இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக பூக்களில் சமையல் செய்வோமா....? என்ன பூக்களில் சமையலா என்கிறீர்களா.... இந்தப் பூக்கள் உங்களுக்குப் பரிச்சயமானவைதான்... எளிதில் கிடைக்கும், சுவையில் அசத்தும். இந்த வார வீக் எண்டை ஃபிளவர் சமையலில் அசத்துங்கள்....
கோபி ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) - தலா ஒரு டீஸ்பூன்
நறுக்கிய குடமிளகாய் - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
கிரீன் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
மைதா, சோள மாவு, கடலை மாவு - தலா 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
ரெட் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு
மிளகுத்தூள், எண்ணெய், உப்பு, - தேவையான அளவு

செய்முறை:
காலிஃப்ளவரைச் சுத்தம் செய்யவும். மைதா, சோள மாவு, கடலை மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு, சிவப்பு ஃபுட் கலரை சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கலந்து அதில் காலிஃப்ளவரைத் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அரிசியை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் கேரட், பீன்ஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, கிரீன் சில்லி சாஸ் சேர்த்து வதக்கி, சாதத்தைச் சேர்க்கவும். கடைசியாக மிளகுத்தூள், வறுத்த காலிஃப்ளவர் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தாள் கொண்டு அலங்கரிக்கவும்.
முருங்கைப்பூ வடை
தேவையானவை:
முருங்கைப்பூ - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு - சோம்பு விழுது - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கடலைப்பருப்பை 4 மணி நேரம் ஊறவைத்து பின்பு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதில் முருங்கைப்பூ, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு - சோம்பு விழுது, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
புரொக்கோலி மஞ்சூரியன்
தேவையானவை:
புரொக்கோலி (சிறு பூக்களாக நறுக்கவும்) - ஒரு கப்
மைதா - அரை கப்
சோள மாவு - அரை கப்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சூரியன் செய்ய:
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன்
பூண்டு (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன்
குடமிளகாய் - ஒன்று (நறுக்கவும்)
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை:
புரொக்கோலியைச் சுத்தம் செய்யவும். பின்பு மைதா, சோள மாவு, மிளகுத்தூள், உப்புடன் தண்ணீர் சேர்த்து, மாவு பதத்துக்குக் கரைத்து, அதில் புரொக்கோலியை தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் உப்பு, ரெட் சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்க்கவும். சோள மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும் ஒரு கொதி வந்தவுடன் பொரித்த புரொக்கோலி சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தாளையும் சேர்க்கவும். புரொக்கோலி மஞ்சூரியன் தயார்.
ரோஸ் கப் கேக்
தேவையானவை:
மைதா - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
தயிர் - அரை கப்
ரோஸ் சாறு - ஒரு கப்
ரோஸ் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை (பொடித்தது) - ஒரு கப்
எண்ணெய் - 100 மில்லி

செய்முறை:
மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை சலித்துக் கொள்ளவும். பின்பு அதில் எண்ணெய், தயிர், ரோஸ் சாறு, சர்க்கரை மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கலந்து அவனில் (oven) 180 டிகிரி சென்டிகிரேடில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுத்துப் பரிமாறவும்.