Published:Updated:

நல்ல சோறு - 11

நல்ல சோறு - 11

ராஜமுருகன்

நல்ல சோறு - 11

ராஜமுருகன்

Published:Updated:
நல்ல சோறு - 11

'தட்டில் மிச்சம் வைக்காதே’ என்பது, நாம் சிறுவயதில் இருந்து கேட்டு வளர்ந்த வாக்கியம். நம் தாத்தா - பாட்டியும் அப்பா - அம்மாவும் அப்படிச் சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதனால் உணவை வீணடிக்கக் கூடாது என்ற எண்ணம், நம் சிந்தனையிலேயே கலந்திருக்கிறது. ஆனால், இன்றைய உணவு மேஜை நாகரிகம் அப்படியா இருக்கிறது? தெரிந்தும் தெரியாமலும் நாம் அனைவருமே ஒவ்வொரு நாளும் ஏராளமான உணவை வீணடிக்கிறோம். 

ஒரு விருந்து நடந்தால், எல்லா பதார்த்தங்களையும் எல்லோருடைய தட்டுகளிலும் வைக்கின்றனர். ஆனால், அனைத்து உணவுகளும் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்காது. பிடிக்காத உணவுகள் குப்பைக்குப் போகின்றன. அதேபோல எல்லோராலும் எல்லா வகைகளையும் சாப்பிட முடியாது. அப்படி மீதப்படும் உணவும் குப்பைக்குப் போகிறது. வேறு சிலருக்கு சர்க்கரை நோய் இருக்கலாம். இருந்தாலும் பந்தியில் அமர்ந்திருக்கும்போது, 'எனக்கு இனிப்பு வேண்டாம்’ எனச் சொல்லச் சங்கடப்பட்டு, அப்படியே இலையை மூடிவைப்பார்கள். அதுவும் குப்பைக்குத்தான் போகிறது.

இப்படி விருந்துக்கு எனத் தயாராகும் உணவில் பெருமளவு, குப்பைக்குத்தான் செல்கிறது. அப்படி குப்பையில் வீசப்படும் உணவுகூடக் கிடைக்காமல் இந்த நாட்டில் எத்தனையோ கோடி பேர் பசித்த வயிற்றுடன் பரிதவிக்கின்றனர். அந்த உணவுக்கான அரிசி, கோதுமை உள்ளிட்ட சமையல் பொருட்களைத் தயாரிக்க, எத்தனை நூறு மனிதர்கள் வெயில், மழை பாராமல் உழைக்கிறார்கள். அரிசி, கடுகு, மிளகு, புளி, சர்க்கரை என ஒவ்வொரு பொருளும் எத்தனையோ ஆயிரம் மைல்கள் பயணித்து நம்மை வந்து சேர்கின்றன. அவற்றைச் சமையல் செய்வதற்கான உழைப்பு, செலவு, மனித ஆற்றல்... அனைத்தையும் வீணடிப்படுவது அநியாயம்!

நல்ல சோறு - 11

இது எங்கோ விருந்துகளில் மட்டும்தான் நடைபெறுகிறது என எண்ண வேண்டாம். விருந்தில் வீணடிக்கப்படும் உணவின் அளவு பிரமாண்டமானது. அதே நேரம் நம் வீடுகளிலும் உணவுப்பொருட்களை அன்றாடம் வீணடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். கணவர் வழக்கம்போல இரவு 8 மணிக்கு வந்துவிடுவார் என நம்பி, அவருக்கும் சேர்த்து சமைத்து வைத்திருப்பார் மனைவி. ஆனால், அலுவலக வேலை, நண்பர்கள் சந்திப்பு என, இரவு உணவை வெளியில் முடித்துவிடுவார் கணவர். 'என்கிட்ட சொல்றதுக்கு என்ன?’ என்ற மனைவியின் கோபம், அதைத் தொடரும் சண்டை எல்லாம் அவர்களின் குடும்பப் பிரச்னை. ஆனால், அப்படி மீதமாகும் உணவு யாரும் சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுவது சமூகப் பிரச்னைதானே?

சமைத்து வீணாவதைவிட, சமைப்பதற்காக வாங்கிவைத்து வீணடிக்கப்படும் பொருட்களும் மிக அதிகம். வீட்டுச் சமையலறையின் தேவை அறிந்து காய்கறிகளை வாங்காமல் 'ஃப்ரெஷ்ஷா கிடைச்சது’ என மூன்று கட்டு கீரையை வாங்கிவந்தால், தொடர்ந்து மூன்று நாட்களும் கீரையா சமைக்க முடியும்? அப்படியே சமைத்தாலும் கீரை வாங்கி வந்தவரே அதைச் சாப்பிடுவாரா? ஃபிரிட்ஜில் வைத்து அழுகிப்போய் மூன்றாம் நாள் தூக்கி வீசவேண்டியதுதான். குலோப்ஜாமூன் செய்வதற்காக வாங்கிவைத்த மாவு பாக்கெட்டில் பாதியைப் பயன்படுத்திவிட்டு மீதியை எங்கேயாவது வைத்திருப்போம். அடுத்தடுத்த வேலைகளில் அதை மறந்துபோய், சில வாரங்கள் கழித்து ஞாபகம் வந்து தேடி எடுத்தால், அதில் வண்டுகள் குடிகொண்டிருக்கும். தூக்கி வீசுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

இப்படி நம் வீடுகளில் வீணடிக்கப்படும் உணவுப்பொருட்களை, முறையான திட்டமிடல் இருந்தால் சுலபமாகத் தவிர்க்க முடியும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து, 'அடுத்த ஒரு வாரத்துக்கான சமையல் என்ன?’ எனத் திட்டமிட வேண்டும். அதில் தங்களுக்குப் பிடித்த உணவு, குழந்தைக்குப் பிடித்த உணவு எனக் கணக்கிடும்போது யார் ஒருவருக்கும் பிடிக்காத பொருள் வாங்குவதைத் தவிர்க்கலாம். அதேபோல பொருட்களை வாங்க டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குள் நுழைந்தால், எது தேவையோ அதை மட்டுமே வாங்கிக்கொண்டு திரும்பி வர வேண்டும். அங்கும் இங்கும் சுற்றிக் கண்டதையும் வாங்கி அமுக்குவதால்தான், வீட்டில் தேவையற்ற பல பொருட்கள் சேர்கின்றன. இந்தக் 'கண் பசி’யைக் கட்டுப்படுத்தினாலே, காசும் பொருளும் மிச்சப்படும். அரிசி வாங்கினால் மைதா இலவசம், மைதா வாங்கினால் முட்டை இலவசம் என, கடைகளில் எதையாவது இலவசமாகத் தந்துகொண்டுதான் இருப்பார்கள். அந்தப் பொருள் அப்போது தேவை என்றால் வாங்கலாமே தவிர, 'பிறகு தேவைப்படும்’ என்ற எண்ணத்தில் எந்த உணவுப்பொருளையும் வாங்காதீர்கள்.

நல்ல சோறு - 11

இப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கும்போதுகூட சில பொருட்கள் மீதமாகத்தான் செய்யும். அப்படி மீதமான பொருட்களைக்கொண்டு வேறு உணவுப்பொருட்களைச் செய்துவிடுவது தமிழ்நாட்டின் பாரம்பர்யப் பழக்கம். மீந்த இட்லியில் உப்புமா, சோற்றில் வடகம், மாங்கொட்டையில் ஊறுகாய்... என நம் பெண்கள் அசத்திவிடுவார்கள். அப்படி, மீதமாகும் காய்கறிகளை தூக்கி வீசிவிடாமல் மிக்ஸ்டு வெஜ் ஊறுகாய், அல்வா போன்றவை செய்யலாம். கீரை ஆய்ந்த பிறகு மிஞ்சும் தண்டுப் பகுதியை வைத்து, சாம்பார் வைக்கலாம்; சூப் செய்யலாம். பீர்க்கங்காய் தோல், பிஞ்சுப் புடலங்காய் விதை இவற்றைக்கொண்டு துவையல் அரைக்கலாம். மழைக் காலங்களில் உருகிவிடும் கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, பாகாக வடித்து வைத்துக்கொண்டு வருடக்கணக்கில் பயன்படுத்தலாம்.

பீட்ரூட், பப்பாளி, கேரட் இவற்றின் தோலைச் சீவிவிட்டுப் பயன்படுத்துவோம் நாம். அப்படிச் சீவிய தோல் பகுதிகளைத் தூக்கி வீசிவிடாமல் அரைத்து, முகத்துக்கு ஃபேஷியல் க்ரீமாகப் போட்டுக்கொள்ளலாம். உருளைக்கிழங்கு தோலை அரைத்து கண்களைச் சுற்றி தடவினால் கரும்புள்ளி... கருவளையும் குறையும். தேங்காய்ப்பால் எடுத்துவிட்டு சக்கையைத் தூக்கிப்போடாமல் வெயிலில் காயவைத்து வேறு இனிப்புகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது பச்சைப்பயறு மாவுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்துக்கொள்ளலாம். முடியின் கருமை அதிகமாகும்.

தயிர், புளித்துப்போன மோர் இவற்றைக் கீழே ஊற்றாமல் மோர்க்குழம்பு வைக்கலாம். அதற்கும் பயன்படுத்த முடியாத அளவுக்குப் புளித்துப்போயிருந்தால், வீட்டைச் சுற்றியிருக்கும் செடிகள் மீது ஸ்ப்ரே செய்யலாம். செடிகளைத் தாக்கியிருக்கும் வைரஸ்களை அவை அழிக்கும்.

இப்படி, உணவுப்பொருளை வீணாக்காமலும், வெறுமனே கழிவாகும் உணவுப்பொருட்களை வேறுவிதமாகப் பயன்படுத்தியும் ஒவ்வொரு வருடமும் லட்சங்களில் மிச்சம் பிடிக்கலாம். செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

பரிமாறலாம்...

மிச்சமான உணவில் இருந்து சுவையான சில பதார்த்தங்கள் செய்யலாம்!  

சப்பாத்தி பால் ( ball )

தேவையான பெருட்கள்:

சப்பாத்தி - 2, வெல்லம் - 6 மேசைக் கரண்டி

நல்ல சோறு - 11

ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை, நெய் - 1 மேசைக் கண்டி

முந்திரி, உலர் திராட்சை, பாதாம் பருப்பு, பேரிச்சை ஆகியவை தேவையான அளவு.

செய்முறை: சப்பாத்தியைச் சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சை ஆகியவற்றைக் கொரகொரவென அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சப்பாத்திக் கலவையைச் சேர்த்து ஒரு சுத்துவிட்டு, வெல்லத்தையும் சேர்த்து மறு சுத்து விடவும். இதனுடன் சூடான நெய் சேர்த்து உருண்டையாக்கவும்.

இது, குழந்தைகளுக்கான சிறந்த...

சத்தான ஸ்நாக்ஸ்!  

பிரியாணி பக்கோடா

தேவையான பொருட்கள்:

பிரியாணி - 1 கப், வரகு மாவு - 1/2 கப்,

கடலை மாவு - 1/2 கப், பெரிய வெங்காயம் - 1 கப் (நறுக்கியது), பட்டை, சோம்புத் தூள் - 4 சிட்டிகை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி,

உப்பு - தேவையான அளவு, சீரகம், பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பிரியாணியை நன்கு மசித்துக்கொள்ளவும், அதனுடன் வரகு மாவு, கடலை மாவு, உப்பு, சீரகம், பெருங்காயம், பட்டை-சோம்புத் தூள், வெங்காயம், கீரை வகைகள் என அனைத்தையும் நன்கு பிசைந்துகொள்ளவும். நன்கு காய்ந்த எண்ணெயில் இந்தக் கலவையைச் சிறுசிறு பக்கோடாக்களாகப் பொரித்து எடுக்கவும்.

கொஞ்சமே கொஞ்சம் எலுமிச்சைச் சாறு தெளித்துப் பரிமாறினால்...ம்ம்ம்ம்ம்ம்ம்!

சுண்டல் பக்கோடா

நல்ல சோறு - 11

தேவையான பொருட்கள்:

மீதமான சுண்டல் - 1 கப், வரகு மாவு - 1 கப், கடலை மாவு - 1 கப், வெங்காயம் - 1 கப், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு.  

செய்முறை: சுண்டலை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் சேர்க்காமல் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகப் பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், இந்தக் கலவையைக் கிள்ளிப் போட்டுப் பொரித்து எடுத்தால், சுடச்சுட சுண்டல் பக்கோடா தயார்!

கிச்சன் சிக்கனம்...

தேவை இக்கணம்!

நல்ல சோறு - 11

பப்பாளிப் பழத்தின் காம்பு, தரையை நோக்கி இருக்குமாறு வைத்தால், பழம் விரைவில் அழுகாது.

நல்ல சோறு - 11

 புளியை அப்படியே ஜாடியில் கொட்டி வைத்தால் சீக்கிரம் பிசுபிசுத்துவிடும். அதனால் கொஞ்சம் புளி அதன் மேல் சிறிது அளவு உப்பைத் தூவ வேண்டும். பின்னர் கொஞ்சம் புளி... கொஞ்சம் உப்பு எனச் சேமித்தால், புளியில் பூச்சி, புழு வராமல் தடுக்கலாம். புளியின் இயல்பும் கெட்டுப்போகாமல் இருக்கும்.

நல்ல சோறு - 11

 தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், சீக்கிரம் அழுகாது.

நல்ல சோறு - 11

 முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால், விரைவில் கெட்டுப்போகாது.

நல்ல சோறு - 11

 ஒரு கைப்பிடி கல் உப்பை, சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டுவைத்தால் பூச்சி அண்டாது.

நல்ல சோறு - 11

 உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால், கரிப்பு குறையும்.

நல்ல சோறு - 11

 எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும்.

நல்ல சோறு - 11

 சர்க்கரை டப்பாவில் சில கிராம்புகளைப் போட்டு வைத்தால், எறும்பு வராது.

நல்ல சோறு - 11

 மீந்த இடியாப்பத்தை தயிரில் ஊறவைத்து... வெயிலில் காயவைத்து... நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம்.

நல்ல சோறு - 11

 முட்டைக்கோஸின் தண்டு, அவ்வளவு சத்து நிறைந்தது. கோஸைச் சமைத்துவிட்டு அதன் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்துச் சமைக்கலாம்.  

நல்ல சோறு - 11

 தயிர் விரைவில் புளிக்காமல் இருக்க, சிறிய தேங்காய்த் துண்டை அதனுள் போட்டு வைக்கலாம்.

நல்ல சோறு - 11

 கறிவேப்பிலைக் காம்பு, கொத்தமல்லித் தழை ஆகியவற்றைத் தூக்கி எறியாமல், வெயிலில் உலர்த்திக்கொள்ளவும். வெறும் கடாயில் ஒரு டீஸ்பூன் வெந்தயம், தனியா சேர்த்து வறுத்து, காய்ந்த கறிவேப்பிலைக் காம்பு, கொத்தமல்லி தழைகளைச் சேர்த்துப் பிரட்டி அரைத்துவைத்துக் கொள்ளவும். சாம்பார் செய்யும்போது இந்தப் பொடியை அதில் சிறிது சேர்த்தால், வாசனை தூக்கலாக இருக்கும்... சுவையும் பின்னும்!