Published:Updated:

ஏ-.சி. கிடையாது; வரிகள் மட்டும் உண்டு!

ஏ-.சி. கிடையாது; வரிகள் மட்டும் உண்டு!
ஏ-.சி. கிடையாது; வரிகள் மட்டும் உண்டு!

மதுரை: தமிழகத்தில் தற்போது ஏற்படும் கடுமையான மின்தடை காரணமாக பல நேரங்களில் ஓட்டல்களில் ஏ.சி. போடுவதில்லை. ஆனால், வாட் வரி மற்றும் சேவை வரியை மட்டும் வாடிக்கையாளர்களிடம் தவறாமல் வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குளிர்சாதன வசதி உள்ள உணவகங்களுக்கு ஏற்கனவே வாட் வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 1.4.2013 முதல் கூடுதலாக சேவை வரியையும் விதித்துள்ளது மத்திய அரசு. இந்த இரட்டை வரி விதிப்பைக் கண்டித்து கடந்த 29ஆம் தேதி அகில இந்திய ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடையடைப்பு போராட்டம் நடத்தியது. மதுரையில் இவ்வாறு கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஏ.சி. ஓட்டல்கள் 1ஆம் தேதி முதல் வரி வசூலிக்காமல் 'ஒத்துழையாமை' போராட்டம் நடத்தும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சத்தமே இல்லாமல், அவர்கள் சேவை வரியை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

##~~##
சிறிய ஏ.சி. ஓட்டல்களில் 4.944 சதவிகிதமும், லாட்ஜிங் வசதியுடன் கூடிய ஏ.சி. ஓட்டல்களில் 7.416 சதவிகிதமும், பெரிய ஓட்டல்களில் 12.36 சதவிகிதமும் வரி வசூலிக்கப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை கடுமையாக இருக்கிறது. பாதி நேரம் மின்சாரம் இல்லை என்று ஏ.சி.யே போடுவதில்லை ஓட்டல்காரர்கள். ஆனால் வரியை மட்டும் கரெக்டாக வசூலிக்கிறார்கள்.
உதாரணமாக, நேற்று மதுரையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன் நண்பர்களுடன் டவுன் ஹால் ரோட்டில் உள்ள மகால் ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட்டார். மின்சாரம் இல்லாததால் ஏ.சி. போடப்படவில்லை. ஆனால் அவரிடம், வாட் வரி 2 சதவிகிதமும், சேவை வரி 5 சதவிகிதமும் வசூலிக்கப்பட்டது.
"முதலில் கரண்ட் கொடுங்கய்யா. அப்புறம் வரி வசூலிக்க வாங்க. அதுவரைக்கும் உங்களின் செல்லப்பிள்ளையான சென்னை மக்களிடம் மட்டும் வரியை வசூலிச்சுக்கோங்க. ஏன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுறீங்க?" என்று கேட்கிறார் மதுரைவாசியான இளங்கோவன்.
நியாயமான கேள்வி தானே?
-கே.கே.மகேஷ்
படம்:
பா.காளிமுத்து