பிரீமியம் ஸ்டோரி

தேன்-தினைமாவு, கச்சாயம், கர கச்சாயம், பாவாழை, தொகையல், ஒப்பட்டு, சந்தகை, நெய்பூந்தி-மலைவாழை, வெற்றிலை வடை, தயிர் சேவை... இவையெல்லாம் கோவைக்கே உரியஅடையாள உணவுகள். ஒரு தெருவில் பத்து உணவகங்கள் இருந்தால் இரண்டு, மரபுணவு தரும் உணவகங்களாக இருக்கும். 

சோறு முக்கியம் பாஸ்! - 35

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை கொங்குப் பகுதிக்கு தனித்த சுவை உண்டு. வேறுபட்ட மசாலாதான் அதற்குக் காரணம். கோவை மக்கள் எப்போதும் தக்காளி, பச்சை மிளகாய்  இரண்டையும் குறைவாகவே பயன்படுத்துவார்கள். புளிக்குப் பதிலாக எலுமிச்சைப் பழம் பிழிந்துவிடுவார்கள். காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்மானம் அதிகம். கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி நிறைவாகச் சேர்ப்பார்கள். சற்றுத் தூக்கலான காரம், உணவின் தன்மைக்கேற்ற வாசனை... ருசிக்குப் பங்கமில்லாமல், அதேநேரம் செரிமானப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதுதான் கொங்கு உணவின் தனித்தன்மை.

கோவை, நஞ்சுண்டாபுரம் பார்ஸன் மூன்றாவது கேட் சாலையில் உள்ள நஞ்சை விருந்து உணவகத்தில் கொங்கின் அசல் அசைவ விருந்தை ஒரு பிடி பிடிக்கலாம். பிரதான சாலையில் இருந்து பிரிந்து சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது இந்த உணவகம். உணவகத்தை ஒட்டி பெரிய பார்க்கிங் பகுதி... கோழி, ஆடுகளெல்லாம் வளாகத்திலேயே வளர்க்கிறார்கள்.

சோறு முக்கியம் பாஸ்! - 35அழகான ஏ.சி டைனிங். வெயில் இல்லாவிட்டால் திறந்தவெளியிலும் அமர்ந்து சாப்பிடலாம்.  சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியில் ஆசுவாசமாக அமர்ந்து வெற்றிலை போடலாம்.

நஞ்சை விருந்தில் மொத்தம் 22 வகைகளைப் பரிமாறுகிறார்கள். எல்லாமே அன்லிமிடெட்.  முதலில் நாட்டுக்கோழி சூப்.  நண்டு சூப், மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப் எனத் தினமும் ஒரு வகை  தருவார்களாம்.  மிளகு தூக்கலாக, செமையாக இருக்கிறது. பிறகு வரிசையாக தொடுகறி வகைகள். இறால் ஊறுகாய் வித்தியாசமாக இருக்கிறது. இறாலைப் பொடிப்பொடியாகப் போட்டுப் புளிப்பும் காரமும் சேர்த்துச் செய்திருக்கிறார்கள். அடுத்து ரத்தப் பொரியல். தேங்காய்ப்பூ, சின்ன வெங்காயம் போட்டு அசல் கொங்கு மணத்தோடு செய்திருக்கிறார்கள்.

குடல் வறுவல், நஞ்சை விருந்தின் ஸ்பெஷல்.  மிளகு மணக்கிறது.  குழைவாக வேறு இருக்கிறது. மட்டன் சாப்ஸும் சிறப்பு. செமி கிரேவியாகத் தருகிறார்கள். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

நாட்டுக்கோழி பிரட்டலும் நன்றாக இருக்கிறது. செமி கிரேவி. இவைதவிர ஐந்து ஸ்பெஷல் தொடுகறிகள். வாத்து ஃப்ரை, தக்காளி சிக்கன் பிரட்டல், பெப்பர் சிக்கன், காடை 65, நெத்திலி மீன்  வறுவல். இந்த ஐந்து தொடுகறிகளும் தலைக்கறி, வாத்து, வான்கோழி, முயல், புதினா சிக்கன், நண்டு என  தின மொன்றாக மாறுமாம். இதே வரிசையில், கடலோரக் கார வடை என்று ஒரு தொடுகறி வைத்திருக்கிறார்கள். இறால், வஞ்சிர மீன், நண்டுச்சதை யெல்லாம் போட்டு வடை மாதிரி தட்டித் தருவார்களாம்.

சோறு முக்கியம் பாஸ்! - 35

இலையில் குவியல் குவியலாக இவற்றையெல்லாம் வைக்கும்போதே பாதிப்பசி அடங்கிவிடுகிறது.  அடுத்து, பிரியாணி கொண்டு வருகிறார்கள். சிக்கன் பிரியாணி. மிதமான மசாலாதான். அதிலும் இரண்டு மூன்று துண்டு சிக்கன் பீஸ்கள் இருக்கின்றன. பிரியாணிக்கு சைடிஷாக சிக்கன் அல்லது மட்டன் குழம்பு வாங்கிக்கொள்ளலாம். கூட, ஒரு முட்டை வேறு. வழக்கம்போல கெட்டியான வெங்காயத் தயிர்ப்பச்சடியும் உண்டு.

பிரியாணி காலியானதும் சாதச்சட்டியோடு வருகிறார்கள். சாதத்துக்கு மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, ரசம், தயிர் தருகிறார்கள். குழம்பு ஊற்றும்போதே நான்கைந்து துண்டுகளும் சேர்ந்து விழுகின்றன. மீன்குழம்பு புளிப்பும், காரமுமாக ஈர்க்கிறது. ‘நேத்து வச்ச மீன்குழம்பு’ என்கிறார்கள். முதல்நாளே வைத்து வேடுகட்டி வைத்துவிடுவார்களாம். நன்றாக உப்பு, புளி சார்ந்து அபாரமாக இருக்கிறது. தயிரும் ஸ்பெஷல்தான். மண்பானையில் பால்விட்டு உறைகுத்தி வைத்துவிடுகிறார்கள். மறுநாள் ஐஸ்கிரீம் மாதிரி ஆகிவிடுகிறது. அதில் ஒரு கரண்டி குல்கந்தைப் போட்டு அமர்க்களப்படுத்துகி றார்கள். இரண்டையும் நன்றாகக் கலந்து தனியாகவே சாப்பிடலாம். இறுதியாகப் பாயசம். வயிற்றில் இடமிருந்தால் சாப்பிடலாம்.சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, “ண்ணா... சைடிஷைச் சாப்பிடுங்க... சாதமெல்லாம் அப்பறம் சாப்பிட்டுக்கலாம்” என்று ‘அலர்ட்’ வேறு செய்கிறார்கள்.
 
உணவகத்தின் முகப்பில் ஷெட் அமைத்து டேபிள் போட்டிருக்கிறார்கள். சாப்பிட்டு முடித்ததும் அங்கு வந்து அமர்ந்து ‘இளைப்பாறலாம்’. உங்கள் டேபிளுக்கு முன் ஒரு பெட்டிக்கடையை கொண்டு வந்து வைப்பார்கள். தேன் மிட்டாய், கம்மர்கட், கடலை மிட்டாய், சோம்பு, பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பெல்லாம் இருக்கும்.

எல்லாம் சரி... விலை..? ஒரு சாப்பாடு 550 ரூபாய். கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், சாப்பிட்டு முடித்ததும் விலை ஒரு பொருட்டாக இல்லை. சைவ விரும்பிகளுக்கும் ஒரு காம்போ வைத்திருக்கிறார்கள். அதிலும் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. 400 ரூபாய். இவ்வளவு தேவையில்லை என்றால், 150 ரூபாய்க்கு அசைவச் சாப்பாடு சாப்பிடலாம்.  சாதம், குழம்புகளோடு சிக்கன் வறுவலும் தருவார்கள்.

சோறு முக்கியம் பாஸ்! - 35உணவகத்தின் உரிமையாளர்கள் சி.என்.சேகர், காளிதாஸ், சதீஷ்குமார் மூவரும் உணவுப்பிரியர்கள். ஊர்  ஊராகப் போய் ருசி பார்ப்பதில் தொடங்கி, ஒரு உணவகம் நடத்தும் முடிவில் வந்து நின்றிருக்கிறார்கள். காளிதாஸுக்கு சமையல் அனுபவம் உண்டு. இன்றும் கிச்சன் இவருடைய நிர்வாகத்தில்தான் இருக்கிறது.

“உணவகத்தைத் தேடி வருபவர்கள் நல்ல உணவை மட்டுமே எதிர்பார்த்து வருவதில்லை. அமைதியான சூழல், நல்ல உபசரிப்பு, நிம்மதியாகக் கொஞ்சநேரம் உரையாடல் என நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எல்லாவற்றையும் நிறைவு செய்யும் வகையில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த உணவகத்தை ஆரம்பித்தோம். நான்கு வருடங்களுக்குள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. உடலைப் பாதிக்கும் எந்த ரசாயனத்தையும் உணவில் அனுமதிப்பதில்லை. செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்துகிறோம்...” என்கிறார் உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சி.என்.சேகர்.

 நல்ல உணவு... மனதுக்கு இதமான சூழல்... கொண்டாடலாம்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படம் தி.விஜய்

சோறு முக்கியம் பாஸ்! - 35

“பாலில் கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?”

சோறு முக்கியம் பாஸ்! - 35"பா
லில் தண்ணீர், சோப்புத்தூள், ஸ்டார்ச் ஆகிய மூன்று பொருள்கள் கலப்படம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. அரிதாக, ஃபார்மலின் போன்ற ரசயானங்களும் சேர்க்கப்படுவதுண்டு. பாலில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டறிய, சாய்வான தளத்தில் ஒரு சொட்டுப் பாலை விட வேண்டும். கலப்படமில்லாத பால், அப்படியே நிற்கும் அல்லது மெதுவாக வழியத் தொடங்கும். வழிந்து பாதையில் வெள்ளை நிறத் தடம் இருக்கும். தண்ணீர் சேர்க்கப்பட்ட பால், விட்ட உடனேயே வழிந்துவிடும். தடம் எதுவும் இருக்காது. 'பாலில் சோப்புத்தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு டம்ளரில் சிறிதளவு பால் எடுத்து, அதே அளவு தண்ணீர்சேர்த்து மூடி, நன்றாகக் குலுக்க வேண்டும். சோப்புத்தூள் கலக்காத பாலில், சிறிதளவு மட்டுமே நுரை இருக்கும். சோப்புத்தூள் கலந்த பால் என்றால் மேற்பரப்பில் அதிகம் நுரை தேங்கும். சில நேரங்களில், பால் கெட்டியாகத் தெரிய மக்காச்சோள மாவு சேர்ப்பார்கள். சிறிதளவு பாலில் கொஞ்சம் உப்பைப்போட்டுக்  கலக்க வேண்டும். பால் நீல நிறத்துக்கு மாறினால், மக்காச்சோள மாவு கலந்துள்ளது என்று பொருள்."  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு