Published:Updated:

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

பனீர் கோலா பிரியாணி
பிரீமியம் ஸ்டோரி
News
பனீர் கோலா பிரியாணி

மார்கழிக் கொண்டாட்டம்

வெண்பொங்கல்

தேவை: பச்சரிசி - 2 கப், பயத்தம்பருப்பு - அரை கப், நெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு வறுக்கவும். வறுத்த மிளகு, சீரகத்தில் பாதியை எடுத்து வைத்துக்கொண்டு, மீதியை கொரகொரப்பாக, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் 5 கப் நீர்விட்டு, கொதித்ததும் வறுத்துவைத்துள்ள அரிசி பருப்புகளைக் கழுவி அதில் சேர்க்கவும். நன்றாகக் கிளறிவிடவும். பாதியளவு வெந்ததும் உப்பு சேர்த்து, மீண்டும் குழையவிடவும். 3 டேபிள்ஸ்பூன் நெய்யைப் பொங்கல் வேகும்போது இடையிடையே சேர்க்கவும்.

பொங்கல் நன்றாக வெந்ததும் வாணலியில் மீதியுள்ள நெய்யைவிட்டு இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரி சேர்த்து வதக்கி, வறுத்த முழுமையான மற்றும் கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகத்தை இறுதியாகச் சேர்த்து ஒருமுறை புரட்டி கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அதைப் பொங்கலில் சேர்த்து இறக்கவும். நன்றாகக் கலந்துவிடவும். குக்கரில் செய்தால் 4 கப் தண்ணீர் போதுமானது.

சிறப்பு: மார்கழி மாதத்தில் அதிகாலை இந்த வெண்பொங்கலைச் செய்து பகவானுக்குப் படைத்து, பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பழப்பாயசம்

தேவை: ஜவ்வரிசி - கால் கப், பால் - ஒன்றரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - கால் கப், விதையற்ற பேரீச்சை (Seedless Dates) - 10, ஆப்பிள் (நன்றாகப் பழுத்தது), நேந்திரம்பழம் - தலா ஒன்று, சர்க்கரை - அரை கப், பைனாப்பிள் (நறுக்கியது) - 4 டேபிள்ஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு நீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவிடவும். ஆப்பிள், வாழைப்பழத்தைத் துண்டுகளாக்கவும். பேரீச்சையை மூழ்கும் அளவு நீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவிடவும். அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி ஊறிய ஜவ்வரிசியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். வேறு ஒரு பாத்திரத்தில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஆப்பிள், வாழை, அன்னாசிப் பழங்களை அதில் சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கவும். ஊறிய பேரீச்சையை வெல்லத் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பாலில் ஜவ்வரிசி வெந்ததும் மீதியுள்ள சர்க்கரையைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு வெந்த பழக்கலவை, அரைத்த பேரீச்சைக்கலவை சேர்த்து மீதியுள்ள அரை கப் பாலைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதிவிட்டு ஏலக்காய்த்தூள் தூவவும். வாணலியில் நெய்விட்டு பாதாம், முந்திரி, உலர்திராட்சையை வறுத்து, நெய்யுடன் பாயசத்தில் சேர்த்து இறக்கவும்.

சிறப்பு: புத்தாண்டு அன்று இந்தப் பாயசத்தை செய்து நாமும் உண்டு அனைவருக்கும் அளித்து மகிழ்வோம். புத்தாண்டு பார்ட்டியிலும் இதைச் செய்து விருந்தினர்களை அசத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏகாதசி கஞ்சி

தேவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து நீர் சேர்த்து வேகவிடவும். வெந்த பருப்புடன் துருவிய வெல்லம் சேர்த்து இரண்டு கொதிவிட்டு, பாலைச் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

சிறப்பு: ஏகாதசி அன்று இந்தக் கஞ்சியைச் செய்து பகவானுக்குப் படைத்து பிறகு அருந்தவும். அன்று முழுவதும் விரதம் இருப்பவர்கள், இந்தக் கஞ்சியை அருந்தினால் உடலுக்குத் தெம்பு கிடைக்கும்.

ஏகாதசி சத்து மாவு

தேவை: பச்சரிசி - 2 கப், துருவிய வெல்லம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: அரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்து, சற்று ஆறியதும் மிக்ஸியில் நீர்விடாமல் நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு கால் கப் நீர்விட்டு அடுப்பிலேற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் சேர்த்து வெல்லத்தண்ணீர் சேர்த்துப் பிசையவும். சப்பாத்தி மாவைவிட சற்று கெட்டியான பதமாக இருக்க வேண்டும்.

சிறப்பு: பிசைந்த சத்து மாவைப் பகவானுக்குப் படைத்த பின், நாம் சாப்பிடலாம். அன்று முழுவதும் விரதம் இருப்பதால் வெல்லத்திலுள்ள இரும்புச் சத்து கிடைப்பதுடன், தேங்காயானது வயிற்றில் (விரதம் இருப்பதால்) புண் வராமல் தடுக்கும்.

ஏகாதசி சப்பாத்தி

தேவை: ஏகாதசி மாவு - 2 கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: ஏகாதசி மாவை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சப்பாத்திகளாகத் திரட்டி தவாவில் போட்டு ஓரங்களில் சிறிதளவு நெய்விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

குறிப்பு: சாமை அரிசி - ஒரு கப், கம்பு - ஒரு கப் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொண்டால் ஏகாதசி மாவு தயார். ஏகாதசி மாவு தரமான பிராண்டுகளில் பாக்கெட்டாகவும் கடைகளில் கிடைக்கிறது.

காய்கறி தயிர்ப் பச்சடி

தேவை: கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய், வெள்ளரிப் பிஞ்சு, கேரட் - தலா ஒன்று.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரைப் போட்டு உப்பு சேர்த்து வெள்ளரி, கேரட், பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

குறிப்பு: சிலர் அடுப்பில் சமைத்த உணவை உண்ணாமல் தயிர்ப் பச்சடி, சாலட் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்.பிட்டு விரதம் இருப்பார்.

திருவாதிரைக் களி

தேவை: பச்சரிசி - ஒரு கப், பயத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், துருவிய தேங்காய் - கால் கப், ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: வெறும் வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து சற்று ஆறியதும் ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர்விட்டு ஒரு கொதிவந்ததும் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்கவிடவும். 2 டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும். உடைத்த ரவையைச் சேர்த்துக்கிளறி மூடி வைக்கவும். இடையிடையே திறந்து கிளறிவிடவும். களி வெந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்.

சிறப்பு: `திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்பது பழமொழி. எனவே, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று இந்தக் களியைச் செய்து ஆண்டவனுக்குப் படைத்து நாமும் உண்டு, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம்.

விரத தோசை

தேவை: ஜவ்வரிசி - கால் கப், சாமை அரிசி - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: ஜவ்வரிசி, சாமை அரிசி இரண்டையும் தனித்தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி உப்பு சேர்த்து சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து மாவை ரவா தோசை மாவு பதத்தில் கரைக்கவும் (தேவைப்பட்டால் நீர் சேர்த்துக் கரைக்கலாம்). மாவை ரவா தோசை மாதிரி ஊற்றி ஓரங்களில் சிறிதளவு நெய்விட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

சிறப்பு: விரத நாள்களில் சிலர் இதுபோல் தானியங்களை வைத்து தயாரித்த உணவுகளை மட்டுமே உண்பர்.

ஜவ்வரிசி லட்டு

தேவை: ஜவ்வரிசி - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், பொடித்த சர்க்கரை - ஒரு கப், பாதாம், முந்திரி - தலா 10, நெய் - 6 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை (குறைந்த தீயில் அடுப்பை வைத்து) வறுத்து ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலை லேசாக வறுக்கவும். அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பாதாம், முந்திரி இரண்டையும் பொடியாகச் சீவவும். வாணலியில் நெய்யைச் சூடு செய்து சீவிய பாதாம், முந்திரியை வறுத்து அடுப்பை அணைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஜவ்வரிசி, மிக்ஸியில் சுற்றிய தேங்காய்த் துருவல், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த பாதாம், முந்திரியை நெய்யுடன் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து லட்டுகளாகப் பிடிக்கவும்.

சிறப்பு: ஜவ்வரிசி லட்டை பகவானுக்குப் படைத்த பின் புசிக்கவும். விரதத்தின்போது சிலர் ஜவ்வரிசியில் தயார் செய்த உணவுகளை மட்டும் உண்பர்.

நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி

தேவை: பெரிய நெல்லிக்காய் - 6, கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப. அரைக்க: தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள். மேலே தூவுவதற்கு: நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: நெல்லிக்காய்களை நீர்விட்டு வேகவிடவும். வெந்ததும் விதையை நீக்கி கரண்டியால் கட்டியில்லாமல் மசிக்கவும். அரைக்கக்கொடுத்தவற்றை நீர்விட்டுக் கெட்டியாக, நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிரைச் சேர்த்து, உப்பு சேர்த்து மசித்த நெல்லி விழுது, அரைத்த விழுது சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிவிடவும்.

சிறப்பு: வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி அன்று அதிகாலையில், முதல் நாள் முழுவதும் விரதம் இருப்பதால் ஏற்பட்ட பித்தம், காலி வயிறாக இருப்பதால் ஏற்பட்ட சோர்வு நீங்க புளிப்பு, காரம் அதிகம் சேர்க்காத உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை மூன்றையும் உணவில் சேர்த்து, வடை, பாயசம், மோர்க்குழம்பு முதலியவற்றைச் செய்து பகவானுக்குப் படைத்து, பின்னர் புசிக்கவும்.

அகத்திக்கீரை உசிலி

தேவை: அதிகம் முற்றாத மீடியமான அகத்திக்கீரை - 2 கப் (சுத்தம் செய்து நறுக்கியது), துவரம்பருப்பு - கால் கப், பயத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயைக் கழுவி, நீர்விட்டு அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரை வடிகட்டி சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மஞ்சள்தூள் சேர்த்து இட்லித் தட்டில் ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். சிறிது ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பருப்பு, பூ மாதிரி உதிர் உதிராக ஆகிவிடும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய அகத்திக்கீரை, தேவையான உப்பு சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறிவிடவும். கீரை வெந்ததும் உதிர்த்த பருப்பைச் சேர்த்துக் கிளறவும். கீரை, பருப்பு இரண்டும் சேர்ந்து வந்ததும் இறக்கவும். அகத்திக்கீரை உசிலி தயார்.

குறிப்பு: பண்டிகை அல்லாத மற்ற நாள்களில் கடுகு, பெருங்காயம் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கலாம்.

சுண்டைக்காய் பொரித்த குழம்பு

தேவை: அதிகம் முற்றாத பிஞ்சான சுண்டைக்காய் - அரை கப், அவரைக்காய் - 8, பயத்தம்பருப்பு - கால் கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: பயத்தம்பருப்பை நீர் சேர்த்து குழைய வேகவிடவும். அரைப்பதற்குக் கொடுத்தவற்றை நீர்விட்டுக் கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சுண்டைக்காயை இரண்டாக நறுக்கிப்போட்டு வதக்கவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காயை நறுக்கிப்போட்டு வதக்கிய சுண்டைக்காய் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நீர்விட்டு வேகவிடவும். காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்து அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதிவிட்டு, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

அரை நெல்லிக்காய்ப் பாயசம்

தேவை: அரை நெல்லிக்காய் - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப்பால் (திக்கானது) - அரை கப், பல்லுப் பல்லாக கீறிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு தேங்காய்க்கீற்றை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சீவிய பாதாம், முந்திரியை வறுத்துத் தனியே வைக்கவும். மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு அரை நெல்லிக்காயை விதை நீக்கி சேர்த்து வதக்கி ஒரு கப் நீர்விட்டு வேகவிடவும். நெல்லிக்காய் வெந்ததும் வெல்லத் துருவல் சேர்த்து இரண்டு கொதிவிட்டு தேங்காய்ப்பால் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடவும். இதில் ஏலக்காய்த்தூள் தூவி, வறுத்துவைத்துள்ள தேங்காய்க் கீற்று, பாதாம், முந்திரி சீவல்களைச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

சிறப்பு: ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை இந்த நெல்லிக்காய், தேங்காய்ப்பால் சேர்த்த பாயசம் சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.

மிளகு வடை

தேவை: முழு வெள்ளை உளுந்து - 2 கப், மிளகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: முழு வெள்ளை உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டவும். மிளகை கொரகொரப்பாகப் பொடிக்கவும். உளுந்துடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் நீர்விடாமல் (ஒரு மணி நேரம் உளுந்து ஊறியதால் அதில் உள்ள ஈரத்தன்மையே போதுமானது) கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடித்த மிளகு, பெருங்காயத்தூள், அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

சிறப்பு: அனுமன் ஜயந்தி அன்று அனுமனுக்கு இந்த வடைதான் கோயில்களில் (மாலையாகக் கோத்து) சார்த்தப்படும்.

ஆமவடை மோர்க்குழம்பு

தேவை: கெட்டித் தயிர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு. அரைப்பதற்கு: மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்). ஆமவடை செய்வதற்கு: துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 8 இதழ்கள். மேலே தூவுவதற்கு: நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் கழுவி காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நீர்விட்டு அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பை நீர்விட்டுத் தனியாக அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்புடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊறிய கடலைப்பருப்பில் உள்ள நீரை வடிகட்டி கடலைப்பருப்பை மட்டும் சேர்த்து, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவில் இருந்து தேவையான அளவு எடுத்து உருட்டி இரண்டு உள்ளங்கைகளிலும் லேசாக எண்ணெய் தடவி உருண்டையை ஒரு கையில் வைத்து மறு உள்ளங்கையால் லேசாக அழுத்தவும் (ஓரங்களில் மெலிதாகவும் நடுவில் உப்பிக்கொண்டும் இருக்கும். எனவேதான் இதற்கு ஆமவடை என்று பெயர்). தட்டிய வடையை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தனியா, சீரகம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஆகியவற்றை மிக்ஸியில் நீர்விடாமல் கொரகொரப்பாகப் பொடித்து தேங்காய்த் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சேர்த்து நீர்விட்டு அனைத்தையும் கெட்டியாக, நைஸாக அரைக்கவும். தயிரைக் கடைந்து மோராக்கவும். (அதிகம் நீர்விடாமல்). அடிகனமான பாத்திரத்தில் மோரை ஊற்றி அரைத்த விழுதைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, அடுப்பை `சிம்’மில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதித்து நுரை தட்டியதும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து பொரித்து வைத்துள்ள ஆமவடைகளைச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு கொத்தமல்லித்தழை தூவவும்.

குறிப்பு: துவாதசி அன்று மூன்று பருப்பு சேர்த்து வடை செய்து படைக்க வேண்டும் என்பதால் மோர்க் குழம்பில் இந்த வடை சேர்க்கப்படுகிறது.

காய்கறி பழ சாலட்

தேவை: துருவிய கேரட் - அரை கப், ஊறவைத்த பச்சை வேர்க்கடலை - கால் கப், உதிர்த்த மாதுளை முத்துகள் - 5 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பேரீச்சை - 3 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். காய்கறி, பழ சாலட் தயார்.

சிறப்பு: இதைச் சாப்பிட்டு விட்டு சிலர் விரதம் இருப்பர்.

திருவாதிரை தாளகக் குழம்பு (ஏழு காய் குழம்பு)

தேவை: பறங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் (எல்லாவற்றையும் ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கியது) - 2 கப், திக்கான புளிக்கரைசல் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. வறுப்பதற்கு: பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 8 இதழ்கள், கடுகு - ஒரு டீஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: வெறும் வாணலியில் பச்சரிசியை சிவக்க வறுத்து தனியே வைக்கவும். பிறகு கறுப்பு எள்ளையும் வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து இறுதியில் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இரண்டு புரட்டு புரட்டி இறக்கவும். மிக்ஸியில் வறுத்த பச்சரிசியைப் போட்டு சுற்றி, பிறகு எள் மற்ற அனைத்து வறுத்த பொருள்களையும் சேர்த்து நீர்விட்டு சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும்.

அகன்ற பாத்திரத்தில் நறுக்கிய ஏழு காய்களையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அளவான நீர்விட்டு வேகவிடவும். காய்கள் பாதியளவு வெந்ததும் புளிக் கரைசலை அதில் சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாமுமாகச் சேர்ந்து கொதித்து காய்கள் வெந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிட்டு (விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம்) தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். இறக்கியபின் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

குறிப்பு: திருவாதிரைத் தாளகக் குழம்புக்கு முடிந்தவரை 7, 9 என்ற ஒற்றைப் படை அடிப்படையில் நாட்டுக் காய்களைச் சேர்த்துத் தயாரிக்கவும். திருவாதிரைக் களியுடன், இந்தத் தாளகக் குழம்பையும் சேர்த்துப் படைத்து, பின்னர் களிக்கு இந்தக் குழம்பைத் தொட்டு சாப்பிடவும்.

காராமணி வடை

தேவை: வெள்ளைக் காராமணி (உலர்ந்தது) - ஒரு கப், அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொரகொரப்பாக பொடித்த மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: வெள்ளைக் காராமணியை மூன்று மணி நேரம் நீரில் ஊறவிடவும். பிறகு கைகளால் தேய்த்து மீண்டும் நீர்விட்டுக் கழுவினால் மேல் தோல் நீங்கிவிடும். தோல் நீங்கிய காராமணியை உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, இஞ்சித் துருவல், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

தயிர் சாதம்

தேவை: பச்சரிசி - ஒரு கப், பால் - கால் கப், தயிர் - முக்கால் கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: பச்சரிசியை இரண்டரை கப் தண்ணீர்விட்டுக் குழைய வேகவிடவும். வெந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கரண்டியால் மசித்து தயிர் சேர்த்துக் கலந்து பாலையும் ஊற்றிக் கலக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து இறுதியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி தயிர் சாதத்தில் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

சிறப்பு: மார்கழி மாதத்தின் 5, 11, 12, 29-ம் நாள்களில் இந்த தயிர் சாதத்தைச் செய்து படைப்பது சிறப்பு.

புளியோதரை

தேவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், திக்கான புளிக்கரைசல் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. வறுத்துப் பொடிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். பொடித்ததை தனியே வைக்கவும். அதே வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து புளிக்கரைசலை அதில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளிக்கரைசல் தாளித்த பொருள்களுடன் சேர்ந்து கொதித்து பாதியளவு சுண்டி வந்ததும் பொடித்து வைத்த பொடியைத் தூவி (விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து) எல்லாமுமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி, சாதத்தைச் சேர்த்துக் கலந்துவிடவும்.

சிறப்பு: மார்கழி மாதத்தின் 18-ம் நாளன்று இந்தப் புளியோதரையைச் செய்து படைப்பது நல்லது.

அக்கார அடிசில்

தேவை: பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - 3 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், பால் - 5 கப், முந்திரித் துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரித் துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு பயத்தம்பருப்பை வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். பால் கொதித்ததும் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து வேகவிடவும். பாலில் அரிசி பாதியளவு வெந்ததும் வறுத்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். இடையிடையே நெய்யையும் சேர்க்கவும். அரிசி, பருப்பு இரண்டும் பாலில் நன்றாக வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்க்கவும். எல்லாமுமாகச் சேர்ந்து வந்ததும் மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்த்து இறக்கவும். அக்கார அடிசில் தயார்.

குறிப்பு: கூடாரைவல்லி அன்று மட்டும் மற்ற நாள்களில் செய்யும் அக்கார அடிசிலைவிட பால், வெல்லம், நெய் அதிகமாகச் சேர்க்க வேண்டும். மார்கழி மாதத்தில் வரும் கூடாரைவல்லி அன்று செய்து இதைப் படைக்க வேண்டும்.

திருவாதிரை அடை

தேவை: பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: பச்சரிசியை நீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரை வடிகட்டி துணியில் உலரவிடவும். முக்கால் பதம் உலர்ந்ததும் மிக்ஸியில் பொடிக்கவும் (ரொம்பவும் நைஸாக இல்லாமல் சற்றுக் கொரகொரப்பாக இருக்க வேண்டும்). இந்த மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். கறுப்பு எள்ளையும் வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு மூழ்கும் அளவு நீர் ஊற்றி, ஒரு கொதிவந்ததும் இறக்கி வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் மாவைப் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், கறுப்பு எள் சேர்த்து, வடிகட்டிய வெல்லத் தண்ணீரை ஊற்றிப் பிசையவும். மாவு சப்பாத்தி மாவைவிட சற்றுத் தளர்த்தியாக இருக்க வேண்டும். பிசைந்த மாவை உருட்டி வாழையிலையில் லேசாக நெய் தடவி சிறிய அடைகளாகத் தட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, அடையைப் போட்டு, ஓரங்களில் சிறிதளவு நெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

சிறப்பு: திருவாதிரை அன்று களியுடன், இந்த அடையையும் சேர்த்து பகவானுக்குப் படைக்கலாம்.

பனீர் கோலா பிரியாணி

தேவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, சோம்பு - அரை டீஸ்பூன், பிரியாணி இலை (பெரியது) - ஒன்று, பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, தக்காளி - ஒன்று, புதினா இலைகள் (நறுக்கியது) - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன். கோஃப்தா செய்ய: உதிர்த்த பனீர் - அரை கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: அரைப்பதற்குக் கொடுத்தவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, 2 கப் தண்ணீர்விட்டு கொதித்ததும் உப்பு, தயிர் சேர்த்து அரிசியைக் கழுவிச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு மூடிபோட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஒரு பாத்திரத்தில் கோஃப்தா செய்வதற்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி, எண்ணெயைக் காயவைத்து பொரித்தெடுக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து, பொரித்த கோஃப்தாக்களை பிரியாணியில் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

சிறப்பு: புத்தாண்டு அன்று இதைச் சிறப்பு உணவாகப் பரிமாறலாம். வேறு எந்தக் காய்கறியும் சேர்க்கத் தேவையில்லை. விரதம் இருப்பவர்கள் பூண்டைத் தவிர்க்கலாம்.

துள்ளுமாவு

தேவை: பச்சரிசி - அரை கப், துருவிய வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும். பாதியளவு உலர்ந்ததும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்ந்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து கைகளால் அழுத்திவிடவும். மாவு மேல் எழும்பி துள்ளிவரும். அதுதான் துள்ளுமாவு.

சிறப்பு: போகி (மார்கழி மாதத்தின் இறுதி நாள்) அன்று இதைச் செய்து படைக்க வேண்டும்.

புத்தாண்டு கேக்

தேவை: வெள்ளை ரவை - 2 கப், பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப், பால் - 2 கப், தயிர் - ஒரு கப், நெய் - அரை கப், உப்பு - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா - தலா ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய் (பொடித்தது) - கால் டீஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரித் துண்டுகள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெள்ளை ரவை, பொடித்த சர்க்கரை இரண்டையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மூன்றையும் அதில் சேர்த்துக் கலந்து நெய் சேர்த்துக் கலக்கவும். பால், தயிர் இரண்டையும் மிக்ஸியில் ஓர் அடி அடித்து அதில் சேர்த்து பொடித்த ஜாதிக்காயையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். விஸ்க் (அ) மத்து (மோர்கடைவது) இரண்டில் எது இருந்தாலும் ஒரே முறையாக (வலது பக்கம் அடித்தால் வலது பக்கமாக, இடது பக்கம் அடித்தால் இடது பக்கமாக) கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு ஒரு நான்-ஸ்டிக் பானில் (pan) ஒரு ட்ரேஸ் பேப்பர் போட்டு அதன் மேலே நெய் தடவி மைதா மாவைத் தூவி, கலந்த மாவு கலவையை அதில் ஊற்றி அதன் மேலே சீவிய பாதாம், முந்திரியைத் தூவி நான்-ஸ்டிக் பானின் மூடியைப் போட்டு மூடி வைக்கவும். கேக் வெந்து வாசனை வந்ததும் ஒரு கத்தியில் குத்திப் பார்த்தால் கேக் ஒட்டாமல் வரும். கேக் சிறிது ஆறியதும் கவிழ்த்துப் போட்டு துண்டுகள் போடவும்.

குறிப்பு: சட்டி மாதிரி உள்ள நான்-ஸ்டிக் பானைவிட சற்று உயரமான நான்-ஸ்டிக் பானை உபயோகித்தால் கேக் அடிப்புறம் கறுப்பாகாமலும், சற்று உயரமான துண்டுகள் போடவும் வரும். சிறப்பு: இந்த கேக் செய்வதற்கு குக்கர், அவன் (oven) எதுவுமே தேவை இல்லை. முட்டையும் வேண்டாம்.

ஸ்பெஷல் குருமா

தேவை: ஸ்வீட் கார்ன் - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 8 பல், எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: கசகசா, முந்திரி இரண்டையும் 10 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கப் நீர் சேர்த்து, ஸ்வீட் கார்ன் சேர்த்து வேகவிடவும். அரைப்பதற்குக் கொடுத்தவற்றை நீர்விட்டு நைஸாக அரைத்து, சோளம் வெந்ததும் கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். எல்லாமுமாகச் சேர்த்து கொதித்துவந்ததும் இறக்கவும். குறிப்பு: ஸ்வீட் கார்ன் தவிர மற்ற காய்கறிகள் எதுவும் சேர்க்க வேண்டாம் பனீர் கோலா பிரியாணிக்கு இந்தக் குருமாவைத் தொட்டுச் சுவைக்கவும். விரதம் இருப்பவர்கள் பூண்டைத் தவிர்க்கலாம்.

பர்தா

தேவை: தானியங்கள்: பச்சை வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், அவரைக்கொட்டை - 3 டேபிள்ஸ்பூன், பச்சைப் பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன், கொள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், கறுப்பு கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், பச்சைப் பயறு - 2 டேபிள்ஸ்பூன், வெள்ளைக் காராமணி - ஒரு டேபிள்ஸ்பூன், புளிக் கரைசல் - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. காய்கறிகள்: பொடியாக நறுக்கிய பீன்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், பறங்கிக்காய் (துண்டுகளாகியது) - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, வில்லைகளாக்கிய வெண்டைக்காய் - 2 டேபிள்ஸ்பூன், துண்டுகளாக்கிய சௌசௌ, கேரட் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், துண்டுகளாக்கிய அவரைக்காய், சுரைக்காய், வாழைக்காய், கத்திரிக்காய் - தலா 2 டேபிள்ஸ்பூன், துண்டுகளாக்கிய கோவைக்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2.

தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், நறுக்கிய வெந்தயக்கீரை - கால் கப்.வறுத்துப்பொடிக்க: கறுப்பு எள் - 5 டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: அனைத்து தானியங்களையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். தனித்தனியாக ஊறிய தானியங்களை குக்கரில் சேர்த்து அனைத்துக் காய்கறிகளையும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாயையும் சேர்த்து நீர்விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். காய்கள், தானியங்கள் வெந்ததும் அவற்றை லேசாக கரண்டியால் மசித்து அதில் புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். பொடித்த எள்ளை அதில் தூவவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து கொதிக்கும் கலவையில் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

சிறப்பு: உத்தர் கர்நாடகாவில் போகி அன்று இதைச் செய்து படைத்து ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

தேங்காய் வடை

தேவை: துருவிய தேங்காய் - 2 கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், பச்சரிசி மாவு - 6 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து நீர்விட்டு கெட்டியாக, நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை, சீரகம், பச்சரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

சிறப்பு: பழப்பாயசத்துக்கு இந்த தேங்காய் வடையைத் தொட்டு சாப்பிடலாம்.

போளி

தேவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன். மேல் மாவுக்கு: மைதா மாவு - அரை கப், வெள்ளை ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) லெமன் ஃபுட்கலர் - அரை டீஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: மைதா மாவுடன் வெண்ணெய், ரவை சேர்த்து ஃபுட் கலரும் சேர்த்து நீர்விட்டு சப்பாத்தி மாவைவிட சற்றுத் தளர்வாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பை அளவான நீர்விட்டு வேகவிடவும். அதிகப்படியான நீர் இருந்தால் வடிகட்டவும். கடலைப்பருப்பில் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுது கைகளால் உருட்டும் பதம் இருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பூரணம் தயார் (பூரணம் சற்றுத் தளர்வாக இருந்தால் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுக் கிளறவும். இறுகி வந்ததும் இறக்கவும். தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டவும்).

தயாரித்து வைத்துள்ள மேல் மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து வாழை இலையில் சிறிதளவு எண்ணெய் தடவி உருண்டையை வைத்து தட்டி, மேலே தயாரித்து வைத்துள்ள பூரண உருண்டை ஒன்றை வைத்து மூடி கவிழ்த்துப் போட்டு போளியாகத் தட்டவும். தவாவில் போளியைப் போட்டு ஓரங்களில் சிறிதளவு நெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இதேபோல் போளியாகத் தட்டி எடுக்கவும்.

சிறப்பு: மார்கழி மாதத்தின் இறுதி நாளான போகி அன்று இதைச் செய்து படைப்பர்.

சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல்

தேவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 250 கிராம், தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 8 இதழ்கள். மேலே தூவுவதற்கு: நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, வெந்த கிழங்கைப் போட்டு ஒருமுறை புரட்டி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவவும்.

சிறப்பு: போகி அன்று வடை, பாயசத்துடன் இந்தப் பொரியலும் போளியும் சமையலிலும் படையலிலும் இடம்பெறும்.

மாதங்களில் மார்கழி பிரசாதங்கள் பிரமாதம்!

`மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. இந்த மார்கழி மாதத்தில்தான் எத்தனை எத்தனை ஆன்மிகப் பண்டிகைகள்!

மார்கழிப் பனியில் நிறைந்திருக்கும் ஓசோன் நம் சுவாசத்துக்குப் பெரிதும் நன்மை பயக்கிறது. அதிகாலையில் ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணத்துடன் பூஜைகள் நடத்துவார்கள். பிரசாதமாக வெண்பொங்கலைச் சுடச்சுட கொடுப்பார்கள்.

30 வகை பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி

மார்கழியில் அனுமன் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, மறுநாள் துவாதசி, திருவாதிரை, கூடாரைவல்லி, போகிப்பண்டிகை எனப் பண்டிகைகளும் வரிசையாக வருகின்றன. புத்தாண்டு பிறப்பதும் இந்த மார்கழியில்தான். வடநாடுகளிலும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

``அருட்பிரசாதங்களைப் பண்டிகை அன்று செய்து படைத்து நாமும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம்’’ என உற்சாகமாக அழைப்பு விடுக்கும் சமையற் கலைஞர் எஸ்.ராஜகுமாரி, மார்கழி மாத சமையல் வகைகளை இங்கே வழங்குகிறார். இந்த அற்புதமான மாதத்தில் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் பேரின்பம் நிறைந்திருக்க வாழ்த்துகள்.