Published:Updated:

'உணவுப் பிரமிடு' (Food Pyramid) என்றால் என்ன? | Doubt of Common Man

சரிவிகித உணவு
News
சரிவிகித உணவு

1992-ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேளாண்மைத் துறை, மனிதனின் உன்னத வாழ்க்கைக்கு ஏற்ற உடல் நலத்திற்கான உணவுகளை ஒரு வரைபடமாக வடிவமைத்து வெளியிட்டது. அந்த வரைபட அமைப்பு, முக்கோணமான பிரமிடு வடிவில் அமைந்திருந்தது. அதனையே 'உணவுப் பிரமிடு' என்றழைத்தனர்.

Published:Updated:

'உணவுப் பிரமிடு' (Food Pyramid) என்றால் என்ன? | Doubt of Common Man

1992-ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேளாண்மைத் துறை, மனிதனின் உன்னத வாழ்க்கைக்கு ஏற்ற உடல் நலத்திற்கான உணவுகளை ஒரு வரைபடமாக வடிவமைத்து வெளியிட்டது. அந்த வரைபட அமைப்பு, முக்கோணமான பிரமிடு வடிவில் அமைந்திருந்தது. அதனையே 'உணவுப் பிரமிடு' என்றழைத்தனர்.

சரிவிகித உணவு
News
சரிவிகித உணவு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் லட்சுமி என்ற வாசகர், "'உணவுப் பிரமிடு' (Food Pyramid) என்றால் என்ன? அதனைப் பற்றிக் கொஞ்சம் விளக்கிக் கூற முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

மனிதன் பசிக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலம் போய், ருசிக்கு சாப்பிடத் தொடங்கினான். அந்த ருசியானது, அவனை அளவுக்கதிகமாகச் சாப்பிட வைத்தது மட்டுமின்றி, நோய் எனும் பெரும் பள்ளத்திலும் கொண்டு போய்த் தள்ளி விட்டது. அந்தப் பள்ளத்திலிருந்து, சில மருத்துவங்களின் உதவியால் அவ்வப்போது எழுந்து நிற்க முடிகிறதே தவிர, அந்தப் பள்ளத்திலிருந்து அவனால் முழுமையாக வெளியேற முடியவில்லை. இந்த நிலைக்கு அவனுடைய உணவுப் பழக்க வழக்கங்களே முதன்மைக் காரணமாக இருக்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டதன் விளைவால் வந்த நோயை விரட்டி அடிக்க, மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது. உடல் நலத்திற்கான உணவும் அவசியமாகிறது. மனிதனின் அன்றாட உணவு, உடல் நலத்திற்கான உணவாய் அமைந்திட எந்த மாதிரியான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்? அதற்கு என்ன உணவுகளெல்லாம் தேவைப்படும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்? என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

Junk Food
Junk Food

அதற்கு முன்பாக, உணவு என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்திகளை அளிக்கக் கூடிய மாவுச்சத்து (Carbohydrate), புரதம் (Protein), கொழுப்பு (Fat), உயிர்ச்சத்துகள் (Vitamins), தாது உப்புகள் (Minerals) மற்றும் தண்ணீர் (Water) ஆகியவற்றை உணவு என்றும், இந்த உணவுகளை உள்ளடக்கிய பொருட்களை உணவுப் பொருட்கள் என்றும் சொல்லலாம்.

மனிதனின் உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்திகளில் 60 முதல் 70 சதவிகிதம் மாவுச்சத்திலிருந்தும் (Carbohydrate), 10 முதல் 20 சதவிகிதம் புரதத்திலிருந்தும் (Protein), 20 முதல் 25 சதவிகிதம் கொழுப்பிலிருந்தும் (Fat) கிடைக்கின்றன. உயிர்ச்சத்துகள் (Vitamins), தாது உப்புகள் (Minerals) மற்றும் தண்ணீர் (Water) போன்றவை சக்தியைத் தருவதில்லை என்கிற போதிலும், அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவசியத் தேவையாக இருக்கின்றன. உண்ணும் உணவுகளில் ஏற்படும் நிறை மற்றும் குறைகளினாலேயே பெரும்பான்மையான நோய்கள் மனிதனுக்கு வருகின்றன.

1992-ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேளாண்மைத் துறை, மனிதனின் உன்னத வாழ்க்கைக்கு ஏற்ற உடல் நலத்திற்கான உணவுகளை ஒரு வரைபடமாக வடிவமைத்து வெளியிட்டது. அந்த வரைபட அமைப்பு, முக்கோணமான பிரமிடு வடிவில் அமைந்திருந்தது. எனவே, அதனை உணவு வழிகாட்டல் பிரமிடு (Food Guide Pyramid) என்றழைத்தனர். பிற்காலத்தில் அது உணவு பிரமிடு (Food Pyramid) என்று மாறிப்போனது.

உணவுப் பிரமிடில் ஐந்து பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. கீழ்ப்பகுதியிலான முதல் பகுதியில் தானியங்களும், அதன் மேலான இரண்டாம் பகுதியில் காய்கள், பழங்கள் மற்றும் கீரைகளும், நடுப்பகுதியான மூன்றாம் பகுதியில் பயறு வகைகளும், அதற்கு மேலிருக்கும் நான்காம் பகுதியில் பால் மற்றும் இறைச்சிகளும், மேற்பகுதியான ஐந்தாம் பகுதியில் சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவையும் இடம் பெற்றிருக்கின்றன.2

Food Pyramid
Food Pyramid

கீழ்ப்பகுதியிலிருக்கும் தானியங்களை அன்றாட உணவில் அதிகமாகவும், அதன் மேலிருக்கும் காய்கள், பழங்கள் மற்றும் கீரைகளைத் தானியங்களுக்கு அடுத்தபடியாகவும், பயறு வகைகளை அதிலிருந்து சற்று குறைத்தும், பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றை அதிலிருந்து குறைத்தும், சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை மிகமிகக் குறைவாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த உணவுப் பிரமிடு உணர்த்துகிறது. உணவுப் பிரமிடில் குறிப்பிட்டிருக்கும் உணவு 'சமச்சீர் உணவு' என்று வரையறுக்கப்படுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடு வடிவமைத்த உணவு வழிகாட்டல் பிரமிடை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் பயன்பாட்டிலிருக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு, தங்களது நாட்டிற்கான உணவுப் பிரமிடைத் தனித்தனியாக வடிவமைத்துக் கொண்டனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research – ICMR) இந்தியப் பயன்பாட்டிலிருக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு, இந்தியாவிற்கான உணவுப் பிரமிடை வடிவமைத்திருக்கிறது.

இந்தியப் பயன்பாட்டிலிருக்கும் உணவுப்பொருட்களும், அவற்றின் வழியாகக் கிடைக்கும் சத்துகள் குறித்த தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.தானியங்கள்

அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, திணை, பார்லி உள்ளிட்ட பல்வேறு தானியங்களும், தானியங்களை மூலப்பொருட்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களும் மனிதனுக்குத் தேவையான முதல் வகை உணவாக இருக்கின்றன. இத்தானியங்களில் மாவுச்சத்து (Carbohydrate), புரதம் (Protein), கொழுப்பு (Fat), உயிர்ச்சத்துகள் பி1, பி2 (Vitamins B1, B2), கால்சியம், போலிக் அமிலம், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட தாது உப்புகள் (Minerals) இடம் பெற்றிருக்கின்றன. இத்தானியங்களின் வழியாக உடல் இயக்கத்திற்குத் தேவையான 60 முதல் 70 சதவிகித சத்துகள் கிடைக்கின்றன. எனவே, இவற்றை உண்ணும் உணவுகளில் அதிக அளவில் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

2. காய்கள், பழங்கள் மற்றும் கீரைகள்

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளில், உயிர்ச்சத்து ஏ (Vitamins A), கால்சியம், போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட தாது உப்புகள் (Minerals) இடம் பெற்றிருக்கின்றன.

காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள்
காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள்

தக்காளி, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, மாதுளை, தர்ப்பூசனி, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், முருங்கைக்கீரை, பசலைக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, கருவேப்பிலை, மல்லித்தழை உள்ளிட்ட கீரை வகைகள் போன்றவற்றில் உயிர்ச்சத்துகள் ஏ, பி2 (Vitamins A, B2), கால்சியம், போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட தாது உப்புகள் (Minerals) இடம் பெற்றிருக்கின்றன.

இதே போன்று கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு உள்ளிட்ட வேர் மற்றும் கிழங்குகளிலிருந்து மாவுச்சத்து (Carbohydrate) கிடைக்கின்றன. எனவே காய்கள், பழங்கள், கீரைகள் மற்றும் வேர்கள், கிழங்குகள் போன்றவற்றைத் தானியங்களுக்கு அடுத்த நிலையில் இரண்டாவதாக அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

3. பயறு வகைகள்

நிலக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, வறுகடலை, சோயாபீன்ஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளில் மாவுச்சத்து (Carbohydrate), புரதம் (Protein), கொழுப்பு (Fat), உயிர்ச்சத்துகள் பி1, பி2 (Vitamins B1, B2), கால்சியம், போலிக் அமிலம், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட தாது உப்புகள் (Minerals) இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை மூன்றாவது நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

4. பால் மற்றும் இறைச்சி

ஆடு, மாடுகளிலிருந்து கிடைக்கும் பால் மற்றும் பாலை மூலப்பொருட்களாகக் கொண்டு உருவாக்கப்பெற்ற தயிர், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றில் மாவுச்சத்து (Carbohydrate), புரதம் (Protein), கொழுப்பு (Fat), உயிர்ச்சத்துகள் பி2 (Vitamins B2), கால்சியம் எனும் தாது உப்பு (Minerals) இடம் பெற்றிருக்கின்றன. இதே போன்று, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகள், முட்டைகள் போன்றவற்றில் உயிர்ச்சத்துகள் ஏ, சி (Vitamins A, C) மற்றும் நார்ச்சத்து தாது உப்பு (Minerals) இடம் பெற்றிருக்கின்றன. இவ்வுணவு வகைகளை நான்காவது நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

பால் மற்றும் இறைச்சி
பால் மற்றும் இறைச்சி

5. சர்க்கரை மற்றும் எண்ணெய்

தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வகைகளில் கொழுப்பு (Fat) மற்றும் இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட இனிப்புப் பொருட்களில் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் இடம் பெற்றிருக்கிறது. இவ்வுணவு வகைகள் தேவையெனினும், ஐந்தாவது நிலையில் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

தினசரி உணவில் முதலில் இடம் பெற்றிருக்கும் தானியங்கள் 40 சதவிகித அளவிலும், இரண்டாவது இடம் பெற்றிருக்கும் காய்கள், பழங்கள் மற்றும் கீரைகளை 35 சதவிகித அளவிலும், மூன்றாவதாக இடம் பெற்றிருக்கும் பயறு வகைகள் 18 சதவிகித அளவிலும், நான்காவதாக இடம் பெற்றிருக்கும் பால் மற்றும் இறைச்சி வகைகள் 5 சதவிகித அளவிலும், ஐந்தாவதாக இடம் பெற்றிருக்கும் சர்க்கரை மற்றும் எண்ணெய் வகைகள் 2 சதவிகிதம் எனும் அளவில் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் சமச்சீராகக் கிடைத்துக் கொண்டிருக்கும். நம் உடலும் நலமாக இருக்கும். இந்த உணவு சதவிகிதம் மாறுபடும் போது, நம் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுகிறது. பல்வேறு துன்பங்களுக்குள்ளாக நேரிடுகிறது. ருசிக்கான உணவை விடுத்து, உடல் நலத்திற்கேற்ற உணவை எடுத்துக் கொள்வதேச் சிறப்பு என்பதை உணர்ந்து உண்போம்; நல்ல உடல் நலத்துடன் வாழ்வோம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man