பிரீமியம் ஸ்டோரி
30 வகை வாழை சமையல்
30 வகை வாழை சமையல்

வாழைப்பூ சில்லி ஃப்ரை

தேவை: பெரிய வாழைப்பூ இதழ்கள் - 2 கப், மைதா - 4 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப. மசாலா ஊறவைக்க: தயிர் - 6 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

வாழைப்பூ சில்லி ஃப்ரை
வாழைப்பூ சில்லி ஃப்ரை

செய்முறை: வாழைப்பூவில் மசாலாவுக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அதில் உப்பு, மைதா, அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசிறிவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வாழைப்பூ இதழ்களை உதிரி உதிரியாகப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

30 வகை வாழை சமையல்

குறிப்பு: வாழைப்பூவின் நரம்பு - கள்ளன் (Stigma) மற்றும் புறவிதழ் (Calyx) இரண்டையும் நீக்கி பின் உபயோகிக்கவும். வாழைப்பூவின் வெளிப்பகுதியில் இருக்கும் பூக்கள் பெரிய பூவிதழ்கள் என்றும், மத்தியில் உள்ளவை நடுத்தர பூவிதழ்கள் என்றும் உட்பகுதியில் உள்ளவை பொடி பூவிதழ்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாழைப்பூத் தொக்கு

தேவை: நறுக்கிய பொடி வாழைப்பூ இதழ்கள் - ஒரு கப், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.

வாழைப்பூத் தொக்கு
வாழைப்பூத் தொக்கு

செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வெந்தயம் சிவந்தவுடன் வாழைப்பூ, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். வாழைப்பூ நன்கு வதங்கிய பின்னர், புளி, உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

வாழைப்பூ இஞ்சித் துவையல்

தேவை: நடுத்தர வாழைப்பூ இதழ்கள் (நறுக்கியது) - முக்கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - கால் கப், இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வாழைப்பூ இஞ்சித் துவையல்
வாழைப்பூ இஞ்சித் துவையல்

செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வாழைப்பூ, இஞ்சி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், புளி சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி இறக்கவும். ஆறியதும், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

வாழைப்பூ பருப்பு தோசை

தேவை: இட்லி அரிசி - அரை கப், துவரம்பருப்பு, உளுந்து, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய நடுத்தர அளவு வாழைப்பூ - அரை கப், பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

வாழைப்பூ பருப்பு தோசை
வாழைப்பூ பருப்பு தோசை

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை காய்ந்த மிளகாயுடன் சேர்த்து ஒன்றாக இரண்டு மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதில் சீரகம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து லேசாக நறநறவென இருக்கும்படி அரைக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், வாழைப்பூ சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சற்று கனமான தோசைகள் போல ஊற்றவும். இருபுறமும் எண்ணெய்விட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். இதை வெண்ணெய், நாட்டுச் சர்க்கரையுடன் சூடாகப் பரிமாறவும்.

வாழைப்பூ பிரியாணி

தேவை: பெரிய வாழைப்பூ இதழ்கள் - 2 கைப்பிடி அளவு, பெல்லாரி வெங்காயம் (நடுத்தர அளவு) - 4, தக்காளி - 3 (பெரியது), எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், சீரகசம்பா அரிசி - 2 கப், பச்சை மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லித்தழை (இரண்டும் சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, பட்டை - 2, ஏலக்காய் - 2, பிரியாணி இலை - 2, தயிர் - அரை கப், பிரியாணி மசாலா - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வாழைப்பூ பிரியாணி
வாழைப்பூ பிரியாணி

செய்முறை: சீரகசம்பா அரிசியைக் கழுவி தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாழைப்பூவுடன், தயிர், பிரியாணி மசாலா, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய்களைச் சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவிடவும். வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கிலும், புதினா, கொத்தமல்லித்தழை, தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் சேர்க்கவும். வாசனைப் பொருள்கள் வதங்கியதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரையில் வதக்கவும். பிறகு தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினாவைப் போட்டு தக்காளி கரையும் வரையில் வதக்கவும். பின்னர் ஊறவைத்திருக்கும் வாழைப்பூவைப் போட்டு நெய் பிரியும் வரையில் சன்னமான தீயில் சுருள வதக்கவும். அரிசியில் தண்ணீரை வடித்துவிட்டு மசாலாவில் கலந்துவிடவும். 3 கப் தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வைத்திருந்து பின்னர் தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் அடங்கியவுடன் சூடாகப் பரிமாறவும்.

வாழைப்பூக் குழம்பு

தேவை: பெல்லாரி வெங்காயம் - 2, தக்காளி - 3, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்ப்பால் - முக்கால் கப், புளி - எலுமிச்சை அளவு, தண்ணீர் - ஒன்றரை கப், நடுத்தர அளவு வாழைப்பூ இதழ்கள் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, மோர் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வாழைப்பூக் குழம்பு
வாழைப்பூக் குழம்பு

செய்முறை: வாழைப்பூ இதழ்களை ஒன்றிரண்டாக நறுக்கி மோரில் போட்டுவைக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்துவைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர், மோரில் உள்ள வாழைப்பூவை ஒட்டப்பிழிந்து வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். பிறகு புளித்தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியான வுடன் தேங்காய்ப்பால் சேர்த்து, ஒரு கொதிவந்தவுடன் இறக்கிவிடவும்.

சீஸ் ஸ்டஃப்டு வாழைப்பூ வடை

தேவை: வாழைப்பூ இதழ் - 2 கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - அரை கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சீஸ் க்யூப்ஸ் - 4, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

சீஸ் ஸ்டஃப்டு வாழைப்பூ வடை
சீஸ் ஸ்டஃப்டு வாழைப்பூ வடை

செய்முறை: கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின்னர் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். இடையிடையே ஒதுக்கிவிட்டு அரைத்துக்கொள்ளவும். பாதி அளவு அரைபட்டவுடன், இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர் வாழைப்பூவைச் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை கலந்துகொள்ளவும். சீஸ் க்யூப்களை நான்காக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காயவிடவும். வாழைப்பூ மாவை எடுத்து எலுமிச்சை அளவு உருட்டவும். அதன் நடுவில் ஒரு சிறிய சீஸ் துண்டை வைத்து மூடி லேசாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

வாழைப்பூ மசாலா இட்லி

தேவை: பொடி வாழைப்பூ இதழ்கள் - 2 கப், இட்லி மாவு - 3 கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா அரை டீஸ்பூன், கறி மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வாழைப்பூ மசாலா இட்லி
வாழைப்பூ மசாலா இட்லி

செய்முறை: வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, வாழைப்பூ, மசாலா வகைகளைச் சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும். இதை ஆறவைத்து ஒரு சுற்று மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். மசாலா தயார். இட்லித்தட்டில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மாவை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். பின்னர் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மசாலாவை வைத்து, மேலே அரை கரண்டி இட்லி மாவால் மூடிவிட்டு, 8-10 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். சூடாகப் பரிமாறவும்.

வாழைப்பூச் சம்பல்

தேவை: பொடி வாழைப்பூ- 2 கப் (நறுக்கியது), பெல்லாரி வெங்காயம் (நடுத்தர அளவு) - 2, காய்ந்த மிளகாய் - 10, பூண்டு - 6 பல், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 2, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வாழைப்பூச் சம்பல்
வாழைப்பூச் சம்பல்

செய்முறை: வாழைப்பூ, பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, ஏலக்காய், பட்டையைத் தாளிக்கவும். பின்னர், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வாழைப்பூ, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். தீயைக் குறைத்து மூடி போட்டு, அவ்வப்போது கிளறிவிட்டு, நன்கு வெந்தவுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.

வாழைக்காய் ஃப்ரைஸ்

தேவை: வாழைக்காய் - 3, கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

வாழைக்காய் ஃப்ரைஸ்
வாழைக்காய் ஃப்ரைஸ்

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, குளிர்ந்த நீரில் போட்டுவைக்கவும். மாவு வகைகள், உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வாழைக்காய் துண்டுகளை மாவில் பிசிறி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வாழைக்காய் சுக்கா வறுவல்

தேவை: வாழைக்காய் - 4, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

வாழைக்காய் சுக்கா வறுவல்
வாழைக்காய் சுக்கா வறுவல்

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, அரை இன்ச் சதுரங்களாக நறுக்கி, அதில் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் வாழைக்காய் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரையில் வதக்கவும். கால் கப் தண்ணீர் தெளித்து மூடி போட்டு குறைந்த தீயில் நன்கு வேகவிடவும். காய் வெந்தவுடன் மூடியைத் திறந்து மேலும் ஐந்தாறு நிமிடங்கள் ரோஸ்ட் ஆகும் வரையில் அவ்வப்போது கிளறிவிட்டு இறக்கவும்.

வாழைக்காய் ஸ்வீட் கார்ன் போட்ஸ்

தேவை: வாழைக்காய் - 3, ஸ்வீட் கார்ன் - ஒன்று, பெல்லாரி வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன் + 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை வில்லைகள் - 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வாழைக்காய் ஸ்வீட் கார்ன் போட்ஸ்
வாழைக்காய் ஸ்வீட் கார்ன் போட்ஸ்

செய்முறை: வாழைக்காய்களைத் தோல் சீவி இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு கரண்டி/ஸ்பூனின் பின் பகுதியை வைத்து நடுவில் கொஞ்சம் சதையை வழித்துவிடவும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசிறிவைக்கவும். க்ரில்லில் 10 - 15 நிமிடங்கள் வாழைக்காய்களை அடுக்கி பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும். க்ரில் செய்ய முடியாதவர்கள், ஒரு ஃப்ரையிங் பானில் (Frying Pan) குழிப்பக்கம் கல்லில் படுமாறு அடுக்கி, மிக சன்னமான தீயில் மூடி போட்டு வேகவைக்கலாம். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஸ்வீட் கார்னை உரித்து, முத்துகளைத் தனியாக எடுக்கவும். மற்றொரு கடாயில், 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், ஸ்வீட் கார்ன் முத்துகள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு தட்டில் வாழைக்காய்களை அடுக்கி அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவு ஸ்வீட்கார்ன் ஃபில்லிங் வைத்து, கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சை வில்லைகளோடு பரிமாறவும்.

வாழைக்காய் புதினா கபாப்

தேவை: வாழைக்காய் - 3, தக்காளி - 2 (சிறியது), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கெட்டித் தயிர் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு - தேவைக்கேற்ப. அரைத்துக்கொள்ள: புதினா - அரை கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

வாழைக்காய் புதினா கபாப்
வாழைக்காய் புதினா கபாப்

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நடுத்தர அளவு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் சதுரங்களாக நறுக்கி, தனியே வைக்கவும். அரைத்துக்கொள்ள வேண்டியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்துக்கொள்ளவும். தயிரில் வாழைக்காய், தக்காளி தவிர்த்து மற்ற பொருள்களைச் சேர்க்கவும். கடைசியாக வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவிடவும். ஒரு ஸ்கீவரில் (Skewer) வாழைக்காய், தக்காளி என்று ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி, அடுப்புத் தணலில் நிதானமான தீயில் வாட்டி எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

வாழைக்காய் மேத்தி கிரேவி

தேவை: வாழைக்காய் - 2, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் + 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பெல்லாரி வெங்காயம் - 2 (சிறியது), தக்காளி - 2, மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், கஸூரி மேத்தி, அன்சால்டட் பட்டர் (உப்பில்லாத வெண்ணெய்) - தலா 2 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - அலங்கரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வாழைக்காய் மேத்தி கிரேவி
வாழைக்காய் மேத்தி கிரேவி

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, சிறிய சதுரங்களாக நறுக்கவும். ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து பெருங்காயத்தூள், வாழைக்காயைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வெந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு மசாலா பொருள்களைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரையும் வரை வதக்கி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வாழைக்காய், பட்டர் சேர்த்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவைத்து, கஸூரி மேத்தி, க்ரீம் சேர்த்து சூடாக சப்பாத்தி / பரோட்டா உடன் பரிமாறவும்.

ஜெயின் பாவ் பாஜி

தேவை: வாழைக்காய் - 2, சிறிய காலிஃப்ளவர் - ஒன்று, பச்சைப் பட்டாணி - கால் கப், பெல்லாரி வெங்காயம் - 2 (சிறியது), தக்காளி - 2, குடமிளகாய் - பாதியளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பாவ் பாஜி மசாலா - 4 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. பரிமாற: அன்சால்டட் பட்டர் (உப்பில்லாத வெண்ணெய்) - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - அரை கப், எலுமிச்சை வில்லைகள் - 4, பாவ் பன் - 12.

ஜெயின் பாவ் பாஜி
ஜெயின் பாவ் பாஜி

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவைக்கவும். காலிஃப்ளவர், குடமிளகாயைச் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் வாழைக்காய், பச்சைப் பட்டாணி, நறுக்கிய குடமிளகாய், காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரை வேகவைக்கவும். விசில் இறங்கியவுடன் காய்கறிகளை நன்கு மசித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பாவ் பாஜி மசாலா, உப்பு சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் மசித்து வைத்திருக்கும் காய்கறிக் கலவையைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். பாஜி தயார்.

பாவ் பன்னை இரண்டாக வெட்டி, இருபுறமும் தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். வெண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை வில்லைகளுடன் பாஜி சேர்த்துப் பரிமாறவும்.

பனானா கேரமல் ப்ரேக்ஃபாஸ்ட் ஓட்ஸ்

தேவை: ஓட்ஸ் - அரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், பால் - ஒரு கப், அன்சால்டட் பட்டர் (உப்பில்லாத வெண்ணெய்) - 2 டேபிள்ஸ்பூன், பிரவுன் சுகர் - 1/3 கப், வாழைப்பழம் - 2, பட்டைத்தூள் (விருப்பப்பட்டால்) - கால் டீஸ்பூன்.

பனானா கேரமல் ப்ரேக்ஃபாஸ்ட் ஓட்ஸ்
பனானா கேரமல் ப்ரேக்ஃபாஸ்ட் ஓட்ஸ்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஓட்ஸ் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்தவுடன், அதில் பால் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். தனித்தனி பவுல்களில் ஊற்றவும். வாழைப்பழத்தை வட்டவட்டமாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு ஃப்ரையிங் பானை (Frying pan) மிதமாகச் சூடேற்றவும். அதில் பிரவுன் சுகரைச் சேர்த்து இளகவிடவும். பின் அதில் பட்டரைச் சேர்த்தால் இளகி சாஸ் போல வரும். இதில் நறுக்கிய வாழைப்பழங்களைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். விருப்பமுள்ளவர்கள் இதில் பட்டைத்தூளைத் தூவலாம். இதைத் தயாராக வைத்திருக்கும் பவுல்களில் மேலாக வைத்துப் பரிமாறவும்.

வாழைப்பழ பிஸ்கட்

தேவை: அன்சால்டட் பட்டர் (உப்பில்லாத வெண்ணெய்) - 100 கிராம், கோதுமை அல்லது மைதா மாவு - ஒன்றே கால் கப், சர்க்கரை - ஒரு கப், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் (தலைதட்டி), நன்றாக மசித்த வாழைப்பழம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை.

வாழைப்பழ பிஸ்கட்
வாழைப்பழ பிஸ்கட்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பட்டர், சர்க்கரை சேர்த்து ஹேண்டு பீட்டர் கொண்டு சர்க்கரை கரையும் வரையில் அடித்துக்கொள்ளவும். பின்னர் அதில் உப்பு, வெனிலா எசென்ஸ், மசித்த வாழைப்பழம் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் அடிக்கவும். மைதா / கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து ஒருமுறை சலித்து வாழைப்பழக் கலவையில் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதை நீளமாக பைப் போல உருட்டி, க்ளிங் ராப் (Cling Wrap) சுற்றி ஃப்ரிட்ஜில் குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும். அவனை (Oven) 160 டிகிரிக்குச் சூடேற்றவும். பிஸ்கட் மாவை வெளியில் எடுத்து பிஸ்கட்டுகளாக நறுக்கவும். பேக்கிங் ட்ரேயில் அடுக்கி 20 - 25 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை பேக் செய்து எடுக்கவும். இதை ஒரு வொயர் ரேக்கில் முழுவதுமாக ஆறவிட்டு பின்னர் ஏர்டைட் கன்டெய்னரில் எடுத்துவைக்கவும்.

வாழைப்பழ கேசரி

தேவை: வாழைப்பழம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), ரவை - முக்கால் கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், முந்திரி - 4, உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

வாழைப்பழ கேசரி
வாழைப்பழ கேசரி

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் காயவைக்கவும். அதில் முந்திரி, உலர்திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிடவும். பின்னர் அதை ரவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். ரவை சேர்ந்து வரும்போது அதில் வாழைப்பழம், சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்னர் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சையைத் தூவிப் பரிமாறவும்.

வாழைப்பழ ஆரஞ்சு ஸ்மூத்தி

தேவை: வாழைப்பழம் - 2 (பெரியது), ஆரஞ்சுப்பழம் - ஒன்று, பால் - முக்கால் கப், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்).

வாழைப்பழ ஆரஞ்சு ஸ்மூத்தி
வாழைப்பழ ஆரஞ்சு ஸ்மூத்தி

செய்முறை: ஆரஞ்சை உரித்து விதைகளை நீக்கவும். வாழைப்பழத்தோடு, இதர பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறவும்.

வாழைப்பழ அப்பம்

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - 2, சமையல் சோடா - 2 சிட்டிகை, எண்ணெய் / நெய் - பொரிக்கத் தேவையான அளவு.

வாழைப்பழ அப்பம்
வாழைப்பழ அப்பம்

செய்முறை: வெல்லத்தைச் சிறிதளவு வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். வாழைப்பழத்தை மசிக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருள்களை ஒன்றாகக் கலந்துவைக்கவும். குழிப்பணியாரக்கல் ஒன்றை எண்ணெய்/நெய் ஊற்றி காயவைத்து மாவை சிறு சிறு அப்பங்களாகச் சுட்டெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

வாழைப்பழ க்ரீம்

தேவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - 2 (மசித்தது), வெனிலா எசென்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்.

வாழைப்பழ க்ரீம்
வாழைப்பழ க்ரீம்

செய்முறை: பாலை பாதியாக வற்றும் வரை சுண்டக் காய்ச்சவும். பின்னர் அதில் சர்க்கரை, க்ரீமைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் காய்ச்சவும். கார்ன்ஃப்ளாரைச் சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கலவை கெட்டியானவுடன் இறக்கி ஆறவைக்கவும். இதனுடன் வாழைப்பழம், வெனிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் இரண்டு நிமிடங்கள் அடிக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற்றி 8 - 10 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து, ஸ்கூப் செய்து பரிமாறவும்.

வாழைப்பழ கேக் (எக்லெஸ்)

தேவை: வாழைப்பழம் - 2 (மசித்தது), மைதா - 3 கப், பேக்கிங் பவுடர் - நாலரை டீஸ்பூன், பேக்கிங் சோடா - ஒன்றரை டீஸ்பூன், அன்சால்டட் பட்டர் (உப்பில்லாத வெண்ணெய்) - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு கப், தயிர் - அரை கப், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

வாழைப்பழ கேக் (எக்லெஸ்)
வாழைப்பழ கேக் (எக்லெஸ்)

செய்முறை: அவனை (Oven) 180 டிகிரிக்கு சூடேற்றவும். ஒரு லோஃப் கேக் ட்ரே அல்லது 8 இன்ச் கேக் ட்ரேயைச் சிறிதளவு பட்டர் பூசி பார்ச்மென்ட் பேப்பர் / பட்டர் பேப்பர் விரிக்கவும். மைதாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து இரண்டு முறை சலித்து தனியே எடுத்துவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பட்டர், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைந்து, பட்டர் வெளுக்கும் வரையில் அடிக்கவும் (5-8 நிமிடங்கள்). பின்னர் அதில் மசித்த வாழைப்பழங்கள், பால், தயிர், வெனிலா எசென்ஸ் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் அடிக்கவும். இதில் மைதா கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒரு மரக்கரண்டி கொண்டு கெட்டியில்லாமல் கலக்கவும். பின் தயாராக வைத்திருக்கும் கேக் ட்ரேயில் ஊற்றி, 40 - 45 நிமிடங்கள் பேக் செய்யவும். இதை வொயர் ராக்கில் ஆறவைத்து பின் பரிமாறவும்.

அடை பிரதமன்

தேவை - அடை செய்ய: வாழையிலை - 2 (சிறியது), பச்சிரிசி மாவு - முக்கால் கப், நெய் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - சிறிதளவு. பிரதமன் செய்ய: பால் - 3 கப், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 5 - 6.

அடை பிரதமன்
அடை பிரதமன்

அடை செய்முறை: பச்சரிசி மாவுடன் நெய், சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து வைக்கவும். வாழையிலையைச் சுத்தம் செய்து பச்சரிசி மாவை மெலிதாகப் பரப்பவும். இதை ஆவியில் மூன்று நான்கு நிமிடங்கள் வேகவைத்து சதுரங்களாக நறுக்கி, இலையில் இருந்து எடுத்து, குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். இதே போல எல்லா மாவையும் செய்து வைக்கவும்.

பிரதமன் செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்து முக்கால் பாகம் ஆகும் வரை நன்கு காய்ச்சவும். பின்னர் இதில் அடை துண்டுகளைப் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் காய்ச்சவும். அதிகம் கிளற வேண்டாம். அடை உடைந்துவிடும். அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

வாழையிலை பேக்டு கொத்து பரோட்டா

தேவை: பரோட்டா - 4, வாழையிலை - 4 (சிறிய அளவு), எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பெல்லாரி வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்), தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி - கால் கப், குடமிளகாய் - பாதியளவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, முந்திரிப்பருப்பு (விருப்பப்பட்டால்) - 4 - 5, உப்பு - தேவைக்கேற்ப.

வாழையிலை பேக்டு கொத்து பரோட்டா
வாழையிலை பேக்டு கொத்து பரோட்டா

செய்முறை: பச்சைப் பட்டாணி தவிர்த்து எல்லா காய்களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு, முந்திரி தாளித்து தக்காளி தவிர்த்து மற்ற காய்களைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, தக்காளி, மசாலா வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். காய்கள் வெந்து, தண்ணீர் சிறிதளவு வற்றியவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக ஆக்கவும். இரண்டு வாழையிலைகளை ப்ளஸ் (+) வடிவில் வைத்து நடுவில் பரோட்டாத்துண்டுகள் வைத்து, காய்கறிக் கலவையை ஊற்றி இறுக்கி மடித்துவிடவும்.

ஒரு மண் பானை/கடாயை சன்னமான தீயில் சூடேற்றி, வாழை வாழையிலையை வைத்து, மூடி போட்டு 5 - 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் அதை வெளியில் எடுத்து, இலைகளைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவி, சூடாக தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

வாழையிலை காண்ட்வி

தேவை: கடலை மாவு - ஒரு கப், கெட்டியான மோர் - 3 கப், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, வாழையிலை (பெரியது) - ஒன்று (ஒரு பக்கம் மட்டும்).தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், மல்லி (தனியா) - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்.

வாழையிலை காண்ட்வி
வாழையிலை காண்ட்வி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மோர், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது எல்லாவற்றையும் ஒன்றாகக் கரைத்துவைக்கவும். வாழையிலையைச் சுத்தம் செய்து துடைத்து வைக்கவும். கடாய் ஒன்றை மிதமான சூட்டுக்குக் காயவைத்து, கடலை மாவுக் கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறவும். கலவை களி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வாழையிலையில் 2 மி.மீ அளவுக்குப் பரப்பிவிடவும். இது நன்றாக ஆறிய பின்னர் 2 இன்ச் அகலமான துண்டுகளாக நறுக்கவும். ஒவ்வொரு துண்டையும் கவனமாகச் சுருட்டவும். இதே போல எல்லாவற்றையும் சுருட்டி ஒரு தட்டில் அடுக்கவும். தாளிப்பவற்றைத் தாளித்து காண்ட்வி மீது சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

வாழைத்தண்டு மொஹிங்கா

தேவை: பிஞ்சு வாழைத்தண்டு (4 இன்ச் துண்டு) - ஒன்று, வறுக்காத வேர்க்கடலை - கால் கப், பெல்லாரி வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, தண்ணீர் - 500 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப. பரிமாறுவதற்கு: வேகவைத்த சேமியா/இடியாப்ப ல்சேவை - 2 கப், மெலிதாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை வில்லைகள் - 2, கடலைப்பருப்பு தட்டை - 3 (விருப்பப்பட்டால்).

வாழைத்தண்டு மொஹிங்கா
வாழைத்தண்டு மொஹிங்கா

செய்முறை: வாழைத்தண்டை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை இஞ்சி - பூண்டு விழுதுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து, வேர்க்கடலையை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கி, வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வாழைத்தண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, வாழைத்தண்டு, வேர்க்கடலை வேகும் வரையில் கொதிக்கவிடவும். வெந்தவுடன், அரிசி மாவு, சோயா சாஸ் சேர்த்து, சிறிது கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி, பரிமாற வேண்டியவற்றுடன் பரிமாறவும். பர்மாவின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த மொஹிங்கா.

வாழைத்தண்டு ஹனி சில்லி ஃப்ரை

தேவை: பிஞ்சு வாழைத்தண்டு - ஒன்று (12 இன்ச் நீளமுடையது), மைதா - அரை கப், அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தேன் - கால் கப், டொமேட்டோ கெச்சப் - 3 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், ஸ்ப்ரிங் ஆனியன் - ஒன்று (பச்சைப் பகுதி மட்டும்), உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

வாழைத்தண்டு ஹனி சில்லி ஃப்ரை
வாழைத்தண்டு ஹனி சில்லி ஃப்ரை

செய்முறை: வாழைத்தண்டை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். நிறம் மாறும் முன்னரே அதில் மாவு வகைகள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறிவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து, மிதமான தீயில் வாழைத்தண்டுகளை மொறுமொறுப்பாக ஆகும் வரை பொரித்தெடுத்து வைக்கவும். பொரித்தவுடன் வாழைத்தண்டு பாதியாக சுருங்கிவிடும். ஒரு கடாயில் தேன், டொமேட்டோ கெச்சப், சோயா சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ் / மிளகாய்த்தூள் கலந்து லேசாக சூடு செய்து அதில் பொரித்து வைத்துள்ள வாழைத்தண்டுகளைப் போட்டுப் புரட்டி, ஸ்ப்ரிங் ஆனியனைப் பொடியாக நறுக்கி தூவிப் பரிமாறவும்.

வாழைத்தண்டு மிளகு சூப்

தேவை: பிஞ்சு வாழைத்தண்டு (6 இன்ச் நீளம் கொண்டது) - ஒன்று, பருப்புத் தண்ணீர் - ஒன்றரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - 2, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். பொடிக்க: மிளகு - ஒன்றரை டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு.

வாழைத்தண்டு மிளகு சூப்
வாழைத்தண்டு மிளகு சூப்

செய்முறை: வாழைத்தண்டின் பாதியை எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து வடிகட்டவும். பருப்புத் தண்ணீருடன் வாழைத்தண்டு சாறு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு கலந்து வைக்கவும். மீதி வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றைப் பொடித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டைப் போட்டு வதக்கவும். தண்டு வெந்த பின்னர், தக்காளி, பொடித்தவற்றை போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கி, பருப்புத் தண்ணீர் கரைசலை ஊற்றி, நுரைத்து வரத் தொடங்கும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவிடவும்.

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவை: பிஞ்சு வாழைத்தண்டு (4 இன்ச் துண்டு) - ஒன்று, தயிர் - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வாழைத்தண்டு மோர்க்கூட்டு
வாழைத்தண்டு மோர்க்கூட்டு

செய்முறை: வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி தனியே வேகவைக்கவும். கடலைப்பருப்புடன் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதை தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வாழைத்தண்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரையில் கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி, சற்று ஆறியவுடன் தயிர் கலந்து பரிமாறவும்.

வாழைத்தண்டு மசாலா லஸ்ஸி

தேவை: வாழைத்தண்டு - ஒன்று (6 இன்ச் நீளம் கொண்டது), கெட்டித் தயிர் - ஒரு கப், தண்ணீர் - அரை கப், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன். லஸ்ஸி மசாலா செய்ய: சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, உப்பு - ஒன்றரை டீஸ்பூன், கறுப்பு உப்பு - 2 டீஸ்பூன்.

வாழைத்தண்டு மசாலா லஸ்ஸி
வாழைத்தண்டு மசாலா லஸ்ஸி

செய்முறை: வாழைத்தண்டை நறுக்கி, தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். இதில் எலுமிச்சைச்சாறு, தயிர் கலந்து நன்றாகக் கடையவும். மசாலாவுக்குக் கொடுத்துள்ளவற்றை லேசாக வாசனை வரும் வரையில் வறுத்து ஆறவைத்து நைஸாக அரைக்கவும். தேவையான அளவு மசாலாவை லஸ்ஸியுடன் கலக்கவும். `ஜில்’லென்றுப் பரிமாறவும்.

குறிப்பு: லஸ்ஸி மசாலாவில் விரும்பினால் காய்ந்த புதினா இலைகள் அரை கைப்பிடி சேர்த்து அரைக்கலாம். இந்த மசாலாவை நீர்மோர், மோர்க்குழம்பு, மோர்க்கூட்டு என்று எதில் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

வாரே வாவ்... வாழை!

``உலகின் முக்கியமான தாவரங்களில் வாழையும் ஒன்று. வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என எதுவும் வீணாகாது.

வாழையின் பலன்கள்...

வாழைப்பூ: ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்றவும், வயிற்றுப்புண்ணை ஆற்றவும் வாழைப்பூவைச் சமைத்து உண்ணலாம்.

வாழைக்காய்: சமையலில் பலவிதங்களில் பயன்படுகிறது.

30 வகை வாழை சமையல்

வாழைப்பழம்: முக்கனிகளில் ஒன்றாக விளங்கும் வாழைப்பழத்தை, இதயநோய், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள்கூட எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.

வாழைத்தண்டு: நார்ச்சத்து நிறைந்தது. சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. பருமன் உடையவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வாழையிலை: சூடான உணவை வாழையிலையில் வைத்து உண்ணும்போது இலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் தூண்டப்பட்டு நம் உணவுடன் கலந்து மிகுந்த பயனளிக்கிறது’’ என்று கூறும் சமையற்கலைஞர் அகிலா விமல் வாழைப்பூ பிரியாணி, வாழைக்காய் புதினா கபாப், வாழைப்பழ கேக் என வாழையை வைத்து புதுமையான, சொக்கவைக்கும் சுவையில் விதவிதமான ரெசிப்பிகளை வழங்குகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு