
நாங்க சிந்தி இனத்தை (பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள்) சேர்ந்தவங்க. எங்க பூர்விகம் பாகிஸ்தான். தேசம் பிரிஞ்சப்ப பாகிஸ்தானிலிருந்து வெளியேறி மும்பைக்குப் போனோம்.
எப்படி தென்னிந்தியர்களுக்கு இட்லி தோசை தவிர்க்க முடியாத உணவோ, அதுபோல வட இந்தியர்களுக்கு சப்பாத்தியும் தாலும் (பருப்பு) தவிர்க்க முடியாத உணவு. வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கோவையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ‘முரளி ரெஸ்டாரன்ட்’ என்ற பெயரில் ஓர் அசைவ உணவகம் நடத்தி வருகின்றனர். இவர்கள் சமைத்துக் கொடுக்கும் சப்பாத்தியும் கொத்துக்கறியும் நம்ம ஊர் இட்லி தோசைக்கு டஃப் ஃபைட் கொடுத்துவருகிறது. கோவை வட்டாரத்தில் இது அம்புட்டு பிரபலம்!
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ‘முரளி ரெஸ்டாரன்ட்’டுக்குச் சென்றோம். ஹோட்டல் என்றால் பெரிய கட்டமைப்பெல்லாம் இல்லை. ஒரு வீட்டைத்தான் ஹோட்டல் அமைப்பில் பயன்படுத்துகின்றனர். மூன்றாவது தலைமுறையாக ஈஸ்வர்லால் கோக்லானி, தீபக் கோக்லானி என்ற இரண்டு சகோதரர்கள்தான் தற்போது ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.

நம்மிடம் பேசிய தீபக், “நாங்க சிந்தி இனத்தை (பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள்) சேர்ந்தவங்க. எங்க பூர்விகம் பாகிஸ்தான். தேசம் பிரிஞ்சப்ப பாகிஸ்தானிலிருந்து வெளியேறி மும்பைக்குப் போனோம். அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பாவோட நண்பர் மூலமா கோவை வந்தோம். அப்பா அமர்லால் கோக்லானி முன்னாடி போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல ரைட்டரா இருந்தார். தாத்தா இந்தியாவுக்கு அகதியாதான் வந்தார். அப்போ கோவைல நார்த் இந்தியன் ஹோட்டல்கள் பெருசா இல்ல. அதனால இங்க வரும்போதே ஹோட்டல் தொடங்கறதுதான் திட்டம். பாரம்பர்யமான சிந்தி உணவுகளைக் குடுக்கறதுக்காக, 1960-ல டவுன்ஹால் வெரைட்டி சாலைல தாத்தா ஹோட்டல் தொடங்கினார். சப்பாத்தி, கொத்துக்கறி, சாப்ஸ், பெப்பர் சிக்கன், கீ-ரைஸ், மீன் ஃப்ரை எல்லாம் மெனுவுல கொடுத்தார்.
அப்ப அங்கண்ணன் பிரியாணி, சென்ட்ரல் பிரியாணிதான் நான்வெஜ்ல பெரிய ஹோட்டல்கள். ஆரம்பிச்ச புதுசல எங்க வியாபாரம் ரொம்ப டல்தான். தாத்தாவுக்கு சுத்தமா தமிழ் தெரியாது. அப்பாவுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். தமிழ் மக்களுக்கு எங்கள் டேஸ்ட் பிடிச்சு எங்க ஹோட்டலுக்கு வர ஆரம்பிக்க, படிப்படியா பிக்கப் ஆக அஞ்சு வருஷம் பிடிச்சது.
ரெசிபி எல்லாமே தாத்தாவோடதுதான். அவரே சப்பாத்தி, கொத்துக்கறி, சாப்ஸ், சிக்கன் எல்லாம் சமைச்சுடுவார். கோதுமை மாவு, மிளகாய்ப் பொடி, மல்லித் தூள் மசாலா எல்லாமே வீட்லயே ரெடி பண்ணிடுவோம். பக்கத்துல நிறைய லாட்ஜ்கள் இருந்துச்சு. அப்ப கோயம்புத்தூர்லயே பிரபல ‘டிலைட்' சினிமா தியேட்டர் பக்கத்துலயே இருந்ததால, அங்க படம் பார்க்க வர்றவங்க எங்க ஹோட்டலுக்கு வர ஆரம்பிச்சாங்க. சிக்கன்ல அப்ப நாட்டுக் கோழிதான் பயன்படுத்தினாங்க. அப்ப இருந்தே கொத்துக்கறிதான் ஃபேமஸ். ஒரு சப்பாத்தி 20 பைசா, கொத்துக்கறி 2 ரூபா... டெய்லி 300 – 400 சப்பாத்தி, 5 கிலோ கொத்துக்கறி ஓடும்.

1970 வாக்குல வியாபாரம் ரொம்ப நல்லா போச்சு. பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடுல இருந்துகூட ரெகுலரா கஸ்டமர் வருவாங்க. மதியம் 12.30-க்குக் கடை திறப்போம். அதிக கூட்டத்தால நைட் 8 – 8.30 மணிக்கே எல்லாம் தீர்ந்து கடைய சாத்திடுவோம். ஒரு கட்டத்துல டிராபிக் ஜாம் ஆகற அளவுக்கு கடைக்குக் கூட்டம் வந்துச்சு. டிராபிக் பிரச்னை பூதாகரமாக, மூன்றரை வருஷத்துக்கு முன்னாடிதான் இங்க வந்தோம். நாங்க ரொம்ப அளவாதான் பண்ணுவோம். அதனால, எதுவுமே மிச்சம் ஆகாது.
பாம்பேல உல்லாஸ் நகர்னு ஒரு ஏரியா இருக்கு. அங்கதான் சிந்தி உணவுகள் ரொம்ப ஃபேமஸ். பாகிஸ்தான் கராச்சிலயும் இதே ஸ்டைல் சிந்தி உணவு கிடைக்கும். அதே டேஸ்ட்ல அதே சிந்தி உணவுகளைதான் இங்க குடுக்கறோம்” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க, சுடச்சுட சப்பாத்தியும், கொத்துக்கறியும் நம் டேபிளில் லேண்ட் ஆனது..!
வெங்காயம் பிரதானமாக இருந்தாலும் அதை அப்படியே நறுக்கிப் போடாமல் அரைத்துவிடுவதால், சுவையான மசாலாவும், கமகமக்கும் கொத்துக்கறியும் மட்டுமே கண்ணில் பட்டன. வட இந்திய ஸ்டைல் சப்பாத்திக்கு, சிந்தி பாரம்பர்ய கொத்துக்கறி காம்போ மிகச் சிறப்பாகவே இருந்தது. அதேபோல அவர்கள் ஹோட்டலின் சமீபத்திய ட்ரெண்டிங்கான வஞ்சிரம் மீன் ஃப்ரை அவசியம் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என டேபிளில் வைத்தனர். அதுவும் சிறப்பாகவே இருந்தது.
மீண்டும் தொடர்ந்த தீபக், “தென்னிந்தியால தேங்காய் எல்லாம் அரைச்சு ஒரு ஸ்டைல்ல கொத்துக்கறி பண்ணுவாங்க. நம்ம ரெசிபிக்குப் பெரிய வெங்காயம்தான் முக்கியமான பொருள். அதுகூட தக்காளி, இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, மிளகு, கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் எல்லாம் கலந்து கொத்துக்கறி பண்ணுவோம். தாத்தா, அப்பா எல்லா வேலையும் பார்ப்பாங்க. அண்ணன் 10-ம் வகுப்பு வரை படிச்சார். நான் பிளஸ் 2 படிச்சேன். படிக்கறப்பவே கடைல எல்லா வேலையும் செய்வோம். படிப்பு முடிஞ்ச உடனேயே ஹோட்டலுக்கு வந்துட்டோம்.

இப்ப வெளிய இருந்தும் ஆர்டர்கள் வரத்தொடங்கிருக்கு. நம்ம சப்பாத்திக்கு எண்ணெய், உப்பு எல்லாம் போட மாட்டோம். இப்பவும் நியாயமான ரேட்ல தான் குடுக்கறோம். நம்ம கடைல ‘ஸ்ப்ரிங் சிக்கனு’ம் ‘வஞ்சரம் ஃப்ரை’யும்கூட பிரபலம்தான். அண்ணனும் நானும் தான் இதை அறிமுகப்படுத்தினோம். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ போன்ற அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பெரிய ஹோட்டல் அதிபர்கள், டாக்டர்கள்னு நிறைய வி.ஐ.பிங்க நம்ம ரெகுலர் கஸ்டமர் ஆகிட்டாங்க.
அதுக்காக பராம்பர்ய கஸ்டமர்ஸை நாங்க விடல. இப்பவும் அவங்க ஹோட்டலுக்கு வருவாங்க. சமீபத்துல கடைக்கு வந்த ஒருத்தர், ‘நீங்க பொறக்கறதுக்கு முன்னாடி இருந்து நாங்க உங்க கஸ்டமர்’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தாத்தா சொன்னதையேதான் அப்பா இறக்கறப்ப எங்களுக்கும் சொன்னார், ‘என்ன ஆனாலும் ஹோட்டலை விட்ராதீங்க. இதே மாதிரி கொண்டு போங்க’ன்னு அவங்க சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணுறோம். மதியம் 12.30 – 3.30, நைட் 6.30 – 10.30 கடை இருக்கும், மதியம் 4 சப்பாத்தி, கொத்துக்கறி, கீ – ரைஸ் காம்போ கிடைக்கும். இப்ப ஒரு சப்பாத்தி ரூ.10, கொத்துக்கறி ரூ.130-க்குத் தரோம். விலைவாசிக்குத் தகுந்த மாதிரி 3 வருஷத்துக்கு ஒரு தடவைதான் விலை மாத்துவோம்.
‘இருக்கற கஸ்டமரை சரியா கவனிச்சா போதும். குடுக்கற பொருளை ஹைஜீனிக்கா குடுங்க’ன்னு அப்பா சொல்லியிருக்கார். அதுல சமரசமே பண்ணிக்க மாட்டோம். எனக்கு இப்ப வயசு 54. அண்ணாவுக்கு வயசு 63. கடைசிவரை அப்பாவோட வார்த்தைய காப்பத்தணும்” என்று புன்சிரிப்புடன் முடித்தார்.
கொடுத்த பணத்துக்கு நல்ல தரமான உணவை சாப்பிட்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.