Published:Updated:

நல்ல சோறு - 10

ராஜமுருகன், படங்கள்: தி.விஜய், சி.சுரேஷ் பாபு

துரித உணவுகளில் கலந்திருக்கும் ஆபத்தான நச்சுக்கள் குறித்து, இப்போது நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. மேகி நூடுல்ஸுக்கு பல்வேறு மாநிலங்களும் தடை விதித்துவரும் நிலையில், பிள்ளைகளுக்கு நேற்று வரை மேகி நூடுல்ஸ் செய்துகொடுத்த அம்மாக்கள் இப்போது கதிகலங்கிக் கிடக்கிறார்கள். குழந்தை சாப்பிடும் ஒரு பிஸ்கட் கை தவறி தரையில் விழுந்துவிட்டால்கூட, அதை எடுத்து, குப்பையில் வீசுகிறோம். ஆனால், தரமானது என நம்பி இவ்வளவு நாட்களாக நாம் கொடுத்துவந்த ஓர் உணவுப் பொருளில் நச்சு கலந்திருக்கிறது என்பதைக் கேட்கும்போதே அதிர்ச்சியாக இருக்கிறது! 

இந்த மோசடி, இதன் பின்னணி அரசியல், வியாபாரச் சூழ்ச்சிகள் அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, இதில் முக்கியமான ஓர் அம்சத்தை நாம் விவாதிக்க வேண்டும். இப்போது துரித உணவின் நச்சுக்கள் குறித்த அச்சம் எழுந்திருப்பதால் இனிமேல் அவற்றைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால், இதுவரை அதைச் சாப்பிட்டு வந்தோமே... அதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை என்ன செய்வது... அதை எப்படி வெளியேற்றுவது?

மனித உடலில் கழிவு அகற்றும் வேலை  இடைவிடாமல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதைப்போல, அந்த உணவுப் பொருளின் மிச்சத்தை திட மற்றும் நீர்க் கழிவுகளாக நம் உடல் வெளியேற்றுகிறது. சிறுநீரகம், கல்லீரல், தோல், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் பிறந்ததில் இருந்து ஒரு நொடிகூட ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் இந்த உடல் உறுப்புகளை, நாம் கரிசனத்துடன் கையாள வேண்டும். ஆனால், நாம் கண்டதையும் தின்று அவற்றைக் கதறவிடுகிறோம். 'இவை கேடானவை; கழிவு நிறைந்தவை’ எனத் தெரிந்தே பல உணவுகளை உண்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நல்ல சோறு - 10

துரித உணவுகள் அப்படிப்பட்டவைதான். அதனால் சிறிதளவு நச்சு நிறைந்த உணவுகளைக்கூட நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நச்சு அகற்றுதல் என்பது சாதாரண வேலை அல்ல. எளிய உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமே அதைச் செயல்படுத்த முடியும்.

வேலைகள் அதிகம் இல்லாத ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, நாள் முழுவதும் எந்த உணவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பசிக்கும்போது தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். பகல் முழுவதும் இப்படி பட்டினி இருந்தால், 'இதற்கு மேல் உணவு எதுவும் வராது’ என்பதை உடல் உணர்ந்துகொண்டு, கழிவுகளை அகற்றும் வேலையைத் தொடங்கிவிடும். அடுத்த நாள் காலையில் கழிவுகள் வெளியேறி, உடல் இலகுவாக இருக்கும். உடனே திட உணவுகளைச் சாப்பிடக் கூடாது. நீராகாரமோ அல்லது எந்தவித மசாலாப் பொருட்களும் சேர்க்காத புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்ற நீர் கலந்த உணவுகளையோ எடுத்துக்கொள்ளலாம். மதியம், களி போன்ற பாதி திட உணவுகளைச் சாப்பிட வேண்டும். தேவைப்படும்போது தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். இரவில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

இப்படி முதல் நாள் காலையில் தொடங்கி இரண்டாவது நாள் இரவு வரை... இரண்டு நாட்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றினால், உடலில் அதுவரை படிந்துள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். பொதுவாகவே 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண், மாதம் ஒருமுறை இந்த 'இரு நாள் உணவுக் கட்டுப்பாட்டு’ப் பயிற்சியை மேற்கொள்ளலாம். உடல்நலக் குறைவு இருக்கும் நாட்களில், இதைச் செய்ய வேண்டாம்.

மருந்து, மாத்திரைகள் எதுவும் இல்லாமல் நம் உடலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றும் எளிய பயிற்சி இது. இதை ஓரிரு மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது, உடலில் ஏற்படும் மாற்றத்தையும், உருவாகும் உற்சாகத்தையும் நீங்களே உணர முடியும். அதே சமயம், 'அதுதான் ரெண்டு நாள் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்துவிட்டோமே!’ என மூன்றாவது நாளில் இருந்து மறுபடியும் துரித உணவுகளை வெளுத்துக்கட்டினால், பட்டினி இருந்ததற்குப் பலனே இல்லை. உடலுக்குக் கட்டுப்பாடான உணவைத் தரும் அதே நேரம், துரித உணவுகளின் தீமை குறித்தும், அவற்றைத் தவிர்க்கவேண்டியதன் அவசியம் குறித்தும் மனதுக்கும் கட்டுப்பாடு தேவை.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் விதவிதமான சுவையுள்ள சிப்ஸ்களை, சிறுவர் - பெரியவர் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் வாங்கிச் சாப்பிடுகிறோம். சுவைக்காக, நிறத்துக்காக, பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க... எனப் பல காரணங்களுக்காக இந்த சிப்ஸ்களில் அளவுக்கு அதிகமாகவே உப்பு சேர்க்கிறார்கள். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது; ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து  ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. கை நுனி, பாதம், தோல் போன்ற இடங்களில் நமநமத்துப்போவதும், குத்தல் ஏற்படுவதும் இதனால்தான். புண் வந்தால் சீக்கிரம் ஆறாமல் இருப்பதும், தோல் வியாதிகள் வருவதும்கூட இதன் விளைவே. இவற்றைச் சுத்தம் செய்வதுதான் சிறுநீரகங்களின் வேலை என்றாலும், வரம்பு மீறி செல்லும்போது, அதுவும் பாவம் என்னதான் செய்யும்? சிறுநீர் செல்லும் பாதையில் அந்த உப்பு படிந்து, ஒருகட்டத்தில் அந்தப் பாதையே அடைபட்டுவிடும். பிறகு சிறுநீரகக் கல், அறுவைசிகிச்சை என சிக்கல் தொடங்கும். கண், காது, கல்லீரல், மண்ணீரல் தொடர்பான நோய்கள் வரவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மஞ்சள் குடிநீரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது இந்த வகையான கழிவுகள் அகற்றப்படும். (மஞ்சள் குடிநீர்: பார்க்க பெட்டிச் செய்தி).

அதிக உப்பு சேர்க்கப்பட்ட, நிறமூட்டப்பட்ட, மோனோ சோடியம் குளூட்டாமேட் சேர்க்கப்பட்ட எந்த உணவையும் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. அவர்களின் உடம்பில் ஏற்கெனவே உள்ள நச்சுக்களை உணவின் மூலமே அகற்ற முடியும். பச்சையம் அதிகம் உள்ள உணவுகளான அருகம்புல், அவரைப் பிஞ்சு, சிறுகீரை... போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் மசாலாப் பொருட்கள் எதுவும் சேர்க்காமல் வேகவைத்துச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் பச்சையம், கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உதவி செய்யும்.

எந்தப் பொருள் அதன் இயல்புத் தன்மையில் இருக்கிறதோ, அதுவே நல்ல உணவு. இட்லியை நாள்கணக்கில் வைத்திருக்க முடியாது. சில மணி நேரத்துக்குப் பிறகு கெட்டுப்போகும்; கெட்டுப்போக வேண்டும். கஞ்சி காய்ச்சி அப்படியே வைத்துவிட்டால், கெட்டுப்போய் அதன் மீது ஆடை படியும்.

எல்லா உணவுப் பொருட்களிலும் சிறிய அளவில் நச்சு இருக்கத்தான் செய்யும். நாம் சாப்பிடும் உப்பில்கூட கடினமான பல  தாதுக்கள் இருக்கின்றன. இதைத் தவிர்க்க, உப்பை நேரடியாக உணவில் போடாமல், தண்ணீரில் கரைத்து, கொஞ்ச நேரம் வைத்திருந்து மேலே உள்ள நீரை மட்டும் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டால், உப்பின் தீங்கு நீங்கிவிடும். கடையில் வாங்கும் எந்தக் காய்கறியையும் வீட்டுக்குக் கொண்டுவந்ததும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, உப்பும் மஞ்சளும் சேர்த்துக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் காய்கறிகளில் படிந்திருக்கும் நஞ்சை நீக்க முடியும்.

ஆக, அன்றாடம் நம் கையால் நாம் பார்த்துப் பார்த்துச் சமைக்கும் உணவை உட்கொண்டாலே நஞ்சு இல்லா வாழ்வு நம் கையில்!

- பரிமாறலாம்...

மஞ்சள் குடிநீர்

நல்ல சோறு - 10

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

குழம்பு மஞ்சள்தூள் -1/2தேக்கரண்டி மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு ஏற்ப

தண்ணீர் - 200 மி.லி

செய்முறை:

இவை அனைத்தையும் நன்றாக வேகவைத்து வடிகட்டி, ஒரு டம்ளர் நீராகப் பருகவும். இதைப் பருகுவதற்கு 2லு மணி நேரத்துக்கு முன்னும் பின்னும், வேறு எந்த உணவும் எடுத்துக்கொள்ள வேண்டாம்!

கேழ்வரகு பாயசம்

நல்ல சோறு - 10

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1/4 கோப்பை

சாமை அரிசி - 5 மேசைக்கரண்டி

பாசிப் பருப்பு - 1/2 கோப்பை

வெல்லம் - 1 கோப்பை

நெய் - 50 மில்லி

உப்பு - 1 சிட்டிகை

ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

சுக்குத் தூள் - 2 சிட்டிகை

முந்திரி - தேவைக்கு ஏற்ப

திராட்சை - தேவைக்கு ஏற்ப

தேங்காய் (துருவியது) - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

சாமை அரிசியுடன் சிறிது அளவு நெய் சேர்த்து, சிறு தீயில் சிவக்க வறுக்கவும். ஊறவைத்த பாசிப் பருப்புடன் வறுத்த சாமை அரிசியைச் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும், சிறு தீயில் வறுத்த கேழ்வரகு மாவை, கட்டி இல்லாமல் நீரில் கரைத்துக் கலக்கவும். பின்னர் வெல்லம், நெய் சேர்த்து கிளறிவிடவும். இதனுடன் நெய்யில் வறுத்த  தேங்காய், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மணக்க மணக்கப் பரிமாறவும்.

குழந்தைகளுக்குப் பிடித்த இந்த இனிப்பில், ஏராளமான சுண்ணாம்புச் சத்தும் நிறைய நார்ச்சத்தும் உள்ளன. பருப்புடன் சேர்ந்து புரதமும், வெல்லத்தில் இருந்து கனிமச் சத்துகளும் கிடைக்கும்! 

மாப்பிளை சம்பா கார அவல்

நல்ல சோறு - 10

குழந்தைகளுக்கு நல்ல ஆற்றலும் ஊக்கமும் கொடுக்கும் உணவு இது. மாலை நேர நொறுக்குத் தீனியாக இதை அடிக்கடி கொடுக்கலாம்!

தேவையான பொருட்கள்:

மாப்பிளை சம்பா அவல் - 1/4 கோப்பை

எலுமிச்சைச் சாறு - 2 மேசைக் கரண்டி

கேரட் (துருவியது) - 4 மேசைக் கரண்டி

மஞ்சள் பூசணி (துருவியது) - 4 மேசைக் கரண்டி

வெள்ளைப் பூசணி (துருவியது) - 4 மேசைக் கரண்டி

தேங்காய் (துருவியது) - 4 மேசைக் கரண்டி

குடைமிளகாய் (நறுக்கியது) - தேவைக்கு ஏற்ப

உப்பு - தேவைக்கு ஏற்ப

சீரகம், மிளகு (பொடித்தது) - 1 மேசைக் கரண்டி

கொத்தமல்லி (நறுக்கியது) - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

மாப்பிளை சம்பா அவலை நன்கு அலசி, 10 நிமிடங்களுக்கு ஊறவைத்து நீரை வடிக்கவும். அலுமினியம் அல்லாத பாத்திரத்தில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, அதனுடன் உப்பு, சீரகம், மிளகுத் தூளை நன்கு கலக்கவும். பின்பு, துருவிய அனைத்துக் காய்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதோடு ஊறிய அவலையும், தேங்காய் மற்றும் கொத்தமல்லி தழையையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும். நார்ச்சத்து, புரதம், நல்லக்கொழுப்பு, விட்டமின் சி, விட்டமின் ஏ... என, உடலுக்குத் தேவையான ஆற்றல் நிறைந்த சமைக்காத உணவு இது!