`தங்கத்திற்குப் பதில் தக்காளி’- பாகிஸ்தான் மணப்பெண்ணின் இந்த முடிவு அர்த்தம் நிறைந்தது!
`இது முற்றிலும் சித்திரிக்கப்பட்ட காணொலி' என்று பல்வேறு விதமான விவாதங்களும் ஒருபக்கம் நடந்தேறின.
பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து இந்தியப் பெற்றோர்கள் சுமக்க ஆரம்பிக்கும் கவலை மற்றும் பொறுப்பு... அவர்களின் திருமணத்திற்கு தங்க நகைகளைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான். `இனி திருமணத்திற்கு சவரன் கணக்கில் தங்க நகையெல்லாம் தேவையில்லை. ஒரு கிலோ தக்காளி போதும்' என்கிற பாணியில் தன் திருமணத்திற்குத் தக்காளியிலான நகைகளை அணிந்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர்.

`நகை'ச்சுவையாக இருந்தாலும், அதன் காரணம் அர்த்தம் நிறைந்தது.
சமீபத்தில் பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான ஒரு மணப்பெண்ணின் நேர்காணல் காணொலி, சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், தங்க நிறத்தில் திருமண உடையணிந்து அதை மேட்ச் செய்யும் விதமாகத் தக்காளியிலான நெக்லஸ், காதணி, நெத்திச்சுட்டி அணிந்திருந்தார் அந்தப் பெண்.

இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் கேட்டபோது, ``நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. அதேபோல தக்காளி மற்றும் பைன் விதைகளின் விலையும் தங்கத்திற்குச் சமமாக அதிகரித்து வருகிறது. அதனால்தான் என்னுடைய திருமணத்திற்குத் தங்கத்திற்கு பதிலாகத் தக்காளியை அணிய முடிவு செய்தேன்" எனக் கூறினார்.
இந்தக் காணொலி வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் 32,000 வியூஸையும், ஃபேஸ்புக்கில் 1.3 மில்லியன் வியூஸையும் பெற்றது.

`பாகிஸ்தானின் பணக்காரப் பெண்மணி', `மணப்பெண் மருதாணி போடவில்லை, எனவே இது முற்றிலும் சித்திரிக்கப்பட்ட காணொலி' என்று பல்வேறு விதமான விவாதங்களும் ஒருபக்கம் நடந்தேறின. பாகிஸ்தானின் பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.