Published:Updated:

கோழி முந்திரி வறுவல், கோழி சுக்கா வறுவல்.. டேஸ்ட்டியான நான்வெஜ் ரெசிப்பிகள்!

வெ.வித்யா காயத்ரி
கோழி முந்திரி வறுவல், கோழி சுக்கா வறுவல்.. டேஸ்ட்டியான நான்வெஜ் ரெசிப்பிகள்!
கோழி முந்திரி வறுவல், கோழி சுக்கா வறுவல்.. டேஸ்ட்டியான நான்வெஜ் ரெசிப்பிகள்!

விடுமுறை தினத்தை சுவையாகவும், டேஸ்ட்டியாகவும் கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் சுவையான நான்வெஜ் ரெசிப்பிகளை செய்வதற்கு கற்றுத் தருகிறார், சென்னை ஜி.எல்.எம் மெரிடியன் ஹோட்டல்  செஃப் நாச்சியப்பன்.

1. கோழி முந்திரி வறுவல்

தேவையானவை:

சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
முந்திரி – 10
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.  இதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, சிக்கன் துண்டுகள் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு வேக விடவும். சிக்கன் துண்டுகள் வெந்து தண்ணீர் வற்றிய பின் முந்திரி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

2. கோழி சுக்கா வறுவல்

தேவையானவை:

எலும்பில்லாத சிக்கன் கால் – 250 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 3
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, சிக்கன், உப்பு சேர்த்து வதக்கி வேகவிடவும். நீர் வற்றி சிக்கன் துண்டுகள் வெந்த பிறகு மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும். 

3. மிரப்பாகயா கோடி 

(ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்)

தேவையானவை:

சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் மிருதுவாக வெந்த பிறகு பச்சை மிளகாய் சாஸ், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

4. ஆந்திரா கோடி பிரியாணி

தேவையானவை:

சிக்கன் – அரை கிலோ 
(துண்டுகளாக நறுக்கவும்)
சீரக சம்பா அரிசி – அரை கிலோ
பச்சை மிளகாய் – 8 
(நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 2 
(சிறிய சதுர துண்டுகளாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா – ஒரு கட்டு (ஆய்ந்து வைக்கவும்)
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
பால் – கால் லிட்டர் 
(காய்ச்சி ஆறவைக்கவும்)
தயிர் – 100 மில்லி
எண்ணெய் – 50 மில்லி
நெய் – 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்  – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், தக்காளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.