள்ளலாம். இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். பாலுடன் சர்க்கரை சேர்த்து இந்த உணவைச் சாப்பிடுவதால் சுவை கூடுமே தவிர, உடலுக்கு பெரிதாக நன்மை கிடைக்காது. தினசரி ஆற்றலுக்குப் புரதச்சத்து அவசியமானது என்பதால், பருப்பு அல்லது தானிய வகைக் குருமா காம்பினேஷனுடன் இடியாப்பத்தை உட்கொள்ளலாம்.

ஆயுளைக் கூட்டுமா ஆவியில் வேகவைத்த உணவுகள்?

கொழுக்கட்டை: கொழுக்கட்டையில் சேர்க்கப்படும் பூரணத்தில் தேங்காய் மற்றும் பலவிதமான தானியங்கள் சேர்க்கப்படுவதால், இது ஆரோக்கிய உணவாகிறது. கொழுக்கட்டையைப் போலவே தயாரிக்கப்படும் துரித உணவான ‘மோமோ'வை (Momo) பலரும் விரும்பி உட்கொள்கின்றனர். மைதாவால் தயாரிக்கப்படும் இந்த உணவுடன், உப்புச்சத்து நிறைந்த பலவிதமான சாஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், ஆவியில் வேகவைத்தாலும் இந்த உணவில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது. எப்போதாவது சாப்பிடலாமே தவிர, மோமோஸை அடிக்கடி உட்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இந்த உணவைக் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.”

நல்ல உணவைத் தேடி, நலம் நாடுவோம்!