மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ் - 62

சோறு முக்கியம் பாஸ் - 62
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ் - 62

படங்கள்: சு.வெங்கடேசன்

110 டிகிரிக்கு மேல் கொளுத்தி யெடுக்கிறது வெயில். சாலை யில் கால் வைக்க முடியவில்லை. அப்படியொரு அனல். மக்கள் நடமாட்டமே குறைந்து போயிருக்கிறது. வேலூர், காட்பாடி ரவுண்டானாவில், காமராஜர் சிலைக்கு நேர் பின்புறத்தில் இருக்கிற அந்த உணவகத்தில் எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கின்றன. வெளியே பத்துக்கும் மேற்பட்டோர் சாப்பிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

சோறு முக்கியம் பாஸ் - 62

இத்தனைக்கும் அது அசைவ உணவகம். சிமென்ட் ஷீட்டால் வேயப்பட்டிருக்கிறது. உள்ளே ஒன்றோ, இரண்டோ காற்றாடிகள் சாவகாசமாகச் சுழல்கின்றன. வியர்க்க விறுவிறுக்க ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பை பையாக பார்சல் பறந்து கொண்டிருக்கிறது.

அந்த உணவகத்துக்குப் பெயர்ப்பலகைகூட இல்லை. ஆனால், வேலூரில் “டெய்லர் மெஸ்  எங்கே இருக்கிறது” என்று எங்கு நின்று கேட்டாலும் இந்த உணவகத்துக்கு வழிகாட்டுகிறார்கள். ஒரு காலத்தில் இந்த இடத்தில் டெய்லர் கடை நடத்தியிருக்கிறார் பார்த்தசாரதி. ஒருகட்டத்தில் தொழில் நசிந்துவிட, அப்படியே உணவகமாக்கிவிட்டார். நியூமராலஜியெல்லாம் பார்த்து, ‘ப்ரூட்டி ரெஸ்டாரன்ட்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது யார் மனதிலும் இறங்கவில்லை. `டெய்லர் மெஸ்’தான் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

சோறு முக்கியம் பாஸ் - 62

“அப்போ ரொம்பக் கஷ்டம் தம்பி... சாப்பாட்டுக்கே சிரமப்பட்டோம். நாலு பிள்ளைங்க வேற. இப்போதான் ஜாக்கெட்டுக்கு 400-500ன்னு வாங்குறாங்க. என் வீட்டுக்காரர் தச்ச காலத்துல 3 ரூபா கேட்டா பேரம் பேசுவாங்க. இனிமே, டெய்லர் தொழிலை வெச்சுக் காலம்தள்ள முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ, மெஸ்தான் நினைவுக்கு வந்துச்சு. எங்க வீட்டுல மொத்தம் 16 பிள்ளைங்க. நான் பதினஞ்சாவது பிள்ளை. வீடே ஹோட்டல் மாதிரிதான் இருக்கும். பெரிய பெரிய அண்டாவை வெச்சுதான் சமைப்போம். நமக்குப் பழகின விஷயமாச்சேன்னு ஏதோ ஒரு தைரியத்துல இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சோம். இதோ முப்பது வருஷம் ஓடிப்போச்சு...” சுவாரஸ்யமாக மெஸ்ஸின் வரலாறு சொல்கிறார் பார்த்தசாரதியின் மனைவி கீதா.

முகப்பில் ஐந்து பேர் அமரலாம். உள்ளே பத்து பேர். நீளமான இருக்கைகள் போட்டிருக்கிறார்கள். ஒரு பகுதியைத் தடுத்து சமையலறை ஆக்கியிருக்கி றார்கள். காலை 8 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை காலைச் சிற்றுண்டி. மதியம் 1 மணிக்குத் தொடங்கி 3 மணி வரை சாப்பாடு. இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை இரவுச் சிற்றுண்டி. மூன்று வேளையுமே கூட்டம் அள்ளுகிறது. முகத்தில் சோர்வைக் காட்டாமல் புன்னகையோடு பரிமாறிக்கொண்டி ருக்கிறார்கள் கீதாவும் பார்த்தசாரதியும்.

சாப்பாடு 80 ரூபாய். கூட்டு பொரியலோடு, சாம்பார், காரக்குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன்குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், அரிசி வற்றல். வீட்டில் சாப்பிடுவதுபோல இருக்கிறது. வாழைத்தண்டு, பாகற்காய் என கூட்டு, பொரியலே அக்கறையோடு செய்திருக்கிறார்கள். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பில் தக்காளி தனித்து ருசிக்கிறது. காரமே தெரியவில்லை. மீன்குழம்பும் பிரமாதம். லேசான புளிப்பும் மிதமான காரமுமாக இருக்கிறது. பொடிமீன்களைப் போட்டுக் குழம்பு வைத்திருக்கிறார்கள். அப்பளத்துக்குப் பதில் பெரிய அரிசி வற்றல் வைக்கிறார்கள். வித்தியாசமாக இருக்கிறது.

சோறு முக்கியம் பாஸ் - 62

“பொதுவா வேலூர்ல எல்லாக் காலமும் வெயில் அதிகமிருக்கும். அதனால, மிளகாய் அதிகம் பயன்படுத்துறதில்லை. மிளகுதான் போடுவோம். அதுவும் அளவாதான் போடுவோம். தக்காளி காரத்தைக் கட்டுப்படுத்தும். வெங்காயத்தையும் தக்காளியையும் அரைச்சுச் சேத்திருவோம். அதிகாலையில மெஸ்ஸுக்கு வந்துட்டா ராத்திரி தூங்கத்தான் வீட்டுக்குப் போவோம். எங்களுக்கும் இங்கேதான் சாப்பாடு. சிலபேரு, ‘அந்தப்பவுடர் போடுங்க’, ‘இந்தப் பவுடர் போடுங்க’ன்னெல்லாம் சொல்வாங்க. நாங்க, எங்க சொந்த மசாலா தவிர்த்து வேறு எதையும் பயன்படுத்துறதில்லை. வேலூர் வெயிலுக்கு தேங்காய் ஆகாது. அதனால எதுக்கும் தேங்காய் போடுறதில்லை...” என்கிறார் கீதா.

தொடுகறி வகைகளும் அதிகமில்லை. சிக்கன், மட்டன், மீன், இறால், முட்டை... அவ்வளவுதான். இவைகூட இரண்டு மணிக்குள் சென்றால்தான் வாய்க்கும். சிக்கன், மட்டனை குழம்போடு வாங்கிக்கொள்ளலாம். வறுத்துக் கேட்டாலும் தருவார்கள். சிக்கன் 100 ரூபாய். மட்டன் 140. வறுவலென்றால் 10 ரூபாய் அதிகம்.

நிறைய பூண்டு வெங்காயம் போட்டு வறுத்த இறால் 160 ரூபாய். செமி கிரேவியாக இருக்கிறது. அப்படியே கிண்ணத்தைச் சோற்றில் கவிழ்க்கிறார்கள். வஞ்சிரமீன் வறுவல் செமையாக இருக்கிறது. மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து மீன் விலை முன் பின் இருக்குமாம். முட்டையில் கலக்கி நன்று. மட்டன் கிரேவியோடு முட்டையைக் கலந்து முக்கால் வேக்காட்டில் குவியலாக அள்ளி வைக்கிறார்கள்.

“ஆரம்பத்துல நண்டு, ரத்தப்பொரியல், காடை வறுவல்னு  நிறைய தொடுகறிகள் கொடுத்தோம். அப்போ புள்ளைங்க உதவிக்கு இருந்தாங்க. எங்களுக்கும் வயசு இருந்துச்சு. இப்போ முடியலே. பிள்ளைகளெல்லாம் வேற வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. எல்லாத்தையும் வாங்கி சுத்தம் செஞ்சு சமைக்கிறது பெரிய வேலையா இருக்கு. இதுவரைக்கும் கடைக்கு ஒரு போர்டுகூட வெச்சதில்லை. ஆனா, டெய்லர் கடைன்னு தேடிக்கண்டுபிடிச்சு வர்றாங்க. அவங்களை ஏமாத்தாம திருப்திபடுத்தி அனுப்பினாப் போதும்னு ஆகிப்போச்சு. முன்னமாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியலே. டெய்லர் கடையில சாப்பிட்டா வயித்துக்கு எந்தத் தொந்தரவும் வராதுன்னு ஒரு நம்பிக்கை... அதுதான் இதுவரைக்கும் சம்பாதிச்ச பேரு...” என்கிறார் பார்த்தசாரதி.

சிறிய உணவகம்தான். ஆனால், சுத்தமாக இருக்கிறது. அன்பாக உபசரிக்கிறார்கள். சாப்பிட்ட பிறகு திணறல் இல்லை. நல்லுணவு விரும்புபவர்கள், எந்த மனத்தடையும் இல்லாமல் வேலூர் டெய்லர் மெஸ்ஸுக்குச் செல்லலாம்.

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன்

தினமும் தேன் சேர்த்துக்கொள்வது நல்லதா?

சோறு முக்கியம் பாஸ் - 62

“சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் தினமும் தேன் சேர்த்துக்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும். பால், பழச்சாறு, பிளாக் டீ போன்ற பானங்களில் வெள்ளைச் சர்க்கரைக்குப்  பதிலாகத் தேன் கலந்து அருந்தலாம். தேனில் ஏராளமான என்சைம்கள் இருக்கின்றன.

சோறு முக்கியம் பாஸ் - 62

செரிமானக் கோளாறு போன்ற குடல் தொடர்பான எல்லா பாதிப்புகளையும் இது சரிசெய்யும். தேனுடன் இஞ்சி மிளகு கலந்து ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை சிறிதளவு சாப்பிட்டால், இருமல், சளி பாதிப்புகள் சரியாகும். தூக்கம் வராமல் தவிப்பவர்கள், இரவு தூங்கப் போவதற்கு முன்னால், ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவது நல்லது. பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.”