22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

விசாலாட்சி இளையபெருமாள்

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கேப்பை புட்டு

தேவை: கேப்பை (கேழ்வரகு) மாவு - ஒரு கப், சர்க்கரை - ஓர் உழக்கு, நெய் - தேவையான அளவு, ஏலக்காய் - 5, முந்திரி - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

செய்முறை: நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கேப்பை மாவைச் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து மாவைக் கட்டியில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். நன்றாக வெந்தபின் தட்டில் கொட்டி கட்டியில்லாமல் உதிர்க்கவும். பிறகு, சர்க்கரையைக் கலந்து வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

செட்டிநாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் உழக்கு அளவு என்பது ஒரு கப் அளவுக்குச் சமம்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கவுனி அரிசி இனிப்பு

தேவை: கவுனி அரிசி - அரை கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய் - 5, நெய் - சிறிதளவு, முந்திரி - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

செய்முறை: நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கவுனி அரிசியை 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை குக்கரில் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 விசில் வரும் வரை நன்கு வேகவைக்கவும். பிறகு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின்னர் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டியானதும் வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

ஐந்தரிசி பணியாரம்

தேவை: புழுங்கல் அரிசி - அரை உழக்கு, பச்சரிசி - அரை உழக்கு, பாசிப்பருப்பு - அரை உழக்கு, ரவை - அரை உழக்கு, ஜவ்வரிசி - அரை உழக்கு, சர்க்கரை - அரை உழக்கு, வெல்லம் - 100 கிராம் (பொடிக்கவும்), தேங்காய்த் துருவல் - ஒரு கப், ஏலக்காய் - 5 (பொடிக்கவும்), எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பு மூன்றையும் ஒன்றாக ஊறவைக்கவும். ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாக ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு சர்க்கரை, பொடித்த வெல்லம், பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை ஊற்றி, ஒருபக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப்போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கந்தரப்பம்

தேவை: பச்சரிசி - 2 உழக்கு, பாசிப்பருப்பு - அரை உழக்கு, தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்), வெந்தயம் - 2 டீஸ்பூன், வெல்லம் - 500 கிராம், ஏலக்காய் - 6, முந்திரி - 10, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்ந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் எடுத்து அரைக்கும்போது சிறிதளவு அரைத்ததும் வெல்லம் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், முந்திரி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை ஊற்றி, ஒருபக்கம் வெந்தபின், திருப்பிப்போட்டு மறுபக்கம் சிவந்தபின் எடுக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கல்கண்டு வடை

தேவை: உளுத்தம்பருப்பு - 2 உழக்கு, பச்சரிசி - அரை உழக்கு, கல்கண்டு தூள் - அரை உழக்கு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பருப்பையும் அரிசியையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீர்வடித்து அரைக்கவும். கொரகொரப்பான பதத்தில் அரிசியையும் பருப்பையும் அரைக்கும்போது, கல்கண்டு தூளைச் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அரைத்த கலவையை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

ரவை பணியாரம்

தேவை: பாம்பே ரவை – 2 உழக்கு, சர்க்கரை - அரை உழக்கு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ரவையில் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்துக் கிளறி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மிக்ஸியில் அரைக்கவும். ரவையைப் பாதியாக அரைக்கும்போது சர்க்கரையைச் சேர்த்து அரைத்து, மாவாகக் கரைத்துக்கொள்ளவும். பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை நன்றாகக் கலக்கி வட்டமாக ஊற்றி, ஓரம் சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

ரவா லட்டு

தேவை: ரவை - ஓர் உழக்கு, முந்திரி - 10, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்), சர்க்கரை - அரை கப்.

செய்முறை: ரவையை நன்றாக வறுத்து தண்ணீர் ஊற்றிக் கிளறி, கட்டியில்லாமல் உதிர்த்து இட்லி சட்டியில் வேகவைக்கவும். நன்றாக வெந்த பின் எடுத்து ஆறிய பிறகு கட்டியில்லாமல் உதிர்த்துக்கொள்ளவும். இதில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

ஆப்பம்

தேவை: பச்சரிசி - ஓர் உழக்கு, புழங்கல் அரிசி - ஓர் உழக்கு, உளுத்தம்பருப்பு - ஓர் உழக்கு, வெந்தயம் - 2 டீஸ்பூன், தேங்காய் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், அவல் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயத்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நைஸாக அரைக்கவும். ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். அவலை அலசி ஊறவைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துவைக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். அவலை நன்றாகப் பிசைந்து உப்புச் சேர்த்து புளித்த மாவில் கலக்கவும். ஆப்பச் சட்டியில் எண்ணெய்விட்டு, மாவை ஊற்றி சட்டியைச் சுற்றவும். ஓரம் சிவந்தபின் எடுத்து, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

இடியாப்பம்

தேவை: பச்சரிசி மாவு - ஒன்றரை கப், தண்ணீர் – அரை கப், நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்).

செய்முறை: அகலமான பாத்திரத்தில், ஒன்றரை கப் மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டுப் பிசிறவும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். ஆனால், கையில் ஒட்டக் கூடாது. இந்தப் பதத்துக்கு வந்தபிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து இட்லித் தட்டில் பிழியவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். சாப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் நெய் (விருப்பப்பட்டால்) சேர்த்து, நன்றாகக் கலந்து சாப்பிடவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

தக்காளி தோசை

தேவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை உழக்கு, காய்ந்த மிளகாய் - 8, சோம்பு - ஒரு டீஸ்பூன், தக்காளி - 5 (நறுக்கவும்), நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் பருப்பையும் நன்றாகக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் ஊறிய அரிசி, பருப்புடன் எண்ணெய் தவிர, மற்ற எல்லாவற்றையும் போட்டு நைஸாக அரைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து, தோசைக்கல்லில் நல்லெண்ணெய்விட்டு மாவை தோசை போல் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

அடை

தேவை: பச்சரிசி - அரை உழக்கு, புழுங்கல் அரிசி - அரை உழக்கு, துவரம்பருப்பு - அரை உழக்கு, கடலைப்பருப்பு - அரை உழக்கு, உளுத்தம்பருப்பு - அரை உழக்கு, காய்ந்த மிளகாய் - 12, சோம்பு - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெங்காயம் - 3 (மெலிதாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, முருங்கைக்கீரை - சிறிதளவு (ஆய்ந்துகொள்ளவும்), பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியபின் அரிசி, பருப்புகளுடன் காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர், பெருங்காயத்தூள், முருங்கைக்கீரை, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவைச் சிறிதளவு கனமாக ஊற்றி, எண்ணெய்விட்டு நன்கு சிவந்த பின் எடுத்துப் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

புடலங்காய் கூட்டு

தேவை: புடலங்காய் - ஒன்று, பாசிப்பருப்பு - கால் உழக்கு, கடலைப்பருப்பு - கால் உழக்கு, பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - கால் கப், சின்ன வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: குக்கரில் இரண்டு பருப்புகளையும் வேகவைக்கவும். புடலங்காயைச் சின்னச் சின்ன சதுரங்களாக நறுக்கவும். அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கவேண்டிய பொருள்களைச் சேர்த்து, சிவந்ததும் புடலங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பருப்பு வகைகளைச் சேர்த்துக் கிளறி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடவும். சிறிது நேரம் கழித்து திறந்து தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கேரட் முட்டைகோஸ் பீன்ஸ் பொரியல்

தேவை: கேரட் - 2, முட்டைகோஸ் - 100 கிராம், பீன்ஸ் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: கேரட்டைத் தோல் சீவி நன்றாக மெலிதாக நறுக்கவும். முட்டைகோஸ், பீன்ஸையும் நறுக்கிக்கொள்ளவும். மூன்றையும் ஒன்றாக்கி சிறிதளவு உப்பு சேர்த்து, வேகவைத்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்பு வேகவைத்தவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கியதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

காலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்

தேவை: காலிஃப்ளவர் - ஒன்று, மிளகு - அரை டீஸ்பூன் (பொடிக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன் (பொடிக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறு பூக்களாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு, சிவந்தபின் பொடித்த மிளகு, சீரகம், நறுக்கிய காலிஃப்ளவர் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

யாழ்ப்பாணம் சொதி

தேவை: தேங்காய் (பெரியது) - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, சாம்பார் வெங்காயம் - 7, எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் (சிறியது) - 4 முதல் 5 வரை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவி கெட்டியான பாலை எடுக்கவும். முதலில் திக்கான பால் ஒரு கப் கிடைக்கும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர், சிறிதளவு தண்ணீரைத் தேங்காயுடன் சேர்த்து அரைத்து இரண்டாம் பாலையும் பிழிந்தெடுக்கவும். மேலும், சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து மூன்றாம் பாலையும் பிழிந்தெடுக்கவும். இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் எடுத்த பாலை ஒன்றாகச் சேர்க்கவும். மூன்று கப் அளவுக்கு இந்தப் பால் இருக்கும். இல்லையென்றால் சிறிதளவு நீரைச் சேர்த்து மூன்று கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து சில விநாடிகள் வதக்கவும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து சற்று வதக்கி, அத்துடன் இரண்டாம், மூன்றாம் முறை எடுத்துவைத்துள்ள தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கிவைக்கவும். 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து உப்பு, எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்துக் கலக்கிவிடவும். இதை சூடான இடியாப்பத்துடன் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

சாம்பார் சாதம்

தேவை: பச்சரிசி - ஓர் உழக்கு, துவரம்பருப்பு - அரை உழக்கு, பாசிப்பருப்பு - கால் உழக்கு, வெங்காயம் - 2, தக்காளி - 3, கேரட் - ஒன்று, முள்ளங்கி - ஒன்று, வாழைக்காய் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, முருங்கைக்காய் - ஒன்று, பூசணிக்காய் - ஒரு சிறிய துண்டு, பறங்கிக்காய் - ஒரு சிறிய துண்டு, கத்திரிக்காய் - ஒன்று, புளி - சிறிய உருண்டை, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வேர்க்கடலை - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளைக் கழுவி வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். காய்கறிகளை ஒரே மாதிரியாக சிறிய அளவில் நறுக்கவும். புளியைத் தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக சிவந்தபின் நறுக்கிய கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கியபின் எல்லா காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியபின் மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, புளிக்கரைசல் ஊற்றவும். இத்துடன் அரிசி, பருப்பு வகை, உப்பு சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கிளறி குக்கரை மூடவும். விசில் வந்தவுடன் அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கத்திரிக்காய் முருங்கைக்காய் பச்சடி

தேவை: கத்திரிக்காய் - 5, முருங்கைக்காய் - 3, துவரம்பருப்பு - அரை உழக்கு, தக்காளி - 3, வெங்காயம் - 3, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, புளிக்கரைசல் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: துவரம்பருப்பை அரை வேக்காடாக வேகவைத்துக்கொள்ளவும். கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டுவைக்கவும். முருங்கைக்காயை விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்க்கவும். நன்கு சிவந்ததும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பிறகு தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர், நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காயைப் போட்டு வதக்கவும். பிறகு சாம்பார் பொடியைச் சேர்த்துக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு சேர்க்கவும். காய்கள் வெந்தபின், பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து நன்கு வெந்து, கொதித்தபின் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

சின்ன உருளைக்கிழங்குக் குழம்பு

தேவை: சின்ன உருளைக்கிழங்கு - 15, தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 6 பல் (நசுக்கிவைக்கவும்), தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிதளவு, பிரியாணி இலை - சிறிதளவு, கிராம்பு - 4, அன்னாசிப்பூ - சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து பாதியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, கிராம்பு சேர்க்கவும். பிறகு தக்காளி, வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், சோம்பு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த மசாலாவைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, தண்ணீர் ஊற்றி வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து அடுப்பை `சிம்’மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடங்கள் வைக்கவும். உருளைக்கிழங்கில் மசாலா நன்கு சேர்ந்தவுடன் இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கேரட் துவையல்

தேவை: கேரட் - ஒன்று, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), தக்காளி - 2 (நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கேரட்டைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து சிவந்ததும் இத்துடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும். ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கெட்டியாக அரைக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கேரட் குழம்பு

தேவை: கேரட் - 4, தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 15 (நறுக்கவும்), பூண்டு - 10 பல் (தட்டவும்), சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், புளிக்கரைசல் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலைப் பொடி - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: கேரட்டைத் தோல்சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து சிவந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு, கேரட்டைச் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி, பிறகு சாம்பார் பொடியையும் போட்டுக் கிளறி, தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கி, பின்னர் புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு சேர்த்து குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தததும் அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும் திறந்து வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கீரை தயிர்ப் பச்சடி

தேவை: சிறுகீரை (அல்லது) அரைக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் - அரை மூடி, முந்திரி - 5, பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), தயிர் - ஒரு கப், பால் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: கீரையைக் கழுவி மெல்லியதாக நறுக்கி வேகவைத்து நீரை வடிகட்டிக்கொள்ளவும். தேங்காய், முந்திரியை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைப் போட்டு சிவந்தபின் பச்சை மிளகாய், அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை வேகவைத்த கீரையில் சேர்த்து நன்றாக மசித்து, தயிர், பால், உப்பு சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கருவடகக் குழம்பு

தேவை: கருவடகம் - 10, சின்ன வெங்காயம் - 15 (நறுக்கவும்), பூண்டு - 10 (நசுக்கவும்), தக்காளி - 3 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), மிளகாய்த்தூள் - தேவையான அளவு (காரத்துக்கேற்ப), புளிக்கரைசல் - சிறிதளவு, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கருவடகத்தை வறுத்து எடுத்துவைக்கவும். பிறகு அதே வாணலியில் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும். சிறிதளவு நேரம் வதங்கிய பின் தக்காளி விழுதை ஊற்றி நன்றாக வதங்கியபின் மிளகாய்த்தூள் சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, 2 டம்ளர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு கருவடகத்தைச் சேர்க்கவும். நன்றாகக் கெட்டியான பின், வேர்க்கடலைப் பொடியைத் தூவிக் கிளறவும். சிறிது நேரம் கொதித்தபின் இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

தக்காளி பிரியாணி

தேவை: தக்காளி - 5, பாஸ்மதி அரிசி - ஓர் உழக்கு, தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புதினா - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரி - 6, பட்டை - சிறிதளவு, கிராம்பு - 3, பிரியாணி இலை - சிறிதளவு, ஏலக்காய் - 2, தயிர் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தண்ணீர் - 4 டம்ளர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: அரிசியைக் கழுவி சிறிது நேரம் ஊறவைத்து எடுத்துவைக்கவும். தக்காளியை நன்றாகக் கழுவி அத்துடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, புதினா, தேங்காய்த் துருவல், ஏலக்காய், தயிர், கறிவேப்பிலை, முந்திரியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலையைச் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை ஊற்றி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு பிரியாணி அரிசியைச் சேர்த்து சிறிது நேரம் கிளறி, அதன்பின் உப்பு, தேங்காய்ப்பால், தண்ணீர் ஊற்றிக் கிளறி குக்கரை மூடவும். 2 விசில் வந்தவுடன் இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

வெண்டைக்காய் சாப்ஸ்

தேவை: வெண்டைக்காய் – அரை கிலோ, கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி நன்றாகத் துடைத்து குறுக்குவாட்டில் நறுக்கி நிழலில் காயவைத்து எடுக்கவும். இத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து சூடானதும் வெண்டைக்காய் கலவையை எடுத்து உதிர் உதிராகப் போட்டு, கொரகொரப்பாகப் பொரித்தெடுக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

எண்ணெய் வாழைக்காய்

தேவை: வாழைக்காய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயைக் கழுவி, தோல்சீவி வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி கெட்சப், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசிறி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தபின் வாழைக்காய் கலவையைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். நன்றாக வெந்தபின் இறக்கிப் பரிமாறவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

கேரட் கொச்சி

தேவை: பாசிப்பருப்பு - அரை கப், கேரட் - 250 கிராம், உருளைக்கிழங்கு - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 8, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும். கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வெந்த பாசிப்பருப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போக கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித்தழை தூவவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

புதினா ரசம்

தேவை: தக்காளி - 2 (நறுக்கவும்), புதினா - ஒரு கட்டு (ஆய்ந்துகொள்ளவும்), பூண்டு - 10 பல், பருப்புத் தண்ணீர் - ஒரு டம்ளர், புளி - சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, வெல்லம் - சிறிதளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும். தக்காளி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, சிவந்ததும் புதினாவைப் போட்டு வதக்கவும். அரைத்தவற்றை கரைத்து ஊற்றவும். பூண்டைத் தட்டி போடவும். இத்துடன் புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர், மஞ்சள்தூள், வெல்லம், உப்பு சேர்க்கவும். கொதித்தபின் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

ஆரஞ்சு ரசம்

தேவை: ஆரஞ்சு - 2 (தோலுரித்துச் சாறு எடுக்கவும்), தக்காளி - 2 (நறுக்கவும்), புதினா - ஒரு கட்டு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 10 பல், பருப்புத் தண்ணீர் - ஒரு டம்ளர், புளி - சிறிதளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, வெல்லம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும். மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், புதினா, தக்காளியை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதில் அரைத்தவற்றைக் கரைத்து ஊற்றவும். பிறகு புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் சேர்க்கவும். பூண்டைத் தட்டிப் போடவும். மஞ்சள்தூள், வெல்லம், உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதி வரும்போது ஒரு டம்ளர் ஆரஞ்சுச் சாற்றை ஊற்றி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

தக்காளி ரசம்

தேவை: தக்காளி - 4 (விழுதாக அரைக்கவும்), பருப்புத் தண்ணீர் - ஒரு டம்ளர், புளிக்கரைசல் - சிறிதளவு, பூண்டு - 10 பல் (நசுக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: மிளகு, சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்து, தக்காளி விழுதை ஊற்றவும். பின்பு அரைத்தவற்றைத் தனியாகக் கரைத்து ஊற்றவும். அத்துடன் புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர், நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள், வெல்லம், உப்பு சேர்த்து, கொதித்த பின் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

தயிர் சேமியா

தேவை: சேமியா - 2 கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), தயிர் -

2 கப், பால் - ஒரு கப், பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், முந்திரி - 5

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்கள் சேர்த்து, சிவந்தபின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவிடவும். சேமியா நன்றாகக் குழைய வெந்தபின் எடுத்து ஆறவைக்கவும். பிறகு தயிர், பால் சேர்த்து நன்றாகக் கலக்கி, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.

பாரம்பர்யத்தின் சுவை!

`பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல!’ என்ற வசனத்தைப் போல, பெயரைக் கேட்டாலே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் செட்டிநாடு உணவுகளுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பி

எந்த ஒரு கடைவீதிக்குச் சென்றாலும் `செட்டிநாடு ரெஸ்டாரன்ட்’ என்ற பெயர்ப் பலகை தாங்கிய உணவகம் ஒன்று நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு மக்களைத் தன் சுவையால் கட்டிப்போடும் இந்த உணவு வகைகள் நீண்ட கால பாரம்பர்யம் மிக்கவை; உடல் நலத்துக்கும் உறுதுணை செய்பவை.

செட்டிநாட்டு சமையலுக்குப் பெருமை சேர்க்கும் ஆப்பம், இடியாப்பம், கந்தரப்பம், ஐந்தரிசி பணியாரம் போன்ற உணவு வகைகள், `இன்னொன்று... இன்னொன்று’ என கேட்டுச் சாப்பிட வைக்கும். இவற்றுடன் கல்கண்டு வடை, வெண்டைக்காய் சாப்ஸ், எண்ணெய் வாழைக்காய், புதினா ரசம், யாழ்ப்பாணம் சொதி என்று வரிசைகட்டி நிற்கும் செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பிகளை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார் தேவகோட்டையைச் சேர்ந்த சமையற்கலைஞர் விசாலாட்சி இளையபெருமாள்.

தின்னத் தின்ன திகட்டாத இந்த உணவு வகைகளைச் செய்து பரிமாறுங்கள்... குடும்பம், சுற்றம், நட்பு என அனைத்து வட்டங்களிலும் உளமார்ந்த பாராட்டுகளை அள்ளுங்கள்!

ஃபுட் ஸ்டைலிங் & படங்கள்: லட்சுமி வெங்கடேஷ்