Published:Updated:

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்
பிரீமியம் ஸ்டோரி
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

Published:Updated:
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்
பிரீமியம் ஸ்டோரி
சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

‘தலை கிர்ர்ருன்னு வருது. ஒரு சோடா குடுப்பா…’, ‘மேடையிலே சிங்கமென கர்ஜிக்கும் தங்கத் தலைவருக்கு… சோடா சாப்டுங்க தலைவரே!’, ‘என்கிட்ட வெச்சுக்கின, சோடா பாட்டில் பறக்கும்!’ - இப்படி இந்த சோடாவானது நம் அன்றாட வாழ்வோடு கலந்தது. அதுவும் ‘கோலி சோடா’ என்பது தனித்துவமான அடையாளம்கொண்டது. சரி, இந்தச் சோடாவின் வரலாறு என்ன?

சோடா என்றால் கார்பனேற்றம் செய்யப்பட்ட நீர். அதாவது, நீருடன் கரியமில வாயு எனும் கார்பன் டை ஆக்சைடைக் கலந்து, அதில் வாயுக்குமிழ் உண்டாவதற்கேற்ப கார்பனேற்றப்பட்ட சுவைமிகுந்த நீர் என்று விளக்கம் சொல்லலாம்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

ஜோசப் பிரிஸ்ட்லி - பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேதியியலாளர். பல வாயுக்களைக் கண்டுபிடித்தவர். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரத்துக்கு அருகில் ஜோசப் வாழ்ந்தார். அந்தப் பகுதியில் பார்லியைக்கொண்டு பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கே ஈஸ்ட் மூலமாக பார்லியைப் புளிக்கவைத்து, அதைக் காய்ச்சிப் பதப்படுத்தி, பின் அந்தக் கலவையைப் பெரிய பெரிய பீப்பாய்களில் சேமித்துவைத்தார்கள். நாள்பட நாள்பட இந்த ஈஸ்ட், பார்லிக் கலவை கரியமில வாயுவை வெளியிடும். அந்தக் கரியமில வாயுவானது பீப்பாய்களில் புகைமூட்டம் போல சேர்ந்திருக்கும்.

கி.பி 1768-ம் ஆண்டில் ஒருநாள், ஜோசப்புக்கு யோசனை ஒன்று தோன்றியது. அவர், காலி சீஸாவில் கரியமில வாயுவைப் பிடித்து அடைத்தார். பின், அதில் தண்ணீரைக் குறிப்பிட்ட அளவு கலந்தார். இப்படிப் பலமுறை பல விகிதாச்சாரங்களில் H2Oவையும் CO2வையும் கலந்து கார்பனேற்றம் செய்து பார்த்தார். அதாவது, நீரில் அதிக அழுத்தத்தில் கரியமில வாயுவைக் கரைத்து அடைத்துவைத்து, பின் அந்த நீரைச் சுவைத்துப் பார்த்தார். விறுவிறுப்புத் தன்மையுடன், புதிய சுவையுடன் இருந்தது. இப்படித்தான் உலகின் முதல் சோடா நீர், ஜோசப் பிரிஸ்ட்லியால் தயாரிக்கப்பட்டது.

1774-ம் ஆண்டில் ஜான் மெர்வின் என்பவர் இந்தத் தயாரிப்பை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினார். ஆனால், நீரில் இனிப்பு கலந்து கார்பனேற்றம் செய்து சோடா நீராகத் தயாரிக்கும் உரிமையை முதன்முதலாக முறையாகப் பெற்றவர், ஹென்றி தாம்ப்ஸன் என்ற பிரிட்டிஷ்காரர். இவர் 1807-ம் ஆண்டில் சோடா நீரை வியாபார ரீதியாக அறிமுகப்படுத்தினார்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

Carbonated water, Club soda, Soda water, Sparkling water, Seltzer water, Fizzy water - இவையெல்லாம் சோடாவுக்கு வழங்கப்படும் மற்ற பொதுவான பெயர்கள். ஜோசப்பும் மற்றவர்களும் தயாரித்த நீருக்கு, Carbonated water என்ற பெயரே வழங்கப்பட்டது. எனில், ‘சோடா’ என்ற பெயர் எப்படி வந்தது?

அது அமெரிக்கர்கள் தந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை, அமெரிக்காவில் இந்த கார்பனேற்றம் செய்யப்பட்ட நீரில், ஜீரணக் கோளாறுகளை நீக்க, சோடியம் உப்புகளும் சேர்த்தார்கள். சோடியம் உப்புகள் சேர்க்கப்பட்ட நீர் என்பதால் Soda Water என்று பெயரிட்டனர்.

Soda Fountain என்ற சோடாவைப் பொழியும் தானியங்கி எந்திரங்கள் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால், அவை முதன்முதலில் வியாபார ரீதியாக பெருவெற்றி பெற்றது, அமெரிக்காவில்தாம். கி.பி 1806-ம் ஆண்டில் பெஞ்சமின் சில்லிமென் என்ற அமெரிக்கர், கனெக்டிகட் நகரத்தில் சோடா ஃபவுண்டெயினை ஆரம்பித்து, அதை லாபகரமான வியாபாரமாக்கினார்.

முதல் உலகப் போரின் பின் விளைவாக 1930-களில் உலகப் பொருளாதார பெருமந்த நிலை உண்டாது. சாமானிய மக்கள் கடும் பொருளா தார நெருக்கடிக்கு ஆளானார்கள். அப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பலர் சோடாவைக் குடித்துதான் பசி போக்கிக் கொண் டார்கள். சாதாரண ரொட்டியின் விலைகூட 500, 1,000 என்று பயமுறுத்த, வெறும் இரண்டு செண்ட் விலையில் கோப்பை நிறைய சோடா கிடைத்தது என்பது வரலாற்றுத் தகவல்.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

சரி, இந்தியாவுக்கு சோடா வந்த கதை என்ன?

பல்வேறு விஷயங்களைப் போல, சோடாவையும் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரிட்டிஷாரே. கி.பி 1825-ம் ஆண்டில் பிரிட்டிஷார் தங்கள் தேவைக்காக, அதாவது மதுவகைகளில் கலந்து பருகுவதற்காக, சோடாக்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள். பிரிட்டிஷார் புண்ணி யத்தில் மேல்தட்டு இந்தியர்கள் சோடாவின் சுவையை அனுபவித்தனர்.

 ஒவ்வொரு முறையும் சோடாவை பிரிட்டனிலிருந்து கொண்டுவருவது கட்டுப்படியாகாது என்று உணர்ந்த பிரிட்டிஷார், சோடா தயாரிக்கும் எந்திரங்களை இந்தியாவுக்கு எடுத்து வந்தனர். சோடாவை இங்கேயே தயாரிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில், எந்தெந்த ஊர்களில் என்னென்ன சோடா கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறித்த துல்லியமான புள்ளி விவரங்கள் கிடையாது.

கோலி சோடா பாட்டிலின் கதை

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

கோலி சோடா பாட்டிலின் அழகே தனி. அதன் வடிவமைப்பே அருமையானது. யார் அதை உருவாக்கியது?

ஆரம்ப காலத்தில் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாட்டிலில் வாயு வெளியே போகாமல் பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கார்க் வைத்து பாட்டிலை அடைத்தார்கள். மரத்தால் மூடி செய்து அடைத்தார்கள். எதுவும் சரி வரவில்லை. Hiram Codd - லண்டனைச் சேர்ந்த சோடா நீர், குளிர்பான தயாரிப்பாளர். அவருக்கும் அதே பிரச்னைதான். அதற்குத் தீர்வு காணும்விதமாக வாயு சீக்கிரம் பாட்டிலைவிட்டு வெளியேறாத அளவுக்கான பாட்டில் வடிவமைப்பு ஒன்றை யோசித்தார்.

தடிமனான கண்ணாடியால் ஆன பாட்டில். நீண்ட கழுத்துப் பகுதி. பாட்டிலுக்கு உள்பக்கம் கழுத்துப் பகுதியின் மேற்புறம் மார்பிளால் ஆன ஒரு குண்டு பொருத்தப்பட்டிருக்கும். அதை பாட்டில் வாய் வழியாக வெளியில் எடுக்க இயலாது. அந்தக் குண்டை அழுத்தி உள்ளே தள்ளலாம். அப்போது மார்பிள் குண்டு பாட்டிலின் அடிப்பகுதியில் போய் விழாது. கழுத்தின் கீழ்ப்பகுதியிலேயே சிறு தடுப்பு ஒன்று இருக்கும். அதிலேயே நின்றுவிடும். வாயு எளிதில் வெளியில் போகாத வடிவமைப்பு கொண்ட இந்த பாட்டிலை Hiram Codd, கி.பி 1872-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். சந்தைக்கு வந்த வேகத்தி லேயே இந்த பாட்டில் பிரபலமானது. இந்த பாட்டில் வடிவமைப்புக்காகவே அவரது நிறுவனத்தின் பானங்கள் அதிக அளவில் விற்க ஆரம்பித்தன. Hiram Codd - தன் பாட்டில் வடிவமைப்புக்கு பேடண்ட் உரிமையும் பெற்றார். இன்றைக்கும் கோலி சோடா பாட்டில்கள் Codd-neck glass bottles என்றே அழைக்கப்படுகின்றன. ஆக, கோலி சோடாவின் தந்தை Hiram Codd-தான்.

இப்போது கோலி சோடா பாட்டில்களை பிரிட்டனின் அருங்காட்சியகத்தில் பார்க்கலாமே தவிர, அங்கு அது புழக்கத்தில் இல்லை. ஜப்பானிலும் இந்தியாவின் சில இடங்களில் மட்டுமே கோலி சோடா இன்னும் சந்தையில் இருக்கிறது.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

சர்பத்

Shariba என்ற அரேபியச் சொல்லுக்கு ‘பருகுதல்’ என்று பொருள். அதிலிருந்துதான் Sharbat என்ற சொல் உருவாகியிருக்கிறது. அதன் பொருள், சர்க்கரை கலந்த தண்ணீர். ஆசியக்கண்டம்தான் சர்பத்தின் பிறப்பிடம். குறிப்பாக, தெற்காசிய, மேற்காசிய நாடுகளில் சர்பத் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவருகிறது. Zakhireye Khwarazmshahi என்பது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக மருத்துவ நூல். இதை எழுதியவர் இஸ்மாயில் கோர்கனி. அந்த நூலில் மருத்துவக் குணம்கொண்ட பாரசீக வகை சர்பத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சர்பத் குறித்த பழைமையான வரலாற்றுக் குறிப்பாக இது கருதப்படுகிறது.

மத்திய காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் எலுமிச்சை, ஆப்பிள், மாதுளை போன்ற பழச்சாறுகளுடன் சர்க்கரை, சிரப், தேன் போன்றவை கலந்து அருந்தும் வழக்கம் இருந்திருக்கிறது. இதுவே பின்பு ஐரோப்பிய தேசங்களுக்கும் பரவியிருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் சர்பத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர்கள் முகலாயர்கள். இமயமலைப் பகுதிகளிலிருந்து அடிக்கடி ‘ஐஸ் லோடு’ வந்து பாபரின் அரண்மனையில் இறங்கும்.

தினமும் குளுகுளு சர்பத் பருகாமல் பாபரின் உணவு நிறைவுபெறாது. பாபர் நாமா புத்தகத்தில் சர்பத் குறிப்புகளும் காணப்படுகின்றன. மற்றொரு முகலாயப் பேரரசரான ஜஹாங்கிருக்கு ‘ஃபலூடா சர்பத்’ மீது அலாதி பிரியம் இருந்திருக்கிறது.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

ஒட்டமான் துருக்கி அரண்மனைத் தோட்டத்தில் சர்பத் தயாரிக்கப் பயன்படுத் தும் பழ மரங்களையும் பூச்செடிகளையும் மருத்துவர்களே பார்த்துப் பார்த்து வளர்த்தார்கள். இன்றைக்கும் துருக்கியில் பாரம்பர்யமான முறையில் சர்பத் தயாரிக்கப்படுகிறது. தெருக்களில் முதுகில் பெரிய பித்தளைக் கூஜாவை சுமந்தபடி சர்பத் வியாபாரிகள் திரிகிறார்கள். கூஜாவின் வளைந்த கழுத்துப் பகுதி கெண்டிபோல முன்னே நீண்டிருக்கும். வியாபாரிகள் சற்றே குனிந்து சர்பத்தை குவளைகளில் நிரப்பித் தருகிறார்கள்.

17-ம் நூற்றாண்டில் இத்தாலியர்கள் sorbetto என்ற வார்த்தையைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். அதுவே பின் பிரெஞ்சில் sorbet என்றானது. பிரிட்டிஷார், பழங்களையும் பூக்களையும் உலரவைத்துப் பொடி செய்து, அதில் சர்க்கரை கலந்து ‘sherbet powder’ தயாரித்திருக்கிறார்கள். தேவையானபோது அதில் நீரும் ஐஸ் கட்டியும் கலந்து பருகியிருக்கிறார்கள். இன்றைக்கும் இங்கிலாந்தில் சர்பத் பவுடர்கள் புழக்கத்தில் உள்ளன.

சர்பத்துகளில் விதவிதமான சிரப்பு களைச் சேர்த்து உறைநிலைக்குக் கொண்டு சென்று அதை `டெசர்ட்’ ஆக உண்டிருக்கிறார்கள். அதன் பெயரும் sorbetto-தான். முன்பெல்லாம் சர்பத் என்பது கரும்புச்சாற்றைக் காய்ச்சித் தயாரிக்கப்பட்டது. அதில் நன்னாரி போன்ற மூலிகைகள் மற்றும் ரோஸ் போன்ற மலர்களின் சாற்றைச் சேர்த்து சர்பத் தயாரித்தார்கள். அதில் தேனும் சேர்க்கப்பட்டதுண்டு. இப்போது பெரும்பாலும் சர்க்கரை சேர்த்துதான் சர்பத் தயாரிக்கப்படுகிறது

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

தென்னிந்தியாவுக்கான பிரத்யேகமான சர்பத்தாக நன்னாரி சர்பத்தைச் சொல்லலாம். அதேபோல வடஇந்தியாவில் மாம்பழம் மற்றும் எலுமிச்சை சர்பத்கள் பிரபலமானவை. கோவாவில் `கோகும்’ என்றழைக்கப்படும் முருகல் கொண்டு தயாரிக்கப்படும் சர்பத் தனித்துவமானது. இஞ்சி சர்பத், புளி சர்பத்கூட சில இடங்களில் தயாரிக்கப்படுகிறது. தேனும் குங்குமப்பூவும் கலந்து தயாரிக்கப்படும் ஷாகி சஃப்ரான் கா சர்பத், பாகிஸ்தானுக் குரியது. இரானியர்களின் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும், பண்டிகை விருந்துகளிலும் சர்பத் தவறாது இடம்பெறுகிறது. இரானிய சர்பத்தில் புதினா, சர்க்கரை, வினிகர் எல்லாம் சேர்க்கப்படுகிறது.

உலகின் பல தேசங்களில் ரமலான் நோன்பு திறந்த பிறகு அருந்தும் பானமாகவும் சர்பத் இருக்கிறது. இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!

-முகில்

நன்னாரி

ம் உடலின் சூட்டைத் தணிக்க இயற்கை நம் மண்ணுக்குத் தந்திருக்கும் அருமையான மூலிகை நன்னாரி. இது தெற்காசியாவைச் சேர்ந்த, படரும் கொடி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. மருத்துவக் குணங்கள் கொண்டது. இதன் தாவரவியல் பெயர், Hemidesmus indicus.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

நல் + நாரி = நன்னாரி. நாரி என்றால் நறுமணம். நல்ல நறுமணமுடைய தாவரம் நன்னாரி என்ற பெயர் அமைந்தது. இதை ஆயுர்வேதத்தில் ‘சாரிப’ என்று அழைக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் கிருஷ்ணவல்லி, நறுநெட்டி, அங்காரிமூலி ஆகிய பெயர்களில் இதைக் குறிப்பிடுகிறார்கள். நன்னாரி, சீமை நன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி என இதில் வகைகள் உண்டு.

சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
சொன்னமது மேகம் புண் சுரமிவை யெலா மொழிக்கும்
மென்மதுர நன்னாரி வேர்.


இது அகத்தியர் குணவாகடத்தில் வரும் பாடல். நறுஞ்சுவை கொண்ட நன்னாரி வேர், உடலின் சூட்டைப் போக்கும், குளிரச் செய்யும், மூலம், மேகம், நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் போன்றவற்றைக் குணமாக்கும் என்பதுதான் இந்தப் பாடலுக்கான பொருள்.சரக சம்ஹிதை, சூத்ர, சுஸ்ருத சம்ஹிதை, உத்ர ஸ்தான போன்ற சமஸ்கிருத மருத்துவ நூல்களில் ‘சாரிப’ என்ற பெயரில் நன்னாரியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ‘சாரிப’ என்னும் சொல்லே ‘சர்பத்’ ஆனது என்றும் சொல்லப்படுவதுண்டு. நம் முன்னோர், நன்னாரி வேரை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி ‘நன்னாரி நீர்’ பருகியிருக்கிறார்கள். பின் அதில் சுவைக்காக இனிப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுவே நன்னாரி சர்பத்தின் ஆரம்ப வடிவம்.

19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை நன்னாரி குறித்து ஐரோப்பியர்கள் அறிந்ததில்லை.

கி.பி 1831-ம் ஆண்டில் இங்கிலாந்தில் Dr. Ashburner என்பவர் மூலமாகத்தான் நன்னாரி ஒரு மருந்துப் பொருளாக அறிமுகமானது என்று The Lancet London: A Journal of British and Foreign Medicine என்ற புத்தகம் சொல்கிறது.

உடலுக்கு உடனடியாகச் சக்தியளிக்கக்கூடிய இயற்கையான ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்திருக்கின்றன. அதனால் சில வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை விரும்பிப் பருகுகிறார்கள்.

காளிமார்க் வரலாறு

ஸ்பென்ஸர்ஸ் அண்டு கோ... இது கி.பி1865-ம் ஆண்டில் மெட்ராஸில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். அவர்கள் சோடா பானங்களும் தயாரித்தார்கள். அதற்கடுத்து, தென்னிந்தியாவில் சோடா தயாரிப்பில் பிரபலமான சுதேசி நிறுவனம் என்றால் அது காளிமார்க்தான். 1990-கள் வரை சுதேசி பிராண்டு பானங்களே இந்தியச் சந்தையில் கோலோச்சின.

சோடா தயாரிப்பு என்பது மின்சாரப் பயன்பாடு இல்லாத தொழில். கோலி சோடா, பன்னீர் சோடா, ஆரஞ்சு சோடா, கோலா சோடா, ஜிஞ்சர் சோடா, கலர் தயாரிப்பு என்று குடிசைத் தொழி லாக இது பல்வேறு இடங்களிலும் வளர்ந்து நின்றது. பல லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்தது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான படையெடுப்புக்குப் பிறகு எல்லாம் காலி. அதையும் தாண்டி இன்றுவரை தன் மார்க்கெட்டை இழக்காத நம்ம ஊர் நிறுவனம் காளிமார்க் மட்டுமே.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

P.V.S.K. பழனியப்பன் - இவர் விருதுநகரில் காபி, ஏலக்காய் வியாபாரம் செய்து கொண்டிருந் தவர். ரயில்வே ஸ்டேஷனில் ஸ்பென்ஸர்ஸ் அண்டு கோ தயாரித்த சோடா பானங்கள் விற்கப்படுகிறதை பழனியப்பன் பார்த்தார். அவற்றின் விலை அதிகம். வசதியானவர்கள் மட்டுமே வாங்கிப் பருக முடியும்.

பழனியப்பன், எளிய மக்களுக்கான சோடா கம்பெனி ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அவரது தந்தை பெயர் காளியப்பன். கி.பி 1916-ம் ஆண்டில் ‘காளி மார்க் சோடா நீர் தயாரிப்பு’ நிறுவனம் விருதுநகரில் ஆரம்பமானது. சோடாவுக்கான பாட்டில்கள் ஜெர்மனியிலிருந்து கொண்டு வரப்பட்டன. வெவ்வேறு சுவைகளில் சோடா தயாரிக்கத் தேவையான எசென்ஸ்களை லண்டனிலிருந்து இறக்குமதி செய்தார். கைகளால் சுற்றிச் சுற்றி இயக்கும் எந்திரங்கள் மூலமாக சோடா தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம், சென்னை, காரைக்குடி என்று பல்வேறு ஊர்களில் காளிமார்க் சோடா கம்பெனி கிளைகள் பரப்பியது. வியாபாரிகள் ஒரு டஜன் சோடா கேட்டால், 14 பாட்டில்கள் கொடுக்க வேண்டும்.

வியாபாரிகள் 12 பாட்டிலுக்கு மட்டும் விலை கொடுப்பார்கள். எக்ஸ்ட்ரா இரண்டு பாட்டில்கள் அவர்களுக்கான லாபம். இப்படித்தான் காளி மார்க் நிறுவனம் வேரூன்றி வளர்ந்தது. கோக், பெப்ஸி போன்றவற்றின் குளிர்பான அரசியலையும் சமாளித்து, இன்றைக்கும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி மக்கள் ஆதரவுடன் சந்தையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது காளிமார்க்.