Published:Updated:

நல்ல சோறு - 8

நல்ல சோறு - 8
News
நல்ல சோறு - 8

ராஜமுருகன், படங்கள்: தி.விஜய், சி.சுரேஷ் பாபு

ணவன் வேலைக்குச் செல்கிற; பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிற ஒரு வீட்டின் காலை நேரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு யுத்தக் களத்துக்கான தயாரிப்பு போலவே இருக்கும். 

அதிகாலையில் துயில் கலைந்து, காபியைக் குடித்துவிட்டு வேலையைத் தொடங்கும் குடும்பத்தலைவி, எல்லோரையும் அனுப்பிவைத்துவிட்டு 'அப்பாடா’ என மூச்சு விடும்போது காலை நேரமும் விடைபெற்றிருக்கும். கலைந்துகிடக்கும் வீட்டை ஒழுங்குபடுத்தி, கூட்டி, பாத்திரங்களைப் பொறுக்கி சிங்க்கில் போட்டுவிட்டுச் சாப்பிட உட்காரும்போது... மதியம் நெருங்கியிருக்கும். மதிய உணவுக்கான ஆயத்தம் காத்திருக்கும். காலை உணவையே மிகத் தாமதமாக 11 மணி நெருக்கத்தில் சாப்பிடும்போது, அது தன்னியல்பாக மதிய உணவை 3 மணிக்குத் தள்ளுகிறது.

'கணவன், குழந்தைகளை அனுப்பி வைத்துவிட்டால், ரிலாக்ஸாகச் சாப்பிடலாமே!’ எனப் பெண்கள் நினைக்கலாம். ஆனால், மனித உடலின் ஹார்மோன்களுக்கு அது தெரியுமா? நேரத்துக்குச் சாப்பிடாதபோது, முதலில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெஞ்செரிச்சல் வரும். 'வெறும் நெஞ்செரிச்சல்தானே!’ என நினைக்கலாம். ஆனால், அது அன்றைய நாளின் நிம்மதியைக் காவு வாங்கி, எந்த வேலையையும் செய்யவிடாது. தொடர்ந்து இப்படி நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடும்போது, வயிற்றில் புண் வருகிறது. அது வேறு பல நோய்களுக்குக் கிளை பரப்புகிறது. அதிலும் நம் ஊரில் பல பெண்கள் வேலை முடிந்ததும் 'ரெஸ்ட் எடுக்கிறேன்’ என சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளைக் கொறித்துக்கொண்டே டி.வி பார்க்கிறார்கள். இல்லையென்றால், 'அக்கடா’ எனப் படுத்துத் தூங்குகிறார்கள். இரண்டுமே உடல்நலத்துக்குப் பெருங்கேடு.

நல்ல சோறு - 8

பெண்களின் உடல் பருமனுக்கான முக்கியக் காரணங்களில், இந்த அசட்டையும் அக்கறையின்மையும் பெரும் பங்கு வகிக்கின்றன. உடல் பருமன் என்பது, தனித்த ஒன்று அல்ல. அது கருப்பை தொடர்பான பிரச்னைகளையும், முழங்கால், மூட்டு வலியையும் சேர்த்தே இழுத்துவருகிறது.

இரவிலும் இதே கதைதான். எல்லோருக்கும் உணவு தயாரித்து, அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு, கடைசி ஆளாகச் சாப்பிடுவார் அம்மா. அதுவும் பல சமயங்களில் அம்மா சாப்பிடும்போது மற்றவர்கள் தூங்கியேவிடுகின்றனர். அதனால் அரக்கபரக்கச் சாப்பிட்டுவிட்டு, காலையில் இருந்து இடைவிடாது வேலை செய்த அசதியில் அம்மாவும் உடனே படுத்துத் தூங்கிவிடுகிறார்.

செரிமானத்துக்கு நேரம் கொடுக்காமல் சாப்பிட்ட உடனே தூங்கும்போது, அதுவே அஜீரணக்கோளாறை உண்டாக்கும். அது மலச்சிக்கலில் கொண்டுவிடும். மலச்சிக்கல்தான் மற்ற அனைத்து நோய்களுக்குமான நுழைவாயில். இந்தத் தினசரி நடைமுறையை பல்லாண்டுகளாகத் தொடரும்போது, உடல் பருமன், சர்க்கரை நோய்... எனப் பெரும் பிரச்னைகளை உண்டாக்கும் நோய்கள் உருவெடுக்கின்றன; உடல் இயக்கத்தை முடக்கிப்போடுகின்றன. உடலுக்குத் தேவையான ஆற்றல் சீராகக் கிடைப்பது இல்லை. இரும்புச்சத்துக் குறைவதால், மூளைக்குப் போகும் பிராணவாயுவின் அளவு குறைந்து எரிச்சலும், தேவையற்ற பயமும், படபடப்பும் உண்டாகின்றன; கூடவே ரத்தச்சோகையும் ஏற்படுகிறது. மருந்து, மாத்திரைகளுடன் வாழ்க்கையை ஓட்டவேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது.

இந்த நிலைமைக்குச் செல்லாமல் தவிர்க்க, ஒவ்வோர் இல்லத்தரசியும் தங்கள் உடல் மீது கொஞ்சம் அல்ல... கூடுதலாகவே கவனம் செலுத்த வேண்டும். காலையில் எவ்வளவு வேலை இருந்தாலும், அவற்றுக்கு இடையில் தன் உடல்நலனுக்கு என 15 நிமிடங்களை ஒதுக்கி, நேரத்துக்கு உணவு அருந்துவது மிக மிக அவசியம்!

வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு நேரம்தான் பெரும் பிரச்னை. வீட்டு வேலைகளை முடிந்தவரை விரைவில் முடித்தாக வேண்டும். இதனால் இஞ்சி-பூண்டு பேஸ்ட் போன்ற ரெடிமேட் சமையல் பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளையும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 'எப்போதோ ஒரு தடவைதானே!’ என அவற்றை வாங்கும் பழக்கம், அதன் 'வசதி’ காரணமாக அடிக்கடி நிகழ்கிறது. அது மூளையில் உறைக்க மறுக்கிறது. அந்த உணவுகளில் அளவுக்கு அதிகமான ரசாயனம் இருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து உண்ணுவதால் உடலின் உப்புத்தன்மை அதிகரித்து, கூடுதல் வேலைப்பளுவால் சிறுநீரகம் திணறுகிறது.

'சமைக்க நேரம் இல்லை’ என, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடம் பணம் கொடுத்து கடையில் வாங்கி சாப்பிடச் சொல்வதால், குழந்தைகளுக்கும் இப்படியான உடல் கேடுகளே விளையும். இன்று பல அலுவலகங்களில் வழக்கமற்ற நேரங்களில் ஷிஃப்ட் முறை இயங்கி வருகிறது. காலை 8 மணிக்கு ஷிஃப்ட் என்றால், எப்போது எழுவது... எப்போது சமைப்பது... எப்போது சாப்பிடுவது? இதனால் பல பெண்கள் 'கேன்டீனில் சாப்பிட்டுக்கொள்ளலாம், டீ குடித்துக் ªகாள்ளலாம், பிஸ்கட் சாப்பிட்டுக்கொள்ளலாம்...’ என நினைக்கிறார்கள். ஆனால், அதுவும் நடக்காமல் நேரடியாக மதிய உணவைத்தான் சாப்பிடுகிறார்கள்.

நல்ல சோறு - 8

மாலையில் அலுவலகம் முடிந்து வரும்போது மிகவும் சோர்ந்து திரும்பும் அவர்களின் மனம், இரவு உணவுக்கு எதை விரைவில் செய்யலாம் எனப் பார்க்கிறது. அதற்கு ஏற்றாற்போல் இட்லி மாவு உள்ளிட்ட ரெடிமேட் பொருட்களை வாங்கிவந்து செய்கின்றனர். அதிக அளவில் சட்னியை அரைத்து மூன்று நாட்களுக்குக் குறையாமல் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். புளிக்குழம்பு செய்தால், ஒரு வாரத்துக்குக் குறையாமல் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஒரு தீக்குச்சியே தீப்பெட்டியில் இருந்து சில மணி நேரம் வெளியில் இருந்தாலே நமத்துப்போகிறது. வெடி மருந்தே அரை மணி நேரத்தில் வீரியம் இழக்கும்போது, உணவுப்பொருட்களைப் பற்றி சொல்ல வேண்டுமா?

பால் காய்ச்சிய பாத்திரத்தை ஓர் இரவு முழுக்கக் கழுவாமல் வைத்திருங்கள். காலையில் அது பொறுக்க முடியாத வாடையடிக்கும். அந்த வாடைக்குக் காரணம்... ஆரோக்கியம் தரும் அதே பால்தான். ஆக, மரத்தில்/செடியில்/நிலத்தில் இருந்து மனிதனின் கைகளுக்கு வந்த நொடியில் இருந்தே மெதுமெதுவாகச் சீர்குலையத் தொடங்குகின்றன காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள். ஆக, அவற்றைப் பயன்படுத்திச் சமைத்த பொருட்களை உடனுக்குடன் சாப்பிட்டுவிடுங்கள். காசு, பணம் சேமிக்கலாம். சமைத்த உணவைச் சேமிக்கும் பழக்கத்தை அடியோடு கைவிடுங்கள்!

'இதெல்லாம் பேச, விவாதிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி?’ - அலுத்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்பார்கள் பலர்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒரு டப்பாவில் கூழ் எடுத்துச் செல்லலாம். உணவை அள்ளிச் சாப்பிடத்தான் ஓர் இடம் தேவை. கூழ் குடிக்க இடம், பொருள், ஏவல் பற்றிய கவலை இல்லை. பேருந்தில், அலுவலக வாகனத்தில் செல்லும்போதுகூட குடித்துக்கொள்ளலாம். அதுவும் காலை உணவை கஞ்சியாக எடுத்துக்கொள்வது மிகச் சிறந்தது. நம் பெண்களிடம் சரிவிகித உணவு இல்லை. கார்போஹைட்ரேட் என்றால், அதையே தொடர்ந்து சாப்பிடுவது. புரோட்டீன் என்றால், அதையே தொடர்ந்து சாப்பிடுவது என 'கொண்ட கொள்கை’யில் உறுதியாக இருக்கிறார்கள். நல்ல பல தானியங்களை உள்ளடக்கிய சத்துமாவுக்

கஞ்சியையும் இப்படி ஒரு டப்பாவில் எடுத்துச் சென்று குடிக்கலாம். பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளை வெட்டி, உப்பு தூவி, எலுமிச்சைச் சாறு பிழிந்து எடுத்துச் சென்றால் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதற்குப் பதிலாக, இதைச் சாப்பிட்டுக்கொள்ளலாம். சாயங்காலம் டீ, காபி குடிப்பதற்குப் பதிலாக, காய்கறி ஜூஸ் குடிக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கணவர், குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து சிரித்து மகிழ்ந்து சாப்பிடும்போது, மனதின் ஆரோக்கியம் இரட்டிப்பாக்கிறது. உணவு தரும் சத்துக்கு இணையாக, இது மனதுக்கு சத்து தருகிறது!

- பரிமாறலாம்...

வரகு பக்கோடா

நல்ல சோறு - 8

தேவையான பொருட்கள்

வரகு அரிசி மாவு - 1 கோப்பை

கடலை மாவு - 1/4 கோப்பை

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

வெங்காயம் -1 கோப்பை (நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சோம்புப் பொடி - 1/2 தேக்கரண்டி

புதினா - 1/2 கைப்பிடி

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி - 1 கைப்பிடி (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - 1 சிட்டிகை

கடலை எண்ணெய்    - தேவையான அளவு

செய்முறை:

மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது நீர் சேர்த்து, பக்கோடா மாவு பதத்துக்குப் பிசைந்து, நன்றாகக் காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு விருப்பமான, நார்ச்சத்து நிறைந்த உணவாக இது இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும்!

பீட்ரூட் கீர்

நல்ல சோறு - 8

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1 கோப்பை (துருவியது)

தேங்காய் - 1 கோப்பை (துருவியது)

இஞ்சித் துருவல் - சிறிது

வெல்லம் - சிறிது

ஏலக்காய் - 2

செய்முறை:

மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாகப் போட்டு அரைத்து வடிகட்டினால்... பீட்ரூட் கீர் தயார்!

இதைப் பருகினால், உடனடி ஆற்றல் நிச்சயம். இரும்புச்சத்து நிறைந்த இந்தப் பானம், ரத்த அழுத்தத்தைச் சமன்படுத்தும். கருவுற்ற  பெண்களுக்குத் தேவையான ஃபோலிக் ஆசிட் நிறைந்தது. 40 வயதைக் கடக்கும் பெண்களுக்குக் கால்சியம் பற்றாக்குறையால் உண்டாகும் எலும்புத் தேய்மானத்தை இது குறைக்கும்!