Published:Updated:

நல்ல சோறு - 5

நல்ல சோறு - 5
நல்ல சோறு - 5

ராஜமுருகன், படங்கள்: தி.விஜய்

நல்ல சோறு - 5

யற்கைப் பேரழிவுகள் நடக்கும் ஒவ்வொரு முறையும், 'இயற்கை சதி செய்கிறதே!’ எனப் புலம்புகிறோம். ஆனால் நாம்தான் இயற்கையைச் சிதைத்து, அதன் அழகைக் குலைத்து, அதன் இயல்பைத் தொந்தரவு செய்கிறோம். வலி தாங்காது இயற்கை கொஞ்சம் திமிறினால், அதன் மீதே பழி போட்டுவிடுகிறோம். 

அதிக மகசூல், கம்பெனி விதைகள் என்ற பளபளப்பான வார்த்தைகளை நம்பி, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி நம் மண்ணையும் நீரையும் கெடுத்துவிட்டோம். 'இனி நான் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் விவசாயம் செய்யப்போகிறேன்’ என ஒருவர் முடிவெடுத்தாலும், அந்த நிலத்தில் விளையும் தானியங்களில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு இருக்கும். பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்களில் விளையும் காய்கறி, தானியங்களைச் சாப்பிடுவதால், என்னென்ன நோய்கள் வருகின்றன என்பதற்கு வாழும் சாட்சிகள் நாம்.

இந்தப் பின்னணியில்தான் சிறுதானியங்களின் அவசியம் பற்றி மீண்டும், மீண்டும் பேச வேண்டியிருக்கிறது. சிறுதானியங்கள் சாப்பிடுவது நம் உடல் நலனுக்கு மட்டும் அல்ல, மண்ணுக்கும் நம் சுற்றுச்சூழலுக்கும் நன்மையைத் தரும். எந்தப் பூச்சிக்கொல்லியும் இல்லாமல், மானாவாரியாக விளையும் சிறுதானியங்கள் தனக்குத் தேவையான நீரை, தானே வரவழைக்கும் திறன் பெற்றவை. பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் சிறுதானியங்கள் விளைந்து நிற்கும்போது, கொத்தித் தின்பதற்காக கிளிகள், சிட்டுக்குருவிகள், காக்கைகள், மைனாக்கள், வாலாட்டிகள்... போன்றவை கூட்டம் கூட்டமாக வரும். தானியங்களை உண்ட மயக்கத்தில் அருகில் உள்ள ஆலமரம், அரசமரம், வேப்பமரங்களில் இளைப்பாறும். நொறுக்குத் தீனியாக மரங்களின் பழங்களைச் சாப்பிட்டு, எச்சங்கள் வழியாக விதைகளைத் தூவும். விதைகள் வேர்விட்டுத் துளிர்த்து, மரம் ஆகும். மரம் நிழலையும் மழையையும் தரும். பூச்சிக்கொல்லி அடிக்கப்படும்போது, இந்த இயற்கைச் சுழற்சி அப்படியே அறுபடுகிறது.

நல்ல சோறு - 5

சிறுதானியங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு, அதன் அதிக விலை ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அதிக விலைக்குப் பின் நியாயமான பல காரணங்கள் இருக்கின்றன. சிறுதானியங்களை அரிசியாக மாற்றும்போது, 40 சதவிகிதத்துக்கும் மேல் இழப்பு ஏற்படுகிறது. ஒரு கிலோ தானியத்தை அரிசியாக்கினால், 600 கிராமுக்கும் குறைவாகத்தான் அரிசி கிடைக்கிறது. அதேபோல விளைவது ஓர் இடம், அரிசியாக்கப்படுவது இன்னோர் இடம், விற்பனை செய்யப்படுவது மற்றோர் இடம். போக்குவரத்து, இடைத்தரகர்களின் லாபம் எல்லாம் சேர்த்து, விலை அதிகமாகிவிடுகிறது. மற்றொரு முக்கியக் காரணம், சிறுதானியம் பயிரிடப்படும் நிலப்பரப்பு மிகக் குறைவு. குறைவான தானியங்கள் அதிக தூரம் பயணம் செய்வதால், விலை அதிகமாகிறது.

சிறுதானியங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பின் காரணமாக, பதுக்கல்காரர்கள் அவற்றைப் பதுக்குவதாலும் விலை அதிகரிக்கிறது. இவை எல்லாவற்றையும்விட விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், சிறுதானியங்கள் அரசின் செல்லப்பிள்ளையாக இல்லை என்பதுதான். மற்ற வேளாண் பொருட்களுக்குக் கிடைக்கும் எந்தச் சலுகையும் சிறுதானியங்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. இந்தச் சிக்கல்களில் நீந்தி கரை சேர்வதற்குள், சிறுதானிய அரிசியின் விலை கன்னாபின்னாவென ஏறிப்போகிறது.

இதைத் தடுக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சிப்பது அவசியம். காரணம், நம் குழந்தைகளின் ஆரோக்கியம் இதில் அடங்கியுள்ளது. சிறுதானியங்களின் விலையைக் குறைக்க, அதன் பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது சிறுதானிய உணவுகளை உண்ண வேண்டும். பயன்பாடு அதிகமானால், தேவை அதிகமாகும். தேவை அதிகமானால், உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிக்கும்போது, விலை குறையும். கிலோ 100 ரூபாய்க்கு வாங்கும் சிறுதானிய அரிசியை, 60 ரூபாய்க்குக் குறைவாகக் கொண்டுவர முடியும். அப்படி நடந்தால், வசதி படைத்தவர்களின் உணவாகக் கருதப்படும் சிறுதானியம், கீழ்த்தட்டு மக்களுக்கும் கிடைத்து, அவர்களின் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படும்.

சிறுதானியங்களை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள், அதைத் தோல் நீக்கி விற்கும் இடத்தில் அதிக லாபம் பார்க்கின்றனர். இதனால் சிறுதானியம் எவ்வளவு அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அதை விளைவித்த விவசாயிகள் இன்னமும் சிரமப்படத்தான் செய்கிறார்கள். விவசாயிகளிடம் நாமே நேரடியாக வாங்கினால், விலை குறைவாக வாங்க முடியும். கூடவே விவசாயிகளின் பொருளாதாரமும் உயரும்.

ஆனால், சிறுதானியங்கள் மீதுள்ள தோலை நீக்குவதற்கு என்ன செய்வது? விவசாயிகள் தங்களிடம் விளையும் குறைந்த அளவு சிறுதானியங்களை எடுத்துக்கொண்டு, மாடர்ன் ரைஸ் மில்களுக்கு அலைய முடியாது. சொந்தமாகவும் மாடர்ன் ரைஸ் மில்களை நிறுவ முடியாது. அப்படியே வாங்கி மக்கள் தோலை நீக்கிக்கொள்ளலாம் என்றால், சாதாரண மக்களுக்கு இது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. நம் ஊர் மாணவர்கள் மனது வைத்தால், இதற்கு ஒரு வழி பிறக்கலாம்.

தானியங்களை வீட்டிலேயே அரைத்து உமி நீக்கி அரிசியாகத் தரும் இயந்திரங்கள் அயல்நாடுகளில் இருக்கும் அளவுக்கு இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை. ஆனால், தாய்லாந்து, சீனா, ஜப்பான்... போன்ற நாடுகளில் இதன் மினியேச்சர்களே வந்துவிட்டன. அங்குள்ள தாய்மார்கள் அதை வாங்கி வைத்துக்கொண்டு, தேவைக்கு ஏற்ப அதில் தானியங்களை இட்டு அரைத்து உமி நீக்கி வரும் அரிசியை, உணவுக்குப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற மினியேச்சர்களை இந்தியாவில் உருவாக்கிப் பரவலாக்கினால், நமக்கு சத்தான உணவு கிடைக்கும். தவிரவும், இடைத்தரகர் தலையீடு இல்லாமல், குறைந்த விலையில் நேரடியாக பண்ணையில் இருந்து தானியங்களை வாங்கிக் கொள்ளலாம். சிறுதானியத்தில் இருந்து நீக்கப்படும் உமியை வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், தொழிற்துறை என எல்லோருக்குமே பலனைத் தரும்; மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

'ஆனால் கணவன், மனைவி இருவரும் வேலைக்காக ஓடும் குடும்பங்களில் இப்படி தானியங்களைத் தோல் உரித்துப் பயன்படுத்துவது சாத்தியமா?’ எனக் கேட்கலாம். அப்படியானால் தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இதனை எடுத்துச் செய்யலாம். அன்றன்று அரைத்த சிறுதானிய இட்லி, தோசை மாவை அன்றன்றே அந்தந்த ஊர்களில் விற்பனை செய்யலாம். கோடைகாலமாக இருப்பதால், கம்பங்கூழ் விற்கலாம். இது, சிறுதானியப் பயன்பாட்டை அதிகப்படுத்தி, விலையைக் குறைக்கும்.

சிறுதானியங்களின் தொடர்ச்சியான பயன்பாடு, நம் குடும்ப ஆரோக்கியத்தோடு நின்றுவிடாமல், மண்ணைப் பாதுகாத்து, மழையைக் கொண்டுவரும். சிறுதானிய விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். சிறுதானியக் கழிவுகளினால், கால்நடைகளுக்கு தரமான உணவு கிடைக்கும். மொத்தத்தில், ஓர் ஆரோக்கியமான சமூகம் சாத்தியப்படும்!

- பரிமாறலாம்...

ரிசி என்றதும் நமக்கு நெல்லரிசி மட்டுமே நினைவுக்கு வருகிறது. எந்தத் தானியங்களிலும் தோலை நீக்கினால், அது அரிசிதான். வரகின் தோலை நீக்கினால், வரகரிசி; சாமையின் தோலை நீக்கினால், சாமையரிசி. நெல்லரிசியாக இருந்தாலும் சரி, சிறுதானிய அரிசியாக இருந்தாலும் சரி, வெள்ளையாக, பளபளப்பாக இருந்தால்தான் அதை வாங்குவதில் நாம் ஆர்வம் கட்டுகிறோம். இவ்வாறு பட்டை தீட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைப் பயன்படுத்துவதால், நமக்குத் தேவையான ஙி12 விட்டமின் கிடைப்பது இல்லை. இந்த விட்டமின் பற்றாக்குறை ஞாபகமறதியை அதிகப்படுத்தும்; மூளையை மழுங்கடிக்கும். இதைத் தடுக்க, பட்டை தீட்டப்படாத அரிசிகளைப் பயன்படுத்துவது நல்லது!

 சாமை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

சாமை அரிசி மாவு - 150 கிராம்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் - இரண்டு

கறிவேப்பிலை - 2 கொத்து

முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்

  (உடைத்தது)

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்   (நறுக்கியது)

நல்ல சோறு - 5

செய்முறை

எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும். இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிடவும். புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.

பலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.

தினை  சந்தவை

தேவையான பொருட்கள்

தினை அரிசி - 150 கிராம்

தேங்காய் - ஒரு மூடி (துருவியது)

ஏலக்காய் - இரண்டு

உப்பு - சிறிதளவு

வெல்லம் - 50 கிராம்

நல்ல சோறு - 5

செய்முறை

தினை அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரிசியுடன் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாக கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும். வெந்ததும், மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பமாகப் பிழிந்து எடுத்தால், சந்தவை ரெடி.

தேங்காயை பாகாக்கி, அதில் வெல்லம் ஏலக்காய் சேர்த்து சந்தவையோடு சாப்பிட சுவையாக இருக்கம்.

பலன்கள்: தினையில் பீட்டாகரோட்டின் அதிகம் என்பதால், கண் பார்வைக்கு உதவும். நார்ச்சத்தும் தேவையான அளவு இருக்கிறது. வெல்லமும் தேங்காய்ப்பால் சேர்வதால், இரும்புச் சத்து கிடைக்கும்!

நல்ல சோறு - 5

கோடை விடுமுறையில், குழந்தைகளை என்ன செய்வது எனத் தெரியாமல் டி.வி முன்பு உட்கார வைத்துவிடுகிறோம். இதில் குழந்தைகள் அதிக நேரம் பார்ப்பது சண்டைக் காட்சிகளைத்தான். வீடியோ கேம்ஸ், கார் ரேஸ்... என குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள்கூட வன்முறையைத்தான் சொல்லித்தருகின்றன. இவை ஆளுமைத்திறனையே பாதித்துவிடும். அதற்குப் பதிலாக, நேரம் இருக்கும்போது வெளியே அழைத்துச் செல்வது, நூலகங்களில் வாசிக்கப் பழக்குவது, இயற்கையைக் காப்பது பற்றி சொல்லித்தருவது, செடி வளர்க்க ஊக்குவிப்பது, திருவிழாக்களுக்கு அழைத்துப்போவது... என ஆரோக்கியமான விஷயங்களைச் சொல்லித்தரலாம். பாதுகாப்பான செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம், உயிரினங்களிடம் அன்பைப் பகிர, குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்!

அடுத்த கட்டுரைக்கு