Published:Updated:

ஆறாம் திணை!

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை!

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

''பூசுனாப்புல இருக்கான்... செல்லத் தொப்பையைப் பாரு... சந்தோஷமா இருக்கான்டே அவன்!'' எனக் கொஞ்ச நாட்கள் முன்பு வரை சொன்னவர்கள், 'சார்... கவனம். வெயிட் போடுற மாதிரி தெரியுது. பார்த்து, ஷ§கர் இருக்கான்னு செக் பண்ணிட்டீங்களா?' என்று பயமுறுத்துகிறார்கள். 'அப்படி ஒண்ணும் அதிகமா இனிப்பும் சாப்பிடலையே... சாமி கண்ணைக் குத்தும்னு நம்பி எந்தத் தப்பும் பண்றதில்லையே... ஆனாலும், ஏன் இப்படி ஆண்டவன் முதுகுல குத்துறான்?'' என்று புலம்புகிறோம்.

ஆறாம் திணை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாற்பதில் பலருக்கும் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற சிந்தனையே இருப்பது இல்லை. ''எல்லோரும் ஓடுகிறார்கள். நானும் ஓடுகிறேன்!'' எனும் மந்தை எண்ணத்துடன் நகர்கிறது வாழ்க்கை. சந்தோஷமாக அகம் மகிழ்ந்து சத்தமாகச் சிரித்தது எப்போது? கடைசியாக உற்சாகத்துடன் ஓடி விளையாடியது எப்போது? 'ஹோ!’ என இரைச்சலுடன் வரும் கடல் அலை காலைக் கவ்வ, உச்சி வரை குளிர்வித்துப் போவதில் குதூகலித் தது எப்போது? காதலியின் வெட்கத்தினைக் கண்கள் முட்டப் பார்த்துச் சிலாகித்துச் சில ஆண்டுகள் இருக்குமா? புறங்கையில் வழியும் மிளகு ரசத்தை மணத்தக்காளி வற்றலோடு சாப்பிட்ட வாசம் நினைவில் மட்டுமே எஞ்சியிருக்கிறதா? சமீபமாகக் காது கேட்காமல் போன தாத்தாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து, சுருக்கம் விழுந்த அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, ''நல்லா இருக்கேன் தாத்தா... நீங்க நல்லாயிருக்கீங்களா?'' எனச் சத்தமாகச் சொல்லி வருடங்கள் கடந்திருக்குமா? 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற வரிகளில் தொலைந்துபோய் எவ்வளவு நாள் இருக்கும்? இப்படித் தொலைத்த எத்தனையோ சம்பவங்கள்தான் நம் நலவாழ்வையும் தொலைத்துவிட்டது.

'அப்படின்னா, ரத்தத்தில் கூடிப்போன உப்பு, சர்க்கரைக்குக் கிருமியோ... வியாதியோ காரணம் இல்லையா?’ என்று கேட்போருக்குச் சின்ன விளக்கம் இங்கே... சமீபத்தில், ஜெர்மனியில் இருந்து வந்திருந்த சர்க்கரை நோய்க்கான பன்னாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரின் பேச்சைக் கேட்டேன். 'இப்போதைக்கு 65 மில்லியன். 2030-ல் 100 மில்லியனைத் தாண்டும்’ என சர்க்கரை நோயாளிகளைக் கணக்கிட்ட அவர், நோய்க்கான காரணங்களை வரைந்து காட்டிய படம் கிளறிப்போட்ட இடியாப்பம்போல் இருந்தது. அதிக சர்க்கரையில் ஆரம்பித்து, அடிக்கடி படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பது வரை பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டார். குண்டு உடம்புக்காரரைக் காட்டிலும் ஒல்லி உடம்புக்காரருக்கு வரும் சர்க்கரை கொஞ்சம் கூடுதலாகவே சேட்டை காட்டுமாம். சாப்பாட்டுப் பிரியர், சாகச வெறியர், சர்க்கரை மரபர், சந்தோஷம் தொலைத்தவர், சனிக்கிழமை ஊதியம் பெறும் உள்ளூர் தொழிலாளி, சனிக்கிழமை ஜாலி டிரிப் போகும் வெளிநாட்டுத் தொழிலாளி... இப்படி யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை வியாதி வரக்கூடும். இப்போது உள்ள எந்த ஒரு மருந்தும் முழுமையானது இல்லை.

வாழ்வின் தரம் (quality of life) அதிகம் சிதைக்கப்படும் இந்த நோய்க்கு, வருமுன் காக்கும் முறையே சிறந்தது. மருந்தோடு வாழ்வியல் மாற்றமும் தேர்ந்தெடுத்த உணவும்தான் நோய் வராமல் காக்கும். நோய் வந்தாலும் அதிகம் நோக வைக்காதிருக்கவும் உதவும். கார்ப்ப ரேட் மருந்தோ, கார்ப்பரேட் சாமியோ, குலேபகாவலி மூலிகையோ ஒரே இரவில் இதிலிருந்து உங்களைக் காப்பாற்றாது. சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா என அறிய HbA1C  சோதனை முக்கியமானது. முந்தின நாள் மட்டும் கொலைப்பட்டினி கிடந்து, மறுநாள் காலை சோதனையில் வரும் சர்க்கரை அளவைப் பார்த்து தன்னை யும் தன் மருத்துவரையும் ஏமாற்றும் தில்லா லங்கடி வேலைக்கு இந்த HbA1C சோதனை பெப்பே காட்டிவிடும். ஆம்... கடந்த மூன்று மாதங்களில் அவ்வப்போது திருட்டுத் தனமாகச் சாப்பிட்ட மைசூர்பாகில் இருந்து பிசிபேளாபாத் வரை ஏற்றிவிட்ட சர்க்க ரையை இந்தச் சோதனை காட்டிக் கொடுக் கும். இந்த HbA1C அளவு 6-க்குள் இருந்தால் நீங்கள் சமத்து; 7-க்குள் வைத்திருந்தால் கொஞ்சம் கெட்டிக்காரர். 7-க்கு மேல் எகிறினால் பிரச்னைகளுக்கு வாசல் கதவைத் திறந்துவிடுகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக, அதன் அலகில் 1 புள்ளியைக் குறைத்தால் நான்கு மாரடைப்புகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் இதயநோய் நிபுணர்கள். சத்தம் இல்லாமல் நிகழும் மாரடைப்புகள் நித்தம் நடக்கிறது என்ற செய்தி கள் செய்தித்தாளிலோ, அலுவலகத்துக்குச் செல்லும்போது லிஃப்டில் நடக்கும் சம்பாஷனையிலோ கேட்கும்போது அவ்வளவாக வலிப்பது இல்லை.  

''நாளைக்கு ஏலகிரி போகலாம். அங்கே போட்டிங் கூட்டிட்டுப் போறேன். இப்ப தூங்குடா செல்லம்!'' எனச் சொல்லி 7 வயதுக் குழந்தையைத் தூங்க வைத்து, ''தினம் இப்படி நடுராத்திரியில் வந்தீங் கன்னா? குழந்தைக்குக் கோவம் வராதா?'' எனத் தன் ஆதங்கத்தைக் குழந்தை வாயிலாக வெளிப் படுத்தும் செல்ல மனைவியின் முன்நெற்றி முத்தத் தோடு, ''என்ன செய்யிறது? கிளையன்ட் நேரத் துக்கு வேலை செய்தாகணுமில்ல. இந்த வாரத் தோட நைட் ஷிஃப்ட் கிடையாது. கோவப்படா தடா!'' என்றெல்லாம் சொல்லிவிட்டு உறங்கி, காலையில் எழுந்திருக்கவே இல்லை என்றால்..? ஏலகிரிக் கனவில் எழுந்திருக்கும் அந்தக் குழந்தைக் கும், நாளை நம் கணவன் கரம்பற்றி தோள் சாயலாம் என்ற மனைவிக்கும் எப்படி வலிக்கும்? வலி நமக்கல்ல. நம்மை நம்பியுள்ள குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும்தான்.

வாழ்வில் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியோடு வேலை செய்யும் ஒவ்வொருவரும் இந்த சர்க்கரையையும் மாரடைப்பையும்கூட கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டும். நகரமோ, கிராமமோ நம் பணி எங்கிருந்தாலும், அகமகிழ்ச்சிதான் அடித்தளமாக இருக்க வேண்டும். எது வளர்ச்சி என்ற தெளிவும், எது வரை வளர்ச்சி என்ற நிறைவும் தெரிந்திருக்க வேண்டும். அன்றாடம், கொஞ்சம் சிறு தானியம், நிறைய பசுங்காய்கறிகள், உள்ளூர் கனிகள் உண்ணும் பழக்கம் வளர வேண்டும். காதலும், பாசமும், அன்பும், அதனால் விளையும் அக்கறையும் மெனக்கெடலும் வீட்டில் நிரவியிருக்க வேண்டும். சத்தம் இல்லாமல் நம் காலுக்கு அடியில் வேகமாகச் சுற்றிக் கொண்டு இருக்கும் பூமியை நம் சந்ததிக்கு அதே அழகுடன் விட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழலுக்கு இசைவான கண்ணியம் நம்மிடம் வேண்டும். அப்போது மட்டுமே இந்த சர்க்கரையோ, உப்போ, மாரடைப்போ நம்மை நெருங்கக் கொஞ்சம் பயம் கொள்ளும்.

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism