Published:Updated:

Doctor Vikatan: ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பது?

உணவு
News
உணவு ( DIXITH )

வயது மற்றும் உடலுழைப்பை வைத்து ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுக்கான `ரெகமண்டடு டயட்டரி அலவன்ஸ்' அளவீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு வளர்ந்த ஒருவருக்கு தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும்.

Published:Updated:

Doctor Vikatan: ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பது?

வயது மற்றும் உடலுழைப்பை வைத்து ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுக்கான `ரெகமண்டடு டயட்டரி அலவன்ஸ்' அளவீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு வளர்ந்த ஒருவருக்கு தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும்.

உணவு
News
உணவு ( DIXITH )

Doctor Vikatan: ஒருவர் சாப்பிடும் அளவுக்கு அளவுகோல் ஏதும் உண்டா? எனக்கு மிகக் குறைந்த அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடுகிறது. மற்றவர்கள் அது மிகவும் குறைவு என்கிறார்கள். ஒருவர் தேவைக்கேற்ப உணவு உண்பது சரியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்
கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்
விகடன்

ஒருவருடைய வயது, உடலுழைப்பு ஆகியவற்றைப் பொறுத்துதான் அவர் எவ்வளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டதும், `இது போதும்... இதற்கு மேல் வேண்டாம்' என சிக்னல் போன்று கிடைக்கும்.

இன்னும் சிலருக்கு வளர்சிதை மாற்ற செயலானது காலையில் மிக அதிகமாகவும் இரவில் மிகக் குறைவாகவும் இருக்கலாம். அதற்கேற்ப அவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு மாலை வேளையில் அதிகமாகப் பசியெடுக்கும். அவர்கள் இரவு உணவை நன்றாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அப்படி எடுக்கும் இரவு உணவு சீக்கிரமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

வயது மற்றும் உடலுழைப்பை வைத்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுக்கான `ரெகமண்டடு டயட்டரி அலவன்ஸ்' அளவீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு வளர்ந்த ஒருவருக்கு தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். மீதி அரை பாகத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாகம் புரதச்சத்தாகவும், இன்னொரு பாகம் கார்போஹைட்ரேட்டாகவும் இருக்கும்படி எடுத்துக்கொள்ளலாம். இப்படிச் சாப்பிடும்போது தான் நமக்கு சரிவிகிதமாக எல்லா சத்துகளும் கிடைக்கும்.

சிலர் காய்கறிகள், பழங்களைக் குறைவாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. தினமும் ஒன்றிரண்டு பழங்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள் அதற்கேற்ப மருத்துவ ஆலோசனையுடன் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

டயட்
டயட்

காய்கறிகளும் அப்படித்தான்... தினமும் 200 முதல் 300 கிராம் காய்கறிகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பலவித காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் மிக அவசியம். காலையில் சாம்பாரில் காய்கறிகளைச் சேர்ப்பது, காய்கறிகளிலேயே சட்னி செய்வது, பழங்கள் சேர்த்து ஸ்மூத்தி செய்வது போன்று எடுத்துக்கொள்ளலாம்.

மதிய உணவுக்கு பொரியல், கூட்டு, சூப் என காய்கறிகளின் பங்கு அவசியம் இருக்க வேண்டும். இரவிலும் சட்னி, சாம்பார், சூப் போன்ற வடிவங்களில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காலை 9 மணிக்கு காலை உணவு, மதியம் 1 மணிக்கு மதிய உணவு, மாலை 4 மணிக்கு சத்தான நொறுக்குத்தீனிகள், இரவு 7- 7.30 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுப் பழகும்போது உங்கள் உடலே உங்களுக்கு சிக்னல் கொடுக்கும். இதற்கு மேல் வேண்டாம் என உணர்த்தும். அப்படி உணரும்போது அத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.

ஆனால், தேவையின்றி உங்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். உதாரணத்துக்கு, எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி அவர் பரிந்துரைக்கும் உணவுப் பட்டியலை, அதன் அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஸ்போர்ட்ஸ்பர்சனாக இருக்கும்பட்சத்தில் அதற்கேற்ப சற்றுக் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

உடல் எடை
உடல் எடை

எனவே, உங்களுக்கான உணவு எவ்வளவு என்பதை உங்களால் தீர்மானிக்க முடியாத பட்சத்தில் டயட்டீஷியனின் ஆலோசனையோடு அதைத் தெரிந்துகொண்டு பின்பற்றுவது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.