Published:Updated:

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்
பிரீமியம் ஸ்டோரி
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

Published:Updated:
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்
பிரீமியம் ஸ்டோரி
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

ட்டிறைச்சி, உலகின் பழைமையான உணவுகளில் ஒன்று. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய ஆசியப் பகுதிகளில் மனிதர்கள் ஆட்டின் தோலை உரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உணவுக்காக மட்டுமல்ல, அதன் தோல்தான் உடையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் ஆட்டிறைச்சி உண்ணப்பட்டுவருகிறது.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

பண்டைய கிரேக்கர்கள், மூன்று காரணங்களுக்காகக் கடவுளுக்கு விலங்குகளை பலி கொடுத்தார்கள். கடவுள்களுக்கு நன்றி சொல்ல, மரியாதை செய்ய, `கடவுளே, நீ இதை நடத்திக்கொடு!’ என்று கோரிக்கைவைக்க.

ஆடுகள், செம்மறியாடுகள், பன்றிகள், பறவைகள், மாடுகள் போன்றவை கிரேக்கர்களால் பலியிடப்பட்டன. அதில் ஆடுகளே அதிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

பலியிடப்போகும் ஆட்டை,  ஆலயத்துக்கு ஊர்வலமாக இழுத்து வருவார்கள். ஆட்டை பலிகொடுக்க விரும்புபவர்கள் தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்வார்கள். ஆட்டின் மீதும் நீர் தெளித்துப் புனிதப் படுத்துவார்கள். மதகுரு, பலிக்கான காரணத்தைச் சொல்லி உரத்த குரலில் பிரார்த்தனைகளை மேற்கொள்வார். பிறகு, ஒரே போடு! பலியிடப்பட்ட ஆட்டின் கறி, துண்டுகளாக்கப்படும். அதன் மீது திராட்சை ரசம் தெளிக்கப்படும். பிறகு கடவுளுக்குப் படைக்கப்படும். அடுத்து? வேறென்ன, சமைத்து சந்தோஷமாகச் சாப்பிட்டு ஏகாந்தமாக இருந்தார்கள்!

பண்டைய ரோமானியர் மற்றும் எகிப்தியர்களின் வழிபாடுகளிலும் கடவுளுக்கு விலங்குகளை பலிகொடுக்கும் இதேபோன்ற சடங்குகள் இருந்திருக்கின்றன. பழைய ஏற்பாட்டின் பல இடங்களில், ஆடு, ஆட்டுக்குட்டியை பலிகொடுத்தல், ஆட்டிறைச்சியை உண்ணுதல் குறித்த குறிப்புகளைக் காணலாம். தேவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஆபிரகாம் தனது மகனான ஈசாக்கை பலி கொடுக்கத் துணிந்தார். பிறகு தேவனின் தூதுவன் தோன்றி, பலியிடுதலைத் தடுத்து, ஆபிரகாமின் விசுவாசத்தை மெச்சினார். மகிழ்ந்த ஆபிரகாம், அங்கே ஒரு புதரில் கொம்புக்குள் சிக்கியிருந்த செம்மறி ஆட்டைப் பிடித்து, தேவனுக்குப் பலிகொடுத்தார் என்பது ஈசாக் பிழைத்த கதை. ஆபிரகாம்தான் இஸ்லாமியர்களுக்கு இப்ராஹிம். ஈசாக்தான் இஸ்மாயில். இப்ராஹிம் தனது மகனுக்குப் பதிலாக ஒரு செம்மறி ஆட்டை பலியிடச் செய்ததன் நினைவாக, ஹஜ் புனிதப் பயணத்தின் இறுதிக் கடமையாக, இறைவனுக்குப் பலியிடுதல் நிகழ்த்தப்படுகிறது. அதற்கு ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகின்றன. இப்ராஹிமின் தியாகத்தைப் போற்றும் திருநாளாகக் கொண்டாடப்படும் பக்ரீத் அன்று, இந்தியாவில் பெரும்பாலும் ஆடுகளே அதிக எண்ணிக்கையில் குர்பானி கொடுக்கப்படுகின்றன.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

Lamb என்ற வார்த்தை, `Lambiz’ என்ற ஜெர்மானிய வார்த்தையிலிருந்து வந்தது. இதை பிரெஞ்சில் `Agneau’ என்று சொல்கிறார்கள். ஒரு வயது வரையிலான ஆட்டுக்குட்டி Lamb. ஒரு வயதைக் கடந்துவிட்டால் Hogget. நன்கு வளர்ந்த ஆட்டின் இறைச்சிதான் Mutton. பழைய செல்டிக் மொழியில `Multo’ என்றால் ஆடு என்று அர்த்தம். 12-ம் நூற்றாண்டில் `Mouton’ என்ற பிரெஞ்சு வார்த்தை ஆட்டை, அதன் இறைச்சியைக் குறிக்கப் பயன்பட்டது. இந்த வார்த்தைகளிலிருந்து மருவி வந்ததுதான் `Mutton’ என்ற இன்றைக்குப் புழங்கப்படும் வார்த்தை.

கிறிஸ்துவுக்குப் பிறகான காலத்திலிருந்தே ஆடு வளர்ப்பு என்பது உலகின் பல பகுதிகளில் முக்கியமான தொழிலாக மாறியது. ஆடு வளர்த்தால் இறைச்சி கிடைக்கும், பால் கிடைக்கும், ஆட்டுத்தோல் கிடைக்கும், ஆட்டுப்புழுக்கை என்ற உரம் கிடைக்கும் என, ஆடு வளர்ப்பின் பலன்களை மனிதன் முழுமையாக உணர ஆரம்பித்தான்.

16-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை, வடஅமெரிக்கக் கண்டத்தில் ஆடுகளே கிடையாது என்பது ஆச்சர்யமான உண்மை! கி.பி.1519-ல்தான் Hernan Cortes என்ற தளபதியின்கீழ் வடஅமெரிக்கக் கண்டத்துக்குக் கிளம்பிய ஸ்பெயின் வீரர்கள், கூடவே ஆடுகளையும் உணவுக்காகக் கப்பலில் ஏற்றிச்சென்றிருக்கிறார்கள். 1800-க்குப் பிறகுதான் ஆடுகளை மந்தை மந்தையாக வளர்க்கும் கலாசாரம் வட அமெரிக்கக் கண்டத்தில் பரவியது.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

இந்தியர்கள், ஆதியிலிருந்தே ஆட்டிறைச்சியின் சுவைக்கு அடிமையாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆட்டை பலிகொடுத்தல் என்பது வேதங்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிபாட்டுமுறை. ராமாயணம் சொல்லும் தகவலின்படி, தசரத மன்னன், வழிபாட்டுக்காக ஆடுகளை பலி கொடுத்தது தெரியவருகிறது. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோமேஸ்வர அரசன் எழுதிய `மனசொல்லஸா’ என்ற இலக்கிய நூலில் ஆட்டிறைச்சி சமைப்பது குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. வெண்டைக்காய், முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, பருப்புகளோடு சேர்த்து ஆட்டிறைச்சி சமைக்கலாம் என்று சொல்லும் அந்த நூல், அந்தப் பதார்த்தத்துக்கு `கவாசண்டி’ என்று பெயர் அளித்துள்ளது.

`இந்தியர்கள், ஆட்டை வெட்டி அதன் இறைச்சியை உடனே சமைத்து உண்கிறார்கள். மீதம் இருக்கும் இறைச்சியை உப்பு சேர்த்துப் பதப்படுத்துகிறார்கள்’ என்பது 7-ம் நூற்றாண்டு சீனப்பயணியான யுவான் சுவாங்கின் பதிவு.
13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய அறிஞரான அமீர் குஸ்ரோ சொல்லும் குறிப்புகளின்படி, இஸ்லாமியப் பிரபுக்கள் உண்ணும் முக்கிய உணவாக ஆட்டிறைச்சி இருந்திருக்கிறது. Yakhni என்பது, முகலாய மன்னர்கள் விரும்பிச் சாப்பிட்ட தயிரில் சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சிப் பதார்த்தம். 17-ம் நூற்றாண்டில் முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ்காரரான எட்வர்டு டெரி, முகலாய அரண்மனையில்தான் உண்ட சுவையான ஆட்டிறைச்சி பற்றி உமிழ்நீர் வழிய குறிப்பு எழுதிவைத்திருக்கிறார். எலிசபெத் ஃபே, 1780-ல் கொல்கத்தாவுக்கு வந்த பிரிட்டிஷ் பெண்மணி. தான் உண்ட விருந்து ஒன்றில் ரொட்டிக்குள் திணிக்கப்பட்ட ஆட்டிறைச்சி (Mutton-Pie) மிகவும் சுவையாக இருந்ததாகக் கடிதம் எழுதியிருக்கிறார்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

பல மதங்களில், கடவுளுக்குப் பலியிடப் படும் புனிதப்பொருளாக ஆடுகள் இருந்து வருகின்றன. ஊன், கறி, புலவு என்ற சொற்களை, சங்க இலக்கியப் பாடல்களில் காணலாம்.

மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் கைமான் கொள்ளுமோ?

இது புறநானூற்று வரி. `மை’ என்றால் ஆடு. `ஊன்’ என்றால் இறைச்சி. `விழா எதுவும் இல்லையென்றாலும் மிகுதி யாக ஆட்டிறைச்சியை உண்ணும் சுற்றத்தினரைக்கொண்டவன், அதியமான் நெடுமான் அஞ்சியின் மகனான அதியமான் பொகுட்டெழினி’ என்பது இந்த வரிகளுக்கான சிறு விளக்கம்.

விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப...

இதுவும் புறநானூற்று வரிதான். `விடை’ என்றால் ஆட்டுக்கிடா என்று பொருள்.

நெய் குய்ய ஊன் நவின்ற பல்சோற்றான்... `வறுத்த இறைச்சியும் நெய்ச்சோறும்’ என்பது இந்தப் புறநானூற்று வரியின் பொருள்.

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்...

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

இது திருமுருகாற்றுப்படையில் புலவர் நக்கீரர் பாடிய வரிகள். `குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனுக்கு விழா எடுத்து, தங்கள் வழக்கப்படி ஆடு வெட்டி, அதன் குருதியை திணை அரிசியில் கலந்து, பூக்கள் விரவி தூவி வழிபட்டார்கள். ஆட்டின் தசைகளை வெட்டிப் படைத்தும் பூஜை போட்டார்கள்’ என்பது இதன் விளக்கம்.

இப்படி, பழந்தமிழருக்கு ஆட்டிறைச்சி மீதான பிரியம் பற்றி அகநானூறு, பரிபாடல், நற்றிணை என்று பல இலக்கியங்களும் காட்சிப்படுத்தியுள்ளன.

தேவனின் ஆட்டுக்குட்டி

சாத்தான், எந்த விலங்கின் வடிவத்தில் வேண்டுமானாலும் வந்துவிடுவான். ஆனால், அவன் ஒருபோதும் ஆட்டுக் குட்டியின் வடிவத்தில் வரவே மாட்டான். ஏனென்றால், ஆட்டுக்குட்டி என்பது இறைவனின் வடிவம். இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அதனால் காலம் காலமாக கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளின் அடையாளமாக ஆட்டுக்குட்டியின் இறைச்சி இருக்கிறது. மக்களுக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்த இயேசு, சிலுவையில் அறையப்பட்டு... மரித்து... பிறகு உயிர்த்தெழுந்த தினத்தில், தியாகத்தின் அடையாளமாக உணவில் ஆட்டிறைச்சி முக்கியமானதாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

பாஸ்கா (Pasqua) என்பது, லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளில் ஈஸ்டர் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வார்த்தை. இத்தாலியர்களைப் பொறுத்தவரை இந்த பாஸ்கா விருந்தில் ஆட்டிறைச்சி என்பது மிக முக்கியமான ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஈஸ்டர் இரவு விருந்தில் போப்பின் உணவில் தீயில் வாட்டிச் சமைக்கப்பட்ட முழு ஆட்டுக்குட்டி இடம்பெற்றுவருகிறது. காலப்போக்கில் அது துண்டுகளாக வெட்டி நன்றாக ரோஸ்ட் செய்யப்பட்ட ஆட்டிறைச்சியாக மாறியிருக்கிறது.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

ரஷ்யாவின் சில பகுதிகளிலும் போலந்திலும் வெண்ணெயால் ஆன ஆட்டுக்குட்டியின் உருவத்தைச் செய்து (Butter Lamb), அதை ஈஸ்டர் விருந்தில் உட்கொள்ளும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஈஸ்டர் அன்று வெளியில் கிளம்பும்போது கண்ணில் ஆட்டுக்குட்டிபட்டால் அது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பதும் மக்களின் நம்பிக்கை.

கிரீஸில் ஈஸ்டர் அன்று சமைக்கப்படும் ஆட்டிறைச்சியின் பெயர், Souvla. சிறிய குழிகளை வெட்டி, அதில் நிலக்கரி அல்லது மரக்கரியை நிரப்பி எரித்து, அந்தத் தணலில் ஆட்டிறைச்சியை ஒரு நீண்ட குச்சியில் தொங்கவிட்டு, வாட்டி உண்பது அவர்களது பாரம்பர்ய வழக்கம். இன்றைக்கும் குடும்பம் குடும்பமாக ஒன்றுசேர்ந்து Souvla சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.யூதர்கள் தங்களுடைய `பாஸ்-ஓவர்’ பண்டிகைக்காகச் சமைக்கும் உணவில் எலும்புடன்கூடிய ஆட்டுக்குட்டியின் தொடைக்கறிதான் பிரதானமானது. ஆஸ்திரேலியர்களின் ஞாயிறு விருப்ப உணவு ஆட்டுக்குட்டியின் தொடைக்கறி ரோஸ்ட். இது ஆஸ்திரேலியாவின் தேசிய உணவும்கூட. நியூஸிலாந்துகாரர்களுக்குப் பிடித்தமானது ஆட்டிக்குட்டியின் கல்லீரல். மெக்ஸிகோ மக்கள், ஆட்டுக்குட்டியின் இறைச்சியை மக்குவே இலைகள்கொண்டு எரித்து, சமைத்துச் சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய கிறிஸ்துமஸ் விருந்திலும் ஆட்டிறைச்சி பிரதானமானது. திருமண விருந்துகளில் மட்டன் பிரியாணியின் மணம் தனித்துவமானது. இன்றைக்கும் `கிடா வெட்டு’ என்றால், ஊரே அல்லோல கல்லோலப்படுகிறது. கிடா வெட்டுத் திருவிழாவில் நடக்கும் பஞ்சாயத்துகள் தலைவெட்டு வரை போவதும் சகஜம். சிறுதெய்வ வழிபாட்டில், குறிப்பாக சுடலை மாடன் வழிபாட்டில் ஆடு பலி கொடுப்பது என்பது பிரதானம். அதேபோல சென்ற நூற்றாண்டில் ஆட்டுக்கறியின் சுவையைப் பலதரப்பு மக்களுக்கும் அள்ளிக்கொடுத்தவை முனியாண்டி விலாஸ்கள்தாம்!

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

ரெங்கையா முருகன் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில், முனியாண்டி விலாஸில் ஆட்டெலும்பை வைத்து ரசம் எப்படித் தயாரித்தார்கள் என்பதைச் சுவைபட விவரித்துள்ளார்.

`அநேக ஹோட்டல்களில் ஆட்டுக்கறியின் எலும்பில் மசால் சேர்த்து விற்றுவிடுவர். முனியாண்டி விலாஸ் உணவகங்களில் மட்டும் எலும்புகளை நன்றாகக் கொத்திப்போட்டு நொறுக்கித் தண்ணீரில் ஊறப்போட்டு, நன்கு வைத்து வடிகட்டுவார்கள். வடிகட்டிய மஜ்ஜை கலந்த தண்ணீருடன் தக்காளியை அதிகமாகச் சேர்த்து ஈயம் பூசிய சட்டியில் ரசம் வைப்பார்கள். இந்த ரசத்தை மட்டுமே தினமும் பார்சல் வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஏராளம்.’

உலகமெங்கும் விரும்பிப் பருகப்படும் ஒரு பானம், ஆட்டுக்கால் சூப். தமிழகத்தில் பல ஊர்களில் சாலையோரங்களில் மாலைநேர ஆட்டுக்கால் சூப் கடைகள் பரபரவென இயங்குவதைக் காணலாம். தஞ்சையில் ஆட்டுக்கால் பாயா பிரபலம். இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா தமிழர்கள் விரும்பும் உன்னத ஜோடி. அதுவும் தஞ்சை கீழவாசலில் நடுக்கடை பாவா ஹலால் உணவகத்தை ஆரம்பித்த பக்ரூதீன் பாவாதான் இடியாப்பத்தோடு ஆட்டுக்கால் பாயாவுக்கு நிக்காஹ் முடித்து வைத்தார் என்பது வரலாறு.

`ஆடு வளர்க்கிறது அழகு பார்க்கிறதுக்கில்ல. கோழி வளர்க்கிறது கொஞ்சுறதுக்கில்ல. ஆடு கொழுத்தால் இடையனுக்கு லாபம். ஆடு பகை, குட்டி உறவு. ஆடு அடித்த வீட்டில் நாய் காத்தாற்போல. ஆடு அடித்தால் அந்தப் பக்கம்; அகப்பை தட்டினால் இந்தப் பக்கம். ஆடு அடித்தாலும் அன்றைக்குக் காணாது. மாடு அடித்தாலும் மறுநாளைக்குக் காணாது...’ - இப்படி நாம் சகஜமாகப் புழங்கும் பழமொழிகளெங்கும் ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆடுகளை நாம் மேய்ந்துகொண்டிருக்கிறோம்!

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

கோலாப்பூரும் புதுச்சேரியும்

மகா
ராஷ்டிராவில் அமைந்துள்ள கோலாப்பூர் மக்களின் உணவுக் கலாசாரம் காரசாரமானது. அதில் ஆட்டுக்கறியும் அதைச் சார்ந்த உணவு வகைகளும் பிரதானமானவை. காரத்துக்குக் காரணம், கோலாப்பூர் மக்கள் தங்கள் சமையலுக்கென பிரத்யேகமாகத் தயாரித்து வைத்துக்கொள்ளும் மசாலாத்தூள்.

Tambada Rassa - இது மிளகாய் வத்தல், மட்டன், கோலாப்பூர் மசாலா எல்லாம் சேர்த்துச் சமைக்கும் கோலாப்பூர் ஸ்பெஷல் ரசம். Pandhara Rassa - மட்டனுடன் லவங்கப்பட்டை, இஞ்சி, பூண்டு, மல்லி, தேங்காய்ப்பால் எல்லாம் சேர்த்து செய்யப் படும் இன்னொரு வகை ரசம். இந்த இரண்டு ரசங்களில் ஏதாவது ஒன்றாவது கோலாப்பூர் மக்களின் அன்றாட உணவில் இடம்பெறுகிறது.

கோலாப்பூர் சுக்கா மட்டன், தனித்துவமான சுவைகொண்டது. Matnache Lonche - இது ஆட்டுக்கறிகொண்டு செய்யப்படும் ஊறுகாய். Rakti - இது ஆட்டு ரத்தம்கொண்டு செய்யப்படும் ரொட்டிக்கான சைடிஷ். இப்படி கோலாப்பூரில் ஆட்டுக்கறி சார்ந்த உணவுகள் அநேகம்.

அதேபோல பிரெஞ்சு உணவுக் கலாசாரமும், நம் சமையல் கலாசாரமும் ஒன்றிணைந்த புதுச்சேரி இந்தோ-பிரெஞ்சு பாணி சமையலில் ஏகப்பட்ட மட்டன் உணவுகள் புழக்கத்தில் இருக்கின்றன. சுடல் - புதுச்சேரி மக்களின் பாரம்பர்ய ஆட்டுக்கறி சமையல் முறை. சுடுகறி என்றும் இதைச் சொல்வார்கள். Rassul - இது ஆட்டுக்கறியை வைத்துச் செய்யப்படும் சமோசா. மாலை நேர சிற்றுண்டி. Petits Pates - இது ஆட்டுக்கறிகொண்டு சமைக்கப்படும் பிரெஞ்சு பாணி உணவு. பிரதான உணவுக்கு முன் பரிமாறப்படும் ஸ்டார்ட்டர். Mouton Aux Pettis Pois (மட்டன் பச்சைப்பட்டாணி கறி) - பாரம்பர்யமான இந்தோ-பிரெஞ்சு பதார்த்தம். இதை, பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் சமைக்கிறார்கள். ரொட்டி, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள இதைப் பயன்படுத்து கிறார்கள். புதுச்சேரி ரோல் என்பதும் ஆட்டுக்கறி கொண்டு செய்யப்படுவதுதான். பிறந்த நாள், ஞானஸ்தானங்களில் பரிமாறப்படும் பாரம்பர்யமான பதார்த்தம்.

கவாப்பு என்றால் Kebab. இந்தோ-பிரெஞ்சு உணவுக் கலாசாரத்தில் ஏகப்பட்ட கவாப்பு வகைகள் இருக்கின்றன. அதில் Cotelettes என்ற ஆட்டுக்கறி கவாப்பும் முக்கியமானது. ஆட்டுக்கறி அஸாத் என்பதும் இந்தோ-பிரெஞ்சு பாரம்பர்ய உணவே. கறி பக்கோடா - காரைக்கால் மரைக்காயர்கள் வீட்டில் பண்டிகைக் காலத்தில் ஆட்டுக்கறிகொண்டு செய்யப்படும் பதார்த்தம். இதேபோல விசேஷக்காலங்களில் மரைக்காயர் வீடுகளில் ஆட்டுக்கறியின் பிரதான பகுதிகளை பிரியாணிக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். எலும்பு மற்றும் இதர பகுதிகளைக்கொண்டு ஆட்டுக்கறி தால்சா தயாரித்து, தொட்டுக்கப் பரிமாறுவார்கள

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism