Election bannerElection banner
Published:Updated:

முட்டை மாஸ்.... மூன்று வகை ரெசிப்பி... ஐந்து வகை குழம்பு... அசத்தும் ருசி!

முட்டை மாஸ்.... மூன்று வகை ரெசிப்பி... ஐந்து வகை குழம்பு... அசத்தும் ருசி!
முட்டை மாஸ்.... மூன்று வகை ரெசிப்பி... ஐந்து வகை குழம்பு... அசத்தும் ருசி!

முட்டை மாஸ்.... மூன்று வகை ரெசிப்பி... ஐந்து வகை குழம்பு... அசத்தும் ருசி!

புதுக்கோட்டை நகரின் தனித்துவமான ருசியின் அடையாளம், முட்டை மாஸ். அட்டகாசமான சுவையான சைடிஷ்! அது பற்றிய ருசிகர பதிவு...

மதுரை தலைகறி, காரைக்குடி செட்டிநாட்டு கிரேவி, திண்டுக்கல் பிரியாணி, கும்பகோணம் கடப்பா, (இட்லிக்கான வெஞ்சனம்), தஞ்சாவூர் தலைவாழை இலை சோறு, திருநெல்வேலி சொதி, விருதுநகர் பொறிச்ச பரோட்டா, வடசென்னை அத்தோ... எனத் தமிழ்நாட்டின் உணவு சிறப்பின் பட்டியல் மிக நீளமானது. அந்த வகையில், புதுக்கோட்டை நகரின் மிகப் பிரபலமான வெஞ்சனம் வகைதான், முட்டை மாஸ். தனக்கென்று தனித்த உணவின் முகவரியாக 35 வருடங்களாக இந்த முட்டை மாஸைப் பொத்திவைத்துக்கொண்டிருக்கிறது புதுக்கோட்டை நகரம்.

முட்டையில் ஆம்லெட், ஆஃப்பாயில், ஃபுல்பாயில் மற்றும் கலக்கி ஆகியவற்றை  மட்டுமே சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள், இந்த முட்டை மாஸை ருசித்தால், அடிமை சாசனமே எழுதிக் கொடுத்துவிடுவார்கள். ஆம்லெட், ஆஃப்பாயில் வகையறாவை தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ருசிக்கலாம். ஆனால், இந்த முட்டை மாஸைச் சாப்பிட புதுக்கோட்டை நகருக்குத்தான் வந்தாக வேண்டும். 

மூன்று விதமான முட்டை மாஸ்:

1. ரெகுலர் முட்டை மாஸ்.
2. பச்சை முட்டை மாஸ்.
3. வெள்ளைக்கரு முட்டை மாஸ்.


இதில், ரெகுலர் முட்டை மாஸூம் வெள்ளைக்கரு முட்டை மாஸூம் அவித்த முட்டையில் செய்வது. பச்சை முட்டையை உடைத்து ஊற்றி, சென்னை புகழ் கலக்கிபோல திரட்டி, செமி கிரேவியாக எடுப்பது பச்சை முட்டை மாஸ். எல்லாமே ஒரே விலைதான். அதில் இரண்டு அளவுகள் இருக்கின்றன. அவை மட்டும் விலை வித்தியாசப்படும். ஒன்று, சிங்கிள் முட்டை மாஸ் (இதில், ஒரு முட்டையின் கலவைத்தான் இருக்கும்) 15 ரூபாய். ஃபுல் மாஸ் (இதில் இரண்டு முட்டைகள் இருக்கும்) 30 ரூபாய். மிகப்பெரிய அசைவ ஓட்டல்களில் இந்த விலை வித்தியாசப்படலாம்.


எப்படிச் செய்யறாங்க?

இதன் ரெசிப்பி ரொம்ப சிம்பிள்.  சூடான கல்லில், சிறிது வெங்காயத்தைச் போட்டு, இரண்டு அல்லது மூன்று தடவை தோசைத் திருப்பி கரண்டியால் புரட்டவும். பிறகு, அதன்தலையில் சிறிது எண்ணெய்யை ஊற்றவும். பிறகு,நன்றாக கனிந்த ஒரு தக்காளியை கைகளால் பிதுக்கி, நசுக்கி போட்டு இரண்டு கருவேப்பிலை, சிட்டிகை உப்பு, காரத்துக்கு மிளகு மற்றும் மிளகாய் தூள் போடவும். கூடவே, அவித்த முட்டையை மஞ்சள் கருவோடு சேர்த்து, பொடிசாக கட்செய்து போட்டு, சில நிமிடங்கள் வதக்கவும். இறுதியாக, அதற்கென்றே உள்ள கிரேவியில் கொஞ்சம் எடுத்து, அந்த வதக்கலில் ஊற்றி, மெல்லிய தீயல் (கருகும் வாசனை) வரும்போது, அப்படியே அள்ளி சுடச்சுட பறிமாறவும். இட்லி, தோசை, ஊத்தப்பம், கல்தோசை, பரோட்டா ஆகியவற்றுக்கு செம்ம காம்பினேஷன் இந்த முட்டை மாஸ்.

அந்த ருசியின் ரகசியம் என்ன?

 மூன்று வகையான முட்டை மாஸ்... ஐந்து வகையான குழம்பு வகை.... படிக்கச் சுலபமாக இருக்கும் இந்த ரெசிப்பியில் சூட்சமமே, கிரேவியில்தான் இருக்கிறது. இளவரசி ஒருத்தி ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு கற்பகவிருட்சத்தின் பொந்துக்குள் கிளியாக இருக்கிறாள் என்று இளவரசனிடம் ஒரு வயதானக் கிழவி சொல்லும் ரகசியம் போன்றது இந்த முட்டைமாஸின் கிரேவி ரகசியம்.

புதுக்கோட்டையின் பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் மூன்றிலிருந்து ஐந்து விதமான குழம்பு வகைகள் இருக்கும். 1. மட்டன் குழம்பு, 2. சிக்கன் குழம்பு, 3. மீன் குழம்பு, 4,.காடைக் குழம்பு, 5. இறால் குழம்பு ஆகியவையே அது. சிறிய ஓட்டல்களில் மூன்று குழம்பும், பிரபலமான பெரிய ஓட்டல்களில் ஐந்து வகையும் இருக்கும். இந்தக் குழம்புகளை சம அளவில் எடுத்து, ஒன்றாகக் கலந்தால், முட்டை மாஸ் கிரேவி தயார். சில இரவுக் கடைகளில் சைவ குருமாவும் சேர்க்கப்படுகிறது. பல்வேறு குழம்புகளின் கூட்டுக் கலவையில் தயார்செய்யப்படுவதால்தான் முட்டை மாஸ் தனி ருசியுடன் புதுக்கோட்டையின் மாஸாக இருக்கிறது.

மாஸ் காட்டும் பாஸ் வரலாறு

35 வருடங்களுக்கு முன்பு, புதுக்கோட்டையில் படுபிரபலமாக இருந்தது, மணி மெஸ். அதன் உரிமையாளரான மணி என்பவரே அங்கு சமையல் மாஸ்டர். நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறி குழம்பு, கண்மாய் மீன் குழம்பு என வெரைட்டி ருசியில் மிரட்டுவார். ஓர் இரவில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன. மணி மாஸ்டருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் எதுவுமில்லை. பசியோ உருட்டி எடுக்கிறது. பாத்திரங்களை எட்டிப் பார்க்கிறார். அத்தனை குழம்பு வகைகளின் சொற்பங்கள் பாத்திரங்களில் ஒட்டியுள்ளன. அவித்த முட்டைகள் மட்டும் கொஞ்சம் இருக்கிறது.

மணி மாஸ்டர் எல்லாக் குழம்பையும் வழித்து ஒன்று சேர்க்கிறார். தோசைக்கல்லில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, காரம் சேர்த்து, முட்டைகளை பொடியாக நறுக்கி சேர்த்து இறக்கினார். எல்லோருக்கும் சாப்பிடுகிறார்கள். 'முதலாளி இந்த உணவு அம்புட்டு அருமையா இருக்கு' என்று 'நாவாற' பாராட்ட, அவரும் சாப்பிட்டுப் பார்த்து மெர்சலாகிறார். 

மறுநாளே வாடிக்கையாளர்களுக்கு 3 ரூபாயில் அதனை அறிமுகப்படுத்துகிறார். "முட்டை மாஸா இருக்கு மணி" என்று புகழ, அதையே தனது கண்டுபிடிப்புக்கு பெயராக வைத்துவிட்டார். அது மற்ற அசைவ ஓட்டல்களுக்கும் பரவி, இந்த நகரின் தனி அடையாளமாக மாறிவிட்டது. இந்த முட்டை மாஸ் இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்களில் கிடைப்பதில்லை. கீரனூர், ஆலங்குடி பகுதிகளில் ஒன்றிரண்டு கடைகளில் கிடைத்தாலும், அது புதுக்கோட்டை ருசிக்குப் பக்கத்தில் நெருங்குவதில்லை.

புதுக்கோட்டை புதிய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிறிய அசைவ ஓட்டல் வைத்திருக்கும் நாகராஜ், "89- ம் வருடத்திலிருந்து இந்த ஓட்டலை நடத்திவருகிறேன். அப்போதிலிருந்தே முட்டை மாஸ் போடுகிறேன். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 100 முட்டை மாஸ் எனது கடையில் போகிறது. இந்த ஊரில் மசாலாக்கள் அதிகம் கலக்காமல் தயார்செய்யப்படும் குழம்புகளின் கூட்டுக் கலவைதான் இந்த முட்டைமாஸின் ருசிக்கு முக்கியக் காரணம். செட்டி நாட்டு உணவுகளிலும் இத்தனை வகையான குழம்புகள் உண்டு. ஆனால், அங்கு முட்டை மாஸ் ஹிட்டாகாததற்கு முக்கிய காரணம், அதிக காரமும் அதிக மசாலாவும்தான். புதுக்கோட்டை நகரில் மட்டுமே இன்றைக்கும் செயற்கை சுவையூட்டிகள் இல்லாமல், பழைய முறையில் அசைவ குழம்புகள் தயாரிக்கப்படுகின்றன. அவை ஒன்றாக கலக்கப்படும்போது பிரத்யேக சுவை கிடைக்கிறது. அதுதான் முட்டை மாஸ் இங்கே ஹிட்டடிக்க முக்கியக் காரணம்"என்றார்.

என்ன உணவு விரும்பிகளே... ஒரு தபா புதுக்கோட்டைக்கு விசிட் அடிக்கிறீங்களா? தமிழ்நாட்டின் பிங்க் நகரம் உங்களை முட்டை மாஸ் ருசிக்க அழைக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு