Published:Updated:

``நகை வேண்டாம்.... சோறு போட்டா போதும்!'' - `அவள் கிச்சன்’ விருதில் கலகலத்த தீபா

``நகை வேண்டாம்.... சோறு போட்டா போதும்!''  - `அவள் கிச்சன்’ விருதில் கலகலத்த தீபா
``நகை வேண்டாம்.... சோறு போட்டா போதும்!'' - `அவள் கிச்சன்’ விருதில் கலகலத்த தீபா

திறமைகளை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல் அத்திறமைகளுக்கு உரிய மரியாதையையும் தரும் விகடன், சினிமா, நம்பிக்கை மனிதர்கள் மட்டுமல்லாமல் இப்போது சமையல் கலைஞர்களை கவுரவிக்க தொடங்கிவிட்டது. அவள் கிச்சன் விருதுகள் மூலம் சமையல் வல்லுநர்களையும், தமிழ்ச் சமுதாயத்தின் உணவு சார்ந்த செயற்பாட்டாளர்களையும் தேடிச் சென்று கொடுக்கும் கிச்சன் விருதுகளின் முதலாம் ஆண்டு நாவுக்கும் மனதுக்கும் ருசியாக முடிந்துவிட்டது. அதிலிருந்து சில துளிகள். 

* அவள் கிச்சன் விருதுகளின் கொண்டாட்டம் உணவிலிருந்தே ஆரம்பித்தது. வாசலில் நுழைந்தவர்களுக்குக் பானகம் எனும் பானமும், நெல்லிக்காய் மசாலா மோரும், தயிர், சிக்கன் ஸ்டால்களில் உணவுகளும் கொடுத்தே வரவேற்றார்கள். விழாவுக்கு வந்திருந்த பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ருசியான உணவிலிருந்தே நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். 

* கிச்சன் விருதுகள் நிகழ்ச்சியை விஜய் டீவி புகழ், ஆன்கர் ரம்யா தொகுத்து வழங்கினார். நெகிழ்ச்சியான தருணங்களுடன், கலகலப்பாக இருந்த அவள் கிச்சன் மேடையில் விருதுகளுக்கு இடையே இன்சமாம் & ஆனந்தின் ரேப் இசை, ஸ்டான்ட்அப் காமிடியன் பார்கவ் மற்றும் இறுதியில் மென்டலிஸ்ட் ஷோவும் விருந்தினர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது. கடைக்குட்டி சிங்கம் தீபாவின் வெகுளித்தனமான பேச்சும், செஃப் தாமுவின் களகள அட்ராசிடிகளும் அன்றைய நாளின் கவலைகளை மறக்க வைத்திருக்கும். 

* மொத்தம் 14 விருதுகள். உணவுத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் உணவுகளை வித்தியாசமான முறையில் மக்களிடம் கொண்டுசேர்க்கும் யூடியூப் டாடி, ஃபுட் டிசைனர் சன்ஜிதா, எழுத்தாளர் முகில் என உணவு சார்ந்து செயல்படும் மனிதர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

* பெஸ்ட் வெஜிடேரியன் செயின் என்ற முதல் விருதை `கோவை ஆனந்தாஸ்' சைவ உணவகம் பெற்றார்கள். ஆனந்தாஸ் நிறுவனர் மணிகண்டன் விருதைப் பெற பிக்பாஸ் வைஷ்ணவி இதை வழங்கினார். இரண்டாவதாக பெஸ்ட் ஸ்மால் டவுன் என்டர்பிரைஸ் என்ற விருதை ``கும்பகோணம் ஶ்ரீ மங்கலாம்பிகா காபி ஹோட்டல் பெற்றனர்." இந்த விருதைப் பிரபல சமையல் எழுத்தாளர் மெனுரானி செல்லம் வழங்கினார். ``இவளுக்கு ஒண்ணுமே தெரியாது. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணங்கிற வார்த்தை எவ்வளவோ கேட்டிருக்கேன். அவங்க எல்லாரையும் சமையல் காரர்களா மாத்தியிருக்கேன். சமையல், ஒரு கலை அதை கலையா மட்டுமே பாக்கணும்," என நச்சென்று பேச்சை முடித்தார் மெனுரானி. ``டிகிரி காபினா அது கறந்த பசும்பால்லதான் போடணும். பாக்கெட் பால்ல டிகிரி காபி போடுற கடைகளைப் பாத்தா, கும்பகோணம் டிகிரி காபிங்கிற பேர் எல்லார்க்கும் தெரியிதேனு சந்தோஷமாதான் இருக்கு" என்று பேசினார் மங்கலாம்பிகா உணவகத்தில் உரிமையாளர் ஹரிஹரன். 

* பெஸ்ட் டிரெண்ட்செட்டர் எனும் விருது சென்னையில் இயங்கிவரும் இட்லிஸ் எனும் உணவகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிரபல உணவு எழுத்தாளர் மல்லிகா பத்ரிநாத் இந்த விருதை வழங்கினார். ``சமையல் என்பது கலை மட்டுமல்ல அது அறிவியல். சமையலை சையின்ஸாகப் பாருங்கள்" என அதே மேடையில் ஒரு மாற்றுக் கருத்தை வைத்தார். 

* பெஸ்ட் டிரெடிஷினல் ஃபுட் என்ற விருதை அடையார் திருக்குறள் உணவகம் வென்றது. பாரம்பர்ய உணவு வகைகளைச் சிறிய கடைகளில்தாம் வாங்கவேண்டும் என்பதில்லை. ஏசி போட்டு சொகுசான சோஃபாவில் உக்காந்து சாப்பிடலாம் என்று சென்னைக்குக் கற்றுக் கொடுத்ததுதான் திருக்குறள் உணவகம். இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் சுரேஷ் ஜகன்னாதன் மற்றும் கார்த்திகேயன் இமயவர்மன் பேசும் போது, ``என்னதான் வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிட்டாலும் 40 வயசுக்குப் பிறகு பாரம்பர்ய உணவுகளுக்குத்தான் திரும்பியாகணும். நம்ம உடல் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டது. உணவை இன்னும் ஆழமான புரிதலோட பாக்கணும். நம் உடல் தேவைக்கு உணவுங்கிறது கமர்ஷியல் ஆன பிறகு நம்ம உளவியல் தேவைக்கானதா மாறிப்போச்சி. உணவு என்ன தரும்னு எதுக்குனு நம்ம புரிய வைக்கத் தவறிட்டோம்." என்று ஆழமான வார்த்தைகளிலிருந்தே பேச்சை ஆரம்பித்தார். 

* இளைஞர்களுக்கான தாய் வீடு என்பது மெஸ்கள்தாம். பெஸ்ட் மெஸ் எனும் விருதை காசிவிநாயகா மெஸ் வாங்கியது. "கடந்த 47 ஆண்டுகளாக சேப்பாக்கத்தில் இயங்கிவரும் காசி விநாயகா மெஸ்ஸை இதுவரை மூடினதே கிடையாது. பொங்கல் லீவுக்கு மூடினா கூட பசங்க வீட்டுக்கே வந்துடுறாங்க" எனப் பெருமையாக மகிழ்ந்தார் உரிமையாளர் கே. வாசுதேவன். 

* Small concept, Big success எனும் விருதை கரூரின் ஶ்ரீ முருகவிலாஸ் மண் பானை உணவகம் பெற்றது. குறைந்த செலவை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகம் இப்போது கரூரின் அடையாளம். மண்பாண்ட உணவின் ருசியை மீட்டுக்கொண்டுவந்துள்ளது முருகவிலாஸ். விருதை வழங்கிய நேச்சுரல்ஸ் சலூனின் இயக்குநர் சி.கே குமரவேலு ``என் அம்மா அதிகமாச் சமைக்க மாட்டாங்க. எப்பவுமே சொல்லுவாங்க பெண்கள் சமையல் கட்ட விட்டு வெளிய வந்து உலக வாழ்க்கையைத் தெரிஞ்சிக்கணும்னு. ஒரு பொருளை நேர்த்தியா செஞ்சா உலகமே கைதட்டும் அதுக்கு உதாரணம் இந்த உணவகம்." என்று மேலும் பாராட்டுகளை கொடுத்தார். குடும்பத்தோடு மேடை ஏறி பாராட்டுகளைப் பெற்றார் உரிமையாளர் ஈஷ்வர மூர்த்தி. 

* இந்த உணவுக்கடையின் உரிமையாளர் பெயர் சந்தான கிருஷ்ணன் என்றால் நிச்சயம் ஆச்சர்யமாகத்தான் பார்ப்பார்கள். சௌகார்பேட்டையின் ஸ்பெஷல் சீனாபாய் கடையின் உரிமையாளர் சந்தான கிருஷ்ணன் அவள் கிச்சனின் ஸ்ட்ரீட் ஃபுட் வொண்டர் என்ற விருதை குடும்பத்தினருடன் சேர்ந்து பெற்றுக்கொண்டார். ``அம்மாவும், அப்பாவும் தள்ளுவண்டியில ஆரம்பிச்ச கடைதான் சீனாபாய். அவங்க, மழையில தள்ளுவண்டியில நின்னு வித்தது இன்னும் நினைவிருக்கு. ஒரு சேட்டுக்காக இட்லியில நெய்விட்டோம் இப்போ அது எங்க ஸ்பெஷல் ஆயிடுச்சி." என்று நெகிழச்செய்தார் சீனாபாய். 

* மேடை அதிர சிரிக்கவைத்து, நெகிழச் செய்தார் பெஸ்ட் தீம் ரெஸ்டாரென்ட் விருதை வழங்க வந்த கடைக்குட்டி சிங்கம் தீபா. " எனக்கு சோறுதான் எல்லாமே.  என் புருசன் கிட்ட நகை கூட கேட்டதில்லை. எனக்கு சோறு போட்டா போதும்னுதான் சொல்லுவேன்...என் ஹீரோவே இங்கதான் இருக்காரு" என்று செஃப் தாமுவை கைகாட்ட இருவரும் மேடையில் அடிக்க காமெடி, விருந்தினருக்கு கலகல ட்ரீட். இந்த விருதை டயலாக் இன் தி டார்க் உணவகம் பெற்று சென்றது. இருள் என்பதுதான் இந்த உணவகத்தின் தீம். உணவைப் பார்க்கமுடியாது. இருட்டில்தான் சாப்பிடவேண்டும். டயலாக் இன் தி டார்க் ரெஸ்டாரென்டில் வேலை செய்பவர்கள் அனைவருமே கண் பார்வை இல்லாதவர்கள் என்பது இவ்வுணவகத்துக்குச் செல்ல தூண்டும் இன்னொரு காரணம். " தமிழ்நாட்டில் இப்படி ஒரு அனுபவம் வேறு எங்ககேயுமே கிடைக்காது. இருட்டை பார்த்தா பயம்னு செல்லி வரவங்க, வெளியே போரப்போ சந்தோஷமாதான் போராங்க." என்று மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றார்கள் உரிமையாளர் ஜானகியும் ஃபாஸிலும்.

* அவள் கிச்சன் விருதுகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருதும், தேர்ந்தெடுக்க கடினமான விருதும் பெஸ்ட் பிரியாணி விருதுதான். பல பிரியாணிகளைக் கடந்து வந்தபிறகு பிரியாணியின் கிங்காக அவள் கிச்சன் மகுடம் சூட்டியுள்ளது திண்டுக்கல் வேணு பிரியாணிக்குத்தான். வேணு பிரியாணியின் உரிமையாளர் வசந்தா பேசுகையில் ``60 வருஷமா இந்த ஹோட்டல் தொழிலை நடத்தி வருகிறோம். நான் 4-வது தலைமுறை. பல கஷ்டங்களை அனுபவிச்ச பிறகு இப்போ பல கிளைகள் தொடங்கியிருக்கிறோம்" என்று சந்தோஷக் கண்ணீரில் வார்த்தை தட்டுப்பட்டு நிறுத்தினார் வசந்தா. 

* பெஸ்ட் நான்வெஜ் செயின் ரெஸ்டாரன்ட் விருதை நெல்லை வைரமாளிகை உணவகம் பெற்றுக்கொண்டது. வசந்தபவன் உரிமையாளர் ரவி இந்த விருதை வழங்கினார். தொடர்ந்து பெஸ்ட் டயடீசியன் விருதை டாக்டர். தாரணி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ``பிரியாணி சாப்பிடணும்னா, பிரேக்ஃபாஸ்ட்டுக்குப் பழங்களைச் சாப்பிடுங்க" என்று சில அட்வைஸ் அள்ளித் தெளித்தார். யம்மி செஃப் விருதை செஃப் தாமு பெற்றுக்கொண்டார். ``சமையல்காரன், குக்னு சொல்லிக்கிட்டு இருந்த என்ன எல்லாரும் செஃப்னு சொல்ல 35 வருஷம் ஆச்சு," என்று சிந்திக்கவேண்டிய வார்த்தைகளைத் துளிர்த்தார் செஃப் தாமு.

* நெகிழ்ச்சி, ஆனந்தம், பெறுமை, கண்ணீர், கடமை என எல்லாமே கலந்த விருதாக இருந்தது வில்லேஜ் ஃபுட் பேக்டரி யூ-டியூப் சேனலின் செஃப் ஆறுமுகத்துக்குக் கொடுக்கப்பட்ட `பெஸ்ட் ஆன்லைன் செஃப்' விருது. நடிகை இந்துஜா இந்த விருதை வழங்கினார். டாடி என்று அன்போடு அழைக்கப்படும் ஆறுமுகம் மேடைஏறி நடுங்கிய கைகளால் அந்த விருதை வாங்கியபோது அரங்கமே எழுந்து நின்று கைதட்டிய தருணம் நெகிழ்ச்சியின் உச்சம். ``12 வயசில இருந்த சமையல் மேல ஆர்வம் எனக்கு. இதே மெட்ராஸ்ல நாலு நாள் பட்டினியா இருந்தேன். ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல படுத்திருந்தப்போ ஒருத்தங்க வந்து பழைய சோறும் ஊறுகாயும் கொடுத்தாங்க. அந்த அம்மா இருந்தா இப்போ இங்க கூப்பிட்டு வந்திருப்பேன்." என்று நினைவுகூர்ந்தாற் டேடி ஆறுமுகம். மகன்கள் கோபிநாத், மணிகண்டன் கொடுத்த ஒரு சின்ன ஐடியாதான் வில்லேஜ் புட் ஃபேக்டரி யூடியூப் சேனல். இப்போது 17.5 லட்சம் சப்ஸ்கிரைபர் உடன் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருக்கிறார் டாடி ஆறுமுகம். 

* உணவை அழகுபடுத்தும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜிதா பெஸ்ட் ஃபுட் ஸ்டைலிஸ்ட் விருதை ஓவியர் மற்றும் கலை இயக்குநர் மருதுவிடமிருந்து பெற்றுக்கொண்டார். கடைசி விருதான சிறந்த உணவு எழுத்தாளர் விருதை ஓவியர் மா.செ கொடுக்க எழுத்தாளர் முகில் அதைப் பெற்றுக்கொண்டார். உணவின் பாரம்பர்யத்தைத் தேடி எழுதும் எழுத்தாளர் முகிலின் உணவு சரித்திரம் புத்தகம் உணவின் வரலாற்றைச் சுவையாகச் சொல்லும் ஒரு கையேடு. அவள் கிச்சன் மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த செஃப் முதல் செலிப்ரிட்டி வரை எல்லோருமே எழுத்தாளர் முகிலைக் கவுரவிக்க 2018-ம் ஆண்டின் அவள் கிச்சன் விருதுகள் விருந்தினர்களின் நாவுக்கு ருசியூட்டி நிறைவுபெற்றது.