தேவையானவை:
* மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப்
* வறுத்த தேங்காய்த் துருவல் - ஒரு கப்
* பொடித்த சர்க்கரை - அரை கப்
* பொடித்த பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
* கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்
* தேங்காய்ப்பால் - மாவு பிசைய தேவையான அளவு
* வெண்ணெய் - சிறிதளவு
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* பிஸ்கட் கட்டர் – ஒன்று
* வறுத்த கசகசா - அரை டீஸ்பூன்
* சாக்கோ சிப்ஸ் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
மைதா மாவுடன் கோதுமை மாவு சேர்த்துச் சலிக்கவும். அதனுடன் சர்க்கரை, பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள், கசகசா, முக்கால் கப் தேங்காய்த் துருவல், உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்ப்பாலைத் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவை மூடி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
மாவைக் கனமான சப்பாத்தியாகத் தட்டி, பிஸ்கட் கட்டர் (அ) ஏதாவது மூடியால் அழுத்தம் கொடுத்து வெட்டி எடுக்கவும். பிஸ்கட் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து பிஸ்கட்டுகளை அடுக்கவும். அவனை (oven) 180 டிகிரிக்கு ப்ரீஹீட் செய்யவும். அவனுள் ட்ரேயை வைத்து 15-20 நிமிடங்கள் வரை ‘பேக்’ செய்து எடுக்கவும். பிஸ்கட்மீது கண்டன்ஸ்டு மில்க் தடவி, மீதமுள்ள வறுத்த தேங்காய்த் தூவி நடுவே சாக்கோ சிப்ஸ் வைத்துப் பரிமாறவும்.
குக்கரிலும் செய்யலாம் அல்லது மிதமான சூட்டில் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கலாம்.
குறிப்பு:
குக்கர் அடியில் கல் உப்பைக் கால் இன்ச் அளவுக்கு நிரப்பவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து குக்கரை மூடி சூடு செய்யவும் (விசில் போட வேண்டாம்). 5 நிமிடங்கள் கழித்துத் திறந்து அலுமினியப் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி இந்த பிஸ்கட்களை அடுக்கி வைத்து, 25 - 30 நிமிடங்கள் குக்கரில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். மாவுடன் சர்க்கரை சேர்த்துப் பிசைவதால் மாவு தளரும். தேவையானால் மேலும் சிறிதளவு மாவு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
