மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 4

சோறு முக்கியம் பாஸ்! - 4
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 4

வெ.நீலகண்டன், படங்கள்: நா.ராஜமுருகன்

ட்லி மாதிரி சுகமான உணவு வேறில்லை. அதுவும், அவித்து இறக்கிய சூட்டோடு சாப்பிடுவது அலாதி

சோறு முக்கியம் பாஸ்! - 4

சுகம். கூடவே,  வித்தியாசமாக ஒரு சைட்-டிஷ் இருந்தால்... சொல்லவே வேண்டாம், எண்ணிக்கை மறந்து தட்டைக் காலி செய்யலாம்.  அப்படியான ஓர் இனிய அனுபவம், கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் கிடைக்கிறது.  காலை  எட்டு மணி தொடங்கி இரவு பத்துமணி வரை  ஆவி பறக்க பறக்க இட்லி... சைடு-டிஷ்,  வாத்துக்கறி.

வேலாயுதம்பாளையத்தில், கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் இருக்கிறது ‘கதிர்வேல் வாத்துக்கடை.’  20 ஆண்டுகளுக்கு முன்னால் சாலையோரக் கூரைக்கடையாகத் தொடங்கப்பட்டது, இன்று 50 பேர் அமர்ந்து சாப்பிடும் உணவகமாக வளர்ந்திருக்கிறது. காரணம், கைமணம். 

சோறு முக்கியம் பாஸ்! - 4

அருகில்  வாத்துகளுக்கான குடில். முகப்பில் வாத்து உரித்து சுத்தம் செய்யும் பணி, தொழிற்சாலை வேகத்தில் நடக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து வெங்காயம், பூண்டு உரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை, அருகிலுள்ள கிச்சனிலிருந்து  பெரிய அண்டாவில் சுடச்சுட வாத்துக்கறியும் கிரேவியும் உணவகத்துக்குள் சென்று கொண்டேயிருக்கின்றன.  இன்னொரு பக்கம் ஆவி பறக்க இட்லி அவித்துக்கொண்டேயிருக்கிறார்கள். 

வாத்துக்கறிக்குப் பெயர் போனது கரூர்ப்பகுதி. இங்கு ஏராளமானோர் வாத்து வளர்க்கும் தொழில் செய்து வந்தார்கள். அதனால் வாத்துக்கறி பெரும்பகுதி மக்களின் பிரதான உணவாக இருந்தது. ஒரு கட்டத்தில் நீர்நிலைகள் வற்றி, வாத்து வளர்ப்புத்தொழிலே நசிந்துபோனது. ஆனாலும், அம்மக்களின் உணவுப்பண்பாடு மாறவில்லை.

கதிர்வேல் வாத்துக்கடையின் உரிமையாளர் பிரகாஷின் குடும்பமும் வாத்து வளர்ப்புத் தொழிலோடு தொடர்புடையது தான். பிரகாஷின் அம்மா மாரியாயி துணைத் தொழிலாக இந்த உணவகத்தை ஆரம்பித்தார். அவரது  கைமணம் உள்ளூர் மக்களை மட்டுமன்றி, பைபாஸ் பயணிகளையும் வசீகரித்து விட்டது. இன்றளவும் அவரது பொறுப்பில்தான் இருக்கிறது கிச்சன். 

சோறு முக்கியம் பாஸ்! - 4

வாத்துக்கறி கிரேவி, வாத்து ஃப்ரை, வாத்து முட்டை ஆம்லேட், கலக்கி...  நான்கும் கதிர்வேல் வாத்துக்கடையில் ஸ்பெஷல். இட்லிக்கு சட்னி, சாம்பார் எதுவும் இல்லை. ஒன்லி, வாத்து கிரேவிதான். போதும் போதுமென்கிற அளவுக்கு ஊற்றுகிறார்கள். வாத்துக்கறி என்றால், ‘ஐயோ, வாடை வருமே’ என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், அதுமாதிரியான சங்கடங்கள் ஏதுமில்லாமல் ருசிக்க முடிவது சிறப்பு. மல்லி வாசனையில் எல்லா வாடையும் மூழ்கிவிடுகிறது.

“நாட்டுக்கோழிக் குழம்பு எப்படியோ, அப்படித்தான் வாத்துக்கறி கிரேவியும். பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள், மல்லித்தூள் என நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் மசாலாக்கலவையைத் தான்  உபயோகிக்கிறோம். முறையாக சுத்தம் செய்வதால் தனித்து வாடை தெரிவதில்லை. சுவைக்கென எந்தவிதமான ரசாயனங்களையோ நிறமிகளையோ பயன்படுத்துவதில்லை. 

20 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படிச் சமைத்தோமோ, அப்படியேதான் இப்போதும் சமைக்கிறோம்” என்கிறார்  பிரகாஷ். 

சோறு முக்கியம் பாஸ்! - 4

கிரேவிக்கு மிளகாய் பயன் படுத்துவதில்லை. மிளகுதான். அதனால் கொஞ்சம் காரம் தூக்கல்தான். ஆனால், இட்லிக்கு செம பொருத்தம்.  பஞ்சு மாதிரி ஐந்து இட்லி 35 ரூபாய்.  1 பிளேட் வாத்துக்கறி, 90 ரூபாய்.  ஆக 125 ரூபாயில்  ஒரு நல்லுணவு.  ஃப்ரை வேண்டுமென்றால் கூடுதலாகப் 10 ரூபாய்.  மேலும் கொஞ்சம் மிளகுதூவிக் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, பிரட்டித் தருகிறார்கள். கிரேவியைவிட ஃப்ரை ஸ்பைஸியாக இருக்கிறது. அளவும் நிறைவாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் ஒரு ஸ்வீட் பீடா. அந்த வேளை இனிய வேளையாகிவிடும். 

கோழி முட்டையைவிட வாத்துமுட்டை ஒரு சுற்று பெரிது. அதனால் ஆம்லேட், தட்டு அகலத்துக்கு இருக்கிறது. கலக்கி, இந்தப் பகுதியின் ஸ்பெஷல். இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி, கொஞ்சம் வெங்காயத்தைத் தூவி, வாத்து கிரேவியை ‘சள்’ளென்று தெளித்து அப்படியே அரைவேக்காட்டில் அள்ளிச் சுருட்டித் தருகிறார்கள். அரை வேக்காடு என்பதால் இதில் கொஞ்சம் ‘வாத்து வாசனை’ அடிக்கிறது. பிடித்தவர்கள் ருசிக்கலாம்.  ஆனால், இதை நாடித்தான் இங்கு பெரும்பாலானோர் வருகிறார்கள்.

காலை எட்டு மணிக்குத் தொடங்குகிற பரபரப்பு இரவு 10 மணி வரை தொடர்கிறது. கிரேவி பார்சல் வாங்க மட்டுமே பெருங்கூட்டம் கூடுகிறது. ஒரு வாத்து கிரேவி வாங்கினால் மூன்றுபேர் தாராளமாகச் சாப்பிடலாம். 

கரூர்-சேலம் பைபாஸில் பயணிக்கும் லாரிகள், சுற்றுலா வாகனங்கள் ‘கதிர்வேல் வாத்துக்கடை’யில் நின்றே நகர்கின்றன. பொதுவாக, பழக்கமில்லாத இறைச்சி உணவுகளைச் சாப்பிடுபவர்கள் சஞ்சலமில்லாமல், விரும்பிச் சாப்பிட வேண்டும். தயக்கத்தோடு சாப்பிட்டால் எதிர்விளைவுகள் உண்டாகும். அது வாத்துக்கறிக்கும் பொருந்தும்.  அப்படியானவர்கள் முட்டை உணவுகளைத் தவிர்க்கலாம்.

சோறு முக்கியம் பாஸ்! - 4

கோழி என்றாலே பிராய்லர் கோழிகள்தான் என்றான காலம்.  சக்கையைச் சாப்பிடுவது போலாகிவிட்டது. வாத்துகளைப் பண்ணையில் வளர்ப்பதில்லை. எவ்விதச் செயற்கை உணவுகளோ, ஊசிகளோ தீண்டாமல் இயற்கையாகவே வளர்கின்றன. அதனால் சுவையிலும் மண்ணின் தன்மை இருக்கிறது. விலையும் மிரளவைக்கவில்லை.

இதமான ஒரு மாலை... பரபரப்பில்லாமல் சுடச்சுட ஐந்து இட்லிகள்...  ஒரு பிளேட் வாத்துக்கறி சாப்பிடுவது உன்னதமான அனுபவம். கரூர்ப்பக்கம் போக நேர்ந்தால் கதிர்வேல் வாத்துக்கடைக்கு ஓர் எட்டு போய்வாருங்கள்!

- பரிமாறுவோம்

வாத்துக்கறி சாப்பிடத்தகுந்ததா?

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?


டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்

சோறு முக்கியம் பாஸ்! - 4

நாட்டுக்கோழி எப்படியோ அப்படித்தான் வாத்தும். தாராளமாகச்  சாப்பிடலாம்.  100 கிராம் நாட்டுக்கோழியில் 26 கிராம் புரதம் இருக்கிறது; வாத்தில் 26.1 கிராம் இருக்கிறது. கோழியைவிட வாத்தில் கொழுப்பு கொஞ்சம் அதிகம். பீஃப், மட்டனோடு ஒப்பிடும்போது, வாத்து நல்லது. சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் வாத்து இறைச்சி சாப்பிடலாம். கோழி முட்டையில் என்னென்ன சத்துகள் இருக்கின்றனவோ, அதே சத்துகள் வாத்து முட்டையிலும் இருக்கின்றன.  அதனால் வாத்து முட்டையையும் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இன்று பரவலாகப் புழக்கத்தில் இருக்கும் பிராய்லர் சிக்கனில் உடலுக்குப் பொருந்தாத விபரீதமான பல ரசாயனங்கள் இருக்கின்றன. வாத்து அப்படியன்று... இன்றளவும் இயற்கையாகவே வளர்கிறது. அதனால், தாராளமாக வாத்து இறைச்சி சாப்பிடலாம்.