Published:Updated:

மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!

மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!
பிரீமியம் ஸ்டோரி
மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

Published:Updated:
மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!
பிரீமியம் ஸ்டோரி
மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!

`கொத்தமல்லி விதைகளும் இலைகளும் இன்றி அன்றாடச் சமையலில் அணுவும் அசையாது’ என்று சொல்லும் அளவுக்கு, சமையல் ராஜாங்கத்தில் அவை முக்கிய இடம்வகிக்கின்றன. உலகின் பழைமையான நறுமணமூட்டிகளுள் கொத்தமல்லி விதைகளும் ஒன்று கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைப்படிவ ஆதாரங்களின் மூலம் கொத்தமல்லியின் பயன்பாடு பற்றி அறியமுடிகிறது. பண்டைய கிரேக்கம் மற்றும் அரேபிய சமையல் அறைகளை, தனது நறுமணத்தால் கொத்தமல்லி அலங்கரித்துள்ளது.

`ஈபெர்ஸ் பாபிரஸ்’ என்கிற எகிப்தின் பழைமைவாய்ந்த மருத்துவ நூலில் கொத்தமல்லி பற்றிய குறிப்பு இருக்கிறது. ஹிப்போகிரேடஸ் தனது மருந்துகளில் கொத்தமல்லி விதைகளைக் கலந்துகொடுத்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இளம் வயதிலேயே மரணமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர் துதன்காமெனின் புதைகுழிக்குள் கொத்தமல்லியும் சேர்த்து புதைக்கப்பட்டதாம்!

மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!

கொத்தமல்லியின் பயன்பாடு உலகம் முழுவதும் பிரபலம். இந்தியா, லத்தீன் அமெரிக்கா, மத்தியத் தரைக்கடல் நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்தமல்லி பரவலாகக் காணப்படுகிறது. டர்கிஷ் காபியை நறுமணமூட்ட உதவுவது கொத்தமல்லியே. ஸ்பெயின் நாட்டில்  புகழ்பெற்ற `கொரிஜோ’ என்கிற உணவில் கொத்தமல்லி முக்கியமான உட்பொருள். பாலடைக்கட்டியில் கொத்தமல்லி விதைகளைத் தூவிச் சாப்பிடுவதில் பிரான்ஸ் மக்களுக்கு அலாதி விருப்பம்.

தனியா, உருள் அரிசி ஆகியவை கொத்தமல்லியின் வேறு பெயர்கள். காரச் சுவையுடன்கூடிய இதன் விதைகள் பசியைத் தூண்டுவது, சிறுநீரைப் பெருக்கிக் கழிவுகளை வெளியேற்றுவது போன்ற செயல்களைச் சிறப்பாகச் செய்யும். ‘கொத்தமல்லி குளிர்காய்ச்சல் பித்தமந்தம்… விக்கல் தாகமோடு தாதுநட்டம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல், `பித்தத்தைக் குறைக்கவும் விக்கல், வாந்தியை நிறுத்தவும் விந்து சார்ந்த நோய்களைச் சரிசெய்யவும் முக்கியமான மருந்து இது' என்பதை உணர்த்துகிறது.

சமைத்த உணவில் கிராம்பு அல்லது பட்டையின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக உணர்ந்தால், சிறிது கொத்தமல்லி விதைப் பொடியைத் தூவ, உணவின் சுவை முழுமையடையும். சாம்பார் பொடி, ரசப் பொடி, மசாலா பொடி என இயற்கை வகையறாக்களில் மல்லிக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. சமையலில் சேர்க்கப்படும் மிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, வயிற்றுத் தசைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் இதமான பொருள் இது.

கொத்தமல்லியிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்துகள் பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொத்தமல்லியில் உள்ள லினாலூல், ஜெரானைல் அசிடேட் போன்ற பொருள்களே அதன் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது, வயிறு கழிதல் அல்லது சில நேரங்களில் மலக்கட்டு, வயிற்றுவலி போன்ற குறிகுணங்களைக் கொண்ட  `இரிட்டபிள் பவல் சின்ட்ரோம்’ எனும் செரிமானம் சார்ந்த நோயைக் குணப்படுத்த கொத்தமல்லி விதைகள் உதவும் என்கிறது ஓர் ஆய்வு. மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பர்ய மருத்துவத்தில், தூக்கமின்மையைப் போக்க கொத்தமல்லி பயன்படுத்தப்படுவதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொத்தமல்லி சேர்ந்த உணவுகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, கல்லீரல் செல்கள் புத்துயிர் பெறுகின்றனவாம்.

மல்லி வைத்தியம்


* தலைசுற்றல் ஏற்படும்போது கொத்தமல்லி, சந்தன சிராய்கள் மற்றும் நெல்லி வற்றலை சம அளவு எடுத்துத் தண்ணீரில் ஊறவைத்துப் பருகலாம்.

* சந்தனத்துடன் கொத்தமல்லி விதைகளைச் சேர்த்து அரைத்துத் தலையில் பற்றுப்போட்டால் தலைவலி உடனடியாகக் குறையும்.

* பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொத்தமல்லிக் குடிநீர், மாதவிடாயின்போது உண்டாகும் அதிக ரத்தப்போக்கைக் குறைக்க உதவும். மல்லி விதை 50 கிராம், கசகசா விதை 25 கிராம் எடுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை மோரில் கலந்து குடித்தால் செரிமானப் பாதை பலப்படும்.

* அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் பித்தத்தைத் தணிக்கும் கொத்தமல்லி விதைகளைக் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

* `மது, டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிமையானவர்களுக்கு அஞ்சறைப் பெட்டியில் ஏதேனும் விசேஷப் பொருள் உள்ளதா?’ என்று விடை தேடுபவர்களுக்கு, `மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி’ என்பதே பதில். மல்லித்தூள் 100 கிராம், மருதம்பட்டை பொடி 50 கிராம், செம்பருத்திப் பொடி 50 கிராம் சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க, குடிவெறி நீங்கும் என்கிறது பாரம்பர்ய வைத்தியம். தனி கொத்தமல்லி விதைக்கும் இந்தச் செயல்பாடு உண்டு. மதுவின் மீது உள்ள ஆசையைக் குறைக்கும் கொத்தமல்லியின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

* டீ மற்றும் காபிக்குப் பதிலாக, தினமும் கொத்தமல்லி பானத்தைப் பருகலாம். சீரகம், சுக்கு, உலர்ந்த துளசி இலைகள், கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றைப் பொடித்து வைத்துக் கொண்டு, நீர்விட்டுக் கொதிக்கவைத்து, சுவைக்குச் சிறிது தேன் சேர்த்துப் பருகலாம்.

* வாய் நாற்றம் நீங்க, கொத்தமல்லி விதைகளைப் புதினா இலைகளோடு சேர்த்து மென்று சாப்பிடலாம். `கொத்தமல்லி விதைகளுக்குள் இருக்கும் சிறிய முனைகளைத் தனியாகப் பிரித்து, உப்பு நீர் சேர்த்துத் தயாரிக்கப்படும் மவுத்-பிரெஷ்னர், குஜராத் மாநிலத்தில் பிரபலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* கொத்தமல்லி விதைகளைக்கொண்டு வடித்தெடுக்கப்படும் எண்ணெயை இரண்டு முதல் நான்கு துளி அளவில் கொடுக்க செரியாமை, வயிற்றுப் பொருமல் குணமாகும்.

எப்படி வாங்குவது?


கொத்தமல்லி விதைகளில் இந்திய ரகம் தவிர ஐரோப்பா, மொராக்கோ, ரோமானியா ஆகிய பகுதிகளில் இருந்துவரும் வகைகளும் உண்டு. பொடித்த கொத்தமல்லி விதைகளை வாங்குவதைவிட, முழு விதைகளாக வாங்குவதே சிறந்தது. பொடித்த விதைகளின் வீரியம் விரைவில் குறைந்துவிடும். முழு விதைகளின் வீரியமோ ஆண்டுக்கணக்கில் நிலைத்திருக்கும். வறுத்த பிறகு விதைகளைப் பொடியாக்கி, சமையலில் பயன்படுத்தினால் நறுமணம் வீசும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை இருப்பதால், குழம்பு மற்றும் சூப் வகைகளைக் கெட்டியாக்க கொத்தமல்லி துணைபுரியும். வறுக்கும் நேரத்தைப் பொறுத்தும், அதை அரைக்கும் நேரத்தைப் பொறுத்தும் கொத்தமல்லி வாசனையை மாற்றிக்கொண்டே இருக்கும்.

அஞ்சறைப் பெட்டி பொருள்களுள், சீரகமும் தனியாவும் சிறந்த சேர்க்கையாகக் கருதப்படுகிறது. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தும் சமையல் நுணுக் கம், சுவையைப் பல மடங்கு அதிகரிக்க உதவும். ஆச்சர்யம் என்னவென்றால், வட மாநிலங்களின் சில பகுதிகளில் தனியாவும் சீரகமும் ஒன்று எனக் கருதும் அளவுக்கு இவை இணைபிரியா தோழர்கள்!

மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி!

மல்லி வடகம்... மல்லி மசாலா!

வடகம்:
கொத்தமல்லி, மிளகு, திப்பிலி, கறி உப்பு, கிராம்பு, ஓமம், கடுக்காய் தலா 30 கிராம் எடுத்து நெய்விட்டு வதக்கி இஞ்சி 250 கிராம் சேர்த்து அனைத்தையும் தயிர்விட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். சுண்டைக்காய் அளவு வடகங்களாகச் செய்து, உணவுக்குத் துணையாகச் சாப்பிடலாம். ஜீரணச் சக்தியை அதிகரிக்கும் இந்த வடகம், சுவையிலும் சளைத்ததல்ல.

டாபில் (Tabil): துனிஷிய நாட்டின் பிரபல மசாலா வகை இது. அரை கப் கொத்தமல்லி விதையையும் இரண்டு டீஸ்பூன் சீமைச் சோம்பு விதைகளையும் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் பூண்டுப்பொடியுடன் நன்றாகக் கலந்து பத்திரப்படுத்தவும். குழம்பு வகைகளில் இதைப் பயன்படுத்தினால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.

 மலேசியன் கறி பேஸ்ட்:
கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு தலா இரண்டு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சோம்பு, சிறிய லவங்கப்பட்டை என அனைத்தையும் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் இஞ்சி, கால் கப் வேர்க்கடலை, நான்கு பூண்டுப் பற்கள், நான்கு சின்ன வெங்காயம் சேர்த்து ஒன்றாக அரைத்து, மேற்சொன்ன பொடியுடன் கலந்துகொள்ளவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் அரைத்த எலுமிச்சை புல், கால் கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து உருவாக்கப்பட்ட கலவை மலேசிய சமையல் அறைகளில் பிரசித்தம். அசைவ வகையறாக்களுக்கும் இந்தக் கலவைக்கும் ஏகப் பொருத்தம்.

சடாய் (Satay): கறுப்பு உளுந்து, தயிர், கொத்தமல்லி மற்றும் பல நறுமணமூட்டிகள் கலந்து செய்யப்படும் ஹிமாச்சல் பகுதியின் `மத்ரா’ எனப்படும் குழம்பு வகையில் கொத்தமல்லியின் வாசனை தூக்கலாக இருக்கும். இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில், கொத்தமல்லி விதைகள் மற்றும் இலைகளை அரைத்து ஆட்டு இறைச்சியில் தடவி `சடாய்’ எனும் உணவு தயாரிக்கப்படுகிறது.