பிரீமியம் ஸ்டோரி

எஸ்.மீனாட்சி

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு கீர்

தேவை: வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம், முந்திரி - 10, ஏலக்காய் - 2, காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி, தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், ஐஸ் க்யூப்கள் - 2, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 4 டீஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வேகவைத்து தோலுரித்த சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதில் தேங்காய்த் துருவல், காய்ச்சி ஆறவைத்த பால் கலந்து ஐஸ் க்யூப்கள் சேர்த்து டம்ளரில் ஊற்றவும். பிறகு குங்குமப்பூ தூவிப் பரிமாறவும். சுவையான இந்த கீர் மெல்லிய தேகம் கொண்டவர்களுக்கும், ஜிம் செல்பவர்களுக்கும் மிகவும் ஏற்றது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு தேங்காய் அல்வா

தேவை: வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 250 கிராம், தேங்காய்த்துருவல் - 100 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி - 20.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். கனமான வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும். பின்பு அதே வாணலியில் சர்க்கரை சேர்த்து தண்ணீர்விட்டு கம்பிப்பதம் வரும்வரை காய்ச்சவும். அதில் தேங்காய்த்துருவல், மசித்த கிழங்கு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில்வைத்து சிறிது சிறிதாக நெய்விட்டு கெட்டியாகும் வரை கிளறவும். இதில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் இறக்கி விடவும். சுவையான அல்வா தயார்.

சர்க்கரைவள்ளிக்கிழங்குப் போளி

தேவை: வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 250 கிராம், பொடித்த சர்க்கரை - 100 கிராம், பொடித்த பொட்டுக்கடலை மாவு - 50 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - அரை கப், கோதுமை மாவு - 500 கிராம், உப்பு - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: கோதுமை மாவை மேல் மாவு தயாரிக்க சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் 4 டீஸ்பூன் நெய்விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும். இத்துடன் மசித்த கிழங்கு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சூடு கொஞ்சம் ஆறியவுடன் பொடித்த பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவை சிறு கிண்ணம் போல் செய்து, அதில் பூரணம் வைத்து மடித்து கொஞ்சம் கனமான சப்பாத்திபோல் தட்டி, தோசைக்கல்லில் நெய்விட்டு இரண்டு பக்கமும் சுட்டெடுத்தால் சுவையான போளி தயார்.

குறிப்பு: கோதுமை மாவுக்குப் பதிலாக மைதா மாவையும் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு கார போண்டா

தேவை: துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம், வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஓர் அங்குல அளவு, பூண்டு - 4 பற்கள், சோம்பு - அரை டீஸ்பூன், பச்சரிசி மாவு - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு பற்களைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயத்தை லேசாக வதக்கி, அதில் துருவிய கிழங்கு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கிக்கொள்ளவும். பின்பு இதில் சிறிதளவு கடலை மாவு சேர்த்துக் கலந்துவைக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பூரண உருண்டையைச் சிறிது சிறிதாக உருட்டி, மாவில் தோய்த்து காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுத்தால், சுவையான போண்டா தயார்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பெப்பர் சிப்ஸ்

தேவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு - அரை கிலோ, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வள்ளிக்கிழங்கைத் தோல்சீவி சிப்ஸ் கட்டையில் வட்ட வட்டமாகச் சீவிக்கொள்ளவும். பின்பு சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப்போட்டு பொரித்தெடுக்கவும். லேசாக ஆறியதும் உப்பு, மிளகுத்தூள் தூவி, காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்து தேவையானபோது பரிமாறவும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரவை வடை

தேவை: வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம், வறுத்த ரவை - 200 கிராம், நறுக்கிய வெங்காயம் - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 கொத்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வறுத்த ரவையுடன் எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கருணைக்கிழங்கு போண்டா

தேவை: கருணைக்கிழங்கு - 250 கிராம், நறுக்கிய வெங்காயம் - 100 கிராம், நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 8, இஞ்சி - அரை அங்குல துண்டு, பூண்டு - 4 பற்கள், சோம்பு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, பட்டை - சிறு துண்டு, பச்சரிசி மாவு - 50 கிராம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: கருணைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மிக்ஸியில் மசித்துக்கொள்ளவும். பின்னர் பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதில் மசித்த கருணைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பச்சரிசி மாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கருணைக்கிழங்கு பிரட்டல்

தேவை: வேகவைத்த கருணைக்கிழங்கு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 15, புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, நல்லெண்ணெய் - 50 கிராம், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து விழுதாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளித்து பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் மசித்த கருணைக்கிழங்கு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

கருணைக்கிழங்கு உப்பேரி

தேவை: கருணைக்கிழங்கு - 500 கிராம், புளி பேஸ்ட் - 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள், தேங்காய்த்துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கடுகு - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: கருணைக்கிழங்கைத் தோல்சீவி, சதுரம் சதுரமாக வெட்டி தண்ணீரில் போட்டுவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து மஞ்சள்தூள் சேர்த்து, நறுக்கிய கிழங்குகளை நீர் இல்லாமல் வடித்து, வாணலியில் சேர்த்து நன்கு புரட்டி, உப்பு தூவி மூடிவைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் மிளகாய்த்தூள், புளி பேஸ்ட் சேர்த்து நன்கு புரட்டி தேங்காய்த்துருவல் சேர்த்து, நன்கு கிளறி எடுத்தால் சுவையான உப்பேரி தயார்.

கருணைக்கிழங்கு வறுவல்

தேவை: கிழங்கு - 500 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், புளி பேஸ்ட் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: கருணைக்கிழங்கைத் தோல்சீவி, பெரிய பெரிய துண்டுகளாக அரை அங்குல கனத்தில் பட்டை பட்டையாக நறுக்கவும். பின்பு மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், தனியா, உப்பு, புளி பேஸ்ட், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதை பட்டையாக நறுக்கிய கருணைக்கிழங்கு துண்டுகளில் தடவி, அரை மணிநேரம் ஊறவைக்கவும். தோசைக்கல்லில் இரண்டு மூன்று துண்டுகளாகவைத்து எண்ணெய்விட்டு மூடிபோட்டு ஒருபக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பிப்போட்டு மூடாமல் ரோஸ்ட் செய்யவும்.

கருணைக்கிழங்கு எலுமிச்சை பொரியல்

தேவை: கருணைக்கிழங்கு - 250 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, காய்ந்த மிளகாய் - ஒன்று, வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: பயத்தம்பருப்பைக் கழுவி இதில் பொடியாக நறுக்கிய கருணைக் கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு இரண்டு விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து எலுமிச்சைப்பழச்சாற்றைப் பிழிந்துவிட்டால் சுவையான கருணைக்கிழங்கு எலுமிச்சை பொரியல் தயார்.

சேப்பங்கிழங்கு மொச்சைக் குழம்பு

தேவை: சேப்பங்கிழங்கு - 500 கிராம், ஊறவைத்த மொச்சை - 100 கிராம், புளிக்கரைசல் - இரண்டு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து. அரைக்க: வெங்காயம் - ஒன்று, தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன் (இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்), வெல்லம் - சிறு துண்டு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும். மொச்சையைத் தனியாக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த சேப்பங்கிழங்கு, மொச்சை, புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிவாடை போகும்வரை கொதிக்கவிட்டு, அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு வெல்லம் சேர்த்து இறக்கவும்.

சேப்பங்கிழங்கு மசால் வடை

தேவை: வேகவைத்த சேப்பங்கிழங்கு - 250 கிராம், பச்சரிசி மாவு - 200 கிராம், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய புதினா - அரை கப், பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்), இஞ்சி - ஒன்று, பூண்டு - 4 பற்கள், சோம்பு - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: சேப்பங்கிழங்கைத் தோலுரித்து மசித்து, அத்துடன் பச்சரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், புதினா, பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி - பூண்டு விழுது, சோம்பு, உப்பு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவுப் பதத்துக்கு பிசைந்து, வாழையிலையில் சிறு சிறு வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் சுவையான வடை தயார்.

சேப்பங்கிழங்குப் பொடிக்கறி

தேவை: வேகவைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு - 500 கிராம், மஞ்சள்தூள், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: கடலை - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8 தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேப்பங்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு, தயிர் சேர்த்து மிதமான சூட்டில் புரட்டியெடுக்கவும். பின்பு, அதில் வறுத்துப்பொடித்தவற்றை சேர்த்து மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

சேப்பங்கிழங்கு கல்யாண வறுவல்

தேவை: வேகவைத்து தோலுரிக்கப்பட்ட சேப்பங்கிழங்கு - 250 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடலை மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - 50 கிராம், கறிவேப்பிலை - இரண்டு கொத்து, எலுமிச்சைப்பழம் - பாதி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வேகவைத்துத் தோலுரித்த சேப்பங்கிழங்கை நறுக்கி, மிளகாய்த் தூள், கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், அரிசி மாவு, கறிவேப்பிலை, எலுமிச்சைப்பழம் பிழிந்து நன்கு பிசிறிக்கொள்ளவும். பின்பு இதை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால், சுவையான கல்யாண வறுவல் தயார்.

சேப்பங்கிழங்கு மசாலா பிரட்டல்

தேவை: சேப்பங்கிழங்கு - 250 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா ஒரு கப், நசுக்கிய பூண்டு - 8 பற்கள், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன். தாளிக்க: கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி பின்னர் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கி, அதில் வேகவைத்த சேப்பங்கிழங்கைச் சேர்த்து ஏழு முதல் எட்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.

உருளைக்கிழங்கு பாயசம்

தேவை: உருளைக்கிழங்கு - 250 கிராம், பால் - 500 மில்லி, பாதாம், முந்திரி - தலா இரண்டு, நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - 150 கிராம், கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டேபிள்ஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து 100 கிராம் அளவு மட்டும் எடுத்து பொடியாக நறுக்கவும். 150 கிராம் உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு பாதாம், முந்திரியை உடைத்து வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் உருளைக்கிழங்கை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து மசித்த உருளைக்கிழங்கு, காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு பொங்கி வரும்போது, அடுப்பை நிறுத்தி கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள், வறுத்த பாதாம், முந்திரி, உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து பரிமாறவும். இதை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பருகலாம்.

உருளைக்கிழங்கு அல்வா

தேவை: வேகவைத்த உருளைக்கிழங்கு - 250 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை - 150 கிராம், துருவிய பாதாம், முந்திரி - அரை கப், நறுக்கிய பேரீச்சைப்பழம் - அரை கப், பட்டைத்தூள் - அரை டீஸ்பூன், கார்ன் ஃப்ளவர் (சோள மாவு) - 2 டீஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: கனமான வாணலியில் சர்க்கரையுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கம்பி பதமாக எடுக்கவும். பின்பு, அதில் வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு சேர்த்து சிறிது நெய்விட்டுக் கிளறவும். நன்கு சுருள வரும்போது சோள மாவை நீர்விட்டு கரைத்து சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து, வாணலியில் ஒட்டாத பதம் வரும்போது துருவிய முந்திரி, பாதாம், நறுக்கிய பேரீச்சை, பட்டைத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை பிரெட்டில் தடவி, சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு கோவா போளி

தேவை: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 250 கிராம், கோவா - 100 கிராம், தேங்காய்த்துருவல் - அரை கப், பொடித்த சர்க்கரை - 50 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், கோதுமை மாவு - 500 கிராம், உப்பு - சிறிதளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: கோதுமை மாவை சிறிதளவு உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரைமணி நேரம் வைக்கவும். வாணலியில் நான்கு டீஸ்பூன் நெய்விட்டு தேங்காயை வறுத்து, அதில் மசித்த உருளைக்கிழங்கு, கோவா, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி கெட்டியான பின் இறக்கவும். ஆறியவுடன் சிறு உருண்டைகளாக்கிப் பிசைந்த கோதுமை மாவை, சிறு கிண்ணம் போல் செய்து, அதில் உருட்டிய பூரணத்தை வைத்து சப்பாத்தி போல் தட்டி தோசைக்கல்லில் நெய்விட்டு இரண்டு பக்கமும் சுட்டெடுக்கவும்.

உருளைக்கிழங்கு போண்டா

தேவை: வேகவைத்த உருளைக்கிழங்கு - 250 கிராம், நறுக்கிய பச்சை மிளகாய் - 4, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - அரை கப், எலுமிச்சை - பாதி அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. மேல் மாவுக்கு: கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 300 மில்லி.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: மேல் மாவுக்குக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குத் தண்ணீர்விட்டு கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து உப்பு போட்டு எலுமிச்சையைப் பிழிந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் கலக்கிவைத்த கடலை மாவில் இந்த உருண்டைகளை முக்கியெடுத்து எண்ணெயில்போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

தேவை: தோல் சீவிய உருளைக்கிழங்கு - 250 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலைப்பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: தோல் சீவிய உருளைக்கிழங்கை சிப்ஸ் கட்டையில் சீவி, உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கைப் பொரித்தெடுக்கவும். கொஞ்சம் ஆறியவுடன், கறிவேப்பிலைப்பொடி, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் குலுக்கி, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைக்கவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கைச் சீவி தண்ணீரில் போட்டுவைக்கவிட்டால் கறுத்து விடும்.

உருளைக்கிழங்கு மசால் வடை

தேவை: மெல்லிய அவல் - 150 கிராம், வேகவைத்த உருளைக்கிழங்கு - 250 கிராம், நறுக்கிய வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பற்கள், சோம்பு - அரை டீஸ்பூன், புதினா - அரை கப், கொத்தமல்லி - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: பாத்திரத்தில் அவல் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசிறி, இதில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். சிறு சிறு வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வெற்றிலைவள்ளிக்கிழங்கு வெங்காய வடை

தேவை: வேகவைத்து தோல் சீவிய வெற்றிலைவள்ளிக்கிழங்கு - 250 கிராம், வெங்காயம் - 150 கிராம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை - இரண்டு கொத்து, இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், உப்பு, எண்ணெய் - 300 கிராம்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: பாத்திரத்தில் வேகவைத்த வெற்றிலைவள்ளிக்கிழங்கை நன்கு மசித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். பிறகு, சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வெற்றிலைவள்ளிக்கிழங்கு வறுவல்

தேவை: பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிய வெற்றிலைவள்ளிக்கிழங்கு - 500 கிராம், பச்சரிசி மாவு - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த்துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, புளி - சிறிதளவு, தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை அரைத்துக்கொள்ளவும். அகலமான தட்டில் அரைத்த கலவையுடன் பச்சரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நறுக்கிய ஒவ்வொரு துண்டுகளிலும் கலவையை நன்கு தடவி அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, பொன்னிறமாக இரண்டு பக்கமும் புரட்டி வேகவிட்டு எடுத்தால், சுவையான சாப்ஸ் தயார். சாப்ஸ் தயாரிக்கும் போது அடுப்பை சிம்மில் வைத்து தயாரிப்பது நல்லது.

வெற்றிலைவள்ளிக்கிழங்கு பொடிக்கறி

தேவை: வெற்றிலைவள்ளிக்கிழங்கு - 250 கிராம், எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, தனியா (மல்லி) - அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், புளி - சிறு துண்டு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் வறுத்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வெற்றிலைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய கிழங்கு சேர்த்து மூடிபோட்டு வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து எடுத்து வடியவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து கிழங்கைச் சேர்த்து நன்கு புரட்டி மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்து வறுத்துப் பொடித்த பொடி தூவி கிளறி இறக்கினால் பொடிக்கறி தயார்.

வெற்றிலைவள்ளிக்கிழங்கு எலுமிச்சை பிரட்டல்

தேவை: வெற்றிலைவள்ளிக்கிழங்கு - 250 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, வெந்தயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்பைக் கழுவி, அதில் பொடியாக நறுக்கிய கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்பு எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து எலுமிச்சையைப் பிழிந்தால் சுவையான மசியல் தயார்.

பிடிக்கருணைக்கிழங்கு புளிக்கூட்டு

தேவை: பிடிக்கருணைக்கிழங்கு - 250 கிராம், புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து. வறுத்து அரைக்க: தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன், தனியா (மல்லி) - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சரிசி - 2 டீஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வறுத்து அரைக்க வேண்டிய பொருள்களைப் பொன்னிறமாக வறுத்து தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். பிடிக்கருணைக்கிழங்கைத் தோல் சீவி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். பாதி வெந்தவுடன் புளியைக்கரைத்து விடவும். நன்கு கொதித்தவுடன், அரைத்த விழுதைச் சேர்க்கவும். பின்பு தாளிக்கக்கொடுத்தவற்றை தாளித்து அத்துடன் சேர்த்து இறக்கவும். சுவையான புளிக்கூட்டு தயார்.

பிடிக்கருணைக்கிழங்கு மசாலா பிரட்டல்

தேவை: பிடிக்கருணைக்கிழங்கு - 250 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 100 கிராம், பூண்டு - 8 பற்கள், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பூண்டு பற்களைச் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பிடிக்கருணை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும்.

பிடிக்கருணைக்கிழங்கு வடை

தேவை: வேகவைத்து தோலுரித்த பிடிக்கருணைக்கிழங்கு - 250 கிராம், வெங்காயம் - 50 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 6, வறுத்த சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி அல்லது புதினா - அரை கப், பொட்டுக்கடலை - 50 கிராம், அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வறுத்த வேர்க்கடலையுடன் வறுத்த சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்த பிடிக்கருணயுடன் சேர்த்துக் கட்டியில்லாமல் மசித்துக்கொள்ளவும். இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், புதினா அல்லது கொத்தமல்லி சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசிறிக் கொள்ளவும். பிறகு சிறு சிறு வடைகளாகத் தட்டி, அரிசி மாவில் புரட்டி எடுத்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் சுவையான பிடிக்கருணைக்கிழங்கு வடை தயார்.

பிடிக்கருணைக்கிழங்கு தேங்காய்ப் பொரியல்

தேவை: வேகவைத்து தோலுரித்துப் பொடியாக நறுக்கிய பிடிக்கருணைக்கிழங்கு - 250 கிராம், புளி பேஸ்ட் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 50 கிராம், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்துத் தாளித்து, புளி பேஸ்ட், நறுக்கிய பிடிக்கருணைக்கிழங்குடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு புரட்டியெடுக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறியெடுக்கவும்.

காய்கறிகள், பழங்களைப் போலவே கிழங்கு வகைகளுக்கும் நம் உணவு வகைகளில் சிறப்பான இடமுண்டு. சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வெற்றிலைவள்ளிக்கிழங்கு, பிடிக்கருணை, உருளைக்கிழங்கு என்று ஒவ்வொரு கிழங்கும் ஒவ்வொருவிதமான தனிச்சுவை மிக்கது.

நம் உடலுக்குத் தேவையான சக்தியை வழங்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மிக்கவை கிழங்குகள். மருத்துவ குணமும் உள்ளவை. கிழங்குகள் மாவுச்சத்து அதிகமுள்ளவையாக இருந்தபோதிலும் அவற்றின் சுவை எல்லோருக்கும் பிடித்ததாகவே இருக்கிறது. சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கூட கிழங்கு உணவுகள் இருந்தால் சாப்பிட வைத்துவிடலாம்.

ஆறு கிழங்குகள் அறுசுவை உணவுகள்

‘‘சர்க்கரைவள்ளிக்கிழங்கு, இயற்கையிலேயே இனிப்பு நிறைந்தது. ‘கிழங்குகளின் அரசன்’ கருணைக்கிழங்கு. எல்லா வயதின ருக்கும் ஏற்றது. தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சேப்பங்கிழங்கு, வெற்றிலைவள்ளிக் கிழங்கு இரண்டிலும் இயற்கையிலேயே நல்ல கொழுப்பு உள்ளதால், மூட்டு களுக்கு நல்லது. பிடிக்கருணைக்கிழங்கு மூலநோய்க்கு மிகவும் நல்லது’’ என்கிற வேலூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.மீனாட்சி, சுவையோடு மருத்துவ குணங்களும் நிறைந்த விதவிதமான கிழங்குகளில் அறுசுவை விருந்து படைத்திருக்கிறார்.

குறிப்பு: கிழங்கு வகைகள் பெரும்பாலும் சர்க்கரைச் சத்து நிறைந்தவை என்பதால், சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடுதான் உண்ண வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு