Published:Updated:

இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா
இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா

இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா

பிரீமியம் ஸ்டோரி

புட்டு-கடலைக்கறி, சுடச்சுடப் பொரிச்ச மீன், அப்பம் - தேங்காய்ப்பால், கட்டஞ்சாயா... சொல்லும்போதே `கடவுளின் சொந்த பூமி’ என அழைக்கப்படும் கேரளாதான் நினைவுக்கு வரும். களரி, கதகளி எனப் பழங்காலக் கலைகளைப் போற்றும் கேரளாவே, பாரம்பர்ய உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம்.

மலபார் உணவுப் பொருள்களோடு அரபு நாட்டின் சுவையைச் சேர்த்து பல புதுமைகளைப் படைத்து, கேரளாவின் `மாஸ்டர் செஃப்’ என மகுடம் சூட்டப்பட்ட சாஜி பி.அலெக்ஸின் `மாப்பிள்ளா உணவுத் திருவிழா’, அண்மையில் தேனாம்பேட்டை `கோர்ட்யார்ட் பை மாரியாட்’ ஹோட்டலில் நடைபெற்றது.செஃப் அலெக்ஸின் கைப்பக்குவத்தில் உருவான உணவு அணிவரிசையை அங்கு பார்த்தபோதே `சுவைக்க வேண்டும்’ எனத் தோன்றியது. `கட்டஞ்சாயாவா... காபியா... எதை ஆர்டர் செய்வது?’ என்ற குழப்பத்தில் இருந்த எனக்கு, ``இந்தாங்க குலுக்கி சர்பத். எங்க ஸ்பெஷாலிட்டி!’’ என்று மேசை மேல் வைத்துவிட்டு அமர்ந்தார் அலெக்ஸ். வெயிலுக்கு இதமான சர்பத்தைக் குடித்துக்கொண்டே அவரிடம் பேசத் தொடங்கினேன்.

சமையல் துறையைத் தேர்ந்தெடுத்த தற்கு என்ன காரணம்? இந்தத் துறையில் சவால்கள் இருக்கின்றனவா?

இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா

``சமையலறை பக்கமே அதுவரைக்கும் போகாத நான், இளநிலை படிப்பு முடிச்சுட்டு என்ன வேலைக்குப் போலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ, என் உறவினர் ஒருவர் பரிந்துரைத்ததுதான் சமையல் துறை. டிரை பண்ணலாம்னு டிரெய்னிங்ல சேர்ந்தேன். முதல் நாளே டிரெய்னிங் முடிஞ்சு மூணு கி.மீ தூரம் நடந்து சர்ச்சுக்குப் போயி மாதாகிட்ட வேண்டினேன். `எப்படி நான் தொடர்ந்து இந்தத் துறையில இருப்பேன்; எனக்கு இதெல்லாம் சாத்தியம் ஆகுமா?’னு ஏகப்பட்ட குழப்பம். கொஞ்ச நேரத்துல `என்னவானாலும் கைவிட்டுடக் கூடாது. இந்தத் துறைதான்’னு முடிவு பண்ணிட்டேன்.

இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா

எந்தத் துறையிலுமே ஆரம்பத்துல நிறைய கஷ்டங்கள் இருக்கும். அதேபோலதான் இந்தச் சமையல் துறையிலயும். பல தடைகள், தடங்கல் எல்லாத்தையும் கடந்துதான் முன்னேறினேன்” என்ற வரிடம் அடுத்த கேள்வியைக் கேட்பதற்கு முன், பொரிச்சக் கோழி, சுட்ட மீன், பனீர் சுக்கா, உள்ளி பகோடா ஆகியவற்றை தட்டில் அடுக்கிக்கொண்டு அமர்ந்தோம்.

உங்களுடைய `சிக்னேச்சர் டிஷ்’ எது?

``ஓர் அப்பாகிட்ட அவர் பெற்ற பிள்ளைகள்ல யாரைப் பிடிக்கும்னு கேட்டா என்ன சொல்வார்? பாரபட்சம் இல்லாம எல்லாரையும் பிடிக்கும்தானே? எனக்கும் என் படைப்புகள்ல உருவான எல்லா உணவு வகைகளுமே `சிக்னேச்சர் டிஷ்’தான்’’ என்று கூறி நம்மை மெய்சிலிர்க்க வைத்தார், புட்டு-கடலைக்கறி, பச்சைக்கறிக் கூட்டு, கோழிக்கோடு கோழி பிரியாணி, கிழங்குப் பட்டாணி கறி,  பீஃப் குறுமிளக்கிட்டது போன்ற உணவு வகைகளை ருசி பார்க்கத் தொடங்கினேன்.

இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா

உங்களின் ஃபேவரிட் செஃப் யார்?

``என் அம்மா” என்று சற்றும் யோசிக்காமல் பதிலளித்தார். ``நமக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு அம்மாவைத் தவிர வேற யாராலும் சொல்ல முடியாது. என் அம்மா எனக்குப் பிடிச்ச உணவு செஞ்சு கொடுக்கிறப்போ வரும் ஃபீல் வேற லெவல்!”

வருங்காலத் திட்டம் என்ன?

``கேரளாவுல ஒரு ஹோட்டல் வெச்சிருக்கேன். 55 வயசு வரைக்கும் சமையல் துறையில இருக்கணும். அதுக்கப்புறம், ஊருக்குப் போயி விவசாயம் பண்ணணும். கடைசிக் காலம் வரைக்கும் எல்லோர் வயிற்றையும் உணவால் நிறைக்கணும். இதுதான் என் ஆசை, திட்டம் எல்லாமே” என்று கூறி விட்டு விருந்தினர்களை உபசரிக்கச் சென்றுவிட்டார்.

இது வேற லெவல்! - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா

மாவடுவுடன் தயிர்சாதத்தை ருசித்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வு. இறுதியில் சுடச்சுட கட்டஞ்சாயாவைக் குடித்துவிட்டு நானும் கிளம்பினேன். `ம்ம்... எல்லாம் நல்லாயிருக்கு’ என்கிற நிறைவை அளித்த உணவு. கூடவே ஓர் இனிய சூழல். இவை எல்லாம் சேர்ந்து இரண்டு மணி நேரம் நான் கேரளாவில் இருப்பதைப்போலவே உணர்ந்தேன்!

 - கானப்ரியா, படங்கள்:  தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு