Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?

Briyani
News
Briyani

பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்ப்பதென்பது இயலாத காரியம். அது ஒருவித கொண்டாட்ட உணவு. உணவை பசிக்காக சாப்பிடுகிறோமா, ருசிக்காக சாப்பிடுகிறோமா என்பது முக்கியம். பிரியாணியைப் பெரும்பாலும் ருசிக்காகவே சாப்பிடுகிறார்கள்.

Published:Updated:

Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?

பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்ப்பதென்பது இயலாத காரியம். அது ஒருவித கொண்டாட்ட உணவு. உணவை பசிக்காக சாப்பிடுகிறோமா, ருசிக்காக சாப்பிடுகிறோமா என்பது முக்கியம். பிரியாணியைப் பெரும்பாலும் ருசிக்காகவே சாப்பிடுகிறார்கள்.

Briyani
News
Briyani

Doctor Vikatan: பிரியாணி சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். என்னைப் போன்ற சென்னைவாசிகளுக்கு பிரியாணி இல்லாமல் பெரும்பாலான நாள்கள் நகர்வதே இல்லை. எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்? பிரியாணி சாப்பிடுவது அவ்வளவு ஆபத்தானதா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

மருத்துவர் சஃபி
மருத்துவர் சஃபி

வாரத்துக்கு ஒருநாளோ, இரண்டு நாள்களோ பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அது ஹோட்டல் பிரியாணியாக இல்லாமல் இருப்பது பாதுகாப்பானது. ஹோட்டல் பிரியாணி என்றால் அதில் சுவையூட்டி, நிறமூட்டி, எண்ணெய் என எல்லாமே அளவுக்கதிகமாகச் சேர்க்கப்படும். வீட்டில் தயாரிக்கும்போது பார்த்துப் பார்த்து ஆரோக்கியமாகச் சமைப்போம்.

பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்ப்பதென்பது இயலாத காரியம். அது ஒருவித கொண்டாட்ட உணவு. எனவே, அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

எந்த அளவு பிரியாணி சாப்பிடுவது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. உணவைப் பொறுத்தவரை பசிக்காக சாப்பிடுகிறோமா, ருசிக்காக சாப்பிடுகிறோமா என்பது முக்கியம். பிரியாணியைப் பெரும்பாலும் யாரும் பசிக்காக சாப்பிடுவதில்லை. ருசிக்காகவே சாப்பிடுகிறார்கள்.

இன்று பக்கெட் பிரியாணி, ஒருகிலோ பிரியாணி என்றெல்லாம் விற்கப்படுகிறது. அதையெல்லாம் அளவுக்கு மீறி ஒருவர் சாப்பிடுவது மிகவும் தவறானது. அதில் சேர்க்கப்படுகிற அரிசி, இறைச்சி, எண்ணெய் என எல்லாமே அளவு மீறும்போது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக சமைத்த பிரியாணிதான் ஆரோக்கியமானது. ஏற்கெனவே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தப்பட்ட பிரியாணி நிச்சயம் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும்.

நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி எல்லாம் இப்போது டிரெண்டாகி வருகின்றன. அந்த நேரத்தில் நம் செரிமான மண்டலமானது தயாராக இருக்காது. இரவு முதல் அடுத்த நாள் காலை வரை நம் செரிமான மண்டலத்துக்கு ஓய்வு வேண்டும். அதனால்தான் இரவு உணவையே தூக்கத்துக்கு இரண்டு மூன்று மணி நேரம் முன்னதாக முடித்துக்கொள்ளச் சொல்கிறோம்.

Biryani
Biryani

ஒருவேளை பணிச்சூழல் காரணமாக அந்த நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்றவர்கள், அடுத்த நாள் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இரவு பிரியாணி சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலை இட்லி, தோசை, வடை என வயிறு முட்ட சாப்பிடுவது மிகவும் தவறு.

பிரியாணி சாப்பிடுவதால் இறப்பு நிகழ வாய்ப்பில்லை. அசைவ பிரியாணியாக இருந்து, அந்த எலும்பு தொண்டையில் சிக்கினால், அதன் காரணமாக இறப்பு நிகழலாம். அந்த அசைவத்தில் நச்சுத்தன்மை இருந்தாலும் அப்படி நிகழலாம். மற்றபடி பிரியாணிக்கும் இறப்புக்கும் தொடர்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.