'ஒரு மரபணுவில் மாற்றம் நிகழ, சில மில்லியன் வருடங்களாவது ஆகும்’ என அறிவியல் நம்பிக்கொண்டிருந்தபோது, 'மாற்றம் எல்லாம் நிகழ வேண்டாம். தொடர்ந்து அதை உரசிக்கொண்டே இருந்தால் போதும்... உள்ளே உறங்கிக்கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடலாம்’ என்கிறது எபிஜெனட்டிக்ஸ் அறிவியல். போதாக்குறைக்கு, 'எனக்கு நீ பன்னீர்செல்வமா வரணும்... பழைய ஏ.சி பன்னீர்செல்வமா வரணும்’ என 'சத்ரியன்’ திலகன் மாதிரி, சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உறங்கப்போன மரபணுக்களை உசுப்பி, நம் உயிரோடு விளையாட ஆரம்பித்துள்ள சூழலில் புதிதாகப் புறப்பட்டுள்ளன பல வில்லங்கத் திலகங்கள்.  

'எங்க அம்மாயி, அப்பத்தா யாருக்குமே புற்றுச் சுவடே இல்லை. எப்படி எனக்கு வந்தது?’ என வருந்தும் பலருக்கு, வாழ்வியல் சீர்கேடுகளும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் விதைக்கும் புறக்காரணிதான் புற்றுக்காரணி எனத் தெரியாது. கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் மேலான குடல்புற்று, உணவுக்குழல் புற்று, இரைப்பைப் புற்றுகள் உருவாகக் காரணம் இந்தப் புறக்காரணிகள்தாம். மலம் கழிக்க ஊதியது, மனம் லயிக்க ஊதியது, வளையம் வளையமாக ஊதியது போக, அரசாங்க மரணக்கிணறுகளில் 'சின்னதாக ஒரு கட்டிங்...’ எனத் தொடங்கி முழுதாக மட்டையாகிப்போனது என புகையும் மதுவும் புறக்காரணிகளாக வந்து புற்றுக்காரணிகளாக மாறிவிட்டன. மதுவினால் பாதிப்புக்கு உள்ளாகும் நம் மரபணுவை, ரிப்பேர் செய்யும் நமது அற்புதமான போலீஸ் ஜீனை எல்லாம் புரட்டிப்போட்டுவிட்டு, புற்றை வளர்க்கத் தொடங்குகின்றன இந்தப் புறக்காரணிகள்.

உயிர் பிழை - 6

கல்லூரியில் படிக்கும்போது 'அப்படி இப்படி இருந்தாதான் யூத்’ என தமிழ் சினிமா புரொஃபசர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதை நம்பி, 'கல்யாணம் முடிஞ்சதும் சின்சியர் சிகாமணி ஆகிருவோம்’ எனச் சொல்லிக் குடிக்கும் இளையகுடிகளுக்கு ஒரு முக்கியச் செய்தி... தேவையான நேரத்தில், கல்யாணமே செய்ய முடியாத 'அந்தப்புர’ப் பிரச்னையை குடிப்பழக்கம் கொடுக்கும் என, அரிஸ்டாட்டில் முதல் அர்த்த ராத்திரி டாக்டர் வரை சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். கேன்சர் எபிஜெனட்டிக்ஸ் மருத்துவர்கள் இன்னொரு முக்கிய விஷயம் சொல்வதைக் கவனியுங்கள். 'சின்ன வயதில் ஒருவர் அருந்தும் கட்டிங், தொடர்ந்து அவருடைய மரபணுவை உரசிக்கொண்டே இருக்கும். ஒரு நல்ல உள்ளத்துடன் இல்லறம் நடத்தும்போது ஒருவேளை 'அகஸ்மாத்தாக’ குழந்தை பிறந்தால் சந்தோஷம். ஆனால், அப்பாவின் ஈரலை ஒன்றுமே செய்யாதுவிட்ட டாஸ்மாக் விஷத்துளிகள், பிள்ளையைச் சடாரெனத் தாக்கலாம். 'குடிப்பழக்கமுள்ள தந்தையின் குழந்தைக்கு வரும் காய்ச்சலுக்குக் கொடுக்கும் மாத்திரை, ஈரலைக் கடுமையாகப் பாதிக்கும்’ என்கிறார்கள் அந்தத் துறை ஆய்வாளர்கள். இன்னும் புரியும்படி விளக்கினால், 'குடித்துக் குடித்து மரபணுக்களின் ஓரஞ்சாரங்களில் சேதம் ஏற்பட்டிருக்கும். அந்த ஓட்டை உடைசல் மரபணுவுடன் உருவாக்கப்பட்ட குழந்தையின் ஈரலை, எந்தத் தவறும் செய்யாமலே ஈரல் சுருக்க நோய் பாதித்து, அது ஈரல் புற்றில் கொண்டுவந்துவிடும்’ என்பதுதான் வலி தரும் உண்மை. துருக்கி கடலோரம் ஒதுங்கிய ஐலனின் மரணத்துக்குக் காரணமான வன்முறைக்கு ஒரு சொட்டுக்கூடக் குறையாதது, நாம் அடுத்த தலைமுறையை மருத்துவமனைக்கு ஒதுங்கச்செய்யும் இந்தக் குடி வன்முறை!

இன்றைக்கு அமெரிக்கர்களும் ஜெர்மானியர்களும் குண்டுகுண்டாகத் திரியக் காரணம், அவர்கள் அம்மாவும் பாட்டியும் இஷ்டத்துக்குப் புகைத்த புகை என 14,000 பேரில், மூன்று தலைமுறைகளில் ஆய்வுநடத்தி அதிர்ச்சிக் கருத்து சொல்லியுள்ளது எபிஜெனடிக்ஸின் புள்ளியியல் துறை. இங்கே இப்போது டாஸ்மாக் வாசலில் புரண்டுகிடக்கும் குடிமகனின் பேரன் பேத்திக்கு வரப்போகும் கல்லீரல் புற்றுநோய்க்கும், இன்னபிற புற்றுநோய்க்கும் தமிழ்நாட்டின் தலைசிறந்த பெரிய இரண்டு மருத்துவமனைகள், பெரிய புற்றுநோய் மருத்துவ மனைகளைக் கட்டிவருவதாகக் கேள்வி!  

உயிர் பிழை - 6

மதுவைக் குறித்து, 'கொஞ்சமா சாப்பிட்டால் ஹார்ட்டுக்கு நல்லதாமே; ஒயின் சாப்பிட்டால் கேன்சர் வராதாமே’ என்கிற பல உட்டாலக்கடிகள், படித்த மக்களிடமும் இன்று உலவுகின்றன. அத்தனையும் அப்பட்டமான பொய். சாம்பார், ரசம் அவற்றுக்கு அடுத்து ஷாம்பெயின், நடுவே உறிஞ்ச வோட்கா என சாமர்த்தியமாக நம் சாப்பாட்டு வரிசையை மாற்றி அமைத்து, சில்லறை பார்க்க மிகச் சாதுர்யமாகத் திட்டமிடும் வணிக வியாபாரிகளின் பரிவுப் பாசாங்குக் குரல் அவை. எந்த ஒரு மதுவும் துளிக்கூட உடலுக்கு நன்மை தராது. ஒயினில் இருந்துதான் பாலிஃபினால் வந்து நம்மைக் காக்கவேண்டியது இல்லை. பாலிஃபினால் வேண்டுமானால், மொட்டைமாடியில் குட்டைக் கைலியைக் கட்டிக்கொண்டு குத்தவைத்து கத்திரிக்காய் பொரியலும் பப்பாளித்துண்டும் சாப்பிட்டால், ஒயினைவிடக் கூடுதலாக பாலிஃபினால் பருகலாம்.

'சில மருத்துவர்களே இதை ஆமோதிக்கிறார்களே...’ எனக் கூடுதல் குதூகலத்துடன் 'குடி’காக்கும் குடிமகன்கள் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். மதுவை ஊற்றிக் கொடுத்து மருந்து வணிகமும் மருத்துவ விளக்கக் கூட்டங்களும் நம் நட்சத்திர விடுதிகளில் அவ்வப்போது நடப்பதை நாடே அறியும். அதில் சென்று 'அறிவாற்றல்’ பெறும் எவரும் கொஞ்சமாகக் குடிக்கத்தான் சொல்வர். அது அறிவுரை அல்ல நண்பர்களே... விஷம் விற்று லாபம் ஈர்க்கும் அறம் இல்லாத வணிகப் பேச்சு. ஈரலில் மது ஜீரணிக்கப்படும்போது பல ஆக்சிஜன் மூலக்கூறுகளை அனுப்பும். 'அட... ஆக்சிஜன் நல்லதுதானே!’ என அவசரப்பட வேண்டாம். மூக்கு வழியாக ஆக்சிஜன் போனால்தான் அது சுவாசத்துக்கு உதவும் பிராணவாயு ஆகும். சில சிக்கலான ஜீரண யுத்தத்தில் உடலின் செல்களிடையே வெளிப்படும் ஆக்சிஜன் கூறுகள், பிராணவாயு அல்ல... அது பிராணனைப் போக்கும் வாயு. அதை ‘Reactive oxygen and oxidative stress’ என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்த Reactive oxygen சங்கதிகள், புற்றை மரபணுக்களில் விதைக்கும் மிக முக்கிய எபிஜெனட்டிக்ஸ் காரணி.

'அதியமான் குடிச்சாக, ஒளவையார் குடிச்சாக... நாம பாரம்பர்யமா கள் குடிச்சா தப்பா?’ என முற்போக்குச் சிந்தனையுடன் சிலர் வக்காலத்து வாங்குவது உண்டு. அன்று கள் குடித்த குடி வேறு; அந்தக் குடிமகன் வாழ்ந்த நிலமும் சூழலும் வேறு என்பதை முதலில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய பன்னாட்டுப் புட்டிப்பானம் ஒருபோதும் பண்பாட்டுப் பானம் அல்ல. வருடத்துக்கு மூன்று டிரில்லியன் டாலர் வணிக வஸ்து. எல்லாவற்றுக்கும் மேலாக, உலக சுகாதார நிறுவனம் தீர்க்கமாக வரையறுத்துச் சொன்ன முதல் தர (GROUP -1) புற்றுக்காரணிகள் அவை என்பதுதான் பகீர் உண்மை. தானியத்தில் இருந்தும் பழங்களில் இருந்தும் கிழங்குகளில் இருந்தும் வேதியியல் முறையில் பிரித்தெடுக்கப்படும் எத்தனாலில் கலக்கப்படும் பல்வேறு ரசாயனங்களும் சுவையூட்டிகளும் குறித்து, எந்தப் பிரம்மனுக்கும் இன்னும் தெரியாது. ஆனால், அந்தக் கலவைதான் தன் பணியைச் சுலபமாக முடிக்க உதவும் என எமனுக்குத் தெரியும்.

உயிர் பிழை - 6

கட்டுரையைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே, 'இரண்டு லட்சம் கோடிக்கும் மேல் தமிழ்நாட்டுக்கு அந்நிய மூலதனம் வருகிறதாம்’ எனப் படபடக்கும் செய்தி, மூளையில் இருந்து மூலம் வரை 'இந்த இரண்டு லட்சம் கோடி ரூபாய்கள் எதை உருவப்போகிறதோ... எதை விதைக்கப்போகிறதோ’ என்ற பயத்தைத் தொற்றவே செய்கிறது. காரணம்... பெசிமிசப் பார்வை அல்ல. வளர்ச்சி என்ற பெயரில் நம்மை நாம் சிதைத்த வரலாறு. சூழலில் கலந்துவிட்ட கிட்டத்தட்ட 148 புதிய நச்சுக் குப்பைக்கூறுகள் நம் ரத்தத்தில் உல்லாச உலா வருவதாக அமெரிக்க ஆய்வு சொல்கிறது. அது அமெரிக்கப் பையனிடம் சோதித்துப்பார்த்த முடிவு. தேடிப்பார்த்த மட்டில் நம் ஊர் ரத்தத்தில், இது 148-ஆ... அல்லது அதில் மூன்று மடங்கா எனத் தெரியவில்லை. இந்த நச்சுக் குப்பைக்கூறுகள் எப்போது நம் மரபை மண்டியிடவைக்கும் புற்றுக்காரணியாக மாறும் என, யாராலும் கணிக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

புறக்காரணிகளை, புற்றுக்காரணி ஆகாமல் தகர்த்துவிடும் மருந்து நம் மரபில் நிறையவே இருக்கின்றன. அது வெளிநாட்டு மருத்துவப் புத்தகங்களில் வர இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். 'ஆத்திசூடி’, 'கொன்றைவேந்தன்’, 'திருக்குறள்’ போன்றவைதான் அந்த நூல்கள். 'அறம் செய விரும்பு; ஆறுவது சினம்’ என ஆத்திசூடி சொன்னது, ஒன்றாம் வகுப்பு மனப்பாடப் பகுதியில் படித்து எழுதிவிட்டு மறக்க மட்டும் அல்ல... உயிர் பிழைகள் உருவாகாமல் இருக்கவும்தான். 'மரபணு, அதன் குறிக்கோளைச் செயல்படுத்த அதில் பொதிந்திருக்கும் ஒரு புரதம். அதை தேவைக்கு ஏற்றபடி இயக்கும் இன்னொரு ஸ்விட்ச். இவற்றுக்கு நம் அடங்கா ஆட்டத்தால் பழுது ஏற்படும்போது, புற்று முளைத்திடாமல் இருக்க 'ஒப்புரவு ஒழுகு’ம் உதவக்கூடும் என்கிறது கேன்சர் எபிஜெனட்டிக்ஸ் துறை.

'எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என எழுதிய வள்ளுவனுக்கு, கள் புற்றைத் தரும் என அப்போது தெரியாது. ஆனால், நஞ்சு எனத் தெரியும். அதை நாமும் உணர்வோம்!

- உயிர்ப்போம்...