Published:Updated:

47 ஆண்டுகள்... 28,039 கடைகள்.. `ஸ்டார்பக்ஸ்’ கடந்து வந்த பாதை! #VikatanInfographics

47 ஆண்டுகள்... 28,039 கடைகள்.. `ஸ்டார்பக்ஸ்’ கடந்து வந்த பாதை! #VikatanInfographics
47 ஆண்டுகள்... 28,039 கடைகள்.. `ஸ்டார்பக்ஸ்’ கடந்து வந்த பாதை! #VikatanInfographics

ஆரம்பத்தில் 17 கடைகளை மட்டுமே கொண்டிருந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம், இன்று உலகளவில் சுமார் 75 நாடுகளில் 28,039 கடைகளை கொண்டிருக்கிறது.

காலை எழுந்ததும் `பெட் காபி', நியூஸ் பேப்பர் படிச்சுட்டே `ஃபில்டர் காபி', அலுவலக அலுப்புத் தெரியாமல் இருக்க `காபி பிரேக்', விருந்தினர்களை உபசரிக்க `வெல்கம் காபி' என நம் அன்றாட வாழ்வில் `காபி' நம்முடனே பயணிக்கும் ஓர் அத்தியாவசிய பானமாகவே மாறிவிட்டது. நம்ம ஊரு ஃபில்டர் காபி முதல் ஹவாயன் கோனா காபி வரை எண்ணிலடங்கா வெரைட்டி மற்றும் பிராண்டுகள் இதில் உண்டு. ஆனால், மனதில் பதிந்தவற்றில் `ஸ்டார்பக்ஸ்' காபி செயினுக்கு என்றுமே தனி இடம் உண்டு. 2013-ம் ஆண்டு வரை உலகின் மிகப்பெரிய காபி நிறுவனம் என்ற பெயர்பெற்ற ஸ்டார்பக்ஸில் அப்படி என்னதான் ஸ்பெஷல்!

ஆங்கில ஆசிரியர் ஜெர்ரி பால்ட்வின், வரலாறு ஆசிரியர் ஜெவ் சயகல் (Zev Siegl) மற்றும் எழுத்தாளர் கோர்டன் போக்கர் ஆகிய மூவரின் கனவும் காபி ஷாப் திறக்கவேண்டும் என்பதுதான். வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மூவரின் பொதுவான ஒரு விஷயம் `காபி' மட்டும்தான். அவர்களுக்குப் பிடித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தனர். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் `ஸ்டார்பக்ஸ்' எனும் காபி கொட்டைகளை வறுக்கும் நிறுவனமாக மாறியது. அன்றிருந்த மிகப்பெரிய தொழிலதிபர் Alfred Peet என்பவர்தான் இந்த பார்ட்னர்களின் பிசினஸ் இன்ஸ்பிரேஷன். ஆனால், இவர்கள் யாரும் `காபி உலகில் சரித்திரம் படைக்கவேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்கள் இல்லை.

1971-ம் ஆண்டு, வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டல் நகரில் மிகவும் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை, உலகறிய  செய்தவர் ஹொவர்டு சல்ட்ஸ் (Howard Schultz). 1976-ம் ஆண்டு வரை வெறும் காபி கொட்டைகளை மட்டுமே விற்றுவந்த இந்த நிறுவனம், ஹொவர்டின் வருகைக்குப் பிறகு ஏராளமான மாற்றங்களைக் கண்டது. வறுமையின் காரணமாக, தனது 12 வயதிலேயே வேலைக்குச் சென்று, இன்றுவரை உழைத்துக்கொண்டிருக்கிறார். பதின்பருவம் முதல் பல இடங்களில் பணிபுரிந்திருந்தாலும் அவரின் மனதோடு இணைந்த நிறுவனம் ஸ்டார்பக்ஸ்தான். ஒரு வருடப் போராட்டத்துக்குப் பிறகு அவரின் கனவு நிறுவனத்தில், மார்க்கெட்டிங் மேலாளராகச் சேர்ந்தார்.          

1983-ம் ஆண்டு வேலை காரணமாக இத்தாலிக்குச் சென்றபோது அங்கு வாழும் மக்கள், வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் நடுவே நீண்ட நேரம் செலவிடும் ஒரு புதிய இடத்தைக் கவனித்தார். மேஜையின் மேல் சுடச்சுட காபி கப்புடன் மக்கள் அனைவரும் தங்களை மறந்து ஆனந்தமாய் உரையாடுவதை மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்தார். இந்தக் கலாசாரத்தை அமெரிக்காவிலும் கொண்டுவர நினைத்து, தன் நிர்வாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். காரணம், அமெரிக்க மக்களுக்கு அன்றுவரை `லாட்டே' என்றால் என்னவென்றுகூட தெரியாது, எப்படி வியாபாரம் ஆகுமோ என்ற பயம்தான். இதனால், ஸ்டார்பக்ஸைவிட்டு வெளியேறினார். ஆனாலும், தன் முயற்சியைக் கைவிடவில்லை ஹோவர்டு.

பல தடைகளைத் தாண்டி, தானே சொந்தமாய் `இல் ஜியார்ன்லே' எனும் ஒரு காபி ஷாப்பை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பல தோல்விகளைச் சந்தித்த ஹோவர்டு, பிறகு மில்லியன் டாலர் ரெவன்யூ ஈட்டும் அளவுக்கு உயர்ந்தார். ஆனாலும், ஏதோ ஒரு குறை! அதே சமயம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை விற்கப்போவதாக அதன் உரிமையாளர்கள் வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்த ஹோவர்டுக்கு அளவில்லா ஆனந்தம்.

1987-ம் ஆண்டு, உள்ளூர் முதலீட்டாளர்கள் உதவியோடு, 3.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அந்த நிறுவனத்தை முழுமையாகப் பெற்றார். பல்வேறு விதமான விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் நம்பர் ஒன் காபி ஷாப் எனும் பெயரை எளிதில் பெற்றது. ஆரம்பத்தில் 17 கடைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த நிறுவனம், இன்று உலகளவில் சுமார் 75 நாடுகளில் 28,039 கடைகளைக் கொண்டிருக்கிறது.

பெயர்க் காரணம் மற்றும் லோகோ...!

பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, பார்ட்னர்களுள் ஒருவரான போக்கர், `ST' எழுத்துகளில் தொடங்கும் பெயர் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இதனால், இந்த இரு எழுத்துகளில் தொடங்கும் பெயர்களைத் தேடும்போது, `மொபி டிக் (Moby-Dick)' எனும் நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரமான Starbuck பெயர் போக்கரை கவர்ந்தது. தங்களின் கடைக்கும் அதே பெயரை வைத்துவிட்டனர். 

அதே நாவலிலிருந்து ஈர்க்கப்பட்ட டிசைன்தான் இதன் லோகோவும். டெர்ரி ஹெக்லெர் எனும் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இந்த லோகோ, அழகிய கடல் கன்னியை வைத்தே உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, தற்போது பச்சை நிறத்தில் கிரீடம் சூட்டப்பட்ட கடற்கன்னிதான் ஸ்டார்பக்ஸின் அடையாளமாக இருக்கிறது.

டாடா ஸ்டார்பக்ஸ்...!

2012-ம் ஆண்டு, டாடா குளோபல் பெவரேஜஸ் (Tata Global Beverages)-உடன், Starbucks Corporation 50-50 பார்ட்னர்ஷிப்புடன் இணைந்து இந்தியாவில் முதல்முதலில் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு டெல்லி, நொய்டா, கொல்கட்டா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் திறக்கப்பட்டன. தற்போது இந்தியாவில் மட்டும் மொத்தம் 111 ஸ்டோர்கள் உள்ளன.

 

அந்த ஸ்டார்பக்ஸ் காபி கப்புல நம்ம பேர் எழுதி வருதுனே சும்மா காபி குடிப்பவர்களும் உண்டு. நீங்க எப்படி...?

அடுத்த கட்டுரைக்கு