Published:Updated:

நலம் 360’ - 24

மருத்துவர் கு.சிவராமன்படம்: எல்.ராஜேந்திரன்

நலம் 360’  - 24

டுப்பின் சுற்றளவு அதிகமாக அதிகமாக, வாழ்நாளின் நீளம் குறையும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், கடந்த ஆண்டு உலகம் எங்கும் நிகழ்ந்த மரணங்களில் அதிகம், உடல் எடை அதிகரித்து ஏற்பட்ட மாரடைப்பினால்தான் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. மாரடைப்பின் பின்னணியில் அதிகம் இருப்பது சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும்தான். உடல் எடை அதிகரிப்பதால் மட்டுமே பெரும்பாலும் இந்த இரண்டு நோய்களும் வருகின்றன. உலகில் 65 சதவிகித மக்கள் வாழும் நாடுகளில், ஊட்டச்சத்து குறைவைக் காட்டிலும், ஊட்டி ஊட்டி வளர்த்ததால்தான் அதிக மரணங்கள் நிகழ்கின்றன.

இன்றைய சூழலில் ஐந்து வயதுக்கும் குறைவான 42 மில்லியன் குண்டுக் குழந்தைகள் நம்மிடையே இருக்கின்றனர். 1980-க்குப் பின் உலகில் குண்டர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாம்.

நலம் 360’  - 24

பெரும்பாலோர் நினைப்பதுபோல் ஏதோ எண்ணெயில் பொரித்த உணவும், அதிக இறைச்சியும் மட்டுமே உடல் எடையை உயர்த்துபவை அல்ல. அவற்றையும் தாண்டி அன்றாடம் நாம் உண்ணும் பல பொருட்களில், எடையை எகிறவைக்கும் விஷயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கின்றன. துரித உணவுகளில் மறைமுகமாகக் காணப்படும் சர்க்கரை, கொழுப்பு, உப்பு மூன்றுமே உடல் எடை உயர்வுக்கு மிக முக்கியக் காரணிகள்.

காதலிக்கு 'வருடத்தின் எல்லா மாதங்களிலும் பழம் தருவதற்குப் பதிலாக பழச்சாறு’ தரும் உத்தியாகட்டும், அடித்து வேகவைத்து, துவைத்து, காயவைத்து, பட்டை தீட்டி பளபளப்பாக்கி வரும் அவல் கூட்டம் ஆகட்டும், வாய் எல்லாம் வழிந்து புறங்கையை நக்கிச் சாப்பிடும் நாகரிக சாக்லேட் ஆகட்டும், கேக் - ரொட்டி என சந்தையில் வகை வகையாகக் குவிந்திருக்கும் பண்டங்கள் ஆகட்டும்... அனைத்திலும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு பெருவாரியாக ஒளிந்திருக்கின்றன. இவை அனைத்தும், உடல் எடையை அதிகரிக்க வைக்கும் உத்தம வில்லன்கள்.

இவற்றைத் தாண்டி ஓடி ஒளியாமல், மிகுந்த ஒய்யாரத்துடன் அனைத்து வாழ்வியல் நோய்களையும் கும்மியடித்து வரவேற்கும் ஓர் உணவு, பரோட்டா. இதை இப்போது, 'தமிழகத்தின் தேசிய உணவு’ என்றே சொல்லலாம். 'வேத காலத்தில் தேவர்கள், கடவுளுக்கு வேள்வியில் படைக்கும் உணவான 'புரதோஷம்’தான் இப்போது பரோட்டா’ எனச் சிலர் கோத்துவிட்டாலும், இன்று தெருமுனை கடையில் இருந்து புறவழிச் சாலை கடை வரை ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பெருகியுள்ள பரோட்டா கடைகளில் பசியாற, கடவுள் வந்து செல்வதாகத் தெரியவில்லை. வயிறு பசித்த கூலித் தொழிலாளிகளும், நாக்கு ருசிக்காக இளவட்டங்களும்தான் பெருவாரியாக வருகிறார்கள்.

இங்கு மட்டும்அல்ல, கேரளாவிலும் மலேசியாவிலும் மிகவும் பிரபலமான அன்றாட உணவு பரோட்டோ. இதில் வாத்துக் கறி, கோழிக்கறி, வாழைப்பழம் வரை கலந்து 'ரொட்டி செனாய்’, 'ரொட்டி அயம்’, 'ரொட்டி பிசாங்’ என வகை வகையாக நள்ளிரவைத் தாண்டியும் பரோட்டாவைச் சுவைக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். விளைவு... தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிக உடல் எடை கொண்டவர்கள் வசிக்கும் நாடு என முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது மலேசியா. உடல் எடையைக் குறைக்க அந்த நாட்டின் சுகாதார அமைச்சர், சுமார் 10 ஆயிரம் ஸ்கிப்பிங் கயிறு வாங்கி பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்திருப்பது கூடுதல் செய்தி.

'கோதுமையில் இருந்து பெறப்படும் மைதா நல்லதுதானே... அது எப்படிப் பிரச்னை ஆகும்?’ என நம்மை அப்பாவியாகக் கேட்கவைத்திருக்கும் வணிகத்தை, கொஞ்சம் உற்றுப் பாருங்கள். கோதுமையில் இருக்கும் தவிட்டை நீக்கி அரைத்தால், பொன் மஞ்சள் நிறத்தில் கோதுமைப் பொடி வரவேண்டும். அப்படி வராமல், வெள்ளை வெளேர் என மைதா வர, அதில் நடத்தும் உணவியல் தொழில்நுட்ப விளையாட்டுகள் நம் நலத்துடனும் நடத்தும் பயங்கர விளையாட்டுகள் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

கோதுமையை, குளோரினேட்டட் நீரில் பல அடுக்குகள் கழுவி, ஊறவைத்து, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட 'பென்சைல் பெராக்ஸைடு’ போன்ற ரசாயனங்களால் வெளுக்கவைத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், எமுல்சிஃபையர் எல்லாம் சேர்த்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். இப்படித் தயாரிக்கப்படும் மைதா... ரொட்டி தயாரிப்புக்குப் பயன்படும் என்றால், மேலே உப்பி உயர வேண்டும்; பரோட்டாவுக்கு என்றால் நீளவாக்கில் இழுவையாக வரவேண்டும். இந்த இரண்டு செயல்களுக்குமே அதிலுள்ள 'குளூட்டன்’ எனும் புரதத்தின் இருவேறு பிரிவுகள் அவசியம். சந்தைக்கு இழுவை வேண்டுமா, உப்பி உயர வேண்டுமா எனத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் மைதாவில் நடத்தப்படும் சடங்குகளைக் கேட்டால் நமக்குள் பதறும்.

'ராஜஸ்தான் மாநிலத்தின் கோதுமையில் இழுவைச் சத்து நிறைந்த புரதம் இருக்கிறது. அங்கு விளைந்த கோதுமையை ஒட்டுமொத்தமாக நாம் வாங்கிக் கொள்ளலாம். மத்தியப்பிரதேசக் கோதுமையில் உப்பி உயரும் தன்மை கூடுதலாக உள்ளது. அதை நாம் வணிகப்படுத்தலாம்’ என, மைதா வணிகர்கள் போட்டாபோட்டிபோடுவது உலகம் அறியாத உண்மை.

சாதாரணமாக 20-30 நாட்களுக்குள் சிதைந்துபோகக்கூடிய மைதா மாவு, சுமார் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரையில் அப்படியே இருப்பதற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாகச் சேர்க்கப்படும் மலிவான ரசாயனங்கள் இன்னும் நம்மைக் கொத்திப்போடும் அபாயங்கள். வெளுக்க, இழுக்க, உப்ப, மென்மையாக்க, நீடித்திருக்க சேர்க்கப்படும் பலவிதமான ரசாயனக் குளியலில், நம் உடலில் இன்சுலினைச் சுரக்கவைக்கும் கணையத்தின் பீட்டா செல்களைச் சிதைக்கும் 'அலாக்ஸான்’ உருவாவதுதான் உச்சக்கட்ட வேதனை. உடல்எடை அதிகரிப்பையும், ரத்தத்தில் சர்க்கரை உயர்வையும் நேரடியாகத் தரும் இந்த வஸ்துவைப் பிய்த்துப் போட்டுச் சாப்பிட்டு, 'மறுபடியும் முதலில் இருந்து வெச்சுக்குவோமா?’ என நம்மில் பலரும் பரோட்டா சூரியாகத் திரிவது சொ.செ.சூ!

நலம் 360’  - 24

பரோட்டாவுக்கான மைதா மாவு மாதிரி, இப்படிப்பட்ட மிகப் பிரபலமான ரொட்டிகளும் வெகுமென்மையாக இருக்கக் காரணம், கோதுமையால் அல்ல. அதற்கான மாவு தயாரிக்கும் மில்லில் இருந்து, பளபளப்பான அந்த உணவகத்தின் செஃப் வரை அதில் தெரிந்தும் தெரியாமலும் சேர்க்கும் ரசாயனங்கள்தான். ரொட்டியைப் படைத்த மேற்கத்திய நாடுகளோ, 'கோதுமையைத் துவம்சம் பண்ணக் கூடாது; அதில் தவிட்டோடு உள்ள 74 சதவிகித மாவைப் பயன்படுத்த வேண்டும்’ என சட்டம் இயற்றியிருக்க, நம் ஊர் சந்தையோ 57 முதல் 63 சதவிகிதம் வெள்ளை வெளேர், தவிடு இல்லாத மைதாவை 'மிகத் தரமான மைதா’ எனக் கொட்டிக் குவிக்கிறது.

குழந்தையின் உடல் எடை உயர்வில், உணவு உண்ணும் கலாசாரம் சிதைந்ததும் மிக முக்கியக் காரணம். 'கார்ட்டூன் பார்க்கும்போது வாயில் அப்பிவிடுவேனாக்கும்’ என ஆரம்பிக்கும் சோறு ஊட்டல், பின்னாளில் பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சி முன் அமர்ந்து, எதைச் சாப்பிடுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் சாப்பிடுகின்றன.

'நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பதை மனதில்கொண்டு, ஆற-அமர நொறுக்கி, உமிழ்நீரில் ஜீரணத்தைத் தொடங்கிச் சாப்பிடும் பழக்கம், உடல் எடையை உயர்த்தாது. அதேபோல், செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது, நின்று கொண்டு, நடந்துகொண்டு சாப்பிடுவது என இல்லாமல், தரையில் சம்மணம் இட்டுச் சாப்பிடுவோருக்கு எடையும் தொப்பையும் வரவே வராது.

' குழந்தை எல்லாத்துலயும் நம்பர் ஒன் மார்க் வாங்கியிருக்கா...’ என அக்கறைகாட்டும் பெற்றோரில் பலர், குழந்தை தன் உயரத்துக்கு ஏற்ற சரியான உடல் எடையுடன் இருக்கிறதா... எனப் பார்ப்பது இல்லை. குழந்தைப் பருவத்தில் அவனது / அவளது எடை உயர்வு மட்டும்தான், பின்னாளில் அவர்களை வதைக்கும் பல நலப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம். பெண் குழந்தைகளில் உடல் எடைகூடிய நபர்களில் பாதிப் பேருக்குமேல், சினைப்பை நீர்க்கட்டியுடன் கூடிய மாதவிடாய் தொந்தரவு வருகிறது. அவர்களுக்குத்தான் பின்னாளில் கர்ப்ப காலத்து சர்க்கரை நோய், பின் நிரந்தர சர்க்கரை நோய், மாதவிடாய் முடியும் சமயம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் குண்டான ஆண் குழந்தைக்கு, இளம் வயதிலேயே சர்க்கரை நோய், விந்தணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, மாரடைப்பு, புற்றுநோய் என வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

'ஆற்றுக்குள் இருந்து அரோகரா என்றாலும் சோற்றுக்குள்தான் சொக்கநாதன்’ என வளைத்து அடிக்கும் வாழ்வியலை நெடுங்காலமாக வைத்திருந்தவர்கள் நாம். பற்றாக்குறைக்கு, சொகுசு கூடிப்போய் உடல் உழைப்பு ஜிம்மில் மட்டும் நடத்தப்படுகிறது. தாராளமயமாக்கலில் உலகின் மொத்தக் குப்பை உணவுகளும் நம் தெருமுனையில் தாராளமாக அலங்கரிக்கப்பட்டுப் பரிமாறப்படுகின்றன. கொஞ்சம் உஷாராக இல்லை என்றால், 'கொள்ளுத் தாத்தா, பூட்டனை’ நாம் எப்படிப் பார்த்ததே இல்லையோ, அப்படி இப்போதைய குழந்தைகள் 'தாத்தா/பாட்டியை’ போட்டோவில் மட்டுமே பார்க்கும் பயங்கரம் நிகழ்ந்துவிடும்... உஷார்!

- நலம் பரவும்...

சிக்கல் இல்லாமல் ஸ்லிம் ஆக...

'டயட்ல இருக்கேன்’ என்பது, இன்றைக்குப்  பலரின் பன்ச் டயலாக். ஒருவரின் உடல் எடை, பி.எம்.ஐ., இடுப்பின் சுற்றளவு, பிருஷ்டத்தின் சுற்றளவு, அவர்களின் வேலை, நோய் நிலை, பாரம்பர்யம்... ஆகியவை பொறுத்து உடல் எடை குறைப்பு உணவுத் திட்டம் அமைய வேண்டும். உடல் மெலிய விரும்புவோருக்கு அதிகச் சிக்கல் இல்லாத உணவுத் திட்டம் இதோ...

• காலை காபி / தேநீருக்குப் பதில் ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

• காலை உணவாக நெய்யும் முந்திரியும் இல்லாத மிளகுத் திணைப் பொங்கல் (அ) காய்கறியுடன்கூடிய வரகரிசி உப்புமாபாத் (அ) கம்பு-சோளத் தோசை (அ) கேழ்வரகு இட்லி 2 அல்லது 3. அதோடு சிறுவெங்காயச் சட்னி அல்லது தக்காளி சட்னி அல்லது பாசிப் பருப்பு சாம்பார்.

• பகல் 11 மணிக்கு, அலுவலகத்தில் கிரீன் டீ (பால், சர்க்கரை சேர்க்காமல்); கோடைகாலத்தில் 2 கப் மோர்.

• மதிய உணவில் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஒரு கப்பில் சோறு இருக்க வேண்டும். வெங்காயம் / தக்காளி / வெள்ளரி சாலட், கீரைக் கூட்டு அதோடு ஏதோ ஒரு காய்கறி. இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள, புழுங்கல் அரிசிச் சோறு பரிமாறலாம். கிழங்கும் பச்சரிசியும் எண்ணெயில் பொரித்திருக்கக் கூடாது. காய்கறிகளில் துவர்ப்பு, கசப்பு நிறைந்திருக்கும் வாழைப் பூ, கோவைக்காய், சுண்டைக்காய் அடிக்கடி இருப்பது நலம்.

• மாலை கொஞ்சம் சுண்டல், கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால், இரவு உணவை நன்கு குறைக்க முடியும்.

• இரவில் கண்டிப்பாக கேழ்வரகு ரொட்டி, கம்பு - சோளத் தோசை, முழுக்கோதுமையில் ஆன சப்பாத்தி... இப்படி ஏதாவது ஒன்று கிழங்கில் இல்லாத தொடுகறியுடன் இருக்கட்டும்.

• பால், வெள்ளைச் சர்க்கரை, பிஸ்கட், குக்கீஸ், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், துரித உணவுகள், இனிப்புப் பண்டங்கள் பக்கமே போகவே கூடாது. இந்தத் திட்டத்தோடு, வாரம் ஒரு நாள் வெறும் பழ உணவு, இன்னொரு வாரம் திரவ உணவு என இருந்தால், உங்களின் எடை நிச்சயம் குறையும். பழங்களில் அதி இனிப்பு உள்ள மா, பலாவைத் தவிர்க்கலாம்!

குடம் புளி ஷூஸ்!

இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு; கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பார்கள்.

எடை குறைக்கும் கொள்ளுப் பொடி ரெசிப்பி இது.

கொள்ளு 100கி., துவரம் பருப்பு 50கி., மிளகாய் வற்றல் 6, கறிவேப்பிலை 1 கைப்பிடி, வெந்தயம் 10கி., பிளேக்ஸ் விதை 20கி., பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இவை எல்லாவற்றையும் வறுத்துப் பொடித்து சுடு சோற்றில் பிசைந்து உண்ணலாம். கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் என அனைத்துமே எடை குறைக்கும் உணவுகள்.

குடம் (கோக்கம்) புளிதான் நம் நாட்டு புளி இனம். இப்போது பயன்படுத்தும் புளி நமது அல்ல. இந்தக் குடம் புளியை garcinia cambogia என்பார்கள் தாவரவியலாளர்கள். உலக சந்தையில் எடை குறைப்புக்காக பெரிதும் ஆய்வுசெய்யப்பட்ட பழம் இது. குடம் புளி உள்ளிருக்கும் சதைப்பற்றை மிக்ஸியில் நீர் சேர்த்து அடித்து, நிறைய நீர் சேர்த்து, கொஞ்சம் வெல்லத் தூள், ஏலக்காய் போட்டு கோடை காலத்தில் தாகத்துக்கு சாப்பிடலாம். இந்தக் குடம் புளி ஜூஸை சர்க்கரை சேர்த்த பழச்சாறாக்கி வணிகப்படுத்துகிறார்கள். ஆனால், வெள்ளை சர்க்கரை சேர்க்காமல், அவ்வப்போது இதைக் குடிப்பதே சிறப்பு!