Published:Updated:

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்
பிரீமியம் ஸ்டோரி
News
புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் டன் கணக்கில் அழிக்கப்பட்டன என்பது மாம்பழ சீஸனான கோடைக்காலத்தில் அன்றாடச் செய்தி. இதுபோல, ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று கடந்த சில நாள்களாக வெளியாகிவரும் செய்திகள் தமிழக மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. குழந்தைகளுக்கும் நம்பித் தருகிற ஆரோக்கிய அசைவ உணவான மீனில் ரசாயனமா?

‘இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்’ என காமெடியில் வருவது போல யாரும் போர்டு வைப்பதில்லை. ‘‘நல்லா பாருங்க, புது மீனு...’’ என்று சொல்லி வாடிக்கையாளரிடம் மீனின் செவுளைத் திறந்து காண்பிப்பார் மீன் வியாபாரி. பார்த்தால் சிவப்பாக இருக்கும். அப்படி இருந்தால், அது நல்ல மீன் என்று நம்பி வாங்குவார்கள். செவுள் வெளிறியிருந்தால், மீன் கெட்டுவிட்டதாக அர்த்தம். தமிழக எல்லையில், கேரளாவில் டன் கணக்கில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் மீன்களின் செவுள்கள் சிவப்பாகவே உள்ளன. ஆனால், அவற்றைச் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்பதுதான் மிரட்டும் உண்மை.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான அமரவிளை செக்போஸ்ட், நெல்லை மாவட்டம் வழியாகச் செல்லும் ஆரியங்காவு செக்போஸ்ட் போன்ற இடங்களில் இதுவரை 28 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அவை, ரசாயனம் கலந்த மீன்கள். கேரளத்தில் இப்போது மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தமிழ்நாடு, கோவா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து அங்கு மீன்கள் செல்கின்றன. மாதக்கணக்கில் மீன்களை இருப்புவைத்து அதிக லாபம் சம்பாதிப்பதற்காக, ‘ஃபார்மலின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி, அந்த மீன்களைக் கெட்டுப்போகாமல் வியாபாரிகள் பாதுகாக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்துவதற்கான ரசாயனம்தான், இந்த ஃபார்மலின். இப்படிப் பாதுகாக்கப்படும் மீன்கள் கேரளாவுக்குக் கொண்டுவரப்படுவதை அறிந்த கேரள அரசு, ‘ஆபரேஷன் சாகர் ராணி’ என்ற பெயரில் உணவுப்பாதுகாப்புத் துறையினரைக் களமிறக்கி விட்டுள்ளது. இந்தப் பிரச்னையால், மீன்களின் விலை சரிந்துவிட்டது என்றாலும், கேரளாவில் மீன் விற்பனை படுத்துவிட்டது.

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“மேற்குக் கடற்பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கும் முன்பே, தோல் கடினமான சூரை, பாறை, நெய்மீன், இறால் போன்ற மீன்களில் ரசாயனம் கலந்து இருப்பு வைத்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகம், முட்டம் மற்றும் குளச்சல் துறைமுகங்களிலிருந்து ஏலம் எடுக்கப்படும் சிறிய வகை மீன்களிலும் ரசாயனம் கலந்து, அவற்றைக் கேரளாவுக்கு அனுப்புகிறார்கள். பேப்பர் ஸ்ட்ரிப்களை மீன்மீது வைத்தால் அது நிறம் மாறிவிடும். அதைவைத்து, அந்த மீனில் ரசாயனம் கலந்திருப்பதை உறுதிசெய்கிறோம். மீன்களைப் பதப்படுத்துவதற்கான ஐஸ் பார்களை உறைய வைக்கும் தண்ணீரிலும் இந்த ரசாயனத்தைக் கலந்து மீனைப் புதிது போல வைத்திருக்கப் பார்க்கிறார்கள்’’ என்கிறார்கள் கேரள உணவுத்துறை அதிகாரிகள்.

மீனில் ரசாயனம் கலக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லை என்பதால், இந்தப் பிரச்னை குறித்துத் தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “தமிழகத்தில் இப்படியொரு பிரச்னை இதுவரை இல்லை. கேரளத்தில், ரசாயனம் தடவப்பட்ட மீன்களைப் பேப்பர் ஸ்ட்ரிப் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். அதுபோல எந்த உபகரணமும் எங்களுக்கு வழங்கப்படவில்லை” என்கிறார்கள் அவர்கள்.

அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொதுச்செயலாளரான எம்.ஈ.ராஜா, “மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களிலிருந்து சென்னை மீன் சந்தைகளுக்கு வேன், லாரிகளில் மீன்கள் கொண்டுவரப்படுகின்றன. அவற்றில், ரசாயனத்தால் பாதுகாக்கப்பட்ட மீன்களும் உண்டு. அவை, சுகாதாரத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதில்லை. சிக்கன், மட்டன் வகைகளுக்குச் சுகாதாரத் துறையின் முத்திரை குத்தப்படுவதுபோல, மீன்களுக்கும் சுகாதாரத் துறையின் முத்திரையோ. ஒப்புதலோ தரவேண்டிய நிலை உள்ளது. மீன்களை வாங்கியதுமே அவற்றைச் சுத்தம் செய்து சமைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள், அது ஆபத்தானது. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் மீன்களை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் நீரில் ஊறவைத்து அதன்பின், கழுவிச் சுத்தம்செய்துவிட்டு சமைத்தால், ஓரளவுக்கு ரசாயனப் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்” என்றார்.

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

“கேரளாவின் சுல்தான்பத்தேரி, நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது. சுல்தான்பத்தேரியில், ஃபார்மலின் ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகின்றன. அங்கு சமீபத்தில் ஒரு டன் மீன்களைப் பறிமுதல் செய்து சுகாதாரத்துறையினர் அழித்துள்ளனர். எனவே, நீலகிரி மாவட்டத்தில் மீன் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரசாயன மீன் பீதியால் பந்தலூர், கூடலூர், ஊட்டி போன்ற இடங்களில் முன்புபோல் மீன் விற்பனையில் வேகம் இல்லை. நாங்கள் தொடர்ந்து, மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என்றனர் நீலகிரி மாவட்டச் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்துறை இயக்குநர் ஜெயசேகரன், “மூன்று ஆண்டுகளாகத்தான் இந்தப் பிரச்னை இருக்கிறது. ஃபார்மலின், எளிதில் ஆவியாகக்கூடிய திரவ ரசாயனம். இது, குறைந்த விலையில் கிடைக்கிறது. ஃபார்மலினைத் திறந்தவுடனே மிகவும் மோசமான வாசனை வீசும். காற்றில் ஆவியான பிறகு, அந்த வாசனை போய்விடும். அதிக லாபம் பெறுவதற்காக, மீன்கள்மீது இந்த ரசாயனத்தை வியாபாரிகள் பயன்படுத்துகிறார்கள். அதிலும், பெரிய மீன்களில் அதிகமாக ஸ்பிரே செய்து அனுப்புகிறார்கள். ஒருசில நாள்களில் அந்த வாசனை போய்விடும். எனவே, ரசாயனம் கலந்திருப்பது தெரியாது. கேரள மாநிலத்தில் ரசாயனத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ரிப் மூலம் 20 பி.பி.எம்-க்கு அதிகமாக ஃபார்மலின் இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். குறைவான அளவு ஃபார்மலின் இருந்தால் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் ஆய்வுக்கூடத்தில் 0.5 பி.பி.எம் அளவு ரசாயனம் இருந்தாலே கண்டுபிடிக்க முடியும். அதிக லாபத்திற்காக மீன்களில் ரசாயனம் கலப்பது மக்களுக்கு மிகவும் ஆபத்து. இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமாரிடம் இந்த விஷயத்தை விளக்கினோம். கவனமாகக் கேட்டுக்கொண்ட அவர், சில நிமிடங்களில் மீண்டும் நம்மைத் தொடர்புகொள்வதாகச் சொன்னார். சொன்னது போல நம்மை அவர் தொடர்புகொண்டார். “நீங்கள் சொன்ன தகவல்களை வைத்து, கேரள மாநில மீன்வளத் துறை அதிகாரிகளிடம் உடனடியாகப் பேசினேன். கேரளாவில் தற்போது மீன்பிடித் தடைக்காலமாக இருப்பதால், அங்கு மீன்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்ட மீன்களில் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மிகச்சிறந்த இயற்கை உணவாக இருக்கும் கடல் உணவில் கலப்படம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழக மீன்வளத்துறை, உணவுப்பாதுகாப்புத் துறை உள்பட சம்பந்தப்பட்ட அத்தனை துறைகளின் அதிகாரிகளுக்கும் இது குறித்து உரிய அறிவுரைகளை உடனே வழங்கியுள்ளோம். இப்படிப்பட்ட செயல்களில் மீனவர்களோ, வியாபாரிகளோ... நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவது அரசின் கவனத்துக்கு வந்தால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

- ந.பா.சேதுராமன், ஆர்.சிந்து
படங்கள்: பா.காளிமுத்து

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

‘‘வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாது!’’

‘மீ
ன்களில் ஃபார்மலின் இருக்கிறதா என்பதை எப்படி உறுதி செய்வது, ஃபார்மலின் மூலம் பதப்படுத்திய மீன்களைச் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?’ தேனி மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறைத் தலைவர் எழிலரசனிடம் கேட்டோம். ‘‘ஃபார்மலினிலிருந்து வெளியாகும் வாயுவைச் சுவாசிப்பதும், அது கலந்திருக்கும் உணவைச் சாப்பிடுவதும் பல ஆபத்தான உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். இது, ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டது. அல்சர், வயிற்று வலி, வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் உடனடியாக ஏற்படலாம். தவிர, புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தும் இருக்கிறது. தொடர்ந்து ஃபார்மலின் சேர்ந்த மீனைச் சாப்பிட்டால் புற்றுநோய் வரக்கூடும். மனித உடலைப் பதப்படுத்துவதைப்போல, மீன்களின் உடலுக்குள் ஃபார்மலினைச் செலுத்திப் பதப்படுத்துவதில்லை. மேற்புறத்தில் ஊற்றினாலே, பல நாள்கள் கெடாமல் இருக்கும். விற்பனைக்குக் கொண்டுசெல்லும் போது, ஃபார்மலினால் பதப்படுத்தப்பட்ட மீன்களைத் தண்ணீரில் மூன்று முறை கழுவி விடுவார்கள். அதனால், வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாது. பார்ப்பதற்குப் புதிய மீன்களைப்போல் தெரியும். ஃபார்மலின் சேர்க்கப்பட்டதா என்பதைச் சோதனைக்கூடத்தில் மட்டுமே உறுதி செய்ய முடியும். தவறு செய்பவர்களே திருந்தினால் தவிர இந்த அபாயகரமான பிரச்னைக்குத் தீர்வில்லை’’ என்றார்.

- லட்சுமணன்