வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வெயில் காலம் வந்தாலே ஆர்வமும் காய வைக்க இடவசதியும் உள்ளவர்கள் வடகம் இடும் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். திருச்சியில் ஜவ்வரிசி வடகம் வீட்டுக்கும் மற்றும் அலுவலக நண்பர்களுக்கும் பொரித்து எடுத்துச் செல்லவும் மேலும் பகிரவும் கிட்டத்தட்ட எட்டு கிலோ வரை விதம் விதமாக இடுவேன்.
ஆனால் மிகக் கடுங்கோடை மாதங்களில் விட பனி முற்றிலும் விலகிய உடனேயே சில தினங்களில் போட்டு முடித்து விடுவதே சிறந்தது. ஆரம்ப நாட்களில் வெயில் நின்று அடிக்கும். நாளாக ஆக வெப்பம் அதிகரித்தாலும் அனல் காற்றும் அதிகம் வீசுமாதலால் ஈர வடகத்தில் காற்றில் பறக்கும் மண் தூசுகள் மற்றும் காய்ந்த இலைகள் போன்றவை ஒட்டிக் கொள்ளும்.
மேலும் மிக அதிகமான வெயிலில் வடகம் சில சமயங்களில் நடுவில் கோடுகளுடன் விரிந்து கொள்ளும். வடகத்துக்குக் கிளறிய மாவையும் பாதி காய்ந்த வடகத்தையும் விரும்பிப் பலர் சாப்பிடுவார்கள்.
அதன் மிளகாய்ச் சாற்றுக் காரம் வெயில் மிக உக்கிரமான நாட்களில் வயிற்று உபாதைகளும் தந்து விடும். ஜவ்வரிசி வடகம் விரிந்து போவதற்கு பயன்படுத்தும் ஜவ்வரிசியின் தரமும் முக்கியக் காரணம். நான் பின் பற்றிய எளிய வழியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
வடகம் போட ஜவ்வரிசி வாங்கியதும் முதலில் சிறிதளவு கனத்த வாணலியில் கருகாமல் வறுத்துப் பார்க்க வேண்டும். அது பொரி போலவும் நல்ல சுவை மற்றும் வாசனையுடனும் இருந்தால் வடகம் போடுகையில் விரியாது. சில வகை ஜவ்வரிசி வறுக்கையில் உள்ளே பொரியாமல் கடுக்கென்றும் வெளியே கருகியும் சுவையும் குன்றியும் ஒரு வித அசட்டுத் தித்திப்புடன் இருக்கும். நாவில் ஒட்டிக் கொள்வது போல் இருக்கும்.
இதில் செய்யும் வடகம் விரியும் வாய்ப்புகள் அதிகம். தவிர்க்க முடியாமல் அதைப் பயன் படுத்த வேண்டியிருந்தால் சிறிது மைதாக் கூழ் கலந்து செய்து பார்க்கலாம். அதே போல் குக்கரில் செய்த கூழ் கெட்டியாக இருந்தால் பச்சைத் தண்ணீர் ஊற்றி நெகிழ்த்தினாலும் வடகம் விரியும் வாய்ப்புகள் அதிகம். சிறிதளவு அரிசி மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கரைத்த நீரைக் கொதிக்க வைத்து கூழைத் தேவையான அளவுக்கு நெகிழ்த்திக் கொள்ளலாம். அதேபோல் கூழ் நீர்த்து விட்டது போல் இருந்தால் அரிசி மாவு அல்லது மைதா சேர்த்து கொஞ்சம் கெட்டியாகக் கரைத்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் கலந்து சரி செய்து கொள்ளலாம்.
உப்பு காரம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான். மேலும் எப்போதும் சின்னச் சின்னதாக தான் இட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சற்றுப் பெரிய கரண்டியால் பெரிதாக ஊறிக் காய வைத்து எடுத்துக் கொண்டால் அப்பளம் போல் மேலும்.விரிந்து பொரியும். அவற்றைப் பெரிய கப்புகள் போல் பயன்படுத்தி உள்ளே வீட்டில் செய்த சட்னி சாஸ் அல்லது ஜாம் தடவி மற்றும் பிள்ளைகளுக்குப் பிடித்த வதக்கிய காய்கறிகளை நிரப்பிக் கொடுக்கலாம். சின்ன வயதில் என் பிள்ளைகளுக்காக இப்படிச் செய்து வைப்பது வழக்கம்.
மேலும் ஜவ்வரிசி வடகத்தில் தக்காளிச் சாறு சீரகம் ஓமம் போன்றவற்றைக் கலந்து விதம் விதமாக செய்து வைத்துக் கொள்ளலாம். சமயத்தில் உதவும் உதாரணத்துக்கு ஓமம் சேர்த்து மெலிதாக இட்டுக் காயவைத்துச் செய்யும் வடகத்தை சிறு குழந்தைகளுக்கு சின்னத் துண்டுகளாக ஒடித்துப் பொரித்து ரசம் சாதத்துடன் கொடுக்கலாம் .காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு பிறகு நார்மல் உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போதும் இந்த ஓமம் வயிற்றுக்கு இதம் கொடுக்கும்
மைக்ரோவேவ் பயன்படுத்துபவர்கள் அதிலும் சுட்டுக் கொடுக்கலாம். எதிர் பாராத விதமாக மழை பெய்து விட்டால் மறுபடி காய வைக்க முயற்சிக்காது வேறு புதிதாகச் செய்து கொள்வதே சரி. ஃப ங்கஸ் ஏற்பட வாய்ப்பு அதிகம். சுவையும் இருக்காதே...நன்கு காய்வதற்குத் தேவைப்படும் குறைந்த பட்ச நேரத்துக்குள் காய வைத்து எடுத்து வைத்து விட வேண்டும். பிறகும் அவ்வப்போது திறந்து பார்த்து நடுவில் ஓரிரு முறை பரத்தி வைத்து எடுத்து வைப்பது நலம். வடக மாவில் உப்புச் சுவை சற்றுக் குறைவாக இருந்தால் காய்ந்தவுடன் சரியான சுவையில் இருக்கும். கூழோ மாவோ சரியான அளவு உப்புச் சுவையுடன் இருந்தால் நீர் வற்றிக் காய்ந்த பின் உப்புத் தூக்கலாகி விடும். ஜமாயுங்க..
மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.