லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பாரம்பர்யத்தின் ருசி: காவிரி தண்ணீர்... அச்சு வெல்லம்... விறகு அடுப்பு...

 சாந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்தி

100 ஆண்டுகளாக இனிக்கும் வெள்ளியணை முத்து அதிரசம்!

மிழர்களிடம் உலக நாடுகள் பெருமிதமாக வியந்து பார்க்கும் கலாசாரங்களில் ஒன்று, உணவு. நம் பாரம்பர்ய உணவுகளும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விரவிக்கிடக்கும் உணவு முறைகளும் பலரையும் சப்புக்கொட்டச் செய்பவை; தீபாவளி, பொங்கல் போன்ற பாரம்பர்ய விழாக்களை இன்புறச் செய்பவை. அந்த வகையில், கரூர் மாவட்டம் வெள்ளியணையில் தயாரிக்கப்படும் அதிரசம், தமிழக அளவில் பிரசித்திபெற்றது. நான்கைந்து குடும்பங்கள் அங்கே அதிரசம் தயாரித்தாலும், 100 ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது தலைமுறையாக அதிரசம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முத்து குடும்பம் தயாரிக்கும் அதிரச ருசிக்குப் பலரும் அடிமையாக இருக்கிறார்கள். அங்கே தயாரிக்கப்படுவதை வாங்க பலரும் கார் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்!

வெள்ளியணை முத்து அதிரசம்
வெள்ளியணை முத்து அதிரசம்

தீபாவளி நெருங்கிவரும் நிலையில், முத்துவின் மொத்தக் குடும்பமும் தீவிர அதிரசத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அவரது பேரன்களும் அதிரசம் விற்பனையில் ஒத்தாசை செய்கிறார்கள். வயோதிகம் கூடிப்போன களைப்பில் சற்று இளைப்பாறிய முத்துவிடம் பேசினோம்.

“எங்கப்பா ஆரம்பிச்சுவெச்ச தொழில் இது. 100 வருடங்களை அநாயாசமாகக் கடந்து, தொடர்ந்து நடத்திக்கிட்டு வர்றோம். வறட்சி நிறைந்த வெள்ளியணையில் பஞ்சம் பொழைக்க வேற வேலை தெரியாம எங்கப்பா கோபால நாயக்கர், எங்கம்மா ராஜம்மாளோட கைப்பக்குவத்தை நம்பி அதிரசம் தயாரிக்கும் தொழிலை ஆரம்பிச்சார். கால் அணா, அரை அணான்னு விலைவெச்சு விற்கப்பட்ட அதிரசத்தின் ருசி பதினெட்டுப்பட்டி கிராம மக்களுக்கும் பிடிச்சுப் போச்சு. விவரம் தெரிஞ்ச காலத்திலிருந்தே, அதிரசம் தயாரிக்கும் தொழிலில் அவங்களுக்கு உதவி பண்ணினேன். குடும்பத்தை பயமுறுத்தின வறுமை, இந்தத் தொழில் தந்த வருமானத்தால தீர்ந்துச்சு. எங்கப்பா, ‘இந்தத் தொழில்தான் நம்மை காபந்து பண்ணுச்சு. இதை நேர்மையா, தரம் மாறாம பண்ணு’ன்னு சொன்னதை வேதவாக்கா மனசுல பதிச்சுக்கிட்டேன்.

வெள்ளியணை முத்து அதிரசம்
வெள்ளியணை முத்து அதிரசம்

எனக்கு கோதையம்மாளை திருமணம் பண்ணி வெச்சாங்க. எங்கம்மாவோட அதே கைப்பக்குவம் என் மனைவிக்கும் அமைஞ்சுச்சு. அப்பா அம்மா காலத்துக்குப் பிறகு நாங்க இந்தத் தொழிலை விடாம தொடர்ந்தோம். எனக்கும் என் மனைவிக்கும் வயசு எழுபத்தஞ்சைத் தாண்டிடுச்சு. அதனால மகன்கள், மருமகள்கள் கைகள்ல இந்தத் தொழிலை ஒப்படைச்சுட்டோம். இப்போ என் மருமகள்கள் (சுகுமார் மனைவி சாந்தியும், கண்ணதாசனின் மனைவி நாகலட்சுமியும்) அதிரசம் செய்றாங்க. பேரன்கள் ஒத்துழைப்புக் கொடுக்கிறாங்க” என்று தொழில் வரலாற்றை விவரிக்கிறார்.

நம்மிடம் ஒரு தட்டில் இரண்டு அதிரசங்களை வைத்து, “சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க தம்பி” என்று கூறிவிட்டுத் தொடர்கிறார் முத்து.

வெள்ளியணை முத்து அதிரசம்
வெள்ளியணை முத்து அதிரசம்

“நாங்க தயாரிக்கும் அதிரசத்தை வெளிநபர்களின் கடைகளுக்குத் தர மாட்டோம். நாங்களே வீட்டில் வைத்தும், கடைத்தெருவிலிருக்கும் எங்க டீக்கடையிலும் வெச்சுத்தான் விற்பனை செய்றோம். எங்க அதிரசத்தை இந்த வழியாகப் போற மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விரும்பி வாங்கிட்டுப் போவாங்க. வெளிநாடுகளுக்குப் போறவங்க, அங்கே இருக்கிறவங்க கேட்கறாங்கன்னு பார்சலா வாங்கிட்டுப் போறதும் உண்டு. எங்க கடை அதிரசம் இல்லாம, சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டியில வசிக்கிற யாரும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மாட்டாங்க. கரூர் மாவட்டத்துல பல பகுதிகளில் நடக்கும் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட விசேஷங்களுக்கு ஆர்டர் பண்ணி வாங்கிட்டுப் போவாங்க. சாதாரண நாள்கள்ல தினமும் 1,000 பீஸ் போடுவோம். தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்கள்ல 2,000 பீஸ் வரை தினமும் தயாரிப்போம். வெளியாட்களை வேலைக்கு வெச்சா, சுவை கெட்டுரும்னு நாங்களே தயாரிக்கிறோம்” என்கிறார் அவர்.

அடுத்து பேசுகிறார் அவருடைய மருமகள் சாந்தி... “மத்தவங்க தயாரிக்கிறதைவிட எங்க அதிரசம் கூடுதல் சுவையா இருக்கிறதுக்குக் காரணம், நாங்க இன்னமும் விறகு அடுப்பைப் பயன்படுத்துறதுதான். அதிரசம் தயாரிக்க, காவிரி ஆத்துத் தண்ணியைத்தான் பயன்படுத்துறோம். அதனால்தான் அதிரசம் தேனாக இனிக்குது. எங்க மாமாவோட அப்பா காலத்துல `கல்லுடையான்’ அரிசியைத்தான் பயன்படுத்தி இருக்காங்க. அதை உரல்ல இடிச்சு, அதுல அதிரசம் சுட்டிருக்காங்க. அந்தப் பாரம்பர்ய அரிசியை யாரும் இப்போ உற்பத்தி செய்வதில்லை. இப்போ மதுரையில் இருந்து அரிசி வாங்குறோம். கரூர்ல தேடிப்பார்த்து நல்ல பதத்துல உள்ள அச்சுவெல்லத்தை வாங்குறோம். அதிரசம் சுட செக்குல ஆட்டின தரமான கடலை எண்ணெய், தரமான ஏலக்காயை வாங்குறோம். அரிசியை வீட்லயே இருக்கும் மெஷின்ல நைசா அரைச்சுக்குவோம். வெல்லத்தை பதமாகக் காய்ச்சி பாகாக்குவோம். மாவைக் கிளறி, அதுலருந்து கையில தட்டி எடுத்து, அதை எண்ணெயில் போட்டு, சரியான பதத்துல அதிரசமா எடுப்போம். அதை வாயில போட்டா, அப்படி ஒரு தித்திப்பா இருக்கும்.

 சாந்தி
சாந்தி

இது, ஏழ்மையானவங்க நிறைந்த பகுதி. கூலி வேலை பார்க்குறவங்களும் விவசாய வேலை பார்க்குறவங்களும்தான் அதிகம். அவங்க உழைச்சுக் களைச்சு வந்து, எங்க கடையில ரெண்டு அதிரசத்தையும், ஒரு டீயையும் குடிச்சுட்டு, தெம்பாப் போய் மறுபடியும் வயல்ல வேலை பார்ப்பாங்க. எங்களுக்குப் பிறகு, என் மகன்கள் இந்தத் தொழிலைத் தொடரணும்னு நினைக்கிறோம். ஆனா, கல்லூரியில படிக்கும் அவங்க, பாரம்பர்யத் தொழிலையும் விடாமப் பண்ணணும்... நிச்சயமா பண்ணுவாங்க” என்கிறார் சாந்தி.

அப்போது காரில் வந்த ஒருவர், அங்கே அதிரசம் வாங்கினார். ‘கரூரைச் சேர்ந்த சந்திரசேகர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவரிடம் பேசினோம்.

“முத்து வீட்டு அதிரசத்துக்கு அப்படி ஒரு சுவை. என் பிள்ளைகளுக்குக் கொடுக்கவும், சொந்தக்காரங்க வீடுகளுக்குப் போகும்போதும் இதைத்தான் வாங்கிட்டுப் போவேன். என் நண்பர்கள், உறவினர்களுக்கும் முத்துக்கடை அதிரசத்தைப் பரிந்துரை செய்வேன். அந்த அளவுக்கு இங்கே தயாரிக்கப்படும் அதிரசத்தோட அலாதியான ருசியும் அற்புதமான தரமும் என்னை மயக்கிவெச்சிருக்கு” என்று வெகுவாக சிலாகிக்கிறார் சந்திரசேகர். நம் பாரம்பர்யப் பலகாரமான அதிரசம் மயக்கும் ருசி என்றால், வெள்ளியணை முத்து அதிரசம் அட்டகாசமான அமிர்தம்!