ஹெல்த்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

கடலைப்பருப்பு ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
கடலைப்பருப்பு ரெசிப்பி

சுவையான தானியங்களில் கடலைப்பருப்புக்குத் தனியிடம் உண்டு. கடலைமாவைக் கொண்டு செய்யப்படும் பஜ்ஜி, பக்கோடா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை நினைத்தாலே நாவில் நீர் ஊறும்.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

புடிங்

தேவை: ஊறவைத்த கடலைப்பருப்பு - ஒரு கப் ஊறவைத்த முந்திரி - 8 தேங்காய்த் துருவல் - கால் கப் சர்க்கரை - முக்கால் கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் பால் - முக்கால் லிட்டர் நெய் - சிறிதளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பு, முந்திரி, தேங்காய்த் துருவல், சர்க்கரை, அரை லிட்டர் பால் சேர்த்து விழுதாக அரைத்து, மீதமுள்ள பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி இட்லிப் பாத்திரத்தில் சுமார் 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து, ஆறியதும் துண்டு போட்டுப் பரிமாறவும்.

ஹெல்த்தி கூழ்

தேவை: கோதுமைக் குருணை - ஒரு கப் கேரட் - ஒன்று கடலைப்பருப்பு - கால் கப் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு மோர், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கோதுமைக் குருணையைக் குழைவாக வேகவைக்கவும். கடலைப்பருப்பை அழுத்தும் பதத்தில் வேகவைக்கவும். இவற்றுடன் நறுக்கிய கேரட், கறிவேப்பிலை, மோர், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு கலந்து பருகவும்.

அல்வா

தேவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப் சர்க்கரை - 2 கப் நெய் - 300 கிராம் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் அல்வா கலர் - அரை டீஸ்பூன் முந்திரி - 8 (நறுக்கவும்) பால் - 300 மில்லி.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பையும் பாசிப்பருப்பையும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் பொடித்து பாலுடன் கலந்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, பிசுபிசுப்பு பதத்தில் பாகு காய்ச்சி பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். இடையிடையே நெய்விட்டு, மற்ற பொருள்களையும் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

பிரெட் லட்டு

தேவை: பிரெட் - 4 ஸ்லைஸ் பால் - அரை லிட்டர் அல்லது முக்கால் லிட்டர் சர்க்கரை - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன் லட்டு - 8 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் நெய் - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: பிரெட்டை நெய்விட்டு ரோஸ்ட் செய்து முக்கோணமாக நறுக்கி வைக்கவும். பாலை ஓரளவு கெட்டியாகக் காய்ச்சி, லட்டு தவிர மற்ற பொருள்களைப் பாலுடன் சேர்க்கவும். பரிமாறும்போது பிரெட்டின் மேல் லட்டை வைத்து, பாலை மேலே விட்டு பரிமாறவும். சாப்பிடும்போது பிரெட்டை லட்டுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

சோயா சங்க்ஸ் கடலைப்பருப்பு உருண்டை

தேவை: கடலைப்பருப்பு - அரை கப் பெரிய சைஸ் சோயா சாஸ் சங்க்ஸ் - 8 (பொடிக்கவும்) சர்க்கரை - முக்கால் கப் வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் - தலா 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன் நெய் - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: தேங்காய்த் துருவலை வெறும் வாணலியிலும், கடலைப்பருப்பையும் சோயா சங்க்ஸையும் சிறிதளவு நெய்விட்டும் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். சர்க்கரையையும் பொடிக்கவும். அனைத்துப் பொருள்களையும் (நெய் தவிர) ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். நெய்யைச் சூடு செய்து சிறிது சிறிதாகவிட்டு கலந்து சூடு ஆறும் முன் உருட்டவும்.

பிரெட் ரோல்

தேவை: கடலைப்பருப்பு - அரை கப் பொடித்த வெல்லம் - முக்கால் கப் தேங்காய்த் துருவல் - அரை கப் கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன் முழு பிரெட் - ஒன்று நெய் - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை அழுத்தும் பதத்தில் வேகவைத்து, ஆறியதும் மிக்ஸியில் விட்டுவிட்டு ஓடவிட்டு உதிர்த்து வைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கேரட் துருவலை ஈரப்பதம் போக வதக்கி, தேங்காய்த் துருவலைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்து வெல்லம் இளகியதும் கடலைப்பருப்பைச் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும். நறுக்காத பிரெட்டை நீளவாக்கில் தேவையான எண்ணிக்கையில் ஸ்லைஸ் செய்து, ஓரம் நீக்கி தண்ணீரில் நனைத்து, துணியில் வைத்து அழுத்தி, தண்ணீர் நீக்கியதும் கடலைப்பருப்புக் கலவையை நடுவில் வைத்துச் சுருட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு டோஸ்ட் செய்யவும்.

குறிப்பு: கடலைப்பருப்பு பூரணக் கலவையை போளி, சுளியன், கொழுக் கட்டைக்கும் பயன்படுத்தலாம்.

புட்டு பாயசம்

தேவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப் தேங்காய்த் துருவல் - முக்கால் கப் பொடித்த வெல்லம் - ஒரு கப் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன் புட்டு மாவு - ஒன்றரை அல்லது இரண்டு கப் நெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வறுத்து வேகவைத்து தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். புட்டு மாவில், உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும்.

குறிப்பு: புட்டு இட்லியை பருப்பு கிரேவியுடன் நெய் சேர்த்துச் சாப்பிடவும். தஞ்சாவூர் பகுதியில் `புட்டு பாயசம்' என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விசேஷங்களில் முக்கிய இடம்பெறும்.

பூந்தி பூரி பால்ஸ்

தேவை: பூந்தி - அரை கப் கிரிஸ்பியாக பொரித்த கோதுமைப் பூரி - 6 சர்க்கரை பவுடர் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடர், வறுத்து உடைத்த பாதாம், முந்திரி, வறுத்த திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன்.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: பூரியையும் பூந்தியையும் மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்து, தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்து உருட்டவும். பூந்தி பூரி பால்ஸ் ரெடி.

பருப்பு தினைப் பாயசம்

தேவை: கடலைப்பருப்பு, தினை - தலா அரை கப் வறுத்த தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் பொடித்த பனைவெல்லம் - முக்கால் கப் தேங்காய்ப்பால் - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பையும் தினையையும் லேசாக வறுத்து, குழைவாக வேகவைக்கவும். அத்துடன் பனைவெல்லம், வறுத்த தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பருகவும்.

சுண்டல்

தேவை: வேகவைத்த கடலைப்பருப்பு - அரை கப் ஊறவைத்து வேகவைத்த சன்னா (வெள்ளைக் கொண்டைக்கடலை) - கால் கப் கடுகு, உளுத்தம்பருப்பு, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல், கேரட் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கடலைப்பருப்பு, சன்னா, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு மற்ற பொருள் களையும் சேர்த்துக் கிளறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

வறுகடலை

தேவை: கடலைப்பருப்பு - ஒரு கப் வேர்க்கடலை - 50 கிராம் பூண்டு - 6 பல் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு நெய் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை எட்டு மணி நேரம் ஊறவைத்து, துணியில் போட்டு நிழலில் உலர்த்தி, எண்ணெயில் பொரித்து எடுத்து வடிகட்டியில் போடவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு நசுக்கிய பூண்டு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதை, பொரித்த கடலைப்பருப்புடன் சேர்க்கவும். மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

சீஸ் காரச் சேவு

தேவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, சீஸ் துருவல், பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து உப்பு, சிறிதளவு எண்ணெய், தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். காரச் சேவு சாரணியில் (ஜல்லிக்கரண்டி) சாத்துக்குடி அளவு மாவைவைத்து உள்ளங்கையால் எண்ணெயில் தேய்த்துப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கட்டும்.

சேனைக்கிழங்கு வடை

தேவை: கடலைப்பருப்பு - ஒரு கப் ஓர் அங்குலத் துண்டுகளாக வெட்டிய சேனைக்கிழங்கு - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்) பூண்டு - 3 பல் சோம்பு - ஒரு டீஸ்பூன் பட்டை - 3 சிறிய துண்டு கிராம்பு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய புதினா - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சேனைக்கிழங்கை அரை வேக்காட்டில் வேகவைத்து மசித்து, பருப்புக் கலவையுடன் சேர்த்து, வெங்காயம், புதினா சேர்க்கவும். எண்ணெயைக் காயவைத்து, மாவை விருப்பமான அளவில் வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

மசாலா பக்கோடா

தேவை: கடலை மாவு - 200 கிராம் அரிசி மாவு - 150 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) பூண்டு (தோலுடன்) - 6 பல் (தட்டவும்) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு சமையல் சோடா - 2 சிட்டிகை நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் வனஸ்பதி - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு தவிர மற்ற பொருள்களை ஒன்றுசேர்த்து கைகளால் கலக்கவும். பின்னர் இரண்டு மாவுகளையும் சேர்த்து, குறைவாகத் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக இருக்கும்படி பிசிறவும். எண்ணெயைக் காயவைத்து, மாவை பக்கோடா வடிவில் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

புரோட்டீன் அடை

தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, இட்லி அரிசி - தலா கால் கப் உளுந்து, கொள்ளு, பாசிப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6 மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல், சௌசௌ துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு, கொள்ளு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊறவைத்து மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்துப் பிசையவும். மாவைத் தோசைக்கல்லில் அடைகளாகத் தட்டி இருபக்கமும் எண்ணெய்விட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

சிறப்பு: சௌசௌ சேர்ப்பதால் அடை மிருதுவாக இருக்கும்.

பீட்ரூட் பஜ்ஜி

தேவை: கடலைப்பருப்பு - முக்கால் கப் பச்சரிசி - கால் கப் பீட்ரூட் - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 சீரகம் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பை சுமார் மூன்று மணி நேரம் ஊறவைத்து பீட்ரூட், எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்கவும். (தோசை மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்). பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும் (ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது). பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சிறப்பு: சூடாகச் சாப்பிட்டால் சூப்பரான சுவையில் இருக்கும்.

கார உருண்டை

தேவை: கடலை மாவு - ஒரு கப் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) வேர்க்கடலை - 50 கிராம் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - ஒன்று (அ) இரண்டு (சிறியதாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு நெய் (அ) எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலை மாவை வாசம் வரும் வரை வறுத்து ஆறியதும் தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வெதுவெதுப்பான நீர்விட்டுப் பிசையவும். மாவைக் குட்டிக் குட்டி உருண்டைகளாக உருட்டி இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, உருண்டைகளைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாகச் சாப்பிடவும்.

வெஜிடபிள் ஆம்லெட்

தேவை: கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 2 (அ) 3 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சோம்புத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன் பால் - 2 டேபிள்ஸ்பூன் நெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: நெய் நீங்கலாக அனைத்துப் பொருள்களையும் சேர்த்து தோசை மாவைவிட நீர்க்கக் கரைக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). தோசைக்கல்லில் நெய்விட்டு, கரைத்து வைத்ததை ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.

டோக்ளா

தேவை: கடலைப்பருப்பு - ஒரு கப் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவி, நறுக்கவும்) தயிர் - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன் சமையல் சோடா - 2 சிட்டிகை நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பையும் வெந்தயத்தையும் மூன்று மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம், சிறிதளவு இஞ்சி, உப்பு சேர்த்து குருணைப் பதத்தில் அரைத்து தயிர், சமையல் சோடா சேர்த்துக் கலந்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். எண்ணெய் தடவிய தட்டில் மாவைச் சேர்த்து, குக்கரில் (வெயிட் போடாமல்) வேகவைத்து எடுத்து, ஓர் அங்குலத் துண்டுகளாக வெட்டவும். இதுதான் டோக்ளா. வாணலியில் நெய்விட்டு கடுகு, மீதம் உள்ள சீரகம், இஞ்சி தாளித்து, டோக்ளாக்களைச் சேர்த்து, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

பருப்பு உப்புமா

தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி குருணை - தலா அரை கப் மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2 சின்ன வெங்காயம் - 6 (நறுக்கவும்) பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து மிளகு சேர்த்து குருணை பதத்தில் பொடிக்கவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதில் 3 கப் தண்ணீர்விட்டு உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொதிக்கும்போது அரிசி, பருப்பு குருணைகளைச் சேர்த்துக் கிளறி மூடவும். அடுப்பைக் குறைவான தீயில்வைத்து, இடையில் இரண்டு முறை கிளறவும். வெந்ததும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

கோட்டட் பிரெட்

தேவை: பிரெட் ஸ்லைஸ் - 6 கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்) வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: பிரெட், வெண்ணெய் தவிர மற்ற பொருள்களை ஒன்றுசேர்த்து தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிரெட் ஸ்லைஸை ரோஸ்ட் செய்து இந்த கலவையை இரு பக்கமும் தடவவும். தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்து எடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் சீஸ் துருவல் தூவி சாப்பிடலாம்.

கோலா உருண்டை

தேவை: முற்றிய வாழைக்காய் - ஒன்று கடலைப்பருப்பு - அரை கப் பொட்டுக்கடலை - கால் கப் பச்சை மிளகாய் - 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 சோம்பு - ஒரு டீஸ்பூன் கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை எண்ணெய்விட்டும் பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய்த் துருவலை எண்ணெய் இல்லாமலும் வறுத்து பச்சை மிளகாய், புதினா, உப்பு சேர்த்து அரைக்கவும். வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து தோலை நீக்கித் துருவி இதனுடன் சேர்க்கவும். வெங்காயம் சேர்த்துப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் (எண்ணெய் குறைவாக காய்ந்தால் கோலா உடைந்துவிடும். அதிகம் காய்ந்தால் உள்ளே வேகாது. கவனமாகப் பொரிக்கவும்).

பருப்பு உசிலி

தேவை: பொடியாக நறுக்கிய பீன்ஸ் - ஒரு கப் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், கடுகு, சீரகத்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து, அழுத்தும் பதத்தில் வேவைத்து மிக்ஸியில் விட்டுவிட்டு ஓடவிட்டு உதிர்த்து வைக்கவும். பீன்ஸை மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அளவான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, கடலைப்பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வேகவைத்த பீன்ஸ், தேங்காய்த் துருவல் சேர்த்து, அடுப்பைக் குறைவான தீயில் வைத்துக் கிளறி, கொத்தமல்லித் தூவிப் பரிமாறவும்.

பப்பாளிக்காய் பருப்புக்கூட்டு

தேவை: சிறிய துண்டுகளாக நறுக்கிய பப்பாளிக்காய் - ஒரு கப் கடலைப்பருப்பு - கால் கப் பச்சை மிளகாய் - 2 பட்டை - சிறு துண்டு கிராம்பு - ஒன்று சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் - சிறு கரண்டி அளவு உப்பு - தேவையான அளவு

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பப்பாளிக்காய், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, உப்பு சேர்த்து வேகவைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

சிறப்பு: இது எண்ணெய் இல்லாத சத்தான கூட்டு.

கடலை தயிர் வடை

தேவை: கடலைப்பருப்பு - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 சீரகம் - 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன் தயிர் - ஒன்றரை (அ) 2 கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - சிறிதளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உப்பு, 2 பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து வெதுவெதுப்பான நீரில் போட்டு உடனே எடுக்கவும். தேங்காய்த் துருவல், ஒரு பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். தயிரில் சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கடைந்து, அரைத்த விழுதைச் சேர்த்து, வடைகளை இரண்டாக உடைத்துப் போடவும். ஊறியதும் பரிமாறும்போது ஓமப்பொடியைத் தூவிப் பரிமாறவும்.

பருப்பு தக்காளிக் குழம்பு

தேவை: கடலைப்பருப்பு - அரை கப் தக்காளி - 100 கிராம் சின்ன வெங்காயம் - 12 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 10 பல் மிளகாய்த்தூள், மல்லிதூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் - சிறு கரண்டி அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பு, 3 பல் பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். கொதிக்கும் நீரில் தக்காளியின் காம்பு பக்கம் அடியில் இருக்கும்படி இரண்டு நிமிடங்கள் போட்டு எடுத்து தோல் நீக்கி கைகளால் பிசையவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மீதி பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தக்காளிச்சாறு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். சிறிது நேரம் கொதித்ததும் வேகவைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதிவந்ததும் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

கடலை மல்லித் துவையல்

தேவை: கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 (அ) 6 சின்ன வெங்காயம் - 8 (அ) 10 (தோலுரிக்கவும்) பூண்டுப் பல் - 5 (அ) 6 தக்காளி - 2 புளி - தேவைக்கேற்ப கொத்தமல்லி இலை (காம்புடன்) - 2 கைப்பிடி அளவு உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: மல்லியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மற்ற பொருள்களை எண்ணெய்விட்டு வதக்கி அரைக்கவும் (நைஸாக அரைக்கக் கூடாது). வாணலியில் எண்ணெய்விட்டு எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் குறைவான தீயில் வதக்கவும்.

சிறப்பு: இந்தத் துவையல் இட்லி தோசைக்கு மட்டுமன்றி தயிர் சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.

கடலைப்பருப்புப் பொடி

தேவை: கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன் நிழலில் உலர்த்தி காயவைத்த கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 4 பல் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை மிகக்குறைவான எண்ணெயில் வறுக்கவும். பூண்டு தவிர மற்ற பொருள்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடைசியில் பூண்டு சேர்த்து விட்டுவிட்டு அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். 15 நாள்கள் வரை நன்றாக இருக்கும்.

சிறு துண்டுக் குழம்பு

தேவை: கடலைப்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 3 சோம்பு - 2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - அரை கப் தக்காளி - 4 (நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பூண்டு - 6 பல் தாளிப்பு வடகம் - சிறிதளவு கறிவேப்பிலை - 2 ஆர்க்கு புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக்கொள்ளவும்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, பாதியளவு வெங்காயம், பாதியளவு தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசையவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு மாவை அடைகளாகத் தட்டி, வேகவிட்டு எடுத்து ஒன்றரை அங்குல அளவு துண்டுகளாக வெட்டவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு தாளிப்பு வடகம், சோம்பு அரை டீஸ்பூன், மீதியுள்ள வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு தாளித்து, தக்காளி, சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, புளிக்கரைசல், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும் மீதமுள்ள தேங்காய்த் துருவல், அரை டீஸ்பூன் சோம்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, கொதித்ததும் சிறு துண்டுகளைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

வடைக் குருமா

தேவை: வடை - 4 (கடலை தயிர் வடைக்குத் தயாரித்தது போல் வடை தயாரிக்கவும் - பார்க்க பக்கம் 126) தேங்காய்த் துருவல் - அரை கப் பச்சை மிளகாய் - 4 பொட்டுக்கடலை, கசகசா - தலா ஒரு டீஸ்பூன் முந்திரி - 5 இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்) பூண்டு - 8 பல் பட்டை - 2 துண்டு கிராம்பு, ஏலக்காய் - தலா 2 அன்னாசிப்பூ - சிறிதளவு பிரியாணி இலை - சிறிதளவு சோம்பு - ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்) பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

செய்முறை: தேங்காய்த் துருவல், 3 பச்சை மிளகாய், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, அரை அங்குல இஞ்சித் துண்டு, 4 பூண்டு பல் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் ஒன்று, தட்டிய அரை அங்குல இஞ்சி, நறுக்கிய 4 பூண்டுப் பல், உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, அரைத்த விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி தண்ணீர்விட்டு கொதிக்க வைக்கவும். குருமா கெட்டியானதும் வடைகளை உடைத்துப் போட்டு ஒரு கொதிவந்ததும் அடுப்பை நிறுத்தி தேங்காய்ப்பால், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பயன்படுத்தவும்.

சத்தான சுவை இது!

சுவையான தானியங்களில் கடலைப்பருப்புக்குத் தனியிடம் உண்டு. கடலைமாவைக் கொண்டு செய்யப்படும் பஜ்ஜி, பக்கோடா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை நினைத்தாலே நாவில் நீர் ஊறும். குறிப்பாக, மாலை நேரத்தில் டீயுடன் இவற்றைப் பரிமாறினால் பாராட்டுகள் குவியும்.

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி

சுவை மட்டுமல்ல, சத்துகளை அளிப்பதிலும் கடலைப்பருப்பு சிறந்து விளங்குகிறது. புரதச்சத்து அதிகம் கொண்டது. உடலின் பல்வேறு பாகங்கள் சீராகச் செயல்பட உதவுகிறது. ஒல்லியாக இருப்பவர்களின் எடை கூடுவதற்கும் உதவும்.

கடலைப்பருப்பைக் கொண்டு மொறுமொறு அயிட்டங்கள் மட்டுமல்லாமல், புடிங், கூழ், அல்வா, புட்டு பாயசம், டோக்ளா, பருப்புக்கூட்டு எனப் பல்வேறு ருசிகரமான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சமையற்கலைஞர் பார்வதி கோவிந்தராஜ். இவற்றைச் செய்து பரிமாறி குடும்பத்தை குஷிப்படுத்துங்கள்; ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை, தகுந்த இடைவெளி விட்டு, அளவாகச் செய்து பரிமாறுங்கள்.